Published:Updated:

ஆதார் அட்டை இல்லை... ஏழு வயது சிறுமிக்கு அரசுப்பள்ளியில் அனுமதி மறுப்பு!

ஆதார் அட்டை இல்லை... ஏழு வயது சிறுமிக்கு அரசுப்பள்ளியில் அனுமதி மறுப்பு!
ஆதார் அட்டை இல்லை... ஏழு வயது சிறுமிக்கு அரசுப்பள்ளியில் அனுமதி மறுப்பு!

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி என்பது அடிப்படை உரிமை. எக்காரணம் கொண்டும் மக்களுக்கு அது தடை இல்லாமல் கிடைக்கச்செய்வதுதான் ஒவ்வோர் அரசின் கடமை. ஆனால் ஆதார் அட்டை கோரும் அரசின் முடிவுகளால் ஒரு பெண் குழந்தை தன் ஆரம்பக்கல்வியைக்கூட பெறமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையின் போது ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள டில்லி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆதார் அட்டை இல்லாத 7 வயது பெண் குழந்தையைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்துத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆதார் மையத்தில் பலமுறை முயன்றும் குழந்தையின் கைரேகை பதியவில்லை என்பதால்தான் ஆதார் அட்டை கிடைக்கவில்லை என்று அந்தப் பெண் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தும், பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளனர்.  

அனுமதி மறுக்கப்பட்ட அந்தச் சிறுமியின் பெயர், தானாஸ். டெல்லியிலுள்ள கிடோர்னி என்கிற கிராமத்தில் வசிக்கும் அஸிஸ்கான் மகள். அஸிஸ் கானுக்கு மூன்று பிள்ளைகள். ஓட்டுநராக வேலை செய்கிறார். தன் வருமானத்துக்கு மூவரையும் தனியார் பள்ளியில் சேர்க்க முடியாது என்பதால் அஸிஸ் கான் அரசுப்பள்ளியில் சேர்க்க முனைந்துள்ளார். 9 வயது மகளும் 7 வயது இரட்டைப் பிள்ளைகளும் கொண்ட அஸிஸ் கானின் குடும்பம் ஓர் ஒண்டுக்குடித்தனத்தில்தான் வசிக்கிறது. அந்த இரட்டையர்களில் ஒரு பெண் குழந்தையான தனாஸின் கைரேகைதான் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பதிய மறுக்கிறதாம். 
 
"ஆதார் கட்டாயம் வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் என் மூன்று பிள்ளைகளுடன் மையத்திற்குச் சென்றேன். மூத்த மகளுக்கும், மகனுக்கும் உடனே கைரேகை மற்றும் விழிரேகை பதிவு செய்துவிட்டனர். ஆனால் தனாஸுக்கு மட்டும் எத்தனை முறை முயற்சி செய்தும் கைரேகை பதிவு ஆகவில்லை. அதனால் உரிய தகவல்களைப் பெற முடியாததால் ஆதார் அட்டை பதிய மறுத்து விட்டனர். அதன் பின்னர் பலமுறை தாசில்தார் ஆபிஸுக்கு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வேண்டிச் சென்றேன். ஆனால், எந்தப்பயனும் இல்லை" என்கிறார் அஸிஸ்கான்.  

ஆதார் கிடைக்கவில்லை என்கிற தகவலோடு குழந்தையின் பிறப்புச் சான்றிதழுடன் பள்ளியை அணுகியுள்ளார் அஸிஸ்கான். ஆனால், மீண்டும் ஆதார் இல்லாமல் சேர்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்களாம். தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டு அஸிஸ்கானின் சார்பில் வழக்குத் தொடுத்துள்ள வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில் “உண்மையில் இது அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது. கல்வி என்பது அடிப்படை உரிமை என்கிற சட்டம் உள்ள நாட்டில் ஒரே ஒரு ஆவணத்திற்காக ஒரு குழந்தையின் தொடக்கக்கல்வி மறுக்கப்படுகிறது என்பதை உலகின் மற்ற நாடுகள் நம்பமாட்டார்கள். ஆனால் அது இங்கு நடந்து கொண்டு இருக்கிறது. ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எந்தக் காரணம் கொண்டும் கல்வி மறுக்கக்கூடாது என்பது சட்டம். இதுகுறித்து பள்ளிகளின் நிர்வாகங்களுக்குத் தெரியவில்லை என்பதை என்னவென்று சொல்வது? ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ள அரசு, அதற்கு மாற்று ஏற்பாட்டினையும் செய்திருக்க வேண்டும். பள்ளிச் சேர்க்கை போன்ற விவகாரங்களுக்கும் அரசின் அறிவிப்பு முட்டுக்கட்டை போடுவது தவறு. இதில் சட்ட ரீதியாகத் தீர்வு காண வைப்பது தவறு"  என்கிறார். 

இதுபோன்ற குறிப்பிடத்தகுந்த சில விவகாரங்களுக்கு எழுத்து ரீதியாகப் புகார் அளிக்கலாம் என்று 'ஆதார்' அளிக்கும் அரசு நிறுவனமான உதாய் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தக் கைரேகை பதிவுப்  பிரச்னையில் புகார் அளித்தவர்கள் ஒருவருக்குக்கூட இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை என்பதும் உண்மை. அரசு நிறுவனத்தின் செயல்பாடுகள் நாம் அறிந்தவைதான் என்றாலும் ஒரு குழந்தையின் கல்வி உரிமை மறுக்கப்பட 'ஆதார்' போன்ற எளிய காரணங்களைச் சொல்லுவது சரியா என அரசுதான் முடிவு செய்யவேண்டும். ஏனென்றால் எதன் பொருட்டும் கல்வி மறுக்கப்படுவதும் சட்டவிரோதம்தான்.