Published:Updated:

கரும்பூஞ்சை நோய்! - மருத்துவர்கள் விளக்கங்களும் சிகிச்சையும்

கரும்பூஞ்சை ஒன்றும் புதிய நோய் அல்ல... 1897-ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதுதான்.

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கரும்பூஞ்சை நோய் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. ஆண்டுக்கு நான்கைந்து பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்ட இந்த நோய், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. இந்த நோய் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள் துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள்.
மோகன் காமேஸ்வரன்
மோகன் காமேஸ்வரன்

“கரும்பூஞ்சை நோய் என்றால் என்ன, நோய் ஏற்படக் காரணம் என்ன?”

மருத்துவர் மோகன் காமேஸ்வரன், காது, மூக்கு, தொண்டை நிபுணர்

“கரும்பூஞ்சை ஒன்றும் புதிய நோய் அல்ல... 1897-ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதுதான். தற்போது கொரோனா இரண்டாவது அலையில் அதிக நபர்களுக்கு இந்த நோய் வந்திருப்பதால் விஷயம் பேசுபொருளாகியிருக்கிறது. ஒருவருக்கு இயல்பாக இருக்கும் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஏற்படுவதே கரும்பூஞ்சை நோய். அதனாலேயே இதை ‘சந்தர்ப்பவாத நோய்’ என்று கூறுவோம். சர்க்கரைநோய், சிறுநீரகப் பிரச்னை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு நான்கைந்து பேருக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு கண்டறியப்படும். அந்த அளவுக்கு அரிதான இந்த நோய், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கண்டறியப்பட்டுள்ளது.

தோல், நுரையீரல் என உடலின் பல பகுதிகளிலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மூக்கு மற்றும் முகத்திலுள்ள சைனசஸ் (முகத்தின் எலும்புகளில் காணப்படும் காற்று மண்டலம்) பகுதியைத்தான் அதிகம் பாதிக்கிறது. இதன் மூலம் கண் மற்றும் மூளையையும் பாதிக்கிறது. சைனசஸில் பாதிப்பு ஏற்படும்போது முதலில் முகத்தில் கடுமையான வலி ஏற்படும். தொடர்ந்து கண்ணில் சிவப்புத் தன்மை ஏற்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்பட்டு, கண்கள் பிதுங்கியிருக்கும். இவையெல்லாம் இந்த நோயின் அறிகுறிகள். மூக்கு வழியாக எண்டோஸ்கோப் செய்து பார்க்கும்போது தசைகள் கறுப்பாகத் தெரிந்தால் அது கரும்பூஞ்சை. எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன்கள் மூலமும் இந்த நோயைக் கண்டறிகிறோம்.

கரும்பூஞ்சை நோய்! - மருத்துவர்கள் விளக்கங்களும் சிகிச்சையும்

கரும்பூஞ்சை நோயைக் கண்டறிந்த உடனேயே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் கண்ணை நீக்க வேண்டியதோடு, உயிரிழப்பு வரை செல்ல வாய்ப்புண்டு. கரும்பூஞ்சை பாதிக்கப்பட்ட தசைகளை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். இந்த நோய்க்கு நரம்புவழியாகச் செலுத்தப்படும் மூன்று மருந்துகள் மட்டுமே உள்ளன. அவை, வீரியம் மிக்க மருந்துகள் என்பதால் நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மிகவும் கவனமுடன்தான் மருந்து செலுத்த வேண்டும். மருந்தின் விலையும் கூடுதல் என்பதால் சிகிச்சைக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். கரும்பூஞ்சைக்கான மருந்தையும் தமிழக அரசு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்களுக்கு, அதிக அளவு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், சர்க்கரை உள்ளிட்ட இணை நோயாளிகளுக்கு, சர்க்கரையின் அளவு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கரும்பூஞ்சை பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இருந்தாலும், இந்த நோய் அதிகரித்திருப்பதற்கான காரணத்தை ஆராயும் பணிகள் நிறைவடையாததால், கரும்பூஞ்சை நோய்க்கான காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இது கொரோனாபோல தொற்றுநோய் அல்ல.”

சவுந்தரி
சவுந்தரி

“கரும்பூஞ்சை நோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, சிகிச்சை என்ன?”

சவுந்தரி, கண் மருத்துவர்.

“சைனசஸ் பகுதியும் கண்ணும் அருகருகே இருப்பதால் கரும்பூஞ்சை நோய் கண்ணை அதிகம் பாதிக்கிறது. இந்த நோய் ஏற்பட்ட ஒன்றிரண்டு நாள்களில் பார்க்கும் பிம்பங்கள் அனைத்தும் இரட்டையாகத் தெரியும். அடுத்து பார்வை பாதிக்கப்படும். கண்கள் சிவப்பாக மாறி, பிதுங்கி வெளியே வரும். மூக்கடைப்பு, சளி கறுப்பாக இருப்பது, வாயின் மேலண்ணம் கறுப்பாக மாறுவது இதன் அறிகுறிகள். அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும். முதற்கட்டமாகத் தசைகளில் காணப்படும் கரும்பூஞ்சைகளை நீக்குவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். பிறகு நரம்புகளில் மருந்து செலுத்தி, நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும்.

கொரோனா பாதித்த ஒருவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்தை வாங்கி, மற்றொரு கொரோனா தொற்றாளர் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பழக்கங்களை முறைப்படுத்த வேண்டும். வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு