Published:Updated:

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் குவிந்துகிடக்கும் கழிவுகள்..! அமைச்சர் - கலெக்டர் கவனத்துக்கு...

``இங்கு, மருத்துவக் கழிவுகளால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. மணல் லாரிகள் போவது மட்டுமே அமைச்சர் கே.சி.வீரமணியின் பார்வைக்குத் தெரியும். இதுபோன்ற பிரச்னைகளை அமைச்சர் கவனிப்பதில்லை".

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் குவிந்துகிடக்கும் கழிவுகள்..! அமைச்சர் - கலெக்டர் கவனத்துக்கு...
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் குவிந்துகிடக்கும் கழிவுகள்..! அமைச்சர் - கலெக்டர் கவனத்துக்கு...

``தமிழகத்தில் இன்று டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். சுகாதாரக் கேடுகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். குறிப்பாக, பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. இது தவிர, ஆங்காங்கே குண்டுக்குழிகளில் நிரம்பியிருக்கும் மழை மற்றும் கழிவுநீராலும் கொசுக்கள் பரவி நோயை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சுகாதாரக் கேடுகள் பொதுவாக எங்கும் இருந்தாலும், நோயைக் குணப்படுத்தும் அரசு மருத்துவமனைகளைச் சுற்றியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. குறிப்பாக, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சுற்றி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால், அங்கு அளவுக்கதிகமான நோய்க் கிருமிகள் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு உலை வைத்துள்ளது" என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.


மேலும் அவர்கள், ``இந்த மருத்துவக் கல்லூரியின் பின்புறம் இரண்டு ஏக்கர் திறந்த நிலப்பரப்பில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஊசி, சிரிஞ்சி மற்றும் ரத்தம், அழுக்கு தோய்ந்த பஞ்சு, காயத்துக்குக் கட்டப்படும் துணிகள், நாப்கின்கள் எனப் பல பொருள்கள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. இவற்றிலிருந்து வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மூலம் அதிகளவில் நோய் பரவி வருகின்றன. `மருத்துவக் கழிவுகளைப் பொது இடங்கள், குப்பைத்தொட்டிகள் மற்றும் நீர்நிலைகள் அருகே கொட்டக் கூடாது. சில மருத்துவக் கழிவுகளை ஆழமாகப் புதைக்க வேண்டும்' என்ற வரைமுறை இருந்தாலும், இவற்றையெல்லாம் கடைப்பிடிக்காமல் இந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் நடந்துவருகிறது. இவை, இன்று நேற்று மட்டுமல்லாது கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், நோய்க் கிருமிகள் அதிகம் பரவுவதால் சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்கின்றனர். 

அந்த மருத்துவமனைக்குப் பின்புறம் கொட்டப்படும் மருத்துவக் கழிவு கிடங்குக்குச் சென்றோம். அங்கு, 5 நிமிடம் கூட நிற்க முடியவில்லை. அவ்வளவு நச்சுக்காற்று வீசுகிறது. அதிகளவு தொற்றுத் தன்மையுடைய கழிவுகள் பரவிக்கிடக்கின்றன. இதுபற்றி அங்குள்ளவர்கள், ``எனக்குத் தெரிஞ்சி மருத்துவக் கழிவுகளுடன் உயிரிழக்கும் சிசுக்களையும் வீசுகிறார்கள். நிம்மதியா வாழ முடியவில்லை. இதனால், இப்பகுதியில் இருக்கிற பலருக்கும் அடிக்கடி காய்ச்சல் வருகிறது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் வருகிறது. கொசு உற்பத்தி, நோய் உற்பத்தி செய்யும் இடமாகவே எங்கள் பகுதி பல ஆண்டுகளாக இருக்குது. மருத்துவக் கழிவுகளை வாரம் ஒருமுறை தீ மூட்டி எரிக்கிறதினால், மூச்சுத்திணறல் உண்டாகிறது. நாப்கின்கள் அதிகமாகக் கொட்டப்படுவதால் விஷ சந்துக்களின் நடமாட்டம் வேறு இருக்கிறது. இதுதவிர, கழிவுகளை நாய்கள் கவ்விக்கிட்டு வந்து வீடுகளுக்குப் பக்கத்தில் போட்டுவிட்டு போய்விடுகின்றன. இது தொடர்பாக, கலெக்டர், அமைச்சரிடம் பலமுறை மனு கொடுத்தோம். எந்தப் பிரயோஜனமும் இல்லை’’ என்கின்றனர், வேதனையுடன்!

தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார், ``மருத்துவக் கழிவுகளை ஒருபக்கம் கொட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் மருத்துவக் கழிவுநீரை சப்தளிபுரம் ஏரியில் விடுகின்றனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் கெட்டுப்போய்விட்டது. செயல்வடிவம் இல்லாமல் மருத்துவமனை செயல்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் இதுபற்றிப் பேசினேன். சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமும் சொல்லியிருந்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. தனியார் மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள்" என்றார் மிகத் தெளிவாக.

அ.ம.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசு, ``இங்கு, மருத்துவக் கழிவுகளால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. மணல் லாரிகள் போவது மட்டுமே அமைச்சர் கே.சி.வீரமணியின் பார்வைக்குத் தெரியும். இதுபோன்ற பிரச்னைகளை அமைச்சர் கவனிப்பதில்லை" என்றார். இதுபற்றி விசாரிப்பதற்காக அமைச்சர் கே.சி.வீரமணியின் செல்போன் எண்ணைப் பலமுறை தொடர்புகொண்டோம். அவர் எடுக்கவில்லை. மருத்துவமனை டீன் சாந்திமலரை அணுகியதற்கு, ``கலெக்டர் பார்த்துக்கொள்வார்" என்று ஒற்றைவார்த்தையுடன் பேச்சை நிறுத்திக்கொண்டார்.

சாமான்ய மக்கள், நாடிச் செல்லும் அரசு மருத்துவமனைகள் இப்படியா செயல்பட வேண்டும்?