அலசல்
Published:Updated:

இலங்கையில் கொரோனாவிலும் இனப்பாகுபாடு?

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
இலங்கை

தமிழர் பகுதிகளில் மட்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள்...

இலங்கையில் தமிழர்களின்மீது சிங்கள ஆட்சியாளர்கள் கடைப்பிடித்துவரும் இனப்பாகுபாடு உலகறிந்தது. உலகமே கொரோனா பீதியில் உறைந்திருக்கும் இந்த நேரத்திலும் அது தொடர்வதுதான் வேதனை! கொரோனா பாதிப்புள்ளவர்கள் என்று சந்தேகத்துக் குரியவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான முகாம்கள் தமிழர்கள் பகுதிகளில் மட்டுமே அதிகளவு அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், ‘‘இலங்கை யில் இதுவரை 75 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லை. இது ஒரு தேசியப் பேரிடர். அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அரசின் செயல்பாடு களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பும் மக்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் கண்காணிக்கப்படும் மக்களை, தமிழர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் குடியேற்றுவதுதான் இந்த அரசுமீது ஐயம்கொள்ளவைக்கிறது.

இலங்கையில் கொரோனாவிலும் இனப்பாகுபாடு?

முதலில், மட்டக்களப்பில் அரசின் கட்டுப் பாட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் அரபிக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, வவுனியாவில் பம்பைமடு ராணுவ முகாமில் இருந்த பெண்களை மட்டும் வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றிவிட்டு, அங்கும் சிலர் தங்கவைக்கப் பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி, கொடிகாமம், இரணைமடு, கேப்பபுலவு ஆகிய நான்கு இடங்களை தயார்செய்து வருகின் றனர். இதுதொடர்பாக மாகாண சுகாதார அதிகாரி களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

நான்கு நாள்களுக்கு முன்பாக, நெளுக்குளத்தி லும் மட்டக்களப்பிலும் அரசின் இந்த இனவாத நடவடிக்கைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை(20-3-2020)யிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், மக்களால் இப்போது வெளியில் வர முடியவில்லை. அன்றிரவு, புத்தகயாவுக்கு யாத்திரை போய் வந்த மேலும் சிலரையும் தமிழர்கள் பகுதிகளுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். ஏற்கெனவே கொரோனா பீதியில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்கா விமானநிலையம் இருக்கும் தெற்குப் பகுதியில்தான் மேம்படுத்தப்பட்ட மருத்துவநிலையங்கள் இருக்கின்றன. தவிர, தனிமைப்படுத்துவதற்கு ஏற்ற ரிசார்ட்டுகளும் மலையகப் பகுதிகளில்தான் இருக்கின்றன. அவற்றை விடுத்து 300, 400 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் தமிழர் பகுதிகளுக்கு பேருந்துகளில் அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன? ஆட்சியாளர்கள், இந்த இனப்பாகுபாடு நடவடிக்கையை உடனடி யாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இலங்கையில் கொரோனாவிலும் இனப்பாகுபாடு?

ஈழ எழுத்தாளர் நிலாந்தன், “கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து 400 கி.மீ-க்கு அப்பால் உள்ள வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு கொரோனா சந்தேகத் துக்குரிய நபர்களை அழைத்து வருவதுதான் சந்தேகத்தைக் கிளப்பு கிறது. அம்பாந்தோட்டை மத்தளத் தில் உள்ள விமானதளம் பயன்பாடின்றி உள்ளது. அங்கு கொண்டுசென்று தனிமைப்படுத்தலாம் என்பதே தமிழ் டாக்டர்களின் கருத்து. ஆனால், சிங்கள ஆட்சியாளர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள மருத்துவமனை களில் கொரோனா பரிசோதனை வசதிகூட இல்லை. பரிசோதனை செய்ய அநுராதபுரத்துக்குச் செல்ல வேண்டும். தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், கொழும்புவில் உள்ள அங்கொட தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலைக்குத்தான் கொண்டுசெல்ல வேண்டும். இப்போது மட்டுமல்ல, வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு ஆட்களைத் தள்ளிவிடும் பழக்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எப்போதும் உண்டு. 1971-ம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சி செய்தபோதுகூட, அந்தத் தலைவர் களை யாழ்கோட்டையிலும் இன்னும் சில தமிழர் பகுதிகளிலும்தான் தங்கவைத்திருந்தனர்.

சிவாஜிலிங்கம் - நிலாந்தன்
சிவாஜிலிங்கம் - நிலாந்தன்

நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு, தற்போது ராணுவத்தின்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவத்தின்மீதான மதிப்பு மக்கள் மத்தியில் அதிகரிக்கும் எனக் கணக்கிடுகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற, ராணுவத்தைப் புனிதப்படுத்தும் வாய்ப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்” என்றார்.

இலங்கை அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “தனிமைப்படுத்துதல் முகாம், தமிழர் பகுதிகளில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியாது. 22 முகாம்களில் ஆறு முகாம்கள் மட்டுமே தமிழர் பகுதிகளில் இருக்கின்றன. அவை சற்று பெரிய முகாம்களாக இருக்கலாம். மற்றபடி, நீங்கள் எழுப்பியிருக்கும் சந்தேகங்களுக்கெல்லாம் விடை சொல்ல முடியாது” என்றனர்.