`தாமிரபரணி ஆற்றின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்'' என்று திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

``திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீரால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆறு வருகின்ற வழியில் தொழிற்சாலைக் கழிவுநீர் கலப்பதால் ஆறு முழுவதுமாக மாசடைந்துள்ளது. இதனால் அதைக் குடிநீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ஆற்றின் கரையோர இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமுள்ளன. எனவே, தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவும் நவீன இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நல்ல நீராக ஆக்கவும் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை'' என சுந்தரவேல், தனது மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. திருநெல்வேலி மாவட்டப் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வழக்கறிஞரின் பெயர், கையொப்பம் உள்ளிட்டவை இல்லாததால் பதில் மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
``தாமிரபரணி ஆற்றை வருங்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பாக வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தாமிரபரணி ஆற்றை வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும்'' என்று நீதிபதிகள் வேதனையை வெளிப்படுத்தினர்.

மேலும், ``தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரையும் எதிர் மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்து, வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.