Published:Updated:

``மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது'' - அமைச்சர் உதயகுமார் பெருமிதம்

``மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது'' - அமைச்சர் உதயகுமார் பெருமிதம்
``மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது'' - அமைச்சர் உதயகுமார் பெருமிதம்

'எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கே அமையவிருக்கிறது...' என்ற நீண்டநாள் கேள்விக்கு 'மதுரை' என்று பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த உத்தரவு குறித்து, மதுரை மேலூரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பது அ.தி.மு.க அரசின் சாதனை' என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

``மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது'' - அமைச்சர் உதயகுமார் பெருமிதம்

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் மருத்துவக் கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு சேவைகள் அளிக்கப்படும். எனவே, இம்மருத்துவமனையை அமைக்க வசதியாக 200 ஏக்கர் நிலம் மற்றும் தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் வேண்டும்.

இவ்விதிகளை உள்ளடக்கி மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழகத்தில் 5 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் தோப்பூர், ஈரோட்டில் பெருந்துறை மற்றும் செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, இவற்றில் ஏதாவதொரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கருத்துருவும் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வந்த போதிலும், தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் பல்வேறு தடைகள் குறுக்கிட்டன. இதையடுத்து நீண்ட நாள்களாக இத்திட்டம் இழுபறி நிலையில் இருந்துவந்தது. 

இந்நிலையில், இன்று மேலூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தான மத்திய அரசின் உத்தரவை மேடையிலேயே படித்துக்காட்டினார். ``மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் தோப்பூர் பகுதியில் அமையவிருக்கிறது என்ற நல்ல தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது அ.தி.மு.க அரசுதான்'' என்றார் அமைச்சர் உதயகுமார். மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழகத்தின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.