அலசல்
Published:Updated:

"கொரோனா பரிசோதனையில் கோட்டைவிடுகிறதா அரசு?"

கொரோனா பரிசோதனை
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா பரிசோதனை

‘இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் உட்பட 181 பரிசோதனை ஆய்வகங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை, நான்காயிரத்தைத் தாண்டிவிட்டது. ஏப்ரல் 5-ம் தேதி நிலவரப்படி, 126 பேர் உயிர் இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும் நோய் பரவல் குறையவில்லை. பரிசோதனைகளை அதிகப்படுத்தாதது தான் அதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டுகின்றனர் மருத்துவர்கள்.

உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் போதிய ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனைக் கருவிகள் இல்லாததால், குறைந்தளவிலேயே பரிசோதனைகள் நடந்துள்ளன. தனது மாநிலத்தில் கொரோனா நோய் கண்டறியும் கருவிகள் வெறும் நாற்பது மட்டுமே உள்ளன என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘அதற்கு மத்திய அரசுதான் காரணம்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், ‘இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் உட்பட 181 பரிசோதனை ஆய்வகங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போதாது. ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் குகானந்தம், “பரிசோதனையை முழுமையாக நடத்தினால் மட்டுமே, நமது நாட்டின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள முடியும். 60 வயதுக்குமேல் உள்ளவர்களையாவது அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம். அரசாங்கம் அதைச் செய்யத் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. பரிசோதனைக்குத் தேவையான கருவிகளை வாங்கிக்கொள்ளுமாறு தென் கொரியா கூறியிருந்த நிலையில், இன்னும் அதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறது மத்திய அரசு.

ஐம்பது சதவிகிதத் தொற்று அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியது என்றால், ஐம்பது சதவிகிதத் தொற்று சமூகப் பரவலால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதனால் முழுமையான பரிசோதனை செய்வதால் மட்டுமே உண்மை நிலையை அறிய முடியும். ‘கண்டறி, பரிசோதி, சிகிச்சையளி’ என்பதுதான் கொரோனாவுக்கான மருத்துவரீதியான செயல்முறை.அரசு, இந்த மூன்றையுமே முழுமையாகச் செய்ய தவறிவிட்டது” என்றார்.

குகானந்தம், ரவீந்திரநாத், குழந்தைசாமி
குகானந்தம், ரவீந்திரநாத், குழந்தைசாமி

இதுகுறித்துப் பேசிய சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், “கொரோனா தொற்றுப் பரிசோதனையில் மத்திய - மாநில அரசுகள் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவில்லை. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் பரிசோதனையில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த நாடுகள் பத்து லட்சம் பேருக்கு இரண்டாயிரம் பேரை சராசரியாகப் பரிசோதனை செய்து வருகின்றன. ஆனால், இந்தியளவில் பத்து லட்சம் பேருக்கு 84 பேர் என்ற விகிதத்திலேயே பரிசோதனை நடத்தப் பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் பழகியவர்கள் என குறுகிய வட்டத்துக்குள் மட்டும் பரிசோதனை மேற்கொள்ளாமல், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், மிகப்பெரிய சிக்கல் உருவாகும்” என்றார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

பரிசோதனைகளை அதிகப்படுத்தாதது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் நோய்த்தொற்று உள்ளவர்களை காலம் கடந்து கண்டறிவதும் பரவலைத் தடுப்பதற்கு சவாலாக மாறியிருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையில் பரிசோதனை செய்வதிலும் கண்டறிவதிலும் உள்ள சிக்கலைக் களைந்தால் மட்டுமே நாம் கொரோனாவிடமிருந்து தப்பிக்க முடியும்” என்கிறார்கள் அவர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் பேசினோம், “மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே தமிழக சுகாதாரத் துறை நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்திவருகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் உட்பட 15 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில், வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்துள்ளோம். இதில் சாதாரண அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை நடத்த முடியாது.

குறிப்பாக, 200-க்கும் மேற்பட்ட நுண்ணுயிரி களால் சளி, காய்ச்சல் வருகின்றன. அதனால் அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை நடத்த முடியாது. உண்மையிலேயே கொரோனா தொற்று உள்ளவர்களை தமிழக சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தி வருகிறது. இதுவரை கொரோனா தொற்றில் சமூகப்பரவல் இல்லை. அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழக சுகாதாரத் துறை தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது” என்றார்.பரிசோதனையைப் பரவலாக்குவதே உண்மையையும் தீர்வையும் தேடித்தரும்.