Published:Updated:

சிவகங்கை: `காலாவதி மருந்தால்தான் என் கணவருக்கு மரணம் ஏற்பட்டது!’ - அமைச்சரிடம் கலங்கிய பெண்மணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி
அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி

``நான் கவனிப்பதைப் பார்த்த நர்ஸ், அந்த பாட்டிலைக் கழற்றி எடுத்துச் செல்ல முயன்றார். உடனே நான் அதை மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தேன். அங்கிருந்த மருத்துவர், ஊழியர்களிடம் கேட்டதற்கு, வேறு மருந்து ஏற்றுவதாகச் சொன்னார்கள்.”

அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்தைச் செலுத்தியதால் தன் கணவர் உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அமைச்சரிடம் கண்ணீர்விட்டுக் கதறிய பெண்மணியால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி
அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடித்துவிட்டு வந்தவரிடம், ``சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட என் கணவர், காலாவதியான மருந்து செலுத்தியதால் மரணமடைந்துவிட்டார். மருத்துவமனையின் அலட்சியமே இதற்குக் காரணம். இதை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்’’ என்று வயதான பெண்மணி ஒருவர் கண்ணீர்விட்டார்.

உடனே பதறிப்போன அமைச்சர், கலெக்டரை அழைத்து ``உடனே இந்தப் புகாரை விசாரித்து, அறிக்கை தாருங்கள்'' என்று உத்தரவிட்டார்.

புகார் அளிக்க வந்த வெங்கடேஷ்- ராஜேஸ்வரி
புகார் அளிக்க வந்த வெங்கடேஷ்- ராஜேஸ்வரி

புகார் கொடுத்த ராஜேஸ்வரியிடம் பேசினோம். "என் கணவர் ராமதாஸ் வட்டாட்சியராக, நேர்மையாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால், பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 21-ம் தேதி சேர்த்தோம். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்காமல் ஒவ்வொரு வார்டாக இழுத்தடித்தனர். நான்கு நாள்களாக சிகிச்சை அளிக்காமலேயே இருந்தனர்.

மருத்துவமனைக்குச் செல்லும்போது நன்றாக பேசிக்கொண்டிருந்தவர், மருத்துவர்களின் அலட்சியத்தால் நான்காவது நாள் இறந்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் மரணமடையக் காரணம், மருத்துவமனையில் காலாவதி மருந்தைச் செலுத்தியதுதான். எங்கள் குடும்பத்தின் ஆணிவேரான அவரை இழந்துவிட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறோம்.

ராமதாஸ்
ராமதாஸ்

கடந்த 27-ம் தேதி முழுவதும் என் கணவர் எழுந்திருக்கவில்லை. கேட்டதற்குத் தூங்குவதாகக் கூறினார்கள். மாலை வரை எழுந்திருக்கவில்லை. சந்தேகப்பட்டு பணியில் இருந்தவர்களிடம் உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டபோது, அவர் இறக்கப்போகும் தகவலை இரவு நேரத்தில் கடைசி நிமிடத்தில் கூறினார்கள். முன்கூட்டியே சொல்லி, வேறு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றிருந்தால் பிழைக்கவைத்திருப்போம்.

ஆனால், அவர்கள் சொல்லாததற்குக் காரணம் உண்டு. அவருக்கு கொடுத்த காலாவதியான மருந்து பாதிப்பை ஏற்படுத்தியது தெரிந்துவிடும் என்பதால் சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள்" என்று அழுதார்.

அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி
அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி

என்னிடம் பேசிய அவர் மகன் வெங்கடேஷ், ``என் அப்பாவை பொது வார்டில் நான்கு நால்கள் வைத்திருந்தார்கள். அப்போது மருத்துவர்களிடம் கேட்டதற்கு ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதற்காக வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அப்போது நர்ஸ் ஒருவர் குளூக்கோஸ் பாட்டில் வடிவத்தில் இருந்த Textrose injection ip என்ற மருந்தை அவருக்கு ஏற்றினார். அதில் பாதியளவு என் அப்பாவுக்கு ஏற்றிக்கொண்டிருந்தபோது, அதன் காலாவதியான தேதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதை நான் கவனிப்பதைப் பார்த்த நர்ஸ், உடனே அந்த பாட்டிலைக் கழற்றி எடுத்துச் செல்ல முயன்றார். உடனே நான் அதை மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்தேன். அவர் பாட்டிலை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அங்கிருந்த மருத்துவர், ஊழியர்களிடம் கேட்டதற்கு, வேறு மருந்து ஏற்றுவதாகச் சொன்னார்கள்.

புகார் அளிக்க வந்த வெங்கடேஷ்- ராஜேஸ்வரி
புகார் அளிக்க வந்த வெங்கடேஷ்- ராஜேஸ்வரி

தொடர்ந்து நான் கேள்வி எழுப்பியதற்கு காலாவதி மருந்தை ஏற்றலாம் ஒன்றும் ஆகாது என்று சமாளித்தார்கள். இது என் அப்பாவுக்கும் தெரிந்து மனச் சோர்வடைந்தார். அச்சப்பட்டார்.

பின்பு அவரை ஐ.சி.யூ-வுக்கு மாற்றினார்கள். தனக்கு காலாவதியான மருந்தை ஏற்றிவிட்டார்கள் என்பதை அறிந்ததால் அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமானது. பின்னர் கடந்த 27-ம் தேதி இறந்துவிட்டார்.

மீண்டும் புயலைக் கிளப்பும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை விவகாரம்... தி.மு.க-வின் திட்டம்தான் என்ன?

பிறகு, அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்த காலாவதி மருந்துகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். இதுவரை என் அப்பாவுக்கு எடுத்த சோதனைகள், சிகிச்சை பற்றிய விவரங்களை தராமல் இழுத்தடிக்கிறார்கள். நான்கு நாள்களாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்படுத்தியதும், காலாவதியான மருந்தைச் செலுத்தியதும்தான் என் அப்பா மரணமடையக் காரணம். ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் மறைக்கப் பார்க்கிறது.

அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி
அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி

எங்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் அமைச்சரிடம் மனு அளித்திருக்கிறோம்" என்றார்.

``அவர்களின் புகார் பற்றி விசாரியுங்கள்’’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விகடன் சார்பில் கேட்டுக்கொண்டோம். 'நிச்சயமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு