Published:Updated:

குழந்தைகள் ஹெல்ப்லைனான 1098 காவல்துறை வசம் போகக்கூடாது... ஆபத்தும், எதிர்ப்பும்!

சைல்ட் லைனை உள்துறைக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி இந்தியா முழுவதுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார்கள்.

உலகளவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே போகும் காலம். இந்தியாவில்தான் குழந்தை வன்முறைகள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2018-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் தினமும் 109 குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது, தாக்கப்படுவதென வன்முறைகள் வேறு வேறு வடிவங்களெடுக்கின்றன. பாதிக்கும் மேல் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்கள் வாழும் இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலான விஷயமாகவே மாறிவருகிறது.

குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏராளமான அமைப்புகளும் நிறுவனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில், வட்டார அளவில், ஏன் கிராமிய அளவில்கூட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்லாயிரம் கோடி செலவிடப்படுகிறது.

Child Helpline Number
Child Helpline Number

குழந்தைகளைக் கையாளும் அமைப்புகள் என்பதால், பெரும்பாலும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் குழந்தைகளின் உரிமைகள், உளவியல் பற்றி புரிதல் உள்ள அமைப்புகள் மூலமாகவுமே இந்த அமைப்புகள் இயங்கி வருகின்றன.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் சைல்ட்லைன் 1098 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் குழந்தைகள் என பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி 24 மணி நேரமும் 1098 என்ற எண்ணை அழைத்து உதவி கோரலாம். பாதிக்கப்படும் குழந்தைகளே கூட நேரடியாக இந்த எண்ணை அழைத்துப் பேசுவார்கள்.

பயிற்சி பெற்ற குழந்தை நேயப் பணியாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள். குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால் காவல்துறைக்கு பிரச்னை கொண்டு செல்லப்படும். உதவிகள் தேவைப்பட்டால் அது தொடர்பான அரசுத்துறைகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக தீர்வு பெற்றுத் தருவார்கள். குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.

தமிழகமெங்கும் எல்லா மாவட்டங்களிலும் சைல்ட் லைன் சேவை இயங்குகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த எண்ணுக்கு ஆண்டுக்கு 35,000த்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. நூறு அழைப்புகளில் 25 அழைப்புகள் குழந்தைகளே நேரடியாக அழைத்து தங்கள் பிரச்னைகளைச் சொல்கிறார்கள். இதன்மூலம் பல குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பல குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பாலியல் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

Child Abuse
Child Abuse

குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து மிகச்சிறப்பாக செயல்படும் அமைப்பாக இந்த சைல்ட்லைன் சேவை விளங்குகிறது. இந்தச்சூழலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த சேவையை உள்துறையின் கீழ் மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. இந்த முயற்சியை இந்தியாவெங்கும் இருக்கும் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

"இந்தியாவில் எந்த மூலையில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் அலைபேசியிலோ, தொலைபேசியிலோ 1098 என்ற எண்ணை அழுத்தி புகாரளித்துவிட்டால் போதும். முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். தங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக, உறவினர்கள் பாலியல் வன்முறை செய்வதாக, மேற்படிப்புக்கு உதவி தேவைப்படுவதாக என நேரடியாக குழந்தைகளே இந்த எண்ணை அழைத்து புகார் செய்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனிவோடும் கருணையோடும் அவர்களின் பிரச்னையைக் கேட்டறிந்து, நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்து அந்தக் குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள். கொரோனா நேரத்தில் கைவிடப்பட்ட குழந்தைகள் பலரைப்பற்றி இந்த சைல்ட் லைன் நம்பருக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்தக்குழந்தைகளை மீட்டு பாதுகாத்திருக்கிறார்கள். மருத்துவ உதவி அளித்திருக்கிறார்கள். எல்லோரும் அணுகும் வகையில் இந்த சைல்ட்லைன் தற்போது செயல்பட்டு வருகிறது.

இதை குழந்தைகள் பெண்கள் அமைச்சகத்திடமிருந்து உள்துறைக்கு மாற்றினால், நேரடியாக இந்த சைல்ட் லைன் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். குழந்தைகளின் உளவியல் புரிந்து காவலர்கள் அணுகமாட்டார்கள். காவலர்கள் தொலைபேசியை எடுத்துப் பேசினால் குழந்தைகளோ, அவர்களுக்காக தொலைபேசியவர்களோ வெளிப்படையாக பேசமாட்டார்கள். காவலர்களின் கண்டிப்பு பற்றி பொதுவெளியில் இருக்கிற பிம்பம் குழந்தைகளை முடக்கிப்போட்டுவிடும்.

குழந்தைகள் மீதான வன்மறை
குழந்தைகள் மீதான வன்மறை

பெரியவர்களே இன்று காவல்நிலையத்தைத் தொடர்பு கொள்ளத் தயங்குகிறார்கள். குழந்தைகளைக் கையாளும் அளவுக்கு காவலர்களுக்கு பயிற்சியும் இல்லை. மனக்குழப்பத்தில் இருக்கும் குழந்தைகள்கூட இந்த சைல்ட் லைனுக்கு போன்செய்து சும்மா பேசுவார்கள். அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கவுன்சலிங் அளிப்பார்கள். சாப்பிட உணவில்லை என்றுகூட குழந்தைகள் இந்த எண்ணை அழைப்பதுண்டு. எந்த அழைப்பையும் உதாசீனப்படுத்தாமல் கையாண்டு தீர்வு கண்டு வருகிறார்கள். சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பை உள்துறைக்கு மாற்றி இறுக்கமாக மாற்ற முனைகிறார்கள். மிக எளிதில் அணுகும் வகையில் விரைவாக தீர்வுகாணும் விதத்தில் செயல்படும் சைல்ட் லைன் இப்போதிருப்பதைப் போல குழந்தைகள், பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகத்தில்தான் இருக்கவேண்டும். தமிழக அரசு இந்த அமைப்பை பாதுகாக்க துணை நிற்கவேண்டும்" என்கிறார் மனிதம் அமைப்பின் இயக்குநர் வனராஜன்.

சைல்ட் லைனை உள்துறைக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி இந்தியா முழுவதுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு