Published:Updated:

ஈகோ மோதலில் சித்தா - அலோபதி மருத்துவர்கள்!

சித்த மருத்துவச் சிகிச்சைகளை அளிக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அலோபதி மருத்துவமனைகளுக்குள் சென்று சிகிச்சையளிப்பது அத்தனை எளிதாக இல்லை.

பிரீமியம் ஸ்டோரி
‘கொரோனா நோயாளிகளுக்கு, அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவச் சிகிச்சை முறைகளையும் அளிக்கலாம்’ என்று தமிழக அரசு நெறிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சித்த மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் இரண்டு கோவிட்-19 பராமரிப்பு மையங்கள் சித்த மருத்துவத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இரண்டு துறையினர் இடையே ஈகோ மோதல் தலைதூக்கியிருப்பதாகப் புகார்கள் எழுகின்றன.

சித்த மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம். “சித்த மருத்துவச் சிகிச்சைகளை அளிக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அலோபதி மருத்துவமனைகளுக்குள் சென்று சிகிச்சையளிப்பது அத்தனை எளிதாக இல்லை. சித்த மருத்துவர்களைத் தரக்குறைவாக நடத்துகிறார்கள். எங்கள் சிகிச்சையை நம்பிக்கையில்லாமல் பேசுகிறார்கள். கோவிட்-19 பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளே, ‘சித்த மருத்துவச் சிகிச்சைக்குச் செல்கிறோம்’ என்று கூறினாலும்கூட அவர்களையும் அனுப்ப மறுக்கிறார்கள்.

ஈகோ மோதலில் சித்தா - அலோபதி மருத்துவர்கள்!

அலோபதி வார்டு செவிலியர் ஒருவர், ‘எதுவுமே கொடுக்கலைன்னாலும் அஞ்சாறு நாள்ல கொரோனா குணமாகிடும். ஏதோ சித்த மருத்துவத்தாலதான் குணமானது மாதிரிப் பேசுறாங்க’ என்று பேசியிருக்கிறார். எந்த மருந்தைக் கொடுக்கிறோம் என்பதல்ல விஷயம். நோய் குணமாக வேண்டும் என்பதுதான் எல்லா மருத்துவர்களுக்கும் இருக்கும் சவால். அனைத்துத்துறை மருத்துவர்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது. தேவையில்லாத ஈகோ பிரச்னைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது” என்றார்கள்.

அலோபதி மருத்துவர்கள் தரப்பை அறிய ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் அமலோற்பவநாதனிடம் பேசினோம். “சித்த மருத்துவர்களும் கோவிட்-19 வைரஸுக்கு எதிராகப் போராடும் களப் பணியாளர்களே. அவர்களைத் தரக்குறைவாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. `கோவிட்-19-ஐ சித்த மருத்துவம் குணப்படுத்தும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை’ என்பதுதான் எங்கள் வாதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லேசான, மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு எந்த மருந்தும் தேவையில்லை. நான்கைந்து நாள்களில் குணமாகிவிடுவார்கள். அவர்களை `சித்த மருத்துவத்தின் மூலம் குணமாக்கினோம்’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கோவிட்-19-க்கு வழங்கப்படும் அலோபதி மாத்திரையின் பயன் என்ன, அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால், உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்கள் ஒரே பதிலைத்தான் சொல்வார்கள். ஆனால், `கபசுரக் குடிநீர்’ என்ற மருந்தைப் பற்றி பத்து சித்த மருத்துவர்களிடம் கேட்டால், பத்துவிதமாகக் கூறுகிறார்கள்.

ஈகோ மோதலில் சித்தா - அலோபதி மருத்துவர்கள்!

டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குன்யா தொடங்கி தற்போதுள்ள கோவிட்-19 வரை அனைத்துமே வெவ்வேறு வகையான வைரஸ் நோய்கள். ஆனால், நிலவேம்புக் குடிநீரை அனைத்து நோய்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள். எந்த மருத்துவ முறைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்லர். முறையான கிளினிக்கல் ட்ரையல் நடத்தி, சித்த மருத்துவ முறைகளை ஆய்வின் மூலம் நிரூபிக்க வேண்டும். தங்களுக்கு ஆதரவான முடிவுகள் வராது என்பதால்தான் முறையான ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை” என்றார்.

இந்த உரசல் குறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் மருத்துவர் வடிவேல் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். “டெங்கு, சிக்குன்குன்யா பரவிய காலத்திலிருந்தே சித்த மருத்துவத்துறையுடன் இணைந்தே பணியாற்றிவருகிறோம். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. டெங்கு பரவியபோது அரசு மருத்துவமனைகளில் நிலவேம்புக் குடிநீர், தற்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. இரு பிரிவினரிடையே உரசல் தொடர்பாக எங்களுக்குப் புகார் எதுவும் வரவில்லை. எங்காவது ஓரிருவருக்கு இடையே தனிப்பட்ட முறையில் உரசல்கள் ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

வைரஸைவிட ஆபத்தானது ஈகோ!

ஆகஸ்ட்டில் வருமா ‘இம்ப்ரோ’?

ஈகோ மோதலில் சித்தா - அலோபதி மருத்துவர்கள்!

`சித்த மருந்தான ‘இம்ப்ரோ’வை மக்கள் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும்’ என்று மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் வழக்கு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு சார்பில், ‘சுப்ரமணியன் தயாரித்த மருந்தை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது, வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என்று தெரிகிறது. இதைப் பயன்படுத்த மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத கவுன்சிலுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. `ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்போது, இந்த மருந்து மக்கள் பயன்பாட்டு வரும்’ என்று கூறப்படுகிறது.

இது குறித்து சுப்ரமணியன் கூறுகையில், “கொரோனாவைத் தடுக்கும் வகையில் முடக்கத்தான் இலை, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி உட்பட 66 மூலிகைகளைக்கொண்டு `இம்ப்ரோ’ என்ற இந்த மருந்தைக் கண்டுபிடித்தேன். கொதிக்கவைத்த தண்ணீரில் இந்த மருந்தைக் கலந்து தினமும் இரு வேளை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு