Published:Updated:

“எங்கள் உயிருக்கு என்னதான் மதிப்பு?”

லேப் டெக்னீஷியன்
பிரீமியம் ஸ்டோரி
News
லேப் டெக்னீஷியன்

கலங்கும் லேப் டெக்னீஷியன்கள்

‘`இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகின்றன’’ என்று சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியளித்துள்ளார். ஆனால், ‘அதிகளவில் பரிசோதனை மேற்கொள்கிறோம் எனக் கணக்கு காண்பிப்பதற்காக, முன் அனுபவமில்லாத கிரேடு-3 மருத்துவப் பணியாளர்களையும் லேப் டெக்னீஷியன்களையும் தமிழக அரசு பணிசெய்ய நிர்பந்திக்கிறது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய பெயர் வெளியிட விரும்பாத அரசு லேப் டெக்னீஷியன் ஒருவர், “திறந்தவெளியில் சாம்பிள் கலெக்ட் செய்யக் கூடாது. சாம்பிள் கலெக்ட் செய்யும் நபர், உரிய தற்காப்பு ஆடைகள் அணிந்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, மைக்ரோ பயாலஜிஸ்ட்களும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களும்தான் சாம்பிள்களை கலெக்ட் செய்ய வேண்டும். இப்படி கொரோனா பரிசோதனைக்கான சாம்பிள்களைச் சேகரிப்பதற்கு நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இதில் ஒன்றுகூட இங்கே செயல்படுத்தப்படுவதில்லை.

லேப் டெக்னீஷியன்களைத்தான் சாம்பிள் கலெக்ட் செய்யச் சொல்கின்றனர். அதுவும் தொற்று அபாயம் இருப்போரின் இல்லத்துக்கே சென்று சாம்பிள் கலெக்ட் செய்யச் சொல்கின்றனர். பல நேரங்களில் எங்களுடன் உரிய மருத்துவர்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும், சாம்பிள் கலெக்ட் செய்யயும் அனைவருக்கும் தற்காப்புக் கவசங்கள் தரப்படுவதில்லை. ஐந்து பேர் சென்றால் அதில் இரண்டு பேருக்குத்தான் கவச ஆடைகள் தரப்படுகின்றன. அவையும் முழுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதில்லை. சிலருக்கு கையுறைகள், மாஸ்க்குகள் போன்றவைகூட வழங்கப்படுவதில்லை. பல நேரங்களில் எங்களுக்கு போக்குவரத்து வசதிகளும் இருப்பதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒவ்வொரு நாளும் எத்தனை சாம்பிள்களை நாங்கள் பெற்று வருகிறோம் என்பதுதான் இங்கு கணக்கு. எவ்வளவு பாதுகாப்புடனும் துல்லியத்துடனும் அவற்றைப் பெற்றோம் என்பதெல்லாம் விஷயமே கிடையாது. மருத்துவமனையில் பிரத்யேகமாக ஓர் அறையை உருவாக்கி சாம்பிள் கலெக்ட் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, வீட்டுகளுக்கே சென்று சாம்பிள் பெறுவதெல்லாம் எங்களுக்கு மட்டுமல்ல, சாம்பிள் தருபவர், அவரின் குடும்பத்தினர் என அனைவருக்குமே ஆபத்துதான்.

லேப் டெக்னீஷியன்
லேப் டெக்னீஷியன்

கொரோனா வார்டில் பணிபுரியும் டெக்னீஷியன்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும், ஒரு வார தொடர் பணிக்குப் பிறகு ஒரு வார தொடர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. இந்த விடுமுறை, மருத்துவப் பணியாளர்களுக்கு முறையாக அளிக்கப்படுவதில்லை. கேட்டால், பணியாளர் பற்றாக்குறை என்கிறார்கள். களத்தில் இருக்கும் எல்லோருக்கும், ஒரு வார இடைவெளியில் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் இதன் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், எல்லோருக்கும் பரிசோதனை செய்கிற எங்களுக்கு, முறையாக பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஆபத்துக்காலங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம், இன்ஷூரன்ஸ் போன்றவை நிரந்தரப் பணியாளர்களுக்குத்தான் என்கிறார்கள். அப்படியெனில், எங்கள் உயிருக்கு என்னதான் மதிப்பு?” என்றார் ஆதங்கத்தோடு.

அடுத்ததாகப் பேசிய அரசு மருத்துவர் ஒருவர், ‘‘இந்தியாவில், கொரோனாவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பவர்களுக்கே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அப்படி யிருக்கும்போது, தொற்றுக்கான வாய்ப்பு அதிகமிருப்பவர்களைச் சோதிக்கும் பணியாளர் களை அரசு இவ்வளவு அலட்சியமாக அணுகு வதை எப்படி எடுத்துக்கொள்வது? ‘அசாதாரண மான சூழல் நிலவுவதால், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முறையான ஆலோசனைகளும் ஒரு நாள் பயிற்சியும் வழங்கினால் போதும். அனுபவமில்லை என்றாலும் அவர்கள் சாம்பிள் கலெக்ட் செய்யலாம்’ என்கிறது அரசு. ஆனால், புதிதாகப் பணியமர்த்தப்பட்டுள்ள டெக்னீஷியன்களில் பெரும்பாலானோருக்கு அந்த ஒரு நாள் பயிற்சிகூட சரியாக வழங்கப்படவில்லை.

டெமோ மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. அவர்களால் எப்படி நேர்த்தியாகப் பணியாற்ற முடியும்? டெமோ பார்த்ததை மட்டுமே வைத்து பணியாற்றும் அனுபவமில்லாத ஒரு டெக்னீஷியனிடமிருந்து துல்லியமான சாம்பிள் கலெக்‌ஷனை அரசு எதிர்பார்ப்பது நியாயமில்லை. துல்லியமற்ற சாம்பிள்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது தவறான ரிசல்ட் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது, மேலும் பிரச்னையை உருவாக்கும். இதை அரசு உணர வேண்டும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் சென்னையில் ஓர் அரசு மருத்துவமனையில் ‘சாம்பிள் போதாமை’ என்ற அடிப்படையில், கொரோனா நோயாளி ஒருவரின் மனைவிக்கு மீண்டும் பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என்றும், இரண்டாவது சோதனையில் பாசிட்டிவ் என்றும் வந்துள்ளது. ‘‘சாம்பிள் போதாமை என்பது பொய். சரியாக கலெக்ட் செய்யப்படாத சாம்பிளை பரிசோதனைக்கு உட்படுத்தி யிருக்கின்றனர். சந்தேகத்தில் மீண்டும் அழைத்திருக்கின்றனர். உண்மையை மறைக்கின்றனர்’’ என்று ஆதங்கப் படுகின்றனர் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

சாம்பிள் கலெக்டிங் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழக பொதுசுகாதாரத் துறையின் மாநில தொற்றுநோய் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பி.சம்பத்திடம் கேட்டோம். ‘‘இப்போதைய சூழலில், அனுபவமிருப்பவர் - இல்லாதவர் என்பதையெல்லாம் பார்ப்பது சரியாக இருக்காது. நம்மிடையே உள்ள பணியாளர்கள் அனைவரையும் பணியில் ஈடுபடுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். ஸ்வாப் டெஸ்ட்டும், பிற பரிசோதனைகளைப்போல் சாதாரணமானது தான். பாதுகாப்பு மற்றும் துல்லியத்தன்மையில் மட்டும்தான் இது வேறுபடுகிறது. அதை உணர்த்த, நம் பணியாளர்கள் அனைவருக்கும் ஓரிரு நாள்கள் பயிற்சி தந்துள்ளோம்.

இதில் பயிற்சி தருவதற்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் போதுமா இல்லையா என்பது குறித்தும், எங்கள் பயிற்சியின் தரம் எப்படியுள்ளது என்பது குறித்தும், பொதுமக்களோ ஊடகங்களோ தயவுசெய்து தீர்மானிக்காதீர்கள். இதற்கு ஓரிரு நாள் பயிற்சி நிச்சயம் போதுமானதுதான். அதற்காக நாங்கள் டெமோ காட்டுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு நாள் என்றாலும், நாங்கள் முழுமையான பயிற்சியைத்தான் தருகிறோம்.

மற்றொருபக்கம், களத்துக்குச் செல்லும் எல்லா மருத்துவப் பணியாளர்களுக்கும் எல்லாவிதமான பாதுகாப்புக் கவசங்களும் - மாஸ்க் வகைகளும் இன்றளவும் சரியாகத் தரப்படுகின்றன. எல்லா விதங்களிலும் நாங்கள் அவர்களைக் காப்பதற்கான வழிமுறைகளை தொடர்ந்து செய்துவருகிறோம் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். நேரடியாக சாம்பிள் கலெக்ட் செய்ய செல்லும் அனைவரையும் பரிசோதனையின்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம். அவர்களுக்கும் பாதுகாப்பு ஆடைகள் தருகிறோம். இப்படி எல்லாவிதமான வசதிகளையும் செய்துகொடுத்த பிறகும் அனைவரும் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்னிறுத்துவது வேதனையளிக்கிறது” என்றார்.

குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதோ, குறைசொல்லிக் கொண்டிருப்பதோ பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் வேலையல்ல. ஆனால், கண்முன்னே குறைகள் குவிந்துகிடப்பதை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களால் கண்டுகொள்ளாமல் எப்படிக் கடக்கமுடியும்? ‘கண்டுகொள்ளாமல் இருப்பது எப்படி?’ என்று அரசுத் தரப்பிலிருந்து ஒரு பயிற்சி வகுப்பு நடத்தினால்கூட நல்லதே!

இதைத்தவிர வேறென்ன சொல்ல!?