Published:Updated:

பதறும் டாக்டர்கள்... நடுங்கும் நர்ஸ்கள்... நூறாவது நாளிலும் தீராத பரிதாபங்கள்!

ஜூ.வி லைவ் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி லைவ் ரிப்போர்ட்

ஜூ.வி லைவ் ரிப்போர்ட்

பதறும் டாக்டர்கள்... நடுங்கும் நர்ஸ்கள்... நூறாவது நாளிலும் தீராத பரிதாபங்கள்!

ஜூ.வி லைவ் ரிப்போர்ட்

Published:Updated:
ஜூ.வி லைவ் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி லைவ் ரிப்போர்ட்
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 100 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன என்று களத்தில் இறங்கி ஆராய்ந்தோம். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துதல், தரமான சிகிச்சை... இவை இரண்டும்தான் நோயை வெற்றிகொள்வதற்கான அடிப்படை விஷயங்கள். ஆனால், அதை நோக்கிய பயணத்தில் அரசு மருத்துவமனைகள் கால்களைப் பின்னிக்கொண்டு நிற்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பற்றாக்குறை!

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும், கொரோனா சிகிச்சை மையங்களும் அதிகரித்து வந்தாலும், அவற்றை நிர்வகிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் குறைவாக உள்ளனர் என்பதே முதல் பிரச்னை. ‘‘முன்னர் நூறு நோயாளிகளுக்கு மூன்று மருத்துவர்கள், ஒரு செவிலியர் என்ற நிலைதான் இருந்தது. தமிழக அரசு இரண்டாவது முறையாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம், பிற மாவட்ட முதுநிலை மருத்துவ மாணவர்களைச் சென்னைக்கு இடைக்காலப் பணிக்கு நியமித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்த பிறகு, மருத்துவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஆனாலும், தேவைக்கு ஈடுகொடுக்கும் விகிதம் இல்லை. குறிப்பாக, செவிலியர்கள் பற்றாக்குறை இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது’’ என்கிறார் சென்னையில் பணியாற்றும் மூத்த அரசு மருத்துவர்.

பதறும் டாக்டர்கள்... நடுங்கும் நர்ஸ்கள்...  நூறாவது நாளிலும் தீராத பரிதாபங்கள்!

வார்டுக்கு வராத மருத்துவர்கள்!

‘அரசு மருத்துவமனைகளிலுள்ள கோவிட்-19 வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதே இல்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை வந்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்’ என்பது நோயாளிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற ஒரு பெண்மணியின் மகன், ‘‘என் அம்மாவுக்கு நோய் உறுதி செய்யப்பட்டவுடன் மாநகராட்சிப் பணியாளர்கள் வந்து ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். `மருத்துவமனை வாசலிலேயே இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டார்கள், மூன்று மணி நேரமாக இங்கேயேதான் உட்கார்ந்திருக்கிறேன்’ என்று அம்மா போன் செய்ததும், அங்கு சென்று விசாரித்தேன். சி.டி.ஸ்கேன் எடுக்கக் காத்திருக்கச் சொன்னவர்கள், நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, ‘நேரம் முடிந்துவிட்டது, முதல் மாடியில் சென்று அட்மிட் ஆகுங்கள்’ என்றனர்.

முதல் மாடியிலிருந்த செவிலியர், ‘இங்கெல்லாம் படுக்கை காலியில்லை. ஆறாவது மாடிக்குச் செல்லுங்கள்’ என்றார் விரட்டும் தொனியில். இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் சிகிச்சை அட்டவணை (Case Sheet) போட்டார்கள். அதுவரை உணவும் சரியாக வழங்கவில்லை. மூன்று நாள்களுக்குப் பிறகுதான் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்தார்கள். வார்டுக்குள் மருத்துவர்களோ செவிலியர்களோ வரவே மாட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை வரும் மருத்துவர் வார்டின் வெளியிலேயே நின்று, செவிலியர் கொடுக்கும் கேஸ் ஷீட் பார்த்து மருந்து எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விடுவார். நோயாளிகள் வெளியே வந்து தங்களுக்கான மாத்திரைகளைப் பெற்றுச் செல்ல வேண்டும். மருத்துவரும் செவிலியர்களும் வார்டுக்குள் வந்து பரிசோதிக்கவேயில்லை” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘உறவினர்கள்தான் கவனித்துக்கொள்வோம்!’’

சமீபத்தில் கொரோனா சிகிச்சை பெற்று குணமான ஒருவரின் மகன், ‘‘என் அப்பா சிகிச்சை பெற்ற வார்டில் இருந்த நூறு நோயாளிகளின் உறவினர்கள் பலர் அங்குதான் இருப்பார்கள். இரவு நேரங்களில் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். நான் மருத்துவமனை வளாகத்திலேயே தங்குவேன். கொரோனா வார்டுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் வர மாட்டார்கள் என்பதால், ஏதாவது சிகிச்சை அவசரம் என்றால் நாங்கள் போய்ச் சொன்னால்தான் வந்து பார்ப்பார்கள். சில நேரம் வாக்குவாதம் செய்துதான் அழைத்து வர வேண்டும். உறவினர்கள் உடனில்லாத நோயாளிகளின் நிலை பரிதாபத்துக்குரியது’’ என்றார் வேதனையுடன். கொரோனா வார்டில் உயிரிழந்த நோயாளியின் உடலை அப்புறப்படுத்தப் பணியாளர்கள் இல்லை என்று கூறி, அவரின் மகனையே சடலத்தை தூக்கிவரச் சொன்ன சம்பவமும் நடந்தேறியிருக்கிறது.

பதறும் டாக்டர்கள்... நடுங்கும் நர்ஸ்கள்...  நூறாவது நாளிலும் தீராத பரிதாபங்கள்!

‘‘தொகுப்பூதியத்தில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு அனுபவம் குறைவு, மேலும், சிகிச்சை வழிமுறை பற்றிய தெளிவில்லை. ஒருவர் ஆவி பிடிக்கச் சொல்வார். மறுநாள் மற்றொருவர் வந்து ‘அதெல்லாம் கூடாது’ என்று திட்டுவார்’’ என்றார் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர்.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் நிலைமை!

‘அரசு மருத்துவமனைகளின் சுணக்கத்துக்கு என்ன காரணம்?’ என்று மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ‘‘தரமான செவிலியச் சேவை மட்டுமே நோயாளிகளைச் சீக்கிரம் குணப்படுத்தும். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையின் காரணமாகத் தரமான செவிலியச் சேவை நோயாளிகளுக்குக் கிடைப்பதில்லை. மருத்துவப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்படுவது, சம்பள நிலுவை, தொடர்ச்சியான பணிச் சுழற்சி, பாதுகாப்பில்லாத கவச உடை எனப் பல்வேறு காரணங்களால் நோயாளிகளிடம் நெருங்கி சேவை செய்வதற்கு டாக்டர்கள் பதறுகிறார்கள்; நர்ஸ்கள் நடுங்குகிறார்கள். நாட்டிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவப் பணியாளர்களையும் கொண்டிருக்கும் தமிழகம், போதிய நிர்வாகத்திறன் இல்லாததால் கொரோனா தடுப்பில் பின்தங்கியிருப்பது வேதனை’’ என்றார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நூறு நாள்களைக் கடந்தும் தமிழக அரசால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிய வில்லை என்பது நிர்வாகக் குளறுபடியன்றி வேறில்லை!

தெம்பு தரும் கோவை!

கோயம்புத்தூரைப் பொறுத்தவரை ஏற்கெனவே குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மெள்ள அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. என்றாலும், அங்கே தரப்படும் தரமான சிகிச்சை காரணமாக நோயாளிகள் தெம்பாகவே இருக்கின்றனர். திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் கோயம்புத்தூர் மருத்துவமனை யில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ‘‘எங்களை முடிந்த அளவுக்கு நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்’’ என்கிறார்கள் கொரோனா வார்டில் சிகிச்சையிலிருக்கும் நோயாளிகள்.

குணமடைந்தோர் எண்ணிக்கை குறைவு!

‘கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது’ என்று அரசுத் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஆனால், நோயாளிகள் குணமடையும் விகிதத்தின் அடிப்படையில் முதல் 15 மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 15-வது இடத்தில்கூட தமிழகம் இல்லை. 89.1 சதவிகிதத்துடன் மேகாலயா முதலிடத்திலும், 65 சதவிகிதத்துடன் மேற்கு வங்கம் 15-வது இடத்திலும் உள்ளன.

மதுரை ஜி.ஹெச்... கொரோனா வார்டுக்குள்ளேயே சடலங்கள்...
மதுரை ஜி.ஹெச்... கொரோனா வார்டுக்குள்ளேயே சடலங்கள்...

கொரோனா நிர்வாகம்... கோட்டைவிட்ட அரசு!

‘‘கொரோனாவை அழிப்பதென்பது ஒரு யுத்தம். இந்த யுத்தத்தில் ஆயுதங்களோ, வீரர்களோ பயனளிக்கப்போவதில்லை. வியூகங்களே வெற்றி தேடித்தரும். அதில்தான், தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை கொரோனா தொற்றின் மையமாக மாறியதற்கு, துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததே முக்கியக் காரணம்’’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அதிகாரிகள். உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றனர்.

‘‘சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 3,500 படுக்கைகள், 800 மருத்துவர்கள், 890 செவிலியர்கள், 750 உதவியாளர்கள் இருக்கின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 1,661 படுக்கைகள் உள்ளன. ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆறு தளங்கள் உள்ளன. ஆனால் 400 படுக்கைகள்தான் உள்ளன. பல தளங்கள் பயன்படுத்தப்படாமல் வௌவால் மண்டிக்கிடக்கின்றன. இந்த மருத்துவமனையை முழுமையாகப் பயன்படுத்தினால் ஐந்தாயிரத்துக்கும் மேல் படுக்கைகள் போட முடியும்.

இந்த மூன்று மருத்துவமனைகளில் ஒன்றை மட்டும் மார்ச்சிலேயே ‘கோவிட் சிறப்பு மருத்துவமனை’யாக அறிவித்திருந்தால், நிலையே மாறியிருக்கும். முழுகவனம் செலுத்திச் சிகிச்சையளித்திருக்க முடியும். ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருந்திருக்கும். மற்ற மருத்துவமனைகள் வழக்கம்போல இயங்கியிருக்கும். தவிர, மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் நோய்த்தொற்றிலிருந்து தப்பித்திருப்பார்கள். ஆனால், 400 படுக்கைகள், 450 படுக்கைகள் என்று ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒதுக்கி, எல்லா மருத்துவமனைகளையும் முடக்கி துவம்சம் செய்துவிட்டார்கள்.

எல்லாம் கைவிட்டுப்போன பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனையையும், ஓமந்தூரார் மருத்துவமனையையும் `கோவிட் மருத்துவமனை’ என்கிறார்கள். ஆனால், ‘ராஜீவ் காந்தி மருத்துவமனைப் பக்கம் போனாலே தொற்று பரவிவிடும்’ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். 3,500 படுக்கைகள் இருந்தும் வெறும் 507 பேர்தான் (ஜூன் 29-ம் தேதி நிலவரம்) அங்கே சிகிச்சை பெறுகிறார்கள்’’ என்கிறார்கள் அவர்கள்.

பயன்படுத்தியிருக்க வேண்டிய வாய்ப்புகளைத் தமிழக அரசு தவறவிட்டுவிட்டு மக்களைத் தவிக்கவிட்டிருக்கிறது என்பதே யதார்த்தம்!

மதுரை... கொரோனா வார்டு நரகம்!

கொரோனா தொற்றுப் பரவலில் சென்னையைப்போலவே முன்னேறிக்கொண்டிருக்கிறது மதுரை. ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது கொரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை. கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்படும் இராசாசி அரசு மருத்துவமனை கடும் நெருக்கடியில் இருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு நபரிடம் பேசியபோது, ‘‘நரகம் மாதிரி இருக்கு சார். இந்த பில்டிங்கில் கீழே சில டாக்டர்கள் உட்காந்திருக்காங்க. தினமும் காலை 5 மணிக்கு ஒரு டாக்டர் வந்து ஆளுக்கொரு மாத்திரை கொடுக்கிறார். நம்ம உடல்நிலை பத்தி கேட்டாலோ, அடிப்படை வசதிகள் இல்லைனு சொன்னாலோ எதுக்குமே பதில் பேச மாட்டார். சாப்பாடு மட்டும் கரெக்ட்டா வந்துடும்.

வேலூர் அரசு மருத்துவமனையில்...
வேலூர் அரசு மருத்துவமனையில்...

கொரோனா வார்டு சந்தைக்கடை மாதிரி இருக்கு. மொத்தமே நாலஞ்சு நர்ஸுகள்தான் உள்ளே இருக்காங்க. கழிப்பறை ரொம்பக் கேவலமா இருக்கு. கொரோனாவால் உயிரிழந்தவங்க உடலை எடுத்துட்டுப் போனதும், அந்தப் படுக்கையைச் சுத்தம்கூடப் பண்ணாம அடுத்த நோயாளியைப் படுக்க வெச்சுடுறாங்க’’ என்றார்.

வேலூர்... ஆட்டு மந்தையைப்போல அடைக்கப்பட்டிருக்கும் நோயாளிகள்!

வேலூர் மாவட்டத்தில் மிக வேகமாகப் பரவிவருகிறது கொரோனா. பத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துவிட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் படுக்கை வசதி இல்லாததால், நோயாளிகளைத் தரையில் படுக்க வைத்துள்ளனர். நோயாளிகளை ஒரே ஹாலில் ஆட்டு மந்தையைப்போல் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர்கூட வழங்குவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வசதி படைத்தவர்களுக்கு மட்டும் கொரோனா வார்டில் படுக்கை வசதியுடன் தனி அறை கொடுக்கப் பட்டுள்ளதாகவும் புகார் கிளம்பியுள்ளது.

‘‘கொரோனா வார்டுக்குள் மருத்துவர்கள் செல்வதேயில்லை. ஆம்புலன்ஸில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மட்டும்தான் வார்டுக்குள் பணி செய்கிறார்கள். உணவை நோயாளிகளே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். கொரோனா வார்டில் நோயாளிகளைத் தரையில் படுக்க வைப்பது தொடர்பாக வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தமிழக அரசு’’ என்கிறார்கள் மருத்துவமனைப் பணியாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism