Published:Updated:

கர்நாடக ஸ்வீட் குடோன் முதல் ஹைவேஸ் லாரி வரை... கடத்தப்பட்டு மீண்டு வந்தவரின் அனுபவங்கள்!

குழந்தை ( pixabay )

அப்போது, மணிக்கு 12 வயது இருக்கும். ராமு என்ற நபர் மணியின் பெற்றோரிடம் `உங்க பையன நல்லா பாத்துப்பாங்க. உசிலம்பட்டில அவனுக்கு நல்ல வேலை இருக்கு’ என்று கூறி 2,000 ரூபாய் கொடுத்து தன்னோடு அழைத்து சென்றுள்ளார்.

கர்நாடக ஸ்வீட் குடோன் முதல் ஹைவேஸ் லாரி வரை... கடத்தப்பட்டு மீண்டு வந்தவரின் அனுபவங்கள்!

அப்போது, மணிக்கு 12 வயது இருக்கும். ராமு என்ற நபர் மணியின் பெற்றோரிடம் `உங்க பையன நல்லா பாத்துப்பாங்க. உசிலம்பட்டில அவனுக்கு நல்ல வேலை இருக்கு’ என்று கூறி 2,000 ரூபாய் கொடுத்து தன்னோடு அழைத்து சென்றுள்ளார்.

Published:Updated:
குழந்தை ( pixabay )

மனிதனின் வாழ்க்கையில் பால்யம் மிகவும் கவித்துவமானது. பால்யகால நினைவுகள், ஆயுள் முழுமைக்குமான ஆறுதல். நம் நாட்டில் ஏராளமான குழந்தைகள், தொழிலாளர்கள் ஆக்கப்படுவதன் மூலம் தங்கள் பால்யத்தை இழக்கிறார்கள். அதனால் சக மனிதர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை துண்டாடப்படுகிறது. வயதுக்கு மீறிய உழைப்பைக் கொடுத்து கசப்பான அனுபவத்தைப் பெறும் குழந்தைகளின் வாழ்க்கை ஜீவனற்றுப்போகிறது. தன் சுயநலத்துக்காகக் குழந்தைகளின் உலகத்தை, கனவுகளை எளிதாகக் கொன்றுவிடுகிறார்கள் சில முதலாளிகள். அவ்வகையில், சுயநலத்தால் பால்யம் சிதைக்கப்பட்ட ஒரு குழந்தை தொழிலாளரின் கதைதான் இது.

குழந்தை
குழந்தை

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பாவும் அம்மாவும் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்கள். மணிக்கு இரண்டு சகோதரிகள். அப்போது, மணிக்கு 12 வயது இருக்கும். ராமு என்ற நபர் மணியின் பெற்றோரிடம் `உங்க பையன நல்லா பாத்துப்பாங்க. உசிலம்பட்டில அவனுக்கு நல்ல வேலை இருக்கு’ என்று கூறி 2,000 ரூபாய் கொடுத்து தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு நாள்கள் உசிலம்பட்டியில் தங்கியிருந்த மணிகண்டனை, கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதுகிரி என்ற ஊருக்கு கொண்டுசென்று ஸ்வீட் குடோன் ஒன்றில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளார்.

"அந்தக் கம்பெனிக்குள் வேலை பாக்குறதே யாருக்கும் தெரியாது. காலையில் 5 மணிக்கு எழும்பி வேலை செய்ய தொடங்கணும். இரண்டு வேளைதான் சாப்பாடு தருவாங்க. அதுவும் சரியா இருக்காது. சாப்பிடலன்னா, முகத்து மேலயே சாப்பாட தூக்கி எறிவாங்க. சம்பளமும் கிடையாது. சரியா வேலை செய்யலன்னா அடிப்பாங்க. சூடு வைப்பாங்க. எங்கள அடிக்குறதுக்குனே தனியா இரும்பு கம்பி வச்சிருந்தாங்க. தப்பிக்க முயற்சி பண்ணி புடிச்சாங்கனா பெரிய பிரச்னை ஆயிடும்..." - குடோன் நினைவுகளை வேதனை கலந்த குரலில் நம்முடன் பகிர்ந்துகொண்டார் மணிகண்டன்.

உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல் காரணங்களுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவது தவறு. வீட்டு வேலைக்கென அழைத்து செல்வதும் நவீன கடத்தல்தான்.
தேவநேயன்

சிறிது நேர அமைதிக்குப் பிறகு சோகம் மாறாத குரலில் தொடர்ந்து பேசிய மணிகண்டன், "போன வருஷம் தீபாவளி நேரம், பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு காட்டுக்குள்ள ஓடிட்டேன். இருட்டுற வரைக்கும் ஒரு இடத்துல உக்காந்திருந்துட்டு நடுராத்திரி ஹைவேய்க்கு வந்தேன். தமிழ்நாட்டு லாரி ஒண்ணு வந்துச்சு. ஏதேதோ, பொய் சொல்லி லாரில ஏறிட்டேன். அவங்க என்னை வீட்டுல கொண்டுபோய் விட்டுடுவாங்கன்னு நம்பிக்கை இருந்துச்சு. ஆனால், அவங்களும் என்னை வீட்டுக்கு அனுப்பல. வேலை வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாப்பாவ பாக்கணும்னு சொல்லுவேன். அனுப்பி விட்றேன்னு சொல்லுவாங்க. அவ்வளவுதான். அவங்ககூடவே கொஞ்ச நாள் இருந்து வேலை பார்த்தேன். ஒருநாள் பைக்ல பெயின்ட் வாங்கிட்டு வரும்போது ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சு. உடம்பு கொஞ்சம் சரியான பிறகு, `ஊர்ல போய் பாத்துக்குறேன்’னு சொன்னேன். அவங்களும் என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. எனக்கு இப்போ 22 வயசு. 9 வருஷம் என்னோட வாழ்க்கை எப்படியெல்லாமோ போயிடுச்சு. அப்பா, அம்மாவ பாத்ததும்தான் நிம்மதியே வந்துச்சு” என்று பெருமூச்சு விட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"என்னை கர்நாடகவுக்கு அழைச்சிட்டுப்போனதை பத்தி ராமு எங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லல... தகவலே இல்லைன்ன உடனே அப்பா போலீஸ்ல புகார் குடுத்துருக்கார். நான் வந்ததும் மாவட்ட கலெக்டர போய் பார்த்தோம். எங்கூட 4 பசங்க இருந்தாங்கனு சொன்னேன். அதுல 2 பேர் திண்டுக்கல், 2 பேர் தேனி பகுதிகளைச் சேர்ந்தவங்க. அதுக்கப்புறம் இங்கிருந்து அதிகாரிகளோட போயி அவங்களயும் கூட்டிக்கிட்டு வந்து வீட்டுல விட்டோம். அந்த கம்பெனிக்கு சீல் வச்சிட்டாங்க..." என்கிறார் மணி.

குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்
குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்

குழந்தைகள் கடத்தல் தொடர்பாகச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம். அப்போது அவர், "உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல் காரணங்களுக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்துவது தவறு. வீட்டு வேலைக்கென அழைத்து செல்வதும் நவீன கடத்தல்தான். சினிமா ஆசை வார்த்தைகளைச் சொல்லி கடத்தல், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது நடத்தப்படும் கடத்தல் பற்றியெல்லாம் பேசப்படுவதே இல்லை. தமிழ்நாடு, குழந்தைக் கடத்தலில் கொடுக்கும் மற்றும் வாங்கும் மாநிலமாக இருக்கிறது. காணாமல் போகும் குழந்தைகளைக் கடத்தப்படும் குழந்தையாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு அப்போதுதான் வலிமையாக இருக்கும். சென்னையிலிருந்து ஒரு குழந்தை கடத்தப்பட்டால் ஒரு மணி நேரத்தில் அடுத்த மாநிலத்துக்கு கொண்டு போய்விட முடியும். 1, 2, 3 என்று குழந்தை கைமாறி போய்க்கொண்டே இருக்கும்.

ஆள்கடத்தலுக்கு எதிரான மசோதா ஒன்றை அரசு கொண்டு வந்தது. தடுப்பு, பாதுகாப்பு, புனர்வாழ்வு ஆகியவற்றைப் பற்றி பேசும் மசோதா அது. கடத்தலுக்கான சட்டங்களை உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும். குழந்தைகளைக் கண்காணிக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள் இருக்க வேண்டும். 2001-ல் உச்ச நீதிமன்றம் கிராம அளவில் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிட்டது. இன்றுவரை உருவாக்கப்படவில்லை. மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இயங்க நிதி கிடையாது. அமைப்புகள் கிடையாது. முறையான சட்டங்கள் கிடையாது. கிராமத்திலிருந்து தொடங்கி மாநிலங்கள் அளவில் நேர்கோட்டில் சரியாகச் செயல்பட்டால் மட்டும்தான் கடத்தலை தடுக்க முடியும்...’’ என்கிறார் தேவநேயன்.

