Published:Updated:

``நான் பேசுறது அவளுக்கு எப்போ கேட்குமோ..?'' - பரிதவிக்கும் ஒரு தாய்

செந்தமிழ்ச்செல்வி தன் மகளுடன்
News
செந்தமிழ்ச்செல்வி தன் மகளுடன் ( ம.அரவிந்த் )

மாற்றுத்திறனாளியான தன் மகளுக்காக, காது கேட்கும் கருவி கேட்டு வீட்டுக்கும் ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கும் நடையாய் நடக்கிறார் செந்தமிழ்ச் செல்வி.

தஞ்சாவூரை சூரக்கோட்டை அருகே உள்ள சைதாம்பாள்புரத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்வியின் கணவர் துரை, காது கேளாத வாயும் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கூலி வேலை பார்த்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார் துரை. தன் குழந்தைகள் நிச்சயம் கணவர் போலில்லாமல் ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள் என்று நினைத்த செந்தமிழ்ச் செல்விக்கு வாழ்க்கை பேரிடியைத் தந்திருக்கிறது.

செந்தமிழ்ச்செல்வி தன் மகளுடன்
செந்தமிழ்ச்செல்வி தன் மகளுடன்
ம.அரவிந்த்

மூத்த மகள் பிரபாஶ்ரீக்கு ஐந்து வயதாகிறது. தந்தையைப் போல் மாற்றுத்திறனாளி என்கிற உண்மையே செந்தமிழ்ச் செல்வியை சுக்குநூறாக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது மகள் கிருத்திகா ஶ்ரீக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மற்ற குழந்தைகளெல்லாம் பள்ளிக்கூடம் செல்ல, வீட்டிலேயே முடங்கியிருக்கும் மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்றவருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. தஞ்சாவூர் மேம்பாலத்தில் உள்ள காது கேட்காத மாற்றுத் திறனாளிகளுக்கான முன் பருவப் பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, காது கேட்கும் கருவி இருந்தால் மட்டுமே பாடங்களை புரிந்துகொள்ள முடியும் என்று கைவிரித்திருக்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர்.

செந்தமிழ்ச்செல்வி தன் மகளுடன்
செந்தமிழ்ச்செல்வி தன் மகளுடன்

விடாது துரத்தும் வறுமை, மாற்றுத்திறனாளியான கணவர், கைக்குழந்தையுடன் ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அடிக்கடி நடைப்பயணம் என்று நொந்துபோயிருக்கும் செந்தமிழ்ச் செல்வி பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம். எப்படியாவது மகளுடைய பேச்சை கேட்டுவிடமாட்டோமா என்கிற தவிப்பு அவருடைய வார்த்தைகளில் நிரம்பி வழிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''என் வீட்டுக்காரர் மாற்றுத்திறனாளினு தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சு. ரொம்ப அன்பானவர். அவர் கூலி வேலைக்குப் போறார். அவர் கொண்டு வர்ர கொஞ்சூண்டு வருமானத்துலதான் என்னோட ரெண்டு பொம்பளைப்புள்ளைங்களை வைச்சுகிட்டு குடும்பம் நடத்துறேன். என் மக பொறக்கிறதுக்கு முன்னாடிவரைக்கும் அவ ஆரோக்கியமா பிறக்கணும்ங்கிறது மட்டும்தான் என்னோட ஒரே ஆசையா இருந்தது. என் பொண்ணு பிரபாஶ்ரீக்கு இப்போ ஐஞ்சு வயசாகுது. அவளும் அவங்க அப்பா மாதிரி காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைனு தெரிஞ்சதும் இடிஞ்சு போயிட்டேன்.

பிரபாஸ்ரீ
பிரபாஸ்ரீ

அரசு மருத்துவமனைக்கு பிரபாவை தூக்கிட்டு ஓடுவேன், எப்படியாவது என் மகளுக்கு காது கேட்க வைங்க டாக்டர்னு பல முறை அழுதிருக்கேன். அவங்களும் பரிசோதனை பண்ணிட்டு எந்த முன்னேற்றமும் வரலையேம்மானு கைவிரிச்சிடுவாங்க.

எப்படியாவது என் பொண்ணுக்கு காது கேட்குற மெஷின் வாங்கிடணும்னு ஆர்வமா இருந்தேன். அதனால அவர் கொண்டு வர்ற கால் காசுல மிச்சம் பிடிச்சு தனியார் ஆஸ்பத்திரிக்கும் ஓடினேன். உங்க பொண்ணுக்கு மெஷின் மாட்ட 15,000 ஆகும்னு சொன்னாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அது லட்ச ரூபாய்க்கு சமம் சார்.

எங்களோட வறுமைதான் என் பொன்ணை பேசவிடாம செய்யுதுங்கிற வேதனையில இருந்தப்பதான் உறவினர் ஒரு யோசனை சொன்னார். ஆட்சித்தலைவர் மனு வாங்குற நாள் அன்னிக்கு போய் மனு கொடு. நிச்சயம் தீர்வு கிடைக்கும்னு சொன்னார். கடந்த பிப்ரவரி மாதம் காது கேட்கும் கருவி கேட்டு மனு கொடுத்தேன். நான்கு முறை அதிகாரிகள் வரச் சொன்னாங்க. அவங்க சொல்றப்ப எல்லாம், ரெண்டு புள்ளைங்களையும் கூட்டிட்டு நம்பிக்கையோட போவேன். ஆனா நாளைக்கு வா மா'னு அனுப்பிடுவாங்க. சரி நம்ம விதி அவளோதான்போலனு நினைச்சுப்பேன்.

செந்தமிழ்செல்வி தன் மகளுடன்
செந்தமிழ்செல்வி தன் மகளுடன்

அப்பதான் என் பொண்ணு வயசுல இருக்கிற பசங்க எல்லாம் புத்தகப் பையை மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போறதை பார்த்தேன். வெடிச்சு அழுதுட்டேன். என் பொண்ணு இதுவரைக்கும் என்னை அம்மானுகூட கூப்பிட்டதில்லை. அவளை நான் கொஞ்சினதெல்லாம் அவ காதுக்குள்ள போகவே இல்லை. ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு வர்றதும் போறதுமா என் வாழ்க்கை கழிஞ்சுடுமோனு பயமா இருக்கு சார்.

இன்னைக்கும் அதிகாரிகளை போய் பார்த்தேன். உங்க பொண்ணு படிக்கிற பள்ளிக்கூடத்துல 'அவ அங்கதான் படிக்கிறாங்கிறதுக்கு ஒரு சான்று' வாங்கிட்டு வாங்கனு சொல்லிட்டாங்க. எனக்குப் பள்ளிக்கு போகவே பயமா இருக்கு சார். அவங்க என்ன சொல்லுவாங்களோ... ஏற்கெனவே என் பொண்ணு அங்க சும்மாதான் உட்கார்ந்திருக்கா, மெஷின் இல்லாம. எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சார், என் புள்ளை படிக்கணும். அவளுக்கு நான் பேசுறது கேட்கணும். நடக்குமா சார்'' என்பவரின் வார்த்தைகள் முழுவதும் வலிகளே நிரம்பியிருக்கிறது.