பிரீமியம் ஸ்டோரி
பிரதமர் மோடியின் உத்தரவை ஏற்று கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

அதே வேளையில், “இந்த இக்கட்டான சூழ்நிலையிலாவது எங்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்’’ என்று கோரிக்கைவைக்கிறார்கள் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள்.

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சுபின் இதுகுறித்து விரிவாகப் பேசினார். ‘‘சுகாதாரத் துறையில் 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவத் தேர்வாணையத் தின் மூலம் தேர்வு நடத்தி, சுமார் 8,000 செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் அவர்கள் பணியமர்த்தப் பட்டனர். அப்போது, ‘இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்துவிடுகிறோம்’ என்று சுகாதாரத் துறை சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மாதச் சம்பளம் 14,000 ரூபாயைத் தவிர வேறு எந்தப் பலன்களும் இந்தச் செவிலியர்களுக்கு வழங்கப்படுவ தில்லை.

‘பணிக்கு அமர்த்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் யாரையும் பணி நிரந்தரம் செய்ய வில்லை’ என்று 2017-ம் ஆண்டு சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மூன்று நாள்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். ‘வேலை நிறுத்தத்தால் பொதுச்சேவை பாதிக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ‘நிரந்தர பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு இணையாகத்தான் நாங்களும் பணி செய்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யாததால் தகுதி, சம்பளம் என அனைத்து விஷயங்களிலும் நாங்கள் புறக்கணிக்கப் படுகிறோம்’ என்று நாங்கள் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினோம்.

“பாராட்டுகள் பசியைப் போக்குமா?”

இதையடுத்து எங்களின் பணிகுறித்து ஆராய்வதற்கு, சுகாதார இயக்குநர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, தன்னலமற்று பல்வேறு சிரமங்களுக்கு இடையே சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் செவிலியர்களின் நிலைகுறித்தும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். தொடர்ந்து, ‘அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொகுப்பு ஊதியத்தின்கீழ் பணிபுரியும் செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதுடன், நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் பலன்களை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுபின் - கலைச்செல்வி
சுபின் - கலைச்செல்வி

நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சம்பள விஷயத்தில் பாரபட்சம் காட்டும் அரசு, பணி விஷயத்தில் எந்தப் பாரபட்சமும் பார்ப்ப தில்லை. சொல்லப் போனால், நிரந்தர பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பணியைவிட அதிக பணிச்சுமையே எங்கள்மீது சுமத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவர்களை பணிக்கு எடுக்கும்போதே நிரந்தர பணியாளர்களாக எடுக்கும் நிலையில், செவிலியர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள் எனத் தெரியவில்லை. தற்போது, கொரோனா பணியில் குடும்பத்தை மறந்து உயிரை பணயம் வைத்து அனைத்து செவிலியர் களும் பணிபுரிந்துவருகின் றனர். சொல்லப் போனால், மருத்துவர் களைவிட செவிலியர்கள்தான் பாதிக்கப்பட்டவர் களின் அருகில் அதிக நேரம் இருந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

“பாராட்டுகள் பசியைப் போக்குமா?”

தற்போது, எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவப் பணியாளர்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின் றனர். ஆனால், இந்தப் பாராட்டு கள் எங்களின் பசியைப் போக்குமா? எங்களின் கோரிக்கைகுறித்து முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனுமில்லை’’ என்றார்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரான கலைச்செல்வி, ‘‘தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வார விடுமுறை, மகப்பேறு விடுப்பு எதுவும் கொடுப்பதில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணி செய்கிறோம். எங்களுக்கு மட்டும் பெரும்பாலும் இரவு நேரப் பணியைத்தான் ஒதுக்குகிறார்கள். செவிலியர் பணியின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் இவ்வளவு துயரங்களையும் தாங்கிக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் பணி செய்கிறோம். தற்போது, தமிழகத்தில் குழந்தை இறப்புவிகிதம் குறைந்துள்ளது. தமிழகம், மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகிறது. இதற்கு எங்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

“பாராட்டுகள் பசியைப் போக்குமா?”

கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பல செவிலியர்கள், கொரோனா தடுப்புப் பணியில் இருக்கிறார்கள். அவர்களின் தியாகம் போற்றத்தக்கது. எங்களின் அர்ப்பணிப்பான பணியைப் பார்த்து, ‘வெள்ளை உடை அணிந்த கடவுள்’ என கொரோனா வார்டில் இருந்த பலர் பாராட்டியிருக்கிறார்கள். செவிலியர்களாக இருந் தாலும் நாங்களும் குடும்பத் தலைவிகள்தான். நாங்கள் வீட்டுக்குச் செல்லாமல் பணியில் இருப்பதால், எங்கள் குடும்பம் அடையும் சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கைதட்டி, மலர் தூவி மரியாதை செய்வதால் மட்டும் எங்கள் வாழ்க்கை மலர்ந்துவிடாது. எங்கள் வாழ்வாதார விஷயத்தில் அநீதி இழைக்காமல் தகுதியின் அடிப்படையில் நியாயமான எங்களது கோரிக் கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

செவிசாய்க்குமா தமிழக அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு