Published:Updated:

``வீட்டில் ஒருவரை இழந்துவிட்டோம்!" - `மக்கள் டாக்டர்' மறைவுக்காகக் கலங்கும் கோவை

``வீட்டில் ஒருவரை இழந்துவிட்டோம்!" - `மக்கள் டாக்டர்' மறைவுக்காகக் கலங்கும் கோவை
``வீட்டில் ஒருவரை இழந்துவிட்டோம்!" - `மக்கள் டாக்டர்' மறைவுக்காகக் கலங்கும் கோவை

"எங்களுக்கு நினைவு தெரிஞ்சவரைக்கும், அவரு தன்னோட குடும்பத்தோடு இருந்ததைவிட, பொதுமக்களோடு இருந்ததுதான் அதிகம். அவரோட மறைவு, எங்க வீட்ல ஒருத்தர இழந்தது போல உணர்கிறோம்" என்று மக்கள் டாக்டரின் மறைவுக்காகக் கண்ணீர் வடிக்கின்றனர் கோவை குனியமுத்தூர் பகுதி மக்கள்.

"எங்களுக்கு நினைவு தெரிஞ்சவரைக்கும், அவரு தன்னோட குடும்பத்துக்கூட இருந்ததைவிட, பொதுமக்களோடு இருந்ததுதான் அதிகம். அவரோட மறைவு, எங்க வீட்ல ஒருத்தரை இழந்ததுபோல உணர்கிறோம்" என்று `மக்கள் டாக்டர்' வெங்கடாசலம் மறைவுக்காகக் கண்ணீர் வடிக்கின்றனர் கோவை குனியமுத்தூர் பகுதி மக்கள்.

கோவை, குனியமுத்தூர் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் பகுதி. அங்கு, `டாக்டர் ஐயா' என்றால் அனைவர் மத்தியிலும் அவ்வளவு மரியாதை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவச் சேவை, திருக்கோயில் பணி என்று மக்களுக்காக மட்டுமே வாழ்ந்தவர் வெங்கடாசலம். ஆரம்பத்தில் 50 பைசாவுக்குத் தொடங்கிய மருத்துவம், 50 ஆண்டுகளைக் கடந்தும், 5 ரூபாயைத் தாண்டவில்லை. அந்த 5 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. 

`` `காசு கொடுங்க' என்று வாய் திறந்து கேட்கமாட்டார். இங்குப் பட்டியலின மக்களின் வீடுகளும் அதிகம் உள்ளன. அங்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிப்பார். மருந்து வாங்க காசில்லாதவர்களுக்கு, அவரே காசு கொடுத்து மருந்து வாங்கச் சொல்வார். அவருக்குப் பிறகு இந்தப் பகுதியில் டாக்டராக வந்தவர்களில் ஒருவர், மாநில அளவில் பெரிய அரசியல்வாதி ஆகிவிட்டார். மற்றொரு டாக்டர், தனது மருத்துவமனையை வேறொரு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாடகைக்கு விட்டுவிட்டுக் கேரளாவில் போய் செட்டில் ஆகிவிட்டார். ஆனால், எங்க டாக்டர் ஐயா தனது கடைசி மூச்சுவரை மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து உயிரைவிட்டுள்ளார்" என்று நெகிழ்கின்றனர் குனியமுத்தூர் பகுதி மக்கள்.

வெங்கடாசலத்துக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டோக் வந்துள்ளது. அதன்பிறகு, அவரது உடல்நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை, காலன் அவரை மக்களிடமிருந்து பறித்துவிட்டான். வெங்கடாசலத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த குனியமுத்தூரில் உள்ள அவரது க்ளீனிக் + இல்லத்துக்குச் சென்றோம். உறவினர்களைவிட, இரண்டு மடங்கு அதிகமாக அஞ்சலி செலுத்த வந்திருந்தது பொதுமக்கள்தாம்.

``இந்த ஊர்ல நடக்கற நல்லது கெட்டதுக்கு டாக்டர்கிட்டத்தான் ஆலோசனை கேட்போம். பெரிய அரசியல்வாதிங்ககூட ஐயா சொன்னா, `சரி' என்று சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு இவர்மீது பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் இருக்கிறது. பாகுபாடே பார்க்க மாட்டார். அவரு, ஆக்டிவ்வா இருந்த காலகட்டத்துல, அவரே பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய் மாத்திரைகள் வாங்கிட்டு வந்து, மக்களுக்குக் கொடுப்பார். இப்பவும், அங்கிருந்து மாத்திரைகள் வாங்கிவர ஆள்களை வைத்திருக்கிறார். கோயில் பணிகளுக்கும் அதிகமாக உதவி செய்வார். ஆனால், அவரோட, ஆன்மிகச் சிந்தனைய மக்கள்கிட்ட திணிக்க மாட்டார். அவரைப்போல ஒருவர் கிடைப்பது இனி மிகவும் அரிது" என்கிறார், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவரத்தினம்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான சலீம், ``நான் ஆரம்பத்துல ஐயாகிட்ட சிகிச்சை பார்க்கறப்ப 2 ரூபாய்தான் கட்டணம். அதுவும் ஊசி போட்டாத்தான் வாங்கிப்பாரு. அதுலயே மருந்தும் சேர்ந்துடும். அடுத்த நாள் வர்றதுக்கு எல்லாம் காசு வாங்க மாட்டாரு. ஒருமுறை, இங்க கோயில் பணிக்காக வந்த வெளியூர் நபருக்கு உடல்நிலை சரியில்லாமப் போய்விட்டது. அந்த நபருக்கு உடலை குணமாக்கியதுடன், `ரொட்டி வாங்கிச் சாப்பிடு... வேற எதுவும் சாப்பிடாதே' எனச் சொல்லி, அவருக்குக் காசும் கொடுத்தாரு. அந்த நபர் நெகிழ்ந்து போய்விட்டார். டாக்டர் ஐயாவுக்கு மனைவி, ரெண்டு பசங்க இருக்காங்க. ஆனா, அவர் குடும்பத்தினருடன் இல்லை. மக்கள் சேவைதான் முக்கியம் என்று சொல்லி இங்கேயே இருந்துவிட்டார். ஊரில் எந்த வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஐயா தலைகாட்டிவிடுவார். அதுபோல், யார் வீட்டிலாவது துக்க நிகழ்வு என்றால், அவர்கள் கேட்காமலேயே ஐயா வீட்டிலிருந்து அங்கு உணவு சென்றுவிடும்" என்றார்.

``அவருக்குக் கோபமே வராது. மருந்து சாப்பிடவில்லை என்றால்தான் அவர் கோபப்படுவார். கோயில் விழா என்றால் அவ்வளவு உதவி செய்வார். ஆனால், விழாவின்போது முக்கியத் தருணத்தில் மட்டும் தலையைக் காட்டிவிட்டு, மீண்டும் க்ளினிக்குக்கு வந்துவிடுவார்.  ரொம்ப நல்ல மனிதர். கோயிலுக்கும், ஏழை மக்களின் மருத்துவத்துக்கும் அவரைப்போல இங்கு யாரும் உதவியதில்லை. தலைவலி, காய்ச்சல், காயம் போன்ற எந்தப் பிரச்னை வந்தாலும் ஐயாகிட்டதான் வருவோம். ஆரம்பத்தில் சின்ன ஓட்டு கட்டடத்தில்தான் க்ளினிக் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இதைக் கொஞ்சம் பெரிதாகக் கட்டினார். அவரா வாய் திறந்து, `இவ்ளோ கொடு'னு கேட்டதே இல்லை. நம்மால் எவ்வளவு முடிந்ததோ அதை அங்கிருக்கும் உதவியாளர்கிட்ட கொடுத்துட்டு வந்திடலாம். இங்கு ஏழை - பணக்காரன், இந்து - முஸ்லிம் எல்லாருக்கும் அவர்தான் டாக்டர். அவரோட மறைவு, எங்க வீட்ல ஒருத்தர் போனது மாதிரி இருக்கு" என்று கண்ணீர் மல்க முடித்தார் விஜயலட்சுமி.

``எனக்குச் சின்ன வயசுல பயங்கரமான வயிற்று வலி. ஐயா கிட்டத்தான் வைத்தியம் பார்த்தேன். வயிற்றை அமுக்கி பார்த்தவரு, `வீட்ல பெரியவங்க இருந்தா அழைச்சுட்டு வா'னு சொன்னாரு. பிறகு என் பேரன்ஸ்கிட்ட, `உங்க பையனுக்கு அப்பெண்டிக்ஸ் (appendix) போல இருக்கு. உடனே ஆஸ்பத்திருக்கு அழைச்சுட்டுப் போங்க'னு சொன்னாரு. ஆஸ்பத்திரிக்குப் போன அடுத்த நாள் எனக்கு ஆபரேஷன் நடந்தது. அவருக்கு, மெஷின் எல்லாம் தேவை இல்லை. நாடிய பிடிச்சுப் பார்த்தே என்ன பிரச்னைனு கண்டுபிடிச்சுடுவார். அவருக்கு, அன்னதானம் பண்ண ரொம்பப் பிடிக்கும். அவர் வீட்டுக்கு எந்த நேரத்துல போனாலும் சாப்பாடும், டீயும் கிடைக்கும். கடைசி வரைக்கும் தன்னப்பத்தி பிரபலப்படுத்திக்கக் கூடாதுனு உறுதியா இருந்தார். அதனாலதான் அவரப்பத்தி அதிகமா வெளியில யாருக்கும் தெரியலை" என்றார் கார்த்திகேயன்.

``நான் சின்ன வயசுல இருந்தே ஐயாகூடத்தான் இருக்கேன். க்ளினிக்ல கம்பவுண்டரா (compounder)  ஐயாவுக்கு உதவியா இருப்பேன். என்னை அவரோட சொந்த மகன் மாதிரிதான் பார்த்துக்கிட்டார். எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கார். அவர் ஒரு தீர்க்கதரிசி. கடைசியா அவர் என்கிட்ட, `இன்னியோட சரி. நாளைக்கு அப்புறம் நான் இருக்க மாட்டேன். கோயிலை நல்லாப் பார்த்துக்கோங்க'னு சொன்னாரு. 3 நாள் முன்னாடி வரை நல்லாப் பேசிட்டு, மக்களுக்குச் சிகிச்சை கொடுத்துட்டுத்தான் இருந்தாரு. அவர மாதிரி ஒருத்தர இதுவரை பார்த்ததும் இல்லை. இனி பார்க்கவும் போறதில்லை" என்று உடைந்த குரலில் பேசினார் வெங்கடாசலத்திடம் கம்பவுண்டராக இருந்த பழனி.

அதனால்தான் அவர் மக்களின் டாக்டர்!

அடுத்த கட்டுரைக்கு