கட்டுரைகள்
Published:Updated:

யாதும் ஊரே, யாவரும் சீனர்!

யாதும் ஊரே, யாவரும் சீனா!
பிரீமியம் ஸ்டோரி
News
யாதும் ஊரே, யாவரும் சீனா!

அனுசுயா

சீன வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட பன்னாட்டு நிறுவனமொன்றின் பெங்களூரு கிளையில் பணிபுரியும் அனுசுயா, ஆனந்த விகடனின் நீண்டகால வாசகர்.

கொரோனா சீனாவில் தொடங்கிய காலம் முதல் அது இந்தியாவில் பரவியுள்ள இந்தக் காலம் வரையுள்ள அனுபவங்கள் குறித்து எழுதி நமக்கு அனுப்பியிருந்த கட்டுரை இது.

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்பது எம்.ஜி.ஆருக்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் அதிகம் பொருந்தும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு SOP, KRI, SLA, TAT போன்ற பல மூன்றெழுத்துகள்போல மிக முக்கியமான மற்றுமொரு மூன்றெழுத்து: BCP அதென்ன BCP?

BUSINESS CONTINUITY PROGRAM

என்பதன் சுருக்கம்தான் BCP. உதாரணமாக, இந்தியாவின் TECH HUB எனச் சொல்லப்படும் பெங்களூரில் கால் பதிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களாலோ அரசியல்/சமூகச் சூழ்நிலைகளாலோ பணிகள் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து, இதற்காகவே வேறொரு நகரத்தைத் தேர்வு செய்து, அங்கும் ஒரு குழுவை அமைத்து, ஆட்களைப் பணியமர்த்தி வேலையைத் தொடரச் செய்வதன் பெயர் தான் BCP.

2015 சென்னைப் பெருமழையின்போது, DLF நீரில் மூழ்க, அங்கிருந்த ‘சொசைட்டி ஜெனரல்’ என்ற பிரெஞ்ச் வங்கியின் முக்கியப் பணிகளை அதன் பெங்களூரு கிளையின் ஊழியர்கள் கையாண்டனர். இன்னொரு உதாரணம் : 2016 செப்டம்பரில் கர்நாடகத்தில் காவிரிப் பிரச்னை விஸ்வரூபமெடுத்தபோது, சில நாள்களுக்கு நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய சூழல். அப்போது ‘ஆக்சென்ட்சர்’ நிறுவனத்தின் பல முக்கியமான வேலைகள், அதன் கொல்கத்தா அலுவலகத்தில் செய்து முடிக்கப்பட்டன. ஒரு கதவை அடைத்தால் மற்றொரு கதவு திறக்கும் என்பது நம்பிக்கையூட்டும் பழமொழி என்றால், ஒரு கதவு அடைத்தால் திறக்கப்படுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கியுள்ள மறுகதவுதான் ‘பி.சி.பி.’ ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் இந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்திருக்கிறது கொரோனா. சீன க்ளையன்ட்கள் அதிகம் கொண்ட நிறுவன ஊழியர்களான நாங்களும்கூட இந்தச் சூழ்நிலையை நினைத்துப்பார்க்கவில்லை.

யாதும் ஊரே, யாவரும் சீனா!
யாதும் ஊரே, யாவரும் சீனா!

‘ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சீனாவின் வூஹான் கிளையில் வைத்துப் பார்க்கப்பட்டுவரும் வேலைகளில் 50 சதவிகிதத்தை, பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல் பெங்களூரில் நாம்தான் பார்க்கப் போகிறோம்’ என எங்கள் நிர்வாகம் சொன்னபோது, உயர்மட்டக் குழுவில் இருந்தவர்கள்கூட ‘இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நம் பெங்களூரின் பெலந்தூர் அலுவலகமும் அதே போல பாதிப்புக்குள்ளாகி இழுத்து மூடப்படும்’ என எதிர்பார்த்திருக்க வில்லை.

வூஹான் வேலைகளை நாங்கள் பார்ப்பது என்று முடிவான மறுநாளே வீடியோ கான்பரன்ஸ் ஏற்பாடானது. நம் நேரப்படி காலை 11.30-க்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கை, 9.30 மணிக்கு அவர்கள் முன்னகர்த்தி வைத்ததில் எங்களுக்கு அப்படியோர் ஆச்சர்யம். காரணம், சீனர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்வார்கள். ஆனால் அவர்கள் உணவருந்தும் நேரத்தில் சமரசம் செய்துகொள்ளவே மாட்டார்கள். நம் காலை நேரம் 9.30 என்பது அவர்களுக்கு மதிய உணவருந்தும் நேரம் என்பதால்தான் எங்களை ஆச்சர்யம் அப்பிக்கொண்டது.

எவ்வளவு அவசரமான விஷயம் என்றாலும், எத்தனை மில்லியன் மதிப்புடைய டீல் என்றாலும், சீனர்கள் அவர்களின் சோற்றில், மன்னிக்கவும்... உணவில் ‘சாப் ஸ்டிக்கை’ வைக்கும் நேரத்தில் கைவைக்க எங்களை அனுமதித்ததில்லை. அப்படிப்பட்டவர்களே இந்நேரத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்தது ‘விஷயம் சீரியஸ்தான்’ என்பதை எங்களுக்கு உணர்த்தியது.

அன்றைய மீட்டிங்கில் வேலைகள் தொடர்பான பாகப்பிரிவினைகளைப் பற்றிப் பேசி, விவாதித்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவர்களின் பணிகளை முறையாக எங்கள் வசம் ஒப்படைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. அடுத்த இரு வாரங்களில் சீனாவில் கொரோனாத் தாக்கம் அதிகரித்தது. உறுதியான பெருஞ்சுவரைக் கொண்ட சீனர்கள் உளவியல் ரீதியாக பலமிழக்கத் தொடங்கியிருந்ததை, உள்ளூர நொறுங்கியதை ஒவ்வொரு நாளும் உணர்ந்தோம்.

பொருளாதார மந்த நிலை, கொரோனாவின் கோர முகத்திற்கு உறவுகளை, நண்பர்களை, அண்டை அயலாரைப் பறிகொடுத்த சோகம், மேலதிகமான அலுவலக வேலைப்பளு, இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்ட சூழல், தங்களுக்கும் நோய்த் தொற்று இருக்குமோ என்ற அச்சம், அருகில் நிற்கும் சக மனிதர்களை எல்லாம் கொரோனாத் தொற்று குறித்த சந்தேகத்துடன் அணுகும் மனநிலை, ஒரு வேளை... இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும் பட்சத்தில், இப்பொழுது அவர்கள் கொடுக்கும் ஹேண்ட் ஓவருடன், அவர்களின் வேலையும் “ஓவர்” என எதிர்காலத்தில் நிர்வாகம் சொல்லி விடுமோ என்ற பயம் என எல்லாம் ஒன்றுசேர்ந்த உணர்வுக் குவியலாகத் தான் ஒவ்வொருவரும் இருந்தார்கள்.

அவர்களின உளவியல் சிக்கல் களைப் புரிந்துகொண்டு, இன்னும் அதிக பொறுமையுடன் அவர்களைக் கையாளும்படி மேலதிகாரி களிடமிருந்து எங்களுக்கு உத்தரவு வந்தது. எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட கோப்புகளில் இருந்த சில சந்தேகங்களை நாங்கள் எழுப்பியபோது, கோபப்பட்டுக் கத்தியவர்களையும் உடைந்து அழுதவர்களையும் முதன்முதலாக எதிர்கொண்டோம்!

அடுத்த இரு வாரங்களுக்குள் திட்டமிட் டபடியே ஹேண்ட் ஓவர் முடிந்தது. விளைவு? பிப்ரவரி இரண்டாம் வாரம் தொடங்கி இன்று வரை எங்களின் வேலைப்பளு பல மடங்காகப் பெருகியுள்ளது. நாங்கள் பார்க்க வேண்டிய வேலையுடன், அங்கிருந்து இங்கு மடை மாற்றி விடப்பட்ட வேலைகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, நாளொன்றுக்கு குறைந்தது 10 மணி நேர உழைப்பும், வாரத்தில் ஆறு நாள்கள் வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தமும் எங்களுக்கு. இப்போது இந்தியாவில் கொரோனாத் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில் இந்த வேலைப்பளுவால் ஏற்படும் உளவியல் அழுத்தத்தையும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

வழக்கமான பணிநேரத்தைவிடக் கூடுதலாக உழைப்பதால் கூடுதல் ஊதியம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தக் கூடுதல் ஊதியம் உடல் சோர்வையும் மனச்சோர்வையும் ஈடுகட்டுவதில்லை என்பதைப் பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் புராஜெக்ட் அதிகாரிகள் சிலருக்கு இந்தப் புரிந்துணர்வு இருப்பதால் இங்கேயுள்ளவர்களிடம் அதிகம் கேள்விகள் எழுப்பி டார்ச்சர் செய்வதில்லை. ஆனால் ‘கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரிகள் விடுவதில்லை’ என்பதைப்போல், வெளிநாட்டு அதிகாரிகள் தாராளம் காட்டினாலும் உள்நாட்டு அதிகாரிகள் கெடுபிடிகளைக் குறைத்துக் கொள்வதில்லை. ‘என் டீமில் இருப்பவர்களை எப்படி வேலை வாங்குகிறோம் பாருங்கள்’ என்று சீன் காட்டுவதற் காகத்தான் இவ்வளவும்.

யாதும் ஊரே, யாவரும் சீனர்!

ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சி யாக ஆன்லைனில் இல்லாமல் போனால்கூட ஆபீஸி லிருந்து வரும் அழைப்புகள், ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் என்ன வேலை பார்த்தோம் என்ற விவரங்களை மெயிலில் அனுப்ப வேண்டிய கட்டாயம், ‘ரொம்ப நேரமா நீ ஆஃப் லைன் (offline)/அவே (away)ன்னு உன் ஸ்டேட்டஸ் காட்டுச்சே’ என ஸ்கிரீன் ஷாட் எடுத்து விளக்கம் கேட்டு அனுப்புதல் போன்றவை உயரதிகாரிகளின் இந்த மனப்பாங்கின் வெளிப்பாடுதான்.

சில உள்ளூர் மேலதிகாரிகளின் இந்த அதிகார மனநிலையானது கொரோனா பாதிப்பு மற்றும் அதுகுறித்த பீதி, சுற்றிச் சுழலும் வாட்ஸப் வதந்திகள், 21 நாள்கள் ஊரடங்கு போன்றவை கொடுக்கும் மன அழுத்தங்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல. சீனாவில் இருக்கும் ஜீவன்களின் உளவியல் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, பொறுமையுடன் அவர்களைக் கையாளும்படி போதிக்கும் அதிகாரிகள், அந்த அறிவுரையைச் சொல்லவேண்டியது கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தை நோக்கியும்தான்.