Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகு என்னவாகும் குழந்தைகளின் எதிர்காலம்..? #WorldDayAgainstChildLabour

குழந்தை - கொள்ளை நோய்
குழந்தை - கொள்ளை நோய்

இந்த ஆண்டிற்கான குழந்தைத் தொழிலார்கள் எதிர்ப்பு தினத்தில், நெருக்கடி காலத்திற்குப் பின் குழந்தை தொழிலாளர்கள் மீது இருக்கும் தாக்கமே பேசுப்பொருளாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக பல்வேறு குடும்பங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சமூக கட்டமைப்புக்கு அடித்தளமாக இருப்பது கல்வி. அறிவு வளர்ச்சிக்காக மட்டுமன்றி, சமூக புரிந்துணர்வுக்கும் மக்களுடனான இணக்கமான வாழ்வுக்கும் அடித்தளம் அமைத்துத் தருவது கல்வியும், பள்ளி அமைப்பும்தான். சிறுவயதில் பள்ளிக்குச் செல்வதில் ஆரம்பமாகிறது சமூகப் புரிந்துணர்வு. ஆனால், குடும்பத்தின் பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் பலரும் பள்ளிப்படிப்பைத் தொட முடியாமல் குழந்தையாக இருக்கும்போதே தொழிலாளராகும் அவலம் நிகழ்கிறது. இதைத் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளால் பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு செயல்பாடுதான் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.

குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள்

2002-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஜூன் 12-ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தற்போது வரை 152 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக ஐ.எல்.ஓ அமைப்பு தெரிவிக்கிறது. இதில் 72 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக விவசாயம் சார்ந்த தொழிலில் (71%) ஈடுபடுத்தப்படுகிறார்கள் என ஐநா அமைப்பு தெரிவிக்கிறது. 17 சதவிகித குழந்தைகள் சேவைத் துறையிலும், 12 சதவிகித குழந்தைகள் தொழில்துறையிலும் பணியமர்த்தப்படுகிறார்கள்.

குழந்தைக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான சூழலும் மறுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் குழந்தை குழந்தையாக இருப்பதற்கான உரிமையே மறுக்கப்படுகிறது.

குழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமானது. குழந்தைத் தொழிலாளர்கள் தங்களது குழந்தை பருவத்தையே இழந்துவிடுகின்றனர். ஓர் இடத்தில் குழந்தை வேலை செய்கிறது என்றால் அங்கு பெரியவர்களுக்கான வேலை பறிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். குழந்தைகளை மையப்படுத்தி இங்கு யாரும் எதுவும் பார்ப்பதில்லை. அந்த குடும்பத்தின் பெரியவர்கள் நோய் வாய்ப்பட்டு, முடியாமல் இருந்தால் குழந்தைகள் வேலைக்குச் செல்லலாம் என்ற நிலையே உள்ளது. இங்கு கருணைப் பார்வை மட்டுமே குழந்தைத் தொழிலாளர்கள் மீது இருக்கிறது. மாறாக உரிமை பார்வை இருக்க வேண்டியது அவசியம். குழந்தைக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான சூழலும் மறுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் குழந்தை குழந்தையாக இருப்பதற்கான உரிமையே மறுக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களை நாம் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். இதுவரையில் தமிழக அரசு, குழந்தை வருமானம் குடும்பத்துக்கு அவமானம் என்றே கூறிவந்தது. நேற்று முதலமைச்சர் தனது அறிக்கையில் குழந்தை வருமானம் நாட்டிற்கே அவமானம் என்று கூறியிருந்தார். இதுதான் சரியான ஒன்று.

குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள்

குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், கடத்தப்பட்ட குழந்தை தொழிலாளர்களாகவும் உள்ளனர் என்பது துரதிர்ஷ்டவசமானது. இந்தக் கொரோனா காலகட்டத்தில், பெற்றோருக்கு உரிய வேலைவாய்ப்பில்லை. சென்னையில் இருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். இப்போதும் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது குழந்தைகளே. இங்கிருந்து வெளியேறும்போது பள்ளிப்படிப்பு பாதியிலேயே நின்றுவிடும். இவ்வாறு பள்ளியிலிருந்து வெளியேறும் குழந்தைகள்தான் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகிறார்கள்.

இயற்கை பேரிடருக்குப் பின்னரே பல குழந்தைத் தொழிலாளர்கள் உருவானார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த மருத்துவ பேரிடருக்குப்பிறகு இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகும். பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களை வீட்டு வேலைக்கு அனுப்பி விடுவார்கள். இவர்களே பெரும்பாலும் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள் என பல ஆய்வுகள் சொல்கின்றன. இந்தக் காலகட்டத்தில் கண்டிப்பாக பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன் மூலம் எவ்வளவு குழந்தைகள் நிச்சயம் திரும்ப வருவார்கள்.... எவ்வளவு பேர் நின்றுவிடுவார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். குழந்தைகளின் பெற்றோர்கள் பற்றிய அனைத்து தரவுகளும் இப்போது பள்ளிக்கூடங்களில் இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இதனால் பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

உலகில் பத்தில் ஒரு குழந்தை, குழந்தைத் தொழிலாளராகதான் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு இந்த நிலையானது அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஆண்டிற்கான குழந்தைத் தொழிலார்கள் எதிர்ப்பு தினத்தில், நெருக்கடி காலத்திற்குப் பின் குழந்தை தொழிலாளர்கள் மீது இருக்கும் தாக்கமே பேசுப்பொருளாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக பல்வேறு குடும்பங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தால் பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.

குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்
குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்

இது பற்றி குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், "குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி நம்மிடம் கடைசியாக 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பே உள்ளது. இதில் பெரிதாக தமிழகத்தில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் எல்லாம் கணக்கில் வரவில்லை. குழந்தை உழைப்பு என்பதை நாம் பொதுவாக 14 வயதிற்குள் சுருக்கி விடுகிறோம். ஆனால், உண்மையில் 18 வரை வேலை செய்யும் அனைவருமே குழந்தைத் தொழிலாளர்கள்தான். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறைப்படுத்தல் சட்டம்தான் உள்ளது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் என்று இல்லை. சட்டமே இங்கு தவறாகதான் உள்ளது. இந்தச் சட்டமும் பதினான்கு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்காக மட்டுமே உள்ளது. தேசிய குழந்தை கொள்கையே `பதினெட்டு வரை இருப்பவர்கள் குழந்தைகள்’ என்றே கூறுகிறது. மேலும், 15 முதல் 18 வரை அபாயகரமான தொழிலில் வேலை செய்தால் மட்டும்தான் குழந்தைத் தொழிலாளர்கள் என்று கருதப்படுகிறது. இதோடு பதினாறு வயது வரை குடும்ப ரீதியான தொழிலில் ஈடுபடலாம் என்றும் இந்தச் சட்டம் சொல்கிறது. ஒருவகையில் இது குலத்தொழிலை ஊக்குவிப்பதுபோலவே உள்ளது. இத்தகைய காரணங்களால்தான் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை. இங்கு குழந்தைகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

நம் நாட்டில் மற்ற எல்லா உரிமைகளையும் பெற 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆனால் 14 வயது வரை உள்ளவர்கள்தான் குழந்தைத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. ஆதலால் இங்கு குழந்தைத் தொழிலாளர் பற்றி இருக்கும் அடிப்படை வரையறையே தவறாகத்தான் உள்ளது.
குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்
`இளைஞர்களுக்குத் திருமணத்திலும், குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைவது ஏன்?' - நிபுணர் விளக்கம்

கொரோனா பேரிடரால் மிகவும் பாதிக்கப்பட்டது விளிம்பு நிலை மக்களே. இவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளிலேயே படிக்கின்றனர். இத்தகைய எல்லா குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்து அரசு உதவ வேண்டும். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டால் குழந்தை தொழிலாளர்களாக இவர்களின் குழந்தைகள் உருமாறுவதை தடுக்கலாம். இதற்கடுத்து ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கி இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. இதற்கென ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் உடனடியாக செயல்பட்டு கிராமத்தில் உள்ள குழந்தைகள் சரியாக பள்ளிக்குச் செல்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர்தான் பொறுப்பு. இந்தக்குழுவின் கூட்டத்தை வருடத்திற்கு மூன்று முறை நடத்த வேண்டும். ஆனால், நம் கிராமங்களில் இது நடத்தப்படுவதில்லை.

இதற்கடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் நமது வரிப்பணத்தில் இயங்கும் குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அதாவது குழந்தை நலக்குழு, இளம் சிறார் நீதிக் குழுமம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தை நல காவல் அலுவலர் என மொத்தம் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏதாவது சம்பவம் ஏற்பட்ட பிறகு குழந்தைத் தொழிலாளர்களை மீட்பவர்களாக உள்ளனர். மாறாக இவர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தமிழக அரசு எல்லா பஞ்சாயத்திடமும் `உங்கள் கிராமம் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத கிராமம்' என்பதை அறிவிக்க ஆணையிட வேண்டும். இந்தப் பணியை அனைத்து பஞ்சாயத்து தலைவர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள்

கடந்த ஜனவரி மாதம் முதல், மாநில குழந்தை பாதுகாப்பு ஆணையத்திற்கென தலைவர் இல்லை. கடந்த மாதத்திலிருந்து உறுப்பினர்களும் இல்லை. சட்டம் சார்ந்த இந்த அமைப்பு தற்போது செயல்பாட்டிலேயே இல்லை. இதற்கு உடனடியாக தலைவர் மட்டும் உறுப்பினர்களை எந்த ஓர் அரசியல் குறுக்கீடும் இல்லாமல் நியமனம் செய்ய வேண்டும். குழந்தை வளர்ச்சியில் முழு நிபுணத்துவம் உடையவர்களையே நியமிக்க வேண்டும். இவ்வளவு பெரிய அமைப்பிற்கு வக்கீலும் இல்லை. ஆலோசனை செய்வதற்கான இடமும் இல்லை. உளவியல் நிபணர்களும் இல்லை. இப்படி இயங்காமல் இருக்கும் அமைப்பை சீர்செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கென குழந்தை பாதுகாப்புக் கொள்கை இல்லை. மேலும், தமிழகத்திற்கென்று தனி குழந்தைகள் பாதுகாப்பு ஆணையரகம் உருவாக்க வேண்டும். இதோடு வருகின்ற காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கென்று அமைச்சகம் உருவாக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய இவ்வளவு பிரச்னை இருந்தும் சட்டமன்றத்தில் இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை. அதனால் சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கென நிலைக்குழு உருவாக்க வேண்டும். இந்த நடவடிக்கைளை மேற்கொண்டால் கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைத் தொழிலாளர் அதிகமாவதை சிறிதளவேனும் தடுக்க முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு