கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர உதவும்வகையில், வென்டிலேட்டர்கள், கொரோனா பரிசோதனை கிட்டுகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரியையும் செஸ் வரியையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தத் தளர்வு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு வென்டிலேட்டர்கள் மற்றும் பரிசோதனை கிட்டுகளுக்கு 10 சதவிகிதம், முகக்கவசங்களுக்கு 7.5 சதவிகிதம், மருத்துவப் பணியாளர்கள் அணியும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கு 7.5 முதல் 10 சதவிகிதம் என சுங்கவரி வசூலிக்கப்பட்டது. அத்துடன், அனைத்து உபகரணங்களுக்கும் 5 சதவிகித செஸ் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது வரிகள் நீக்கப்படுவதால், கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும் இந்த உபகரணங்களுக்கான விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆனால், பொருளாதார வல்லுநர்களும் மருத்துவச் செயற்பாட்டாளர்களும், ‘மத்திய அரசின் இந்த அறிவிப்பு, யானைப்பசிக்கு சோளப்பொறிதான்’ என்கின்றனர். மருத்துவரும் மருத்துவச் செயற்பாட்டாளருமான காசி சண்முகத்திடம் பேசினோம்.

‘‘இந்த வரிச்சலுகைகளை முன்னரே அமல்படுத்தியிருந்தால் உதவியாக இருந்திருக்கும். இப்போது உபகரணங்களை இறக்குமதி செய்வதே சிக்கலாக இருக்கிறது. எந்தெந்த நாடுகளில் இருந்தெல்லாம் உபகரணங்கள் இறக்குமதி செய்ய வேண்டுமோ, அந்த நாடுகள் எல்லாம் தற்போது பிரச்னையில் சிக்கியிருக்கின்றன. இறக்குமதிக்கு வழியே இல்லாமல் தவிக்கும்போது வரிக்குறைப்பால் என்ன பயன்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்படியே இறக்குமதி செய்தால்கூட, வரி நீக்கத்தால் விலை பெரியளவில் குறையாது. இதுபோன்ற உலகளாவிய பெருந்தொற்று பரவும் நிலையில், இந்த உபகரணங்களை மத்திய அரசே இறக்குமதி செய்து, மலிவான விலைக்கு விநியோகிக்க வேண்டும். தவிர, மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் அளிக்க வேண்டும்’’ என்றார்.
பொருளாதார வல்லுநரும் பேராசிரியருமான ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். ‘‘மத்திய அரசு, ‘தமிழகம் நேரடியாக கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை உபகரணங்களை வாங்கக் கூடாது; எங்கள் மூலமாகத்தான் வாங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது. மருத்துவம் என்பது, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் துறை. இதில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொரு மாநிலத்துக்குமான சூழல் வேறு மாதிரியாக உள்ளது. மத்திய அரசு எப்படி அனைத்து மாநிலங்களையும் கையாள முடியும்? மருத்துவ உபகரணங்கள் எல்லாம் தற்போது கிடைக்கவில்லை. நாளுக்குநாள் தேவையும் அதிகரித்துவருகிறது. பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது இருக்கும் சவால்.

மத்திய அரசு இந்த நேரத்தில் அனைத்து மருத்துவத் தேவைகளுக்கான நிதியுதவியை அளிக்க வேண்டும். வெறும் வரியைக் குறைப்பதில் பலன் இல்லை. மாநில அரசுகள், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் தவித்துவருகின்றன. 2020-2021-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த 41 சதவிகித நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். அதில் தமிழகத்தின் பங்கு மட்டும் நான்கு சதவிகிதம். அதுதவிர, பற்றாக்குறை மானியம் 4,000 கோடி ரூபாய். மேலும் சில மானியங்கள் அனைத்தும் சேர்த்து தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு 45,000 கோடி ரூபாய் நிதியளிக்க வேண்டும்.
அதை மொத்தமாகக்கூட கொடுக்க வேண்டாம். நான்கில் ஒரு பங்கு நிதியை அளித்தால்கூட கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கும் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் தமிழக அரசுக்கு உதவியாக இருக்கும். ஆனால், முதல் காலாண்டு தொடங்கியும் இதுவரை மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஆக்க பூர்வமான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசுகளுக்கு வழங்குவதைவிடுத்து, நாங்களும் ஏதாவது செய்கிறோம் என கணக்கு காட்டுவதற்காக இந்த வரிச்சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது’’ என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத்திடம் கேட்டோம். “மற்ற நாடுகளும் பாதிப்பிலிருப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், பெரும்பாலான உபகரணங்கள் நம் நாட்டுக்குள்ளேயேதான் தயாரிக்கப் படுகின்றன. 25 சதவிகித உபகரணங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த உபகரணங்களை குறைவான விலையில் வாங்குவதற்கு இந்த வரிச்சலுகை நிச்சயம் உதவும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு நிச்சயம் பலனளிக்கும்” என்றார்.
வரிச்சலுகையை அறிவித்துவிட்டு ஒதுங்கிவிடுவது மத்திய அரசின் வேலையல்ல. மாநில அரசுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிப்பதுடன், அவற்றை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.