Published:Updated:

“அமெரிக்காவைப் போன்ற அவசரநிலை இங்கேயும் ஏற்படலாம்!”

கொரோனா பாதிப்பு
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பாதிப்பு

எச்சரிக்கும் மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தி

“அமெரிக்காவைப் போன்ற அவசரநிலை இங்கேயும் ஏற்படலாம்!”

எச்சரிக்கும் மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தி

Published:Updated:
கொரோனா பாதிப்பு
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பாதிப்பு
கொரோனா பரவுதல் விஷயத்தில், ‘‘இனி என்ன செய்தாலும் கொரோனா நம்மோடுதான் இருக்கப்போகிறது. எல்லோரும் கொரோனாவோடு வாழப் பழகுங்கள்’’ என மாநில அரசு அதிகாரபூர்வமாகச் சொல்லிவிட்டது. மருத்துவர்களும் இந்தக் கருத்தை ஆமோதிப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், ‘‘அரசின் இந்தச் செய்கைகளின் விளைவாக, இன்னும் ஒரு மாதத்தில் நோயாளிகள் எண்ணிக்கை உச்சத்தை அடையும்’’ எனக் கூறியிருந்தார் எய்ம்ஸின் (AIIMS - All India Institute Of Medical Science) இயக்குநரும் மருத்துவருமான கலேரியா தமிழகத்தைச் சேர்த்த மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தி, கலேரியாவின் கருத்தை ஆமோதித்து நம்மிடம் பேசினார். ‘‘இப்போதைக்கு கொரோனா தடுப்பில் உலக நாடுகளில் பல மேற்கொண்டிருக்கும் உத்தி, டிலேயிங் ஸ்ட்ராட்டஜி (Delaying Strategy). அதாவது, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தள்ளிப்போடுவது. `தாமதப்படுத்தப்பட்ட எண்ணிக்கை உயர்வு’ என்று இதைச் சொல்லலாம். இந்த உத்தியைக் கையாண்டால், இறப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். அதேபோல், தீவிர மருத்துவ வசதிக்குள் செல்லும் நபர்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். உலக நாடுகள் சில, இதற்கான சான்றுகளாக இருக்கின்றன. அதன் அடிப்படையில், இந்திய அரசும் இந்த உத்தியை இப்போது கையாள்வதாகச் சொல்லப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரச்னை என்னவெனில், சரியான புரிந்துணர்வின்றி எக்கச்சக்கப் பிழைகளோடு இந்த உத்தியைக் கையாள்கிறது மத்திய அரசு. அதற்கான ஒரு சான்றுதான், ஊரடங்கு நேரத்திலும் ஒரு லட்சத்தைக் கடந்த நோயாளிகளின் எண்ணிக்கை. என்னைக் கேட்டால், இரண்டாவது ஊரடங்கு வரைதான் முடக்கம் முடக்கமாக இருந்தது. மூன்றாவது, நான்காவது ஊரடங்கெல்லாம் வீண் விளம்பரங்கள் மட்டுமே! அதனால்தான் வைரஸ் வேகமாகப் பரவியது.

மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தி
மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தி

கொரோனா வைரஸ் என்பது, கிட்டத் தட்ட டாம் அண்ட் ஜெர்ரி கேம்போல்தான். இதில் எலி, கொரோனா கிளஸ்டர். பூனை, அரசும் மக்களும்! எலி, எங்கு வேண்டு மானாலும் உருவாகலாம். அரசும் மக்களும் அதை தொடக்கத்திலேயே கண்டறிந்து ஒழிக்க வேண்டும். இல்லையென்றால், பயங்கரமான விளைவுகள் ஏற்படும்.

சரி, கொரோனா கிளஸ்டர் என்றால் என்ன? குறிப்பிட்ட ஓரிடத்தில் கொரோனா நோயாளிகள் அளவுக்கு அதிகமாகக் கண்டறியப் பட்டால், அந்த இடம் `கொரோனா கிளஸ்டர்’ என அழைக்கப்படும். உதாரணம் டெல்லி தப்லிக் மாநாடு, கோயம்பேடு மார்க்கெட். இதேபோல் இந்தியா முழுக்க ஆங்காங்கே நிறைய கிளஸ்டர்களை கொரோனா வைரஸ் உருவாக்கும். அதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டாலே கொரோனாவை வென்றுவிடலாம் என மருத்துவர்களாகிய நாங்களும் அறிவியலாளர்களும் வலியுறுத்துகிறோம்.

கிளஸ்டரைத் தடுக்க, எந்த இடத்தில் முதன்முதலாக கொத்தாக 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப் படுகின்றனரோ, அப்போதே அவர்களையும் அவர்களோடு தொடர்பில் இருந்தோரையும் அரசு முழுமையாகக் கண்டறிந்து, அவர்களை முற்றிலுமாகத் தனிமைப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவரையும் அலர்ட் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், கிளஸ்டர் முதல் நிலையிலேயே தடுக்கப்படும். ஒருவேளை கிளஸ்டரை வளரவிட்டால், அதற்கேற்ற அளவுக்கு கான்டாக்ட் ட்ரேஸிங்கை விரிவுபடுத்தி, அந்த இடத்தோடு தொடர்பில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களை அரசு கண்காணித்து அவர்களுக்கு சேவையளிக்க வேண்டும். உதாரணமாக, கோயம்பேடு மார்க்கெட் டோடு தொடர்பில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 8,000 பேரை கூண்டாக அடைத்து, பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுபோல்!

“அமெரிக்காவைப் போன்ற அவசரநிலை இங்கேயும் ஏற்படலாம்!”

ஆகவே, எவ்வளவு விரைவாக இந்த கிளஸ்டரை அரசு கண்டறிந்து, அதைக் களைகிறது என்பதுதான் விஷயம். இதற்கு இந்தியா முழுவதும் பாதிப்புள்ளவர்களை முதல் நிலையிலேயே கண்டறிந்து, அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அரசு தனிமைப்படுத்த வேண்டும். அதேபோல், மக்கள் கூட்டமாகச் சேர அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, அத்தியாவசிய மில்லாத இடங்களில் மக்கள் புழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய அரசு இதையெல்லாமா செய்கிறது? வாகனப் போக்கு வரத்துக்கான அனுமதி, பள்ளிகள் திறப்புக்கான அனுமதி, மதுக்கடைகள் திறப்பு, சரியான பாதுகாப்பின்றி புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவருவது போன்றவற்றையெல்லாம் செய்து, புதிது புதிதாக கிளஸ்டர்களை அரசே உருவாக்குகிறது. கிளஸ்டரைத் தடுக்காமல்விடுவதை விட பேராபத்து, கிளஸ்ட்ரை உருவாக்குவது. இதை எப்போது இந்த அரசு புரிந்துகொள்ளும் எனத் தெரியவில்லை.

இந்த கிளஸ்டர் யாவும் நாளடைவில் தீவிரமாகி, நோயாளிகளின் எண்ணிக்கையை கிடுகிடுவென உயர்த்தி, நிச்சயமாக தீவிர பிரச்னையை உருவாக்கும். குறிப்பாக, அறிகுறிகளுடைய தீவிர பாதிப்புள்ள நோயாளிகளை உருவாக்கும். தீவிர சிக்கலுடைய நோயாளிகளின் எண்ணிக்கை மிக விரைவாக ஒரேடியாக உயரத்தைத் தொட்டால், அமெரிக்காவில் ஏற்பட்டதுபோல் மிகப்பெரிய மருத்துவ அவசரநிலை இங்கும் ஏற்படலாம்.

ஆகவே, அரசு உடனடியாக விழித்துச் செயல்படுவது அவசியம். மதுக்கடைகளை மூடிவிட்டு, புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்நலனை கவனித்துக்கொண்டு, போக்கு வரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, களப்பணியில் இருக்கும் முதல்நிலைப் பணியாளர்களின் நலனைப் பாதுகாத்து, பொது முடக்கத்தை நிஜமான பொது முடக்கம் போல் அமல்படுத்த வேண்டும். கண்டும் காணாமல் விடும்போக்கை கைவிட வேண்டும்.

ஒருவேளை இனியும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அரசு செயல்படாவிட்டால், ஜூன் இறுதி - ஜூலை தொடக்கத்திலேயே கிடுகிடுவென உயரும் நோயாளிகளின் எண்ணிக்கையையும், அடுத்தடுத்த வாரங்களில் மோசமான மருத்துவ விளைவுகளையும் அரசு எதிர்கொள்ளும்’’ என்கிறார் அழுத்தமாக.

விழித்துக்கொள்ளுமா அரசு?