அலசல்
Published:Updated:

கொரோனா அட்டாக்... என்ன செய்யப் போகிறது இந்தியா?

கொரோனா அட்டாக்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா அட்டாக்

குரல்வளையை நெரிக்கும் கொரோனா...

கொரோனா வைரஸ், இந்தியாவில் சமூகத் தொற்றுநோயாகப் பரவாமல் தடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்கிறோமா? ‘‘நமக்கு இந்த வாரம் மிக முக்கியமான தருணம்’’ என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் பலராம் பார்கவா. இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை, உலகமே அக்கறையுடனும் அச்சத்துடனும் கவனித்துவருகிறது.

அதற்கான காரணங்கள் நிறைய. உலகம் முழுக்க 192 நாடுகளில் பரவி, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்திருக்கிறது கொரோனா! ‘சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அது மாபெரும் கொள்ளை நோயாகப் பரவினால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை லட்சங்களிலும், இறப்பு பல்லாயிரங் களிலும் இருக்கும்’ எனப் பதறுகிறார்கள் நோயியல் நிபுணர்கள்.

சீனாவைப்போலவே உலகளாவிய தொடர்புகள் கொண்ட நாடு இந்தியா. வியாபாரம், தொழில், கல்வி எனப் பல காரணங்களுக்காக இந்தியர்கள் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியிருக் கிறார்கள். இந்தியா பாதிக்கப்பட்டால், அதனால் உலகமே பெரும்பாதிப்புக்குள்ளாகும்.

கொரோனா அட்டாக்
கொரோனா அட்டாக்

உலக அளவில் மருந்து தொழிலில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது இந்தியா. உலகின் பல நாடுகளுக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை இந்திய நிறுவனங்கள்தான் அனுப்பிவைக்கின்றன. இந்தியா பாதிக்கப்பட்டால் அந்த விநியோகம் தடைப்படும்; உலகமே அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல நேரிடும்.

அதனால்தான் இந்தியா நிதானமாகவும் கவனமாகவும் அடியெடுத்து வைக்கிறது. அரசு இதை வரவேற்றாலும், இது பல தரப்பிலும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. நாம் என்ன செய்யக் கூடாது, என்ன செய்ய வேண்டும்? ஐந்து நாடுகள் முன்னுதாரணங்களாக இருக்கின்றன.

இத்தாலி செய்த தவறுகள்

அவற்றில் தவறான உதாரணம் இத்தாலி. நம் தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் முக்கால்வாசி அளவுகொண்ட இந்த நாடுதான், சீனாவைவிட அதிகம் பேரை கொரோனாவுக்கு பலிகொடுத்திருக் கிறது. 100 பேருக்கு பாதிப்பு இருந்தால் 9 பேர் செத்துப்போகிறார்கள். ‘ஒரு கொள்ளைநோயை எப்படியெல்லாம் அணுகக் கூடாது’ என உலகத்துக்கு பாடம் நடத்தியுள்ளது இத்தாலி.

ஒரு மாதத்துக்கு முன்பு இத்தாலியில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். உடனடியாக, ‘கொரோனா பாதித்த பகுதியை மற்ற இடங்களிலிருந்து துண்டிக்க வேண்டும். மக்கள் நடமாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும்’ என மருத்துவத் துறையினர் வேண்டினர். ஆனால், ஆட்சியாளர்கள் கேட்கவில்லை.

இரண்டே வாரங்களில் வடக்கு இத்தாலியில் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பரவியது. அந்த நேரத்தில்தான் அரசுக்கு கவலை ஏற்பட்டது. ‘வடக்கு இத்தாலியை மட்டும் நாட்டின் மற்ற பகுதிகளுடன் தொடர்புகொள்ள முடியாதபடி துண்டிப்பது’ என முடிவுசெய்தது. அரசு இப்படி ஒரு திட்டம் வைத்திருப்பது குறித்து வெளியில் தகவல் கசிய, ஒருவித அச்சம் சூழ்ந்தது. வடக்கு இத்தாலியில் தங்கி இருந்த பலர், அவசர அவசரமாக தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். அவர்கள் இப்படி தங்கள் சொந்த முயற்சியில் அந்த வைரஸை நாடு முழுக்கப் பரப்பினர்.

கொரோனா அட்டாக்
கொரோனா அட்டாக்

ஒரே நேரத்தில் இத்தாலியின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான நோயாளிகள் உருவானதால், மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன. பரிசோதனை உபகரணங்கள் போதுமானவையாக இல்லை. மிக மோசமான அறிகுறி உள்ளவர்களை மட்டும் சோதித்தனர். அத்தனை பேருக்கு சிகிச்சை தரும் வசதிகள் இல்லை. ஐரோப்பாவிலேயே அதிக முதியவர்கள் உள்ள நாடு இத்தாலி. அந்த முதியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகள் அவர்களை ஏற்க மறுத்தன. வீட்டிலேயே இறந்த அவர்கள், தங்கள் உறவுகளுக்கும் நோயைக் கொடுத்தனர்.

இந்தப் புள்ளிவிவரங்கள் அச்சம் தருபவை. இத்தாலியில் இறந்தவர்களில் 87 சதவிகிதம் பேர், தங்கள் வீடுகளிலேயே இறந்தனர். அவர்களின் சராசரி வயது 78.5. இறந்தவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு ஏற்கெனவே ஏதோ ஒரு நோய் இருந்தது. இவர்களில் பலரும் முதியவர்கள் என்பதால், இது முதியவர்களை மட்டுமே கொல்லும் நோய் என நினைக்க வேண்டாம். இளைஞர்களும் பாதிக்கப் படுகின்றனர். அவர்களில் பலருக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லை. அதனாலேயே, மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் கருவியாக அவர்கள் மாறிவிடுகின்றனர். அதைத் தடுக்காமல் மரணங்களைத் தடுக்க முடியாது.

வெற்றிகரமாகச் சாதித்த தென் கொரியா!

சரி, சரியான முன்னுதாரணத்தைப் பார்ப்போம். இதை வெற்றிகரமாகச் சாதித்துக்காட்டிய நாடு, தென் கொரியா. 2015-ம் ஆண்டு தென் கொரியாவில் மெர்ஸ் தொற்றுநோய் மோசமாகப் பரவி, பலரையும் காவு வாங்கியது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அந்த நாடு, தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மிகச் சிறந்த மருத்துவ நெட்வொர்க் ஒன்றை அமைத்தது.

சீனாவில் கொரோனா பரவியதுமே, தென் கொரியா அதை எதிர்கொள்ளத் தயாரானது. கொரோனா தொற்றைக் கண்டறியும் உபகரணங் களைத் தயாரிக்க, ஐந்து மருத்துவ நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கியது. இன்று அந்த நிறுவனங்கள் பல நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கின்றன. நம் தமிழ்நாட்டில் பாதி அளவு மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில், 633 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 10,000 பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. லேசான அறிகுறிகளுடன் வந்தால்கூட புறக்கணிப்பதில்லை. டேகு நகரில் ஒரு தேவாலயத் தில் பிரார்த்தனையில் பங்கேற்ற ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியானபோது, அந்தப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் சோதனை செய்யப்பட்டது ஓர் உதாரணம்.

இப்படிப்பட்ட பரிசோதனைகளால் இரண்டு விஷயங்கள் உறுதிசெய்யப்பட்டன. ஒன்று, வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சையளித்து மரணத்தைத் தடுக்க முடிகிறது. இரண்டு, உடலில் வைரஸ் தொற்றியும் ஆரோக்கியமாக இருந்தவர்கள், அதை சமூகத்தில் மற்றவர்களுக்குப் பரப்பாமல் தடுக்க முடிகிறது.

இந்தப் பரிசோதனைகளின்போது மருத்துவப் பணியாளர்களுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும் ஒரு புதுமை செய்யப்பட்டது. பழைய டெலிபோன் பூத் போன்ற ஒரு தடுப்புக்குள் நோயாளி இருப்பார். அவரைத் தொடாமலேயே வெளியில் இருந்தபடி அவரிடம் பரிசோதனைக் கான மாதிரி எடுக்கப்படும்.

கொரோனா அட்டாக்
கொரோனா அட்டாக்

உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் அளவுக்கு தென் கொரியாவின் நடவடிக்கைகள் இருந்தன. மார்ச் 23-ம் தேதி நிலவரப்படி, அங்கு பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,961. மரண மடைந்தவர்கள் 111 பேர். சுமார் 1.2 சதவிகிதம்.

ஜெர்மனியின் வெற்றிக்கதை இது!

ஜெர்மனியும் இதேபோல் பரிசோதனைகளைப் பரவலாக்கியே இறப்பைத் தடுத்தது. தினமும் 12,000 பேரைப் பரிசோதிக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள்கூட பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படுகின்றன. மிக முக்கியமாக, இன்டென்சிவ் கேர் யூனிட்டில் தேவையான அளவுக்கு படுக்கைகளைத் தயாராக வைத்திருந்தது அரசு. ஒரு நோயாளியைக்கூட புறக்கணிக்காமல் தீவிர சிகிச்சையளித்ததன் விளைவாக மரணத்தைக் குறைத்தது.

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் 24,873 பேர். ஆனால் மரணமடைந்தவர்கள் 94 பேர் மட்டுமே! உலகிலேயே குறைந்த மரண விகிதம், ஜெர்மனியின் வெற்றிக்கதை.

வேகம் காட்டிய சீனா!

சீனா, ஆரம்பக்கட்டத்தில் அலட்சியம் செய்தாலும் அடுத்தடுத்த நாள்களில் நோய்ப் பரவலைத் தடுப்பதில் தீவிரம்காட்டியது. நோய் அறிகுறிகளுடன் வந்த அனைவருமே பரிசோதனை செய்யப்பட்டனர். நான்கு மணி நேரத்துக்குள் ரிசல்ட் கிடைத்தது. அதுவரை அவர்கள் மருத்துவமனையைவிட்டு வெளியேற அனுமதிக்கப் படவில்லை. வைரஸ் தொற்று உறுதியானவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். தொற்று இல்லை என நெகட்டிவ் ரிசல்ட் வந்தவர்களை, வீட்டுக்குள் தனிமைப்படுத்தி வைத்தனர். கொரோனாவை வெற்றிகரமாக அவர்களால் இப்படித்தான் கட்டுப்படுத்த முடிந்தது.

குழப்பம் செய்த அமெரிக்கா!

அமெரிக்கா இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் குழப்பம்காட்டியது. பரிசோதனைகளை அதிகரிப்பது அவசியமா அல்லது கட்டுப்பாடுகள் விதித்து மக்களைத் தனிமைப்படுத்துவது அவசியமா என விவாத மேடை நடத்தி நேரத்தை வீணடித்தது. அதற்குள் கொரோனா கட்டுக்கு அடங்காமல் பரவிவிட்டது. இந்த இரண்டுமே முக்கியம் என்பதை இப்போது அமெரிக்கா உணர்ந்துள்ளது.

என்ன செய்ய வேண்டும் இந்தியா?

கொரோனா தொற்று மிகத் தாமதமாகவே இந்தியாவை எட்டியுள்ளது. மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், மற்றவர்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்திய விஷயங்களைப் பின்பற்றவும் நமக்கு நிறைய அவகாசம் கிடைத்திருக்கிறது. இதை நாம் தவறவிட்டுவிடக் கூடாது. சரி, என்ன செய்ய வேண்டும் இந்தியா?

  • தென் கொரியாபோல் நாம் திறமையாகச் செயல்பட வேண்டும் என்றால், இந்தியா முழுவதும் 16,000 பரிசோதனைக்கூடங்கள் தேவை. எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகளை முறைப்படுத்த வேண்டும்.

  • கொரோனா பரிசோதனை உபகரணங் களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவில் 16 நிறுவனங்கள் இவற்றைத் தயாரித்து வைத்திருப்பதாகச் சொல்கின்றன. புனே வைராலஜி இன்ஸ்டிட்யூட், இவற்றின் தரத்தை உடனடியாக ஆய்வுசெய்து அனுமதி தர வேண்டும்.

  • கொரோனா சிகிச்சைக்காக இன்டென்சிவ் கேர் யூனிட்டில் படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைக ளிடம் பேசி, அவற்றையும் களத்தில் இறக்க வேண்டும். மருத்துவமனையில் நோய்த்தொற்று ஏற்படுவதையும் தடுக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கும் இதர சிகிச்சைகளுக்கும் உபகரணங்கள் முதல் பணியாளர்கள் வரை தனித்தனியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

  • உலக அளவில் Chloroquine, Azithromycin, Lopinavir, Ritonavir ஆகிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது. பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை தர, எல்லா மருத்துவமனைகளிலும் இந்த மருந்துகள் கைவசம் இருக்க வேண்டும்.

  • மிக முக்கியமாக, வைரஸின் சமூகப் பரவலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்து ‘தனிமையில் இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டவர்கள்கூட சர்வசாதாரணமாக பொது இடங்களில் பயணம் செய்வது அச்சம் தருவதாக உள்ளது. மாநிலம், மாவட்டம் என எல்லை தாண்டும் அவசியமற்ற பயணங்கள் தடுக்கப்பட வேண்டும்.

எச்சரிக்கையாக இருப்போம்... பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!

பரிசோதனை என்ன?

கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய, Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR) என்ற பரிசோதனை செய்யப் படுகிறது. இதற்கு, நோயாளி மூக்கின் உட்பகுதியிலும் தொண்டையின் உட்பகுதியிலும் இரண்டு செட் மாதிரிகள் எடுக்கப்படும். ஒன்று, அங்கேயே பரிசோதிக்கப்படும். இன்னொன்று, புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்படும். கொரோனா இருப்பது உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான்.

ஒரு பரிசோதனைக்கு 4,500 ரூபாய் செலவாகிறது. ‘இந்தப் பரிசோதனை உபகரணங்கள் சுமார் 10 லட்சம் என்ற அளவிலேயே உள்ளதால், தவறானவர்களுக்கு பரிசோதனை செய்து வீணடிக்கக் கூடாது’ என்ற எச்சரிக்கையுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுகிறது. அதனால் ஜுரம், இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டனர். அவர்களிடமும் பயண வரலாறு (Travel chart) கேட்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (21-3-2020) இரவு முதல் இந்த விதி மாற்றப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றும் ஆபத்தான சூழலில் நோயாளிகளுடன் இருந்தவர்கள், வெளிநாடு களிலிருந்து வந்தவர்கள் அனைவருமே பரிசோதிக்கப் படுகிறார்கள்.

எங்கெங்கு பரிசோதனை?

கொரோனா பரிசோதனை எங்கெங்கு செய்யலாம் எனப் பரிசீலித்து அனுமதி அளிப்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தான். இந்தியா முழுக்க 116 ஆய்வகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட், சென்னை மருத்துவக் கல்லூரி, தேனி, நெல்லை, திருவாரூர், சேலம், கோவை, திருச்சி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. வருங்காலங்களில் தேவை அதிகம் எழும் என்பதால், தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் அனுமதி தரப்படுகிறது. இந்தியா முழுவதும் 60 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.