Published:Updated:

திருச்சியில் தொடரும் உயிரிழப்பு... டெங்கு, பன்றிக்காய்ச்சலை மூடிமறைக்க அரசு முயற்சி?

திருச்சி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் இணைந்து வீடுகள் தோறும் கொசுப் புழு புகை மருந்து அடித்தல், கிருமி நாசினி மருந்துகள் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் தொடரும் உயிரிழப்பு... டெங்கு, பன்றிக்காய்ச்சலை மூடிமறைக்க அரசு முயற்சி?
திருச்சியில் தொடரும் உயிரிழப்பு... டெங்கு, பன்றிக்காய்ச்சலை மூடிமறைக்க அரசு முயற்சி?

மிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்பட்டாலும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், இந்த நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை மூடிமறைக்க அரசு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் சிகிச்சைக்குத் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் தாக்குதலால் அரசு மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக்காய்ச்சல், டெங்கு அறிகுறிகளுடன் வருபவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலின் தாக்கத்தால் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடைசியாக திருச்சி ஆயுதப்படை காவல்துறை ஒருவர் பலியாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

திருச்சி மாநகர ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வருபவர் செல்லதுரை. இவர் இரு தினங்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தகவலறிந்த திருச்சி மாநகரக் காவல்துறை கமிஷனர் அமல்ராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் பார்த்து செல்லதுரைக்கு ஆறுதல் கூறியதுடன், அவருக்கு முறையான சிறப்பு சிகிச்சை அளித்திட மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஏட்டு செல்லதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த செல்லதுரையின் உடல் அவரின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த தண்ணீர்பள்ளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல், திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெரிய நாச்சிபட்டியைச் சேர்ந்தவர் தமிழழகன் என்ற தினேஷ். விவசாயியான இவரின், இரண்டு வயது மகள் சிவான்யாவுக்கு அக்டோபர் 28-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அதனையடுத்து காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையாத நிலையில் சிவன்யா, மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிவான்யா திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இறுதியாகத் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவான்யா, சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதேபோல், தொட்டியம் அருகே ஏலூர்பட்டியில் இளையராஜா - பிரியா தம்பதியின் ஒரு வயது குழந்தை ரோசிகா மூளைக் காய்ச்சலுக்கும், முசிறி அருகே உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து என்கிற விவசாயி பன்றிக்காய்ச்சல் காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்குச் சேர்ந்த அரியலூர் மாவட்டம், செந்துறையைச் சேர்ந்த சுந்தரவேல், பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த ராணி ஆகியோர் காய்ச்சலுக்கான தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அவர்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம்தரப்பில், ``காவலர் செல்லதுரை காய்ச்சல் முற்றிய நிலையில்தான் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதேபோல் துபாயில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு வந்த அரியலூரைச் சேர்ந்த சுந்தரவேலுக்கு காசநோய் மற்றும் நிமோனியா தொற்று இருந்தது. திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும்போதே காய்ச்சல் முற்றிய நிலையில் இருந்தார். சிகிச்சை வழங்கப்பட்டும் இரண்டு நாளில் உயிரிழந்து விட்டார். அதேபோல, பாலக்கரையைச் சேர்ந்த ராணியும் நிமோனியா காய்ச்சல் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வந்ததால் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் ஏதுமில்லை என்று தெரியவந்தது. பன்றிக்காய்ச்சல், டெங்கு அறிகுறிகளுடன் வந்த பலரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண நலம் பெற்று சென்றுள்ளனர். பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் இணைந்து வீடுகள் தோறும் கொசுப் புழு புகை மருந்து அடித்தல், கிருமி நாசினி மருந்துகள் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாமி ப்ளூ மாத்திரைகள் தயாராக உள்ளன. மேலும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காகச் சிறப்பு வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு கூடிக்கொண்டே இருக்க, அவர்கள் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலில் பலியாகவில்லை என அரசு மூடி மறைக்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.