அலசல்
Published:Updated:

‘தமிழகம் இத்தாலியாக மாறிவிடக் கூடாது!’

கொரோனா பாதிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா பாதிப்புகள்

குரல்வளையை நெரிக்கும் கொரோனா...

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி யுள்ளதுதான். மறுப்பதற்கில்லை... அதேசமயம் சில குறைபாடுகளையும் தெரிவிக்கிறார்கள் துறை சார்ந்த விவரம் அறிந்தவர்கள்.

தமிழகத்துடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் 40, 16 என்றிருக்க, தமிழகத்தில் மட்டும் வெறும் ஒன்பதுதான் (மார்ச் 22-ம் தேதி நிலவரப்படி) என்கிறது அரசு.

‘மாநிலத்துக்குள் நோய்ப்பரவல் இல்லை. இங்கு நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட ஒன்பது பேருமே வெளிநாட்டிலிருந்து, வெளிமாநிலத் திலிருந்து நோயைக் கொண்டுவந்தவர்கள்தாம்’ என்கிறது தமிழக சுகாதாரத் துறை. ‘கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, சுகாதாரத் துறை சார்பில் கடுமையான பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் (Stringent Screening and Finding) நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். எங்கள் கண்காணிப்பிலிருந்து ஒருவர்கூட தப்ப முடியாது’ என்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

கொரோனா பாதிப்புகள்
கொரோனா பாதிப்புகள்

ஆனால், ‘‘அரசுத் தரப்பில் சொல்லப்படும் தகவல்களை நம்பி நிம்மதியாக இருக்க முடியவில்லை’’ என்று சிலர் கூறுகின்றனர்.

இதுகுறித்து பெயர் வெளியிட மறுத்துப் பேசிய முன்னாள் அரசு மருத்துவர் ஒருவர், “கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கிறது. இதுவரை ஆயிரத்து சொச்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விமானம், ரயில் பயணிகளிடம் இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டர் மூலம் உடல் வெப்பநிலை மாற்றத்தை மட்டும் பரிசோதித்துவிட்டு லட்சக்கணக்கானோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டதாகச் சொல்கிறது” என்றார் வேதனையுடன்.

இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், கோவையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஷார்ஜாவிலிருந்து 118 பேர் விமானத்தில் கோவைக்கு வந்தனர். அவர்களில் வெறும் 30 பேரை மட்டும் தனிமைப்படுத்திக் கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்டு, மீதம் உள்ள 88 பேரை அனுப்பி விட்டனர். இந்த விவகாரம் ஊடகங்களில் விவாதப் பொருளான பிறகு, அந்த 88 பேரையும் அழைத்துவந்து கண்காணித்துவருகின்றனர். அதிகாரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, “ஷார்ஜாவிலிருந்து வந்தவர்கள் வைஃபை இணைப்பு, டிகிரி காபி, ஏ.சி அறையெல்லாம் கேட்கிறார்கள். எங்களால் அவற்றையெல்லாம் வழங்க முடியாது என்பதால் அனுப்பி விட்டோம்” என்று சொல்லி அதிரவைத்திருக் கின்றனர்.

கொரோனா பாதிப்புகள்
கொரோனா பாதிப்புகள்

மத்திய அரசு மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, “இதுவரை தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளின் கொரோனா வார்டுகளிலும், மொத்தமாகவே வெறும் 300 படுக்கைகள்தான் ஏற்படுத்தப் பட்டுள்ளன. தற்போது, சென்னை பூந்தமல்லியில் உள்ள சுகாதாரத் துறை பயிற்சி மையம், தாம்பரம் காசநோய் மருத்துவமனை ஆகிய இடங்களில் மக்களைக் கண்காணித்து அனுமதிக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த முன்தயாரிப்புகளை அபாயகரமான சூழலுடன் ஒப்பிடும்போது அதிகபட்ச போதாமையிலேயே உள்ளன. உதாரணத்துக்கு, சென்னையின் மக்கள்தொகை ஒரு கோடிக்கு அதிகம். அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அவர்களில் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் வைத்துக்கொள்வோம். அவர்களில் சில நூறு பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டால்கூட, அவர்களை அனுமதித்து சிகிச்சையளிக்கப் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. சென்னையிலேயே இந்த நிலை என்றால், பிற மாவட்டங்களில் நிலை என்ன?” என்று கவலை தெரிவிக்கிறார்

கொரோனா நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துவரும் பிரபல தனியார் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். “130 கோடி மக்கள்தொகையைக்கொண்ட இந்தியாவில், கொரோனா வைரஸ் நோயைப் பரிசோதிக்க வெறும் ஒரு லட்சம் கிட்கள் (Kits) மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி இதன் தீவிரத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது. கொரோனா பாதிப்பில் மூச்சுத்திணறல் தீவிரமாகித்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் ஒரு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 50 பேர் அனுமதிக்கப்பட்டால், அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் வசதி இல்லை.

‘தமிழகம் இத்தாலியாக மாறிவிடக் கூடாது!’

முகக்கவசம், கையுறை போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் அறுவைசிகிச்சை அறைகளிலேயே அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. அப்படியிருக்கும்போது, மருத்துவப் பணியாளர் களால் எப்படி கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளைக் கையாள முடியும்? அதுமட்டுமல்ல, தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அணிந்திருக்கும் கவச உடைகள், பெயரளவுக்குத்தான் கவச உடைகள். தற்காப்பு அம்சங்களில் குறைபாட்டுடன் இருக்கும் இந்த உடைகளால் முழுமையான பாதுகாப்பு கிடையாது. அவற்றை வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். கொரோனா பரவல் தீவிரமாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்களை சல்லடைக் கண்காணிப்புக்குள் கொண்டுவந்து தீவிர பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஆனால் அரசோ, `சமுதாய நோய்ப்பரவல் (community transmission) இல்லை’ என்கிறது. இத்தாலியும் ஸ்பெயினும் ஆரம்பக்கட்டத்தில் இப்படி அலட்சியமாகச் செயல்பட்டதால்தான் இன்று கொத்துக்கொத்தாக உயிர்களை இழந்துவருகின்றன. தமிழகம் இத்தாலியாக மாறாமல் இருக்க, பன்மடங்கு செயல்பாடு தேவை” என்கிறார்.

மருத்துவச் செயற்பாட்டாளர் மருத்துவர் எழிலன். “கொரோனா பரிசோதனைக்காக தனியார் மருத்துவர்களிடம் செல்பவர்களை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கின்றனர். ஆனால், அப்படி அனுப்பிவைக்கப்படுவோருக்கு சரிவர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நோயைக் கண்டறியும் பரிசோதனை விஷயத்தில் அரசு கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறது. ரேண்டமாக 1,000 பேருக்கு அல்லது விமான நிலையத்தில் கால் டாக்ஸி ஓட்டும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தினாலேயே தமிழகத்தின் உண்மை நிலவரம் தெரிந்துவிடும். தயவுசெய்து அலட்சியம்காட்ட வேண்டாம்” என்கிறார் அழுத்தமாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொது சுகாதாரத் துறையின் மாநில தொற்றுநோய் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பி.சம்பத்திடம் பேசினோம். “வெளிநாடு சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என யாருக்கெல்லாம் நோய் பரவ வாய்ப்புள்ளதோ, அறிகுறிகள் தென்படுகின்றனவோ அவர்களை யெல்லாம் பரிசோதித்தும் கண்காணித்தும் வருகிறோம். நாள் ஒன்றுக்கு 100-லிருந்து 120 பேர் வரை பரிசோதனை செய்துவருகிறோம். ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 பேரைக் கண்காணித்துவருகிறோம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகக்கவசம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களுக்குமான விநியோகம் நடைபெற்று வருகிறது. மாவட்ட மருந்துக் கிடங்குகளில் இருப்பு இல்லையென்றால், வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்துவதற்கான அனுமதி அளிக்கப் பட்டுள்ளது” என்றார்.

அரசுத் தரப்பில் பட்டியல்தான் பெரிதாக இருக்கிறதே தவிர, நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டேதான் போகிறது. ஆபத்துக்காலத்திலாவது விழித்துக்கொள்ளுமா அரசு?