அலசல்
சமூகம்
Published:Updated:

ரேபிட் டெஸ்ட் மர்மங்கள்: மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ரேபிட் டெஸ்ட் மர்மங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேபிட் டெஸ்ட் மர்மங்கள்

ரேபிட் கிட் மர்மங்கள் - குறையும் சோதனை... பரவும் வேதனை!

ரேபிட் டெஸ்ட் கருவிகள் காட்டும் முடிவுகளின் துல்லியமற்ற தன்மை குறித்து மருத்துவரும் செயற்பாட்டாளருமான புகழேந்தியிடம் கேட்டோம். ``ஐந்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு ‘Guangzhou Wondfo Biotech Ltd’ என்ற சீன நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது.

இந்த நிறுவனத்திடமிருந்து கடந்த மார்ச் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அரசு 20 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகளை வாங்கியிருந்தது. பரிசோதித்ததில் அவை தரமற்று இருந்தன; தவறான முடிவுகளைக் காட்டின. இதனால், ஒரே வாரத்தில் சீன நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டது இங்கிலாந்து.

இங்கிலாந்து அரசு இழப்பீடு கேட்டதாக செய்திகள் வெளியான மறுநாளே தமிழக அரசு அதே நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. அடிப்படை சரிபார்ப்புகளைக்கூடச் செய்யாமல் சுகாதாரத்துறை இப்படிச் செயல்பட்டால் எப்படி? தமிழக அரசுதான் இப்படி என்றால், ஐ.சி.எம்.ஆர் இந்தப் பரிசோதனை முறையை அடுத்தடுத்த நாள்களில் அமல்படுத் தியது. எவ்வளவு பெரிய குளறுபடி இது!

புகழேந்தி - குழந்தைசாமி
புகழேந்தி - குழந்தைசாமி

தமிழகம் கொரோனாவில் மூன்றாவது நிலைக்குச் சென்றுவிட்டதா எனக் கேட்ட போதெல்லாம், `ரேபிட் டெஸ்ட் மூலமாக பரிசோதனைகளை அதிகரித்து விரைவில் சொல்கிறோம்’ என்றது சுகாதாரத்துறை. இப்போது ரேபிட் டெஸ்ட் கருவின் துல்லியத் தன்மையே கேள்விக்குறியாகிவிட்டது. தமிழகம் சமூகப்பரவலுக்குள் சென்றுள்ளதா, இல்லையா என்பது இனி எப்படி தெரியும்?” என்றார் ஆதங்கத்துடன்.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் துல்லியத் தன்மை காட்டாததால் அதன்மூலம் செய்யப்படும் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகளைக் கண்டறிவதில் தமிழகத்துக்குப் பின்னடைவு ஏற்படுமா? இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநரான மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.

“ரேபிட் டெஸ்ட் பெரிய அளவில் பயன்படாது. அதனால்தான் டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட்டை அனுமதிக்க வில்லை. எலைசா பரிசோ தனைதான் செய்கிறோம். மலேரியாவுக்கு மட்டும் ரேபிட் கருவிகள் சற்று துல்லியமான முடிவுகளைத் தருவதால், மத்திய அரசின் அனுமதியுடன் தமிழகத்தில் சில இடங்களில் ரேபிட் டெஸ்ட் செய்யப்படுகிறது.

ஆனால், கொரோனாவைப் போன்ற தொற்று நோய் பரிசோதனைக்கு பெரும்பாலும் இதைப் பயன்படுத்துவதில்லை. கூடுதல் பாதுகாப்பு முயற்சியாக மட்டுமே ரேபிட் பரிசோதனையை நடத்த முடிவு செய்தோம். அதாவது, ஒரு கணக்கெடுப்புக்காக மட்டுமே அதைப் பயன்படுத்துகிறோம். அதன்படி சமூகத்தில் தொற்று பரவியிருக்கிறதா என்ற கணக்கெடுப்பு நடத்தி, ஒரு புரிந்துணர்வுக்கு வர இயலும். அதனால்தான் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே பி.சி.ஆர் பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த சோதனைகளை அதிகரித்து வருகிறது.

ரேபிட் டெஸ்ட் மர்மங்கள்
ரேபிட் டெஸ்ட் மர்மங்கள்

இப்போது பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை மூன்று மணி நேரத்தில் வெளியிடும் கருவிகள் வந்துவிட்டன. அவற்றை லட்சக்கணக்கில் வாங்கியிருக்கிறோம். அவை பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. அதன்மூலம் துல்லியமான முடிவுகளை எடுத்து சிகிச்சையை மேம்படுத்த முடியும்” என்றார்.

தரமற்ற வென்டிலேட்டர்கள்!

தமிழகத்தில்ல் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் தரமில்லாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி, ``இறக்குமதி செய்யப்படும் வென்டிலேட்டர்கள் தரத்திலும் பிரச்னை இருக்கிறது என்கிறார்கள் அரசு மருத்துவர்கள். வென்டிலேட்டர் செயல்பாடு என்பது வெறும் கருவி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அதைக் கையாளும் டெக்னீஷியன் தொடங்கி அதன் பக்கவிளைவுகளை உணர்ந்து செயல்படும் மருத்துவர் வரை பலரின் பங்கும் வென்டிலேட்டர் சிகிச்சைக்குத் தேவை. இதில் எதையுமே அரசு கணக்கில் கொள்வதாகத் தெரியவில்லை” என்றார் அவர்.

கிட்ஸ் பற்றாக்குறை!

ரேபிட் டெஸ்ட் நிறுத்தப்பட்டுவிட்டது என்பது ஒருபுறம் இருந்தாலும் வந்த கருவிகளும் தமிழகத்துக்கு போதுமானதாக இல்லை என்கிறார்கள். ஒருவேளை ரேபிட் சோதனை துல்லியமாக கிடைத்து, பரிசோதனைகள் தொடர்ந்திருந்தாலும் தமிழகத்துக்கு அதனால் பெரியளவில் பலன் இருக்காது என்பதுதான் உண்மை.

சீனாவிலிருந்து தமிழகத்துக்கு 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்தன. தொடர்ந்து மத்திய அரசு தொகுப்பிலிருந்து 12,000 கருவிகள் வந்தன. மொத்தம் 36,000 கருவிகள். சில நாள்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் இதயவியல் துறையைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் தங்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் நிர்வாகமோ அத்தனை பேருக்கும் பரிசோதனை செய்வதற்கு ரேபிட் கருவிகள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டது.

மற்றொருபுறம் சென்னையில் பணியாற்றும் 32 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து களத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் இரண்டு இடங்களில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அறிவித்தது. பத்திரிகையாளர்கள் அங்கு சென்றபோது ‘கருவிகள் இருப்பு இல்லை’ என்றே பதில் வந்துள்ளது!