Published:Updated:

பைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை!

ட்ரோன் படை
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரோன் படை

சென்னையில் ‘ரெட் ஜோன்’ என்று அறிவிக்கப்பட்ட ஏரியாக்களில் மனிதர்கள் செல்லவே தயங்குவர். அங்கேயும்கூட, ஒரு ரோபாபோல் செயல்படுகிறது ட்ரோன்.

கொரோனா துயரத்திலிருந்து இந்த உலகைக் காப்பாற்ற வானத்திலிருந்து ஒரு தேவதூதன் இறங்கி வரமாட்டானா என்பதுதான் பல நூறு கோடி மக்களின் பிரார்த்தனையாகவுள்ளது. வானத்திலிருந்து வரும் தேவதூதன் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பானோ இல்லையோ, வானத்தில் பறக்கும் நவீன ட்ரோன்களைக்கொண்டு வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சி வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டிருக்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுவதைக் கட்டுப்படுத்து வதில் ட்ரோன்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் இவற்றின் பயன்பாடு மிகச் சிறப்பாகவுள்ளது. அதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி-யில் செயல்படும் ஆள் இல்லா விமான ஆராய்ச்சித் துறையின் பங்களிப்பு முக்கியமானது.

பைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறாமல் தடுப்பதற்காக தமிழக அரசு அதிகாரிகள் போராடிவருகிறார்கள். டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பைக் காட்டிலும் சென்னையில் பாதிப்பு குறைவுதான். அதற்கு தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் முக்கியக் காரணம். அதில் ட்ரோன்களைக்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மிக முக்கியமானது.

சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகை சுமார் 90 லட்சம். 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 நாள்களில் ஐந்து ட்ரோன்களைக்கொண்டு, சென்னை ஏரியல் வியூவில் ஏறத்தாழ நான்கு கோடி சதுரமீட்டர் பரப்பளவுக்கு கொரோனா வைரஸ்களைக் கொல்லும் ரசாயனக் கலவையைத் தெளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதலில் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களைக்கொண்டே, கிருமிநாசினிகளை தெருக்களில் தெளித்து வந்தது சென்னை மாநகராட்சி. மைக்ரோ லெவலில் வீடுகளுக்குள் தெளிப்பானை வைத்து மருந்தை அடித்துவந்தார்கள். சிறு வாகனங்களின் பின்புறம் கெமிக்கல் கலந்த ஸ்பிரே வைத்து தெருக்களில் தெளித்தார்கள். லாரிகளில் பீரங்கி போன்ற புளோயர்களை வைத்து மருந்து அடித்தனர்.

பைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை!

ஆனால், சென்னையில் மிகவும் குறுகலாகவும் அதேநேரத்தில் மக்கள் அடர்த்தி அதிகமாகவும் உள்ள புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி போன்ற ஏரியாக்களில் இத்தகைய எந்த வாகனத்தைக்கொண்டும் வைரஸ் தொற்றை அழிக்கும் மருந்துகளைத் தெளிக்கவே இயலாது. இதற்காக யோசித்தபோதுதான், ட்ரோன்களைப் பயன்படுத்தும் யோசனை வந்துள்ளது. உடனடியாக சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி-யில் செயல்படும் ஆள் இல்லா விமான ஆராய்ச்சித் துறையை நாடியுள்ளனர். அவர்களின் உதவியுடன்தான் சென்னை முழுவதும் இப்போது மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ‘ரெட் ஜோன்’ என்று அறிவிக்கப்பட்ட ஏரியாக்களில் மனிதர்கள் செல்லவே தயங்குவர். அங்கேயும்கூட, ஒரு ரோபாபோல் செயல்படுகிறது ட்ரோன். ரெட்டேரி பகுதியில் பிரமாண்ட அப்பார்ட்மென்ட்டில் பத்தாவது மாடியில் வசித்துவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்திருக்கிறது. அந்த பில்டிங்கை கூகுள் மேப்பில் பொருத்தி, அதன் மேலே சுமார் 60 மீட்டர் உயரத்தில் 200 மீட்டர் சுற்றளவுக்கு கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான கெமிக்கலை ட்ரோன் உதவியுடன் அடித்திருக்கிறார்கள்.

இதே பாணியில் கோயம்பேடு, ஹாரிங்டன் ரோடு, காசிமேடு, அயனாவரம் போன்ற சென்சிட்டிவ்வான பகுதிகளிலும் ட்ரோன்களைக்கொண்டு மருந்து தெளிக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு சென்னையில் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்த ட்ரோன்களின் பங்களிப்பு சிறப்பானதாக வுள்ளது.

எம்.ஐ.டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் டாக்டர் அப்துல் கலாம் ஆள் இல்லா விமான ஆராய்ச்சி நிலையக் குழுவினர்தான் இந்தப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த முறையைப் பாராட்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள சில மாநில அரசுகள், இதே ட்ரோன்களைக் கொண்டு தங்களுக்கு உதவுமாறு இந்தக் குழுவை அணுகியுள்ளன.

இந்தக் குழுவினர், இதற்கு முன்பாகவும் பலவிதங்களிலும் அரசுக்கும் சமூகத்துக்கும் ட்ரோன்களைக்கொண்டு மகத்தான பல பணிகளைச் செய்திருக்கின்றனர். மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து பலர் பலியானபோது, கட்டட இடிபாடுகளுக் கிடையே உயிருடன் சிக்கித் தவித்த 17 பேரை ட்ரோன்களின் உதவியுடன் உயிருடன் மீட்க உதவியது இந்தக் குழு. டி.சி.எஸ் வளாகத்தில் பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், பல்வேறு தடயங்களையும் ட்ரோன்களின் உதவியுடன் கண்டுபிடித்துக் கொடுத்ததும் இதே குழுவினர்தான் உத்தரகாண்டில் கேதார்நாத் கோயில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இந்திய ராணுவத்துடன் இணைந்து ஒரு மாதகாலம் பணியாற்றி பலருடைய உயிர்களையும் காத்ததும் இதே ட்ரோன் படைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியரும் விமான ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநருமான டாக்டர் கே.செந்தில்குமார் இதைப் பற்றி விரிவாக விளக்கினார்...

பைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை!

‘‘பல்வேறு பேரிடர் சமயங்களிலும் அரசு நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில், சென்னை மாநகராட்சியின் தலைமை இன்ஜினீயர் ராஜேந்திரன் எங்களை அழைத்து ஆலோசனை கேட்டார். கொரோனா வைரஸின் சைஸ் இரண்டு மைக்ரான். `நானோ லெவல் துகள்கள்’ என்போம். கொரோனா தொற்று உள்ள ஒரு மனிதர் திறந்தவெளியில் தும்மும்போதும் இருமும்போதும் 20 முதல் 40 மைக்ரான் சைஸில் வைரஸ்களுடன் துகள்கள் வெளிப்படுகின்றன. இது கொஞ்சம் பெரிய சைஸ் துகள்கள். ஒரு மணி நேரம் காற்றில் பறக்கும் வல்லமை பெற்றவை. சில சமயங்களில் திறந்தவெளியில் ஏதாவது ஒரு பொருளில் ஒட்டிக்கொள்ளும். அதை மனிதர்கள் தொடும்போது மிக எளிதாகப் பரவிவிடும். இதைத் தவிர்க்க, 80 மைக்ரான் அளவுக்கு கெமிக்கல்களை அதைவிட குறைவான மைக்ரான் சைஸ்கொண்ட வைரஸ் உள்ள இடங்களில் ட்ரோன் மூலம் அடிக்கிறோம்.

இந்த முறையை சீனாவில் அதிகம் பாதித்த பகுதிகளில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது பேட்டரியில் இயங்கும் ட்ரோன். அதைவிட நவீன டெக்னாலஜி முறைப்படி நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ட்ரோன் மூலம் தெளிக்கப்படும் கெமிக்கல் துகளின் எடஇ அதிகம் என்பதால், அதைவிட குறைவான எடை கொண்ட வைரஸ் மீது பட்டு, தரைக்குத் தள்ளிக்கொண்டு வருகிறது. நுண்ணிய வைரஸ் மீது சற்று பெரிய சைஸ் கெமிக்கல் பனிப்புகைபோல் படர்ந்து, துல்லியமாக வைரஸைத் தாக்குகிறது.

மார்ச் 28-ம் தேதியன்று சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை ஆரம்பித்தோம். கடந்த 22 நாள்களில் 4 கோடி சதுரமீட்டர் அளவுக்கு சென்னை ஏரியாவை கவர் செய்திருக்கிறோம். எங்களுடைய பணியைப் பார்த்த தமிழக அரசு, மேலும் 25 ட்ரோன்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் இந்த ட்ரோன்களைக்கொண்டு மருந்து அடிக்கப்போகிறோம். இது நிச்சயம் பலன் தரும்’’ என்றார்.

இதே ட்ரோன்களைக்கொண்டு திருப்பூர், சேலம் ஆகிய நகரங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். திருவள்ளூரில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைக்கும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 30 ட்ரோன்களை கொரோனா தடுப்பு மருத்துவப் பணிக்காகப் பயன்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வைரஸ் தொற்று உள்ளதா என்கிற பரிசோதனை செய்ய சாம்பிள் பாக்ஸ் களை அவசரமாக எடுத்து வருவதற்கும் இவற்றை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் இவற்றை கொண்டுவரும் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் தடுக்கப்படுவதுடன், பரிசோதனைகளை மிக விரைவாக மேற்கொண்டு சிகிச்சைகளைத் தொடங்கவும் வாய்ப்புள்ளது.

சென்னை மாநகராட்சி தலைமை இன்ஜினீயர் ராஜேந்திரனிடம் பேசினோம். ‘‘மருத்துவ சிபாரிசுகளின் படி சோடியம் ஹைபோ குளோரைடு, வீடு துடைக்க பயன்படுத்தும் கிருமிநாசினி உள்ளிட்ட சில கெமிக்கல் களை வைத்து மருந்து தயாரிக்கிறோம். கொரோனாவை ஒழிப்பதில் ட்ரோன்களின் செயல்பாடுகள் மிகச்சிறப்பான ரிசல்டை எங்களுக்குத் தந்திருக்கின்றன. ஒரு ட்ரோனின் எடை சுமார் 44 கிலோ. அதில் 16 லிட்டர் மருந்தை நிரப்புகிறோம். இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பறக்க முடியும். ஒரு ஏரியா முழுவதற்கும் மிகக் குறுகிய நேரத்தில் ட்ரோன்களால் மருந்து தெளிக்கப்படுகிறது. அவற்றின் செயல்பாடுகளை நாங்கள் ஓர் இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டர் மூலம் கண்காணித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம். அவை துல்லியமாகச் செயல்படுகின்றன. சென்னையில் பொது இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் ட்ரோன்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது கண்கூடான உண்மை’’ என்றார்.

நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், இங்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு மருத்துவப் பணிகளிலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளிலும் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்பதற்கு ட்ரோன்களின் பயன்பாடே ஒரு சாட்சி. இந்த விஷயத்தில் தமிழகம், இந்தியாவுக்கே பைலட் ஆக இருக்கிறது என்பது துயருக்கிடையிலான ஒரு பெருமிதமே!

ட்ரோன் படை... அஜித்தும் ஒருவர்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி-யில் செயல்படும் ஆள் இல்லா விமான ஆராய்ச்சிப் பிரிவில் நடிகர் அஜித்குமாரும் முக்கியப் பங்காற்றிவருகிறார்.

பைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை!

ட்ரோன்களை இயக்குவதில் பெரிதும் ஆர்வம்காட்டும் அஜித், வெளிநாடுகளில் ட்ரோன்களுக்காக நடக்கும் பல்வேறு போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்று வெற்றி பெறுவதற்கும் உதவியிருக்கிறார். இப்போதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன்களின் பங்களிப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அவர், பலவிதமான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதோடு, தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் இந்தக் குழுவினர் தெரிவித்தனர்.