கைது
கைது

வழக்கறிஞர் ராஜ்குமார் இதுதொடர்பாகப் பேசுகையில், "2013 வரை மனித கடத்தலுக்கான வரையறைகள் சட்டத்தில் கிடையாது. நீதிபதி வர்மா குழுதான் முதன்முதலில் மனித வணிகம் என்பதற்கான வரையறையைக் கொண்டு வருகிறது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 363 முதல் 369-க்கு கீழ் கடத்தல் (கிட்னாப்பிங் & அப்டக்‌ஷன்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சிறைத்தண்டனையும் அபராதமும் தண்டனைகளாகக் கொடுக்கப்படுகிறது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 370 (பொதுவான வரையறைகள்) மற்றும் 370ஏ (பாலியல் வழக்குகளைக் குறிப்பிட்டு சொல்லும்) கடத்தல் தொடர்பான (டிராபிக்கிங்) விளக்கங்களைத் தருகிறது. இந்தச் சட்டத்தின்படி ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை வழங்க முடியும். கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும்போது போக்ஸோ சட்டம் பதிவுசெய்யப்படுகிறது.

தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரங்களாகக் குழந்தைகளை நடிக்க வைப்பதற்குக்கூட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம்.

ஒரு மாதத்துக்குள் குழந்தைகளிடம் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும். போக்ஸோ வழக்குகளை ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும். நிறைய வழக்குகள் கால தாமதத்தால் சமரசம் செய்யப்படுகின்றன. மூன்று மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையெனில் குற்றவாளிக்கு பெயில் கிடைக்கும். டிஎன்ஏ பரிசோதனைக்கு காலதாமதமாகிறது என்பது போலீஸ் தரப்பு பதில். தொழில்நுட்ப ரீதியான தேவைகள் அதிகம் இருக்கின்றன. ஸ்பெஷல் ஜீவனைல் போலீஸ் யூனிட் அமைப்பு ஒன்று உள்ளது. இந்த அமைப்பால் வழக்கை விசாரிக்கவோ, பதிவு செய்யவோ முடியாது. மேற்பார்வை செய்ய மட்டுமே முடியும். இவர்களை காவலர்களாக அங்கீகரிக்கும் பட்சத்தில் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் விரைந்து எடுக்க முடியும். லா அண்ட் ஆர்டர் போலீஸ்தான் குழந்தைகள் வழக்கையும் விசாரிக்கிறார்கள்.

வழக்கறிஞர் ராஜ்குமார்
வழக்கறிஞர் ராஜ்குமார்

குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய சட்டத்திலேயே நிறைய ஓட்டைகள் உள்ளன. 14 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தை தொழிலாளர்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குழந்தைகள். குழந்தை தொழிலாளர் சட்டப்படி 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டு இருக்கும் குழந்தைகளுக்குத் தனியாக விதிமுறைகள் உள்ளன. தொழிற்சாலை சட்டத்தின் படி மருத்துவரிடம் ஃபிட்னஸ் சான்றிதழ் பெற்றால் 14 முதல் 18 வயது குழந்தைகளை அடல்டாக கருதி வேலை வாங்கிக்கொள்ளலாம். இப்படி, நிறைய குழப்பங்கள் சட்டத்திலேயே உள்ளன. தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரங்களாக குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு கூட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம்” என்றார்.

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து திரைப்படம் இயக்கியுள்ள இயக்குநர் பாலாஜி சக்திவேல் நம்மிடம் பேசுகையில், "மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சர்வசாதரணமாகக் குழந்தைகளைக் கடத்திச் செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. விவசாயத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களையே அவர்கள் குறி வைக்கிறார்கள். பெரிய நெட்வொர்க் இது. படத்தில் காட்டியதெல்லாம் மிகக்குறைவு. இந்தச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் தலை வலிக்கிறது. வாழ்க்கையில் பிழைக்க வேறு வழி தெரியாமல் கொத்தடிமையாக இருப்பதற்கு விரும்பியே சிலர் செல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நினைத்துப் பார்க்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. மணிகண்டன் போல ஒரு பையனின் வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக எடுக்கப்பட்டதுதான் `வழக்கு எண் 18/9’ படம்’’ என்கிறார் வேதனையுடன்.

பாலாஜி சக்திவேல்
பாலாஜி சக்திவேல்

குழந்தைகள் பல காரணங்களுக்காகத் தொடர்ந்து கடத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் அதிகமாக மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து செங்கல் சூளை, மரம் வெட்டுதல், ஆலைகள், ஆடு மேய்த்தல் போன்ற பணிகளுக்காகக் கடத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டாலும் ஆண்டுதோறும் குழந்தைகள் கடத்தல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. நாட்டினுடைய எதிர்காலமே குழந்தைகள்தான். ஆனால், குழந்தைகளுடைய எதிர்காலம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism