Published:Updated:

"அத்தனைக்கும் கோபப்படு!" குழந்தைகளின் காப்பாளன் கைலாஷ் சத்யார்த்தி பற்றி முழுமையாகத் தெரியுமா?!

குழந்தைத் தொழிலாளர் என்பது வளரும் நாடுகளைப் போலவே வளர்ந்த நாடுகளையும் பாதிக்கும் ஒரு பிரச்னை என்று கைலாஷ் எப்போதும் உறுதியாக இருந்தார். சிறுவர் உழைப்பின் மோசமான வடிவங்களுக்கு எதிரான கொள்கை குறித்த சர்வதேச சட்டத்தின் கடுமையான தேவை இருப்பதாக கைலாஷ் உணர்ந்தார்.

"குழந்தை அடிமைத்தனத்திற்கு எதிராக என் யுத்தத்தை தொடங்கிய போது அது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை. அது பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை. மில்லியன் கணக்கான குழந்தைகள் மிருகங்களைப்போல வாங்கி விற்கப்படுகிறார்கள். வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு இன்று குழந்தைகள் அடிமைகளாக உள்ளனர். சுதந்திரமான குழந்தைப் பருவம் என்பது கடவுளின் மிகச் சிறந்த பரிசு. அது தெய்விகமானது. அந்தக் குழந்தைப்பருவம் திருடப்பட்டால் அது கடவுளுக்கு எதிரானப் பாவம். என் வாழ்க்கையின் ஒரே ஒரு குறிக்கோள் களவாடப்படும் குழந்தைப்பருவத்தையும் அவர்கள் சுதந்திரத்தையும் மீட்டுக் கொடுப்பதே. என் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்பேன்!"
கைலாஷ் சத்யார்த்தி

உலக சமாதானத்திற்காக நோபல் பரிசு வென்ற சத்யார்த்தியின் சத்தியமான வார்த்தைகள் இவை.

சமூகத்தில் பலவிதமான அத்துமீறல்கள் நிகழ்கின்றன. ஆனால் இவை அனைத்திலும் உச்ச கட்ட கொடூரம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையே. தனக்கு என்ன நடக்கிறது எனப் புரியாமல், ஏன் இப்படி நடக்கிறது என்பது தெரியாமல், எப்படி தன்னைத்தானே தற்காத்துக்கொள்வது என்று அறியாமல், தன்னை நெருங்கும் பயங்கரத்திடம் இருந்து தப்பி ஓட வலிமை அற்ற இளம் பிஞ்சுகளுக்கு எதிரான வன்முறை, வார்த்தைகளால் எழுத முடியா பெருந்துயர்!

மலாலா, கைலாஷ் சத்யார்த்தி
மலாலா, கைலாஷ் சத்யார்த்தி
AP | Cornelius Poppe

நம்மைச் சுற்றி பல்லாயிரம் அவலங்கள் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல கடந்து போகும் நம் கள்ள மௌனத்தின் பின்னால் இருப்பது பயம், தயக்கம், சுயநலம். பல கோடிப்பேர் கண்டும் காணாமல் விலகிப் போகும் வினைக்குள் ஒருவர் துணிந்து, தன் உயிரைப் பணயம் வைத்து இறங்கி அடிக்கிறார் என்றால் அவர் நாயகன் அல்ல, கதாநாயகன். 89,000 குழந்தைகளை சகதியில் இருந்த மீட்ட மீட்பரின் கதை இது!

அப்பாவிக் குழந்தைகளை சதை தின்னும் மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வந்த கைலாஷ் சத்யார்த்தி எனும் மாமனிதனின் கடலளவு சாதனைகளின் ஒரு கைப்பிடி வரலாறு மட்டும் இங்கே!

ஜனவரி 11, 1954-ல் மத்திய பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் பிறந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. குழந்தைப் பருவத்திலிருந்தே, கைலாஷ் எப்போதும் அநியாயத்திற்கு எதிராக கேள்வி எழுப்பினார். ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது, பள்ளியின் முதல் நாளில் பள்ளி வாசலில் ஒரு சிறுவன் அவன் தந்தையோடு காலணிகளைத் துடைக்கும் வேலை செய்வதைக் கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். ஏன் சில குழந்தைகள் தன்னைப்போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னைப் போன்ற வயதை ஒத்த அந்தச் சிறுவனின் மந்தமான முகமும், கனவுகள் இல்லாத கண்களும் அவரை ஏதோ செய்தது.

அவரது மனதை வருத்திய கேள்வியை முதல் நாளே ஆசிரியரிடம் கேட்டார். கண்டதையும் நினைத்துக்கொண்டு இருக்காமல் வகுப்பில் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். தீர்க்கப்படாத அந்தக் கேள்வி அவர் மனதில் மேலும் பல கேள்விகளை எழுப்பியது. அடுத்த நாள் அவர் தனது தலைமை ஆசிரியரைச் சந்தித்து, முந்தைய நாள் தனது வகுப்பு ஆசிரியரிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஏழைகளின் குழந்தைகள் உயிர்வாழ்வதற்காக வேலை செய்வது முற்றிலும் இயல்பானது என்று தலைமை ஆசிரியர் அவருக்கு விளக்கினார். அந்தப் பதில் அவருக்கு திருப்தியை அளிக்கவில்லை. அடுத்தடுத்த நாள்களில் காலையும் மாலையும் இவர் கவனம் அந்த செருப்பு தைக்கும் சிறுவன் மீதே இருந்தது.

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குமரி முதல் டெல்லி வரையிலான பாரத யாத்திரை துவக்க விழா... படங்கள் - ரா.ராம்குமார்
குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குமரி முதல் டெல்லி வரையிலான பாரத யாத்திரை துவக்க விழா... படங்கள் - ரா.ராம்குமார்

ஒரு நாள் அவன் தந்தையிடம் சென்று “ஏன் உங்கள் மகனை என்னைப் போல பள்ளிக்கு அனுப்பக்கூடாது” என்று கேட்டார். முதலில் தயங்கிய அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளி பின்னர் “ஐயா, இதுபோன்ற ஒரு கேள்வியை யாரும் என்னிடம் இதுவரை கேட்டதில்லை. என் தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. நான் செருப்பு தைக்கும் தொழிலாளி. எனவே என் மகனும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ஆகிறான்! இதில் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் வேலை செய்யப் பிறந்தவர்கள்” என்றார். அவரது பதில் கைலாஷை முன்பை விட குழப்பமடையச் செய்தது.

“எல்லோரும் நல்ல செயல்களைச் செய்வதற்கும், நல்ல கல்வியைப் பெறுவதற்கும், ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கும், சமுதாயத்தில் தனக்கு உரிய மரியாதை பெறுவதற்கும் பிறந்தவர்கள்” என்று கைலாஷின் பெற்றோர் அவரிடம் கூறியிருந்தார்கள். அப்படியாயின் ஏன் இந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியும் அவரது மகனும் வாழ்க்கையில் வித்தியாசமான பயணத்தில் இருந்தார்கள், வாழ்க்கையைப் பற்றி அவருக்குச் சொல்லப்பட்ட விஷயங்களுடன் ஏன் இவர்கள் கதைக்குப் பொருந்தவில்லை என யோசிக்கத் தொடங்கினார். அந்த சிந்தனை அவருக்குள் இருந்த மனிதத்தை மேலும் உரமூட்டி வலுவாக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாதிய கொடுமைக்கு எதிராக ஓங்கி ஒலித்த குரல்!

மக்கள் வர்க்க வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிக்கப்படுவதை வேரோடு வெறுத்தார். 1969-ல் இந்தியா முழுதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தபோது சில அரசியல்வாதிகள் மேடையேறி சாதியத்திற்கு எதிராக ஆவேசமாகப் பேசினார்கள். இவர்களை முன் உதாரணமாக வைத்து இந்த ஏற்றத்தாழ்வை மாற்ற எண்ணிய கைலாஷ் சமூகத்தில் இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களை சமையல் செய்யச் சொல்லி அதனை உண்ண அந்த மேடையில் முழங்கிய அரசியல்வாதிகளை அழைத்தார். ஆனால், அவர்கள் சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழித்து விட்டனர்.

தீண்டத்தகாதவர்களின் உணவை உண்டதால் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார்கள். "என்னை சமூகத்திலிருந்து வெளியேற்ற இவர்கள் யார்… ஒரு பிணி கொண்ட சமூகத்துடன் இணைந்திருக்க நான் விரும்பவில்லை!” என அப்போது ஒரு தைரியமான முடிவை எடுத்தார். கைலாஷ் எனும் பெயரோடு ஒட்டிக்கொண்டிருந்த சாதியைக் குறிக்கும் தன் குடும்பப் பெயரை நீக்கி விட்டு “சத்யார்த்தி” (உண்மையைத் தேடுபவர்) என்ற பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

கைலாஷ் சத்தியார்த்தி
கைலாஷ் சத்தியார்த்தி

பச்பன் பச்சாவ் அந்தோலன் ஆரம்பம்!

அனைத்து குழந்தைகளுக்கும் சமூக நீதி, சமத்துவம், கல்வி மற்றும் அமைதிக்கான முதல் மக்கள் இயக்கமாக கைலாஷ் சத்யார்த்தி 1980-ல் பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பை நிறுவினார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை நிலைநிறுத்த துணிந்தார். அவரது தலையீட்டால் உலகம் முழுவதிலும், சூளைகளிலும் ஆலைகளிலும் பணிபுரியும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தார். விபச்சாரத்திற்கும், ஏனைய குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பிஞ்சுகளின் வாழ்க்கையை இருளுக்குள் இருந்து வெளிச்சத்திற்கு கை பிடித்து அழைத்து வந்தார்.

80-களின் முற்பகுதியில், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சங்கர்ஷ் ஜாரி ரஹேகா’ என்ற பத்திரிகையை இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிட்டார். குழந்தை நலன், சமூக அக்கறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார். அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களுக்காக மூன்று புனர்வாழ்வு மற்றும் கல்வி மையங்களை அமைத்தார். அடிமைகளாக பிடிக்கப்பட்டு எதிர்காலம் சுரண்டப்பட்ட சிறுவர்களை மீட்டு, உணவு, உடை, பாதுகாப்பான உறைவிடம் அளித்து, கூடவே கல்வியையும் கொடுத்து வேறொரு அழகிய உலகை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆபத்துக்களால் நிறைந்த வாழக்கை, ஆனாலும் தொடர்ந்த மனிதம்!

"ஒவ்வொரு குழந்தையும் காப்பற்றப்படும் போது ஒரு நபர் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு நபரும் தண்டனைக்கு உள்ளாகும்போது எமக்கு ஒரு தொகை எதிரிகள் உருவாகிறார்கள்!"
கைலாஷ் சத்யார்த்தி

இந்தத் தனி மனிதனையும் அபாயங்கள் தூரத்தின. குழந்தைகளை மீட்கும்போது பலமுறை மிக மோசமாகத் தாக்கப்பட்டார். கைலாஷின் குடும்பத்தினர் நிரந்தர மரண அச்சுறுத்தல்களின் கீழ் வாழ்ந்து வந்தனர். அவரது சகாக்கள் ஆதர்ஷ், கிஷோர் மற்றும் தூம்தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். இருந்தாலும், அவர் எதிர்கொண்ட அத்தனை ஆபத்துகளிலிருந்தும் மேலும் மேலும் பலம் பெற்று விஸ்வரூபம் எடுத்தார்.

2004 நடுப்பகுதியில், கடத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட நேபாள சிறுமிகளை இந்திய சர்க்கஸில் இருந்து மீட்க முயன்றபோது, கைலாஷும் அவரது சகாக்களும் கத்திகள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்திய குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதற்கெல்லாம் அஞ்சாத இந்த சமூக சேவகன், மாஃபியாவால் அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து குழந்தைகளையும் விடுவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இறுதியில் உத்தரபிரதேச நிர்வாகம் அவரது கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததுடன், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குழந்தைகள் மீட்கப்பட்டனர். சர்க்கஸ் உரிமையாளர் மற்றும் அவரது ஆட்களால் சிறுமிகள் உடல், பொருளாதார மற்றும் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டது இறுதி விசாரணையில் தெரியவந்தது. இதுபோல ஆயிரம் ஆயிரம் ரணங்கள் நிறைந்த கதைகள். வடுக்கள் நிறைந்த வெற்றிகள். எதைக்கண்டும் அஞ்சாத அவரது துணிச்சளையும், அறச்சீற்றத்தையும் உலகம் மெல்ல மெல்ல உற்று நோக்க ஆரம்பித்தது.

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுடன்..
கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுடன்..
AP | Matt Dunham

சர்வதேசம் வரை வியாபித்த வெற்றி!

குழந்தைத் தொழிலாளர் என்பது வளரும் நாடுகளைப் போலவே வளர்ந்த நாடுகளையும் பாதிக்கும் ஒரு பிரச்னை என்று கைலாஷ் எப்போதும் உறுதியாக இருந்தார். சிறுவர் உழைப்பின் மோசமான வடிவங்களுக்கு எதிரான கொள்கை குறித்த சர்வதேச சட்டத்தின் கடுமையான தேவை இருப்பதாக கைலாஷ் உணர்ந்தார். அத்தகைய சட்டத்திற்கான ஒரு திட்டத்தை 1996-ல் அவர் உலகுக்கு முன்வைத்தார். இது 1998-ல் 103 நாடுகளில் 7.2 மில்லியன் பங்கேற்பாளர்களுடன் வரலாற்றில் மிகப்பெரிய வெகுஜன அணிதிரட்டல் பிரசாரங்களில் ஒன்றாக ஏற்பாடு செய்யப்பட்டது.

2000 மற்றும் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் குழந்தைத் தொழிலாளர் 250 மில்லியனிலிருந்து 168 மில்லியனாகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் கல்வியை கைவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 113 மில்லியனிலிருந்து 70 மில்லியனாக சரிந்தது. இன்று பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 58 மில்லியன் ஆகும். இவை அனைத்தும் கைலாஷின் விடா முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகள்!

திருத்தப்பட்ட சட்டங்கள்!

கைலாஷின் இடைவிடா போராட்டத்தின் வெற்றியாக பல சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. கல்வி உரிமைச் சட்டம், சிறார் நீதிச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் போன்ற பிற முக்கியமான சட்டங்களுடன் இணங்குவதற்காக குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய கைலாஷ் கடுமையாக வாதிட்டார். மே 2012-ல், இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் அவரது கோரிக்கைகளுக்கு இணங்கினார். சிறுவர் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை 2012 ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 14 வயதுவரை அனைத்து வகையான குழந்தைத் தொழிலாளர்களையும் தடைசெய்வதற்கும், குழந்தைத் தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்குவதற்கும் ஒரு வலுவான வழக்கை அவர் முன்வைத்தார். இந்திய உச்சநீதிமன்றம் பச்சன் பச்சாவ் அந்தோலன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்து, மே 10, 2013 அன்று காணாமல் போன குழந்தைகள் குறித்த முக்கிய உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தது.

கைலாஷ் சத்யார்த்தி - நோபல் பரிசு
கைலாஷ் சத்யார்த்தி - நோபல் பரிசு
AP | Cornelius Poppe

நோபல் பரிசு

குழந்தைகளை அடக்குவதற்கு எதிரான போராட்டத்துக்காகவும், அனைத்து குழந்தைகளுக்கும் கல்விக்கான உரிமைக்காக போராடியதற்காகவும் 2014-ம் ஆண்டில் கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கைலாஷ் அந்த முழு பரிசுத் தொகையையும் குழந்தைகள் உரிமைகளின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். ஜனவரி 7, 2015 அன்று, அவர் தனது நோபல் பதக்கத்தை இந்திய ஜனாதிபதியிடம் ஒப்படைத்து அதை தனது தாய்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அர்ப்பணித்தார். இந்த பதக்கம் இப்போது டெல்லியில் உள்ள ஜனாதிபதி இல்ல அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

“என் வாழ்க்கையின் ஒரே லட்சியம் ஒவ்வொரு குழந்தையும் குழந்தையாக இருக்கக்கூடிய சுதந்திரத்தை உருவாக்குவது. சுதந்திரமாக கல்வி கற்க, உண்ண, உறங்க, சிரிக்க, அழ, வளர, கனவு காணக் கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். உருவாக்குவேன்” என உறுதியாகக் கூறுகிறார் கைலாஷ் சத்யார்த்தி.

நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கவாதமான இந்தக் குழந்தை கடத்தல்தான் தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் கிரிமினல் வியாபாரம். 170 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளராக உலகெங்கிலும் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை காணாமல் போகிறது. காணாமல் போகும் ஒவ்வொரு குழந்தையும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறது. துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு குழந்தை வளர்ந்து மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் வன்முறை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றது. எனவே இந்த வன்முறை சுழற்சியை உடைப்பது மிகவும் முக்கியமானது.

“இந்த உலகத்தில் எந்தப் பிரச்னையும் தீர்வு இல்லாமல் பிறக்கவில்லை. அந்த தீர்வு அதே பிரச்னையின் கருவில்தான் உள்ளது. நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாகவும், தைரியசாலியாகவும் மட்டுமே இருந்தால் போதும்” என்று சொல்லும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் சம்பத்தப்பட்ட எந்தவொரு புகாரையும் தெரிவிக்க தனிப்பட்ட ஹாட்லைன் நம்பர் வழங்கி அது சம்பந்தமாக வரும் ஒவ்வொரு புகாரையும் மிகக் கவனமாக கையாள்கிறார்.

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுடன்..
கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுடன்..
AP | Cornelius Pope

“அத்தனைக்கும் கோபப்படு... சமூக அவலங்களுக்கு எதிராக கோபப்படு. உன் கோபத்தை நல்ல விஷயங்களுக்கு முதலீடாக்கு. Make the Change! கும்பலில் உட்கார்ந்து கை தட்டுபவர்களால் வரலாறுகள் எழுதப்படுவதில்லை. தாம் வெல்லுவோமா இல்லை தோற்றுப் போவோமா என்பதை பற்றி துளியும் கவலை இல்லாமல் துணிந்து குதிப்பவர்களால் தான் வரலாறுகள் உருவாக்கப்படுகின்றன. உங்களுக்குள்ளேயே ஒரு தலைவன் இருக்கிறான். அவனை வேறு எங்கும் தேடத் தேவை இல்லை. எங்கே ஒரு குழந்தையின் சுதந்திரம் பறிக்கபடுகிறதோ அங்கு உங்கள் மௌனம் களையட்டும். இந்த உலகை விட்டு அகலும் போது ஒரு பாதுகாப்பான உலகை நம் குழந்தைகளுக்கு விட்டுச்செல்வோம்” எனும் சத்யார்த்தியின் வார்த்தைகள் ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்ற வேண்டிய வேதம்.

மனித உருவில் பூமிக்கு இறங்கிய கடவுள்கள், கைலாஷ் சத்யார்த்திக்கள் உருவில் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு