`தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்த வருடம் 80% அதிகரித்துள்ளது, தட்டம்மை நோயின் அதிகரிப்பு மற்ற நோய்த்தொற்றுக்கான முன்னறிவிப்பு' என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
2021-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், உலகம் முழுக்க 9,665 ஆக இருந்த தட்டம்மை எண்ணிக்கை, 2022 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் உலகம் முழுவதும் 17,338 எண்ணிக்கையாகப் பதிவாகியது. இதற்குக் காரணம், கொரோனா சூழல் காரணமாகத் தட்டம்மைக்கான தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்ததே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அம்மை நோய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தட்டம்மைதான். இது `மீசில்ஸ்’ (Measles) என்ற வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. தட்டம்மைக்கு மருந்துகள் இல்லை. தடுப்பூசி மட்டுமே உண்டு. 2020-ம் ஆண்டு கோவிட் நோய்த்தொற்று பரவியதால், சுமார் 23 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு அப்போது தட்டம்மை தடுப்பூசியை செலுத்த இயலவில்லை.
தொற்றுநோய் பரவலின் காரணமாக 43 நாடுகளில் 57 தடுப்பூசி செலுத்தும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இன்னும் அந்த இலக்கு முடிக்கப்படவில்லை. தடுப்பூசி செலுத்தப்படாததால் சுமார் 203 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். கொரோனா நோய்த்தொற்று, மற்றும் கோவிட் தடுப்பூசி சூழல்கள் குறிக்கிட்டதால், தற்போது மில்லியன் கணக்கான குழந்தைகள் தட்டம்மை பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம் என யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.