Published:Updated:

ஹைட்ராக்சிக்ளோரோகுயின்... இந்தியாவில் போதுமான இருப்பு உள்ளதா?

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துகளுக்கும் கொரோனா சிகிச்சைக்கும் உள்ள தொடர்பு என்ன?

பிரீமியம் ஸ்டோரி
‘கொரோனா’வைத் தொடர்ந்து உலக நாடுகள் அதிகம் உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது ‘ஹைட்ராக்சிக்ளோரோகுயின்’.

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயின் பெருமளவு கைகொடுப்பதாகச் சொல்லிவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஹைட்ராக்சிக்ளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்தியா பிறப்பித்துள்ள தடையை நீக்கவில்லையெனில், தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்று மிரட்டல் தொனியில் பேசியதும், உடனடியாக இந்தியா தடையை நீக்கியதும்தான் ஹைட்ராக்சி க்ளோரோகுயின் என்ற பெயரை உலகறியச் செய்திருக்கிறது.

‘அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா பணிந்துவிட்டதா?’ என்ற விவாதத்தைவிட, ‘ஹைட்ராக்சிக்ளோரோகுயின் எந்தளவுக்கு பலன் தரும்... இந்தியாவுக்குத் தேவையான அளவு அந்த மருந்து கையிருப்பு உள்ளதா?’ என்ற கேள்வியே இப்போது முக்கியமானது.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து களுக்கும் கொரோனா சிகிச்சைக்கும் உள்ள தொடர்பு என்ன? பொதுநல மருத்துவர் ரகுநந்தனிடம் கேட்டோம். ‘‘ஹைட்ராக்சி க்ளோரோகுயின் என்பது, ஆன்டிவைரஸ் மருந்து வகை. உடலின் நோய் எதிர்ப்புத்திறனை இது அதிகரிக்கும். தொற்றுக்கு ஆளானோரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இது பயன்படுத்தப் படுகிறது. அத்துடன், கொரோனா நோயாளி களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நோயாளி களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் தடுப்பு மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மருந்துக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இந்த மருந்தால் இதய பாதிப்புகள், கண் பாதிப்புகள் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதுமட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும் தடுப்பு மருந்தாகவும் இது இருக்காது. பெரும்பாலும் வாழ்வியல் நோயாளிகளுக்கு இந்த மருந்து அறிவுறுத்தப் படுவதில்லை. ஒரு நபர் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாமா... வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க, பலகட்ட மருத்துவ ஆய்வுகள் தேவை. ஆகவே, மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் யாரும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளவே கூடாது.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின்... இந்தியாவில் போதுமான இருப்பு உள்ளதா?

கொரோனா பீதியில் சிலர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே அருகில் இருக்கும் மருந்தகங்களில் வாங்கி உபயோகித்து பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அது அவர்களை வேறு உடல்நலப் பிரச்னைகளுக்குக் கொண்டுபோய் விடுகிறது. இப்படி பலர் தங்கள் இஷ்டத்துக்கு இந்த மருந்தை வாங்கிக் குவிப்பதால், தேவையானோ ருக்குக் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இனியேனும் இந்த விஷயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில் ஏற்றுமதியைத் தடைசெய்த இந்திய அரசு, ட்ரம்ப்பின் மிரட்டல் தொனி பேச்சுக்குப் பிறகு தடையை விலக்கியிருக்கிறது. ஆகையால், நமக்கு போதுமான மருந்து இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தியிடம் பேசினோம். ‘‘இந்த மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிப்பதால், ‘போதுமான இருப்பு உள்ளது’ என்று மத்திய அரசு கூறியுள்ளதை இப்போது நாம் நம்பலாம். நெருக்கடியான காலத்தில் அரசு மனிதாபிமானத்துடன் செயல்படுவது நெகிழ்ச்சிகரமான, பாராட்டுக்குரிய விஷயம். இருப்பினும், சரியான மருத்துவப் புரிந்துணர்வோடும் திட்டத்தோடும் ஏற்றுமதிக்கான தடையை இந்திய அரசு விலக்கியுள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும்.

ரகுநந்தன் , சாந்தி
ரகுநந்தன் , சாந்தி

நம்மிடம் உள்ள இருப்பைவிட வருங்காலத்தில் தேவை அதிகரிக்கலாம். எனவே, உற்பத்தியின் நிலை குறித்து அரசு தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், ட்ரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்து இந்தத் தடை விலக்கப்பட்டிருக்குமாயின், வருங்காலத்தில் மிகப்பெரிய மருத்துவ நெருக்கடியை இந்தியா சந்திக்கக்கூடும். இப்போது இந்தியாவில் தயாரிக்கப் படும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்கான பெரும்பாலான மூலக்கூறுகள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. அரசியல் காரணங்களுக்காகவோ தங்களது சுயபாதுகாப்பு காரணங்களுக்காகவோ மூலக்கூறு ஏற்றுமதியை சீனா நிறுத்திவிட்டால், இந்தியாவால் தனது உற்பத்தியை மேலும் தொடர முடியாமல் போகக்கூடும்.

எனவே, இந்திய அரசு ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துக்கான மூலக்கூறுக்கான ஃபார்முலாவையும் தெரிந்துகொள்ள உடனடியாக முயல வேண்டும். முறையான திட்டத்துடன் அரசு தனது அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்க வேண்டும்” என்றார்.

மத்திய அரசு மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய நேரமிது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு