Published:Updated:

உணவு இல்லை... மருந்து இல்லை... உயிருக்கே உத்தரவாதம் இல்லை

கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

கொதிக்கும் கோவை அரசு பயிற்சி மருத்துவர்கள்

உணவு இல்லை... மருந்து இல்லை... உயிருக்கே உத்தரவாதம் இல்லை

கொதிக்கும் கோவை அரசு பயிற்சி மருத்துவர்கள்

Published:Updated:
கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை
தமிழக அரசு மருத்துவர்களுக்கு அசாதாரணமான காலம் இது. சரியான உபகரணங்கள்கூட இல்லாமல் உயிரை பணயம்வைத்து அரசு மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள்.

இதில் மருத்துவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில்தான் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இரவும் பகலுமாகப் பணிபுரிந்து வரும் பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவும் தண்ணீரும் வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. தவிர, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்கள் சிலருக்குத் தேவையான மருந்தும் வழங்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது கோவை. இதனால், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம்வைத்து ஓய்வின்றி 24 நேரமும் கொரோனாவுக்கு எதிரான போரை தொடர்ந்துவருகின்றனர். இந்த நிலையில்தான் இங்கு சிகிச்சை அளித்துவந்த நான்கு மருத்துவர் களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட பிறகே கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள பல்வேறு பிரச்னைகளும் வெளிவரத் தொடங்கின.

உணவு இல்லை... மருந்து இல்லை... உயிருக்கே உத்தரவாதம் இல்லை

இதுகுறித்து கோவை மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்களிடம் பேசினோம். “மார்ச் 28-ம் தேதியே எங்களது ஒரு வருட இன்டர்ன்ஷிப் முடித்து பட்டதாரி ஆகியிருப்போம். கொரோனா தொற்றால் ஏற்பட்ட அசாதாரணமான சூழலைக் கருத்தில்கொண்டு எங்களது பேட்ச் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆனால், பணியின்போது எங்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் படவில்லை. ஒரு வாரம் பணி என்றால், அடுத்த ஒரு வாரம் எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ள ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை.

இதனால் மருத்துவ மனையில் பணியில் இருந்த சிலர், கோவை மருத்துவக் கல்லூரி ஹாஸ் டலுக்கே வந்துவிட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. பயந்து போன கேன்டீன் பணியாளர்கள், எந்த முன்னறிவிப்புமின்றி கேன்டீனை மூடிவிட்டனர். எங்களதுஹாஸ்டலில் இளநிலை, முதுநிலை எனக் கிட்டத்தட்ட 600 பேர் இருக்கி றோம். ஊரடங்கு காரணமாக ஹாஸ்டல் உணவை மட்டுமே நம்பியிருந்தோம். கேன்டீன் திடீரென மூடப்பட்டதால் நாங்கள் அதிர்ச்சி யடைந்தோம்.

நடராஜன் -  ராசாமணி
நடராஜன் - ராசாமணி

தண்ணீர், உணவு கேட்டு மருத்துவமனை டீனுக்கு மனு கொடுத்தோம். எந்தப் பதிலும் இல்லை. ட்விட்டரில் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோரை ‘டேக்’ செய்து கோரிக்கைவைத்தோம். உடனடியாக கலெக்டரிடம் பேசிய செயலாளர் பீலா ராஜேஷ், ‘இனி அங்கு எந்தப் பிரச்னையும் வராது’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், எங்கிருந்தோ தரமே இல்லாத உணவை, அதுவும் குறைந்த அளவிலேயே கொடுத்தனர். அவர்கள் கொடுத்த உணவு 100 பேருக்குக்கூட போதவில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, மிரட்டுவதுபோல் பதிலளித்தார்கள். டீன் அறை முன்பாக கைதட்டி போராட்டம் நடத்தினோம். எங்களது கோரிக்கைகளை அவர்கள் காதுகொடுத்தே கேட்கவில்லை. இந்த அசாதாரணமான சூழலில் கொரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் நாங்கள் தரமான உணவையும் தண்ணீரையும் கேட்டது குற்றமா? எங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது” என்று ஆவேசப்பட்டனர்.

இது ஒருபுறமிருக்க, ‘கொரோனாவில் பாதிக்கப் பட்டிருக்கும் மருத்துவர்களுக்கு ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தையும் கொடுக்கவில்லை’ என்கின்றனர் மூத்த மருத்துவர்கள். பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று பேசிய மூத்த மருத்துவர் ஒருவர், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவ மாணவர்கள், ‘எங்களுக்கு நீண்ட நேரமாகியும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் கொடுக்கவில்லை; ஏற்பாடு செய்யுங்கள்’ என்று ஒரு வாட்ஸப் குழுவில் கேட்டுள்ளனர். அந்தக் குழுவிலிருந்த வேறு சில மருத்துவர்களும், ‘பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறியுள்ளனர்.

ஆனால், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு மருத்துவர், பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவ மாணவர்களையும் குழுவிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களைக் கடிந்துகொண்டு, ‘மருந்து ஸ்டாக் இல்லை’ என்று கூறியுள்ளார். அந்த ஸ்கிரீன் ஷாட், எங்களது துறைக்குள்ளேயே தீயாகப் பரவியது. விஷயம் பூதாகரமானவுடன் மூத்த மருத்துவர் ஒருவர் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயின் கொடுத்துள்ளார்” என்றார் வேதனையுடன்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், “கோவை மருத்துவப் பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை என்ற தகவல் கிடைத்தது. மருத்துவர்களுக்கு ஒரு வாரம் பணி, ஒரு வாரம் தனிமை என்பதை மற்ற மாநிலங்கள் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன. அதில் சில மாநிலங்கள், மருத்துவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எல்லாம் தங்கவைக்கின்றன. ஆனால், கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், இ.எஸ்.ஐ ஹாஸ்டலில்தான் தங்கவைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளே முறையாகச் செய்யப்படவில்லை.

‘மருத்துவப் பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும்கொண்ட இடத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்று ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். எதுவும் நடக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் இந்தப் பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் பேசினோம். “இத்தனை நாள்கள் இப்படியெல்லாம் புகார்கள் எழவில்லை. மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததால், பயத்தில் கேன்டீனைப் பூட்டிவிட்டனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம், உணவுக்கான மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்தப் பிரச்னையை சரியாகக் கையாளவில்லை. அதனால்தான், தற்போது அடுத்தடுத்து புகார்களை அடுக்குகின்றனர். இதுதொடர்பாக மருத்துவமனை டீனிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளேன். இந்தப் பிரச்னைகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் என்னிடம் பேசினார்கள். மருத்துவர்களுக்குத் தடையில்லாமல் உணவு, தண்ணீர் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதேபோல், மருந்து தட்டுப்பாடு என்பதும் உண்மையில்லை. கொரோனா பாதித்த அனைவருக்குமே தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

உணவு இல்லை... மருந்து இல்லை... உயிருக்கே உத்தரவாதம் இல்லை

இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து கோவை அரசு மருத்துவமனை டீன் பொறுப்பிலிருந்து அசோகன் மாற்றப்பட்டுள்ளார்.

மருத்துவப் பணியாளர்களுக்காக கைதட்டுவதைவிட, மருந்தும் தரமான உணவும் கொடுப்பதே அரசாங்கத்தின் அவசர கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism