Published:Updated:

கொரோனாவால் தடைப்படும் தடுப்பூசி! - அபாயத்தில் குழந்தைகள்

தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
News
தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடப்பட்டாலும், அதிக அளவில் பணம் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது ஏழைக் குடும்பங்களுக்குச் சாத்தியமில்லை.

பள்ளி, கல்லூரி வகுப்புகள் முதல் பொருளாதார, அரசியல் நிகழ்வுகள்வரை எத்தனையோ விஷயங்களை மொத்தமாக முடக்கிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்தப் பட்டியலில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளும் சேர்ந்திருப்பது மிகவும் அபாயகரமானது.

குழந்தைகளுக்கு நோய்கள் வருமுன் தடுப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகளின் பங்கு மிக முக்கியம். பச்சிளங்குழந்தைகளுக்குச் சரியான கால இடைவெளியில் தடுப்பூசிகள் போடப்பட வில்லையெனில், ஆரோக்கியம் கேள்விக் குறியாகிவிடும். கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில்... குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சோம சேகர், சதீஷ்
சோம சேகர், சதீஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவ மனையின் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். “ஊரடங்கு ஆரம்பித்தது முதலே தடுப்பூசியைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறோம். மக்கள் வெளியே வர முடியாது; குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துவருவதும் பாதுகாப்பானது இல்லை. அதனாலேயே இந்த முடிவு. பிறந்த குழந்தைகளுக்கு உடனே அளிக்கப்பட வேண்டிய தடுப்பூசிகள் மட்டும் வழங்கப்படுகின்றன. தடுப்பூசி அளிக்காமல் நீண்டநாள் தள்ளிப்போட முடியாது. விரைவில் தடுப்பூசிச் சேவைகள் தொடங்கப்படும்” என்றார்.

`தனியார் மருத்துவமனைகளின் நிலை என்ன?’ என்று குழந்தைகள் நல மருத்துவர் சோம சேகரிடம் பேசினோம். “தடுப்பூசி வழங்குவதை நிறுத்தினால், அம்மை நோய்கள், தண்ணீரின் மூலம் பரவும் நோய்களான டைபாய்டு, ஹெபடைட்டிஸ்-ஏ ஆகியவற்றின் தாக்கம் அதிகரிக்கலாம். எனவே, உரிய பாதுகாப்பு வசதிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தங்கு தடையில்லாமல் போடப்பட்டு வருகின்றன” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள்நல மருத்துவர் சதீஷ், “இந்திய அரசாங்கம் ‘தடுப்பூசி வழங்குதல் அத்தியாவசியம். ஹெபடைட்டிஸ்-ஏ, கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி (HPV- Human Papillomavirus) ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளை மட்டும் பின்னர் வழங்கலாம்’ என்று கூறியிருக்கிறது. `பின்னர் வழங்கலாம்’ என அரசு அறிவுறுத்தி யிருப்பதைத் தவிர மற்ற அனைத்துத் தடுப்பூசிகளும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன. கொரோனாவுக்கு பயந்து தடுப்பூசி போடுவதைத் தள்ளிப்போட்டாலோ, தவிர்த்தாலோ அது ஆபத்தில் முடியும்” என்றார்.

ரெக்ஸ் சற்குணம், குழந்தைசாமி
ரெக்ஸ் சற்குணம், குழந்தைசாமி

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடப்பட்டாலும், அதிக அளவில் பணம் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது ஏழைக் குடும்பங்களுக்குச் சாத்தியமில்லை.

இதுகுறித்துப் பேசிய குழந்தைகள்நல மருத்துவரும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவருமான ரெக்ஸ் சற்குணம், “குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி தடுப்பூசி போட்டுவிடுவார்கள். அதன் பிறகு 45, 75, 105 நாள்கள் கால இடைவெளியில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். ஹெபடைட்டிஸ்-ஏ மற்றும் பி, தட்டம்மை, கக்குவான் இருமல், போலியோ போன்ற வற்றுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளும் ஊரடங்கால் தடைப்பட்டுள்ளன.

தடுப்பூசி
தடுப்பூசி

கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வருவதைப்போல் தெரியவில்லை. எனவே, தடுப்பூசி போடாமல் காலம் தாழ்த்தினால் அபாயகரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். வரும் ஜூன் 1-ம் தேதியிலிருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்” என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும், மருத்துவருமான குழந்தைசாமியிடம் பேசினோம். “அரசு மருத்துவமனைகளில் கொரோனா காரணமாக தடுப்பூசிகளை நிறுத்தி வைக்கச் சொல்லி மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஊரடங்கு தொடங்கப்பட்ட முதல் நான்கு வாரங்களுக்கு மட்டுமே கிராமங்களுக்குச் சென்று தடுப்பூசி வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. அப்போதுகூட அரசு மருத்துவ மனைகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதால், பலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வராமலிருக்கலாம். சில அரசு மருத்துவமனைகளிலும் அங்கே நிலவும் சூழலுக்கு ஏற்ப தடுப்பூசி வழங்குவதை நிறுத்திவைத்திருக்கலாம். ஆனால், அப்படி நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் குழந்தைகள் அம்மை, டிப்தீரியா போன்ற நோய்களால் பாதிக்கப் படுவார்கள். தடுப்பூசி வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் அரசு மருத்துவமனைகள் குறித்து விசாரணை செய்யப்படும்” என்றார்.

‘அடுத்த ஆறு மாதங்களில் உலக அளவில் 12 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடப்படாத காரணத்தாலும், உடல் பலவீனம், சுகாதாரக் குறைபாடு போன்ற காரணங்களாலும் இறக்கக்கூடும். கொரோனா தொற்றால் சுகாதாரச் சேவைகளில் இடையூறு ஏற்படுவதால் இந்தியாவில் மட்டும் மூன்று லட்சம் குழந்தைகள் இறக்கக்கூடும்’ என்று யூனிசெஃப் கூறியுள்ளது.

குழந்தைகளே நம் எதிர்காலம். எனவே, இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.