அலசல்
சமூகம்
Published:Updated:

நோயாளிக்கு நெகட்டிவ்... ஆரோக்கியமானவருக்கு பாசிட்டிவ் - ரேபிட் கிட் மர்மங்கள்

குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்

குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் - குறையும் சோதனை... பரவும் வேதனை!

கொரோனா தொற்றைக் கண்டறிவதற் காகச் செய்யப்படும் பரிசோதனைகள் எந்த அளவுக்கு நம்பகமானவை? சீனாவிலிருந்து ரேபிட் பரிசோதனைக் கருவிகள் வந்தவுடனே, ‘சில தினங்களில் அத்தனை கொரோனா நோயாளிகளையும் கண்டுபிடித்து சிகிச்சை தந்துவிடலாம்’ என்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், நடப்பவை அனைத்தும் தலைகீழாக இருக்கின்றன. ஏகப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள்.

முதல் இறக்குமதியே வீணாகப் போனது. ராஜஸ்தான் அரசு 168 கொரோனா நோயாளிகளை சீனாவின் ரேபிட் கருவியை வைத்து பரிசோதித்தது. அத்தனை பேரும் நோயாளிகள் என்றாலும், வெறும் 5.4 சதவிகிதம் பேரையே நோயாளிகளாகக் காட்டியது கருவி. மற்றவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் காட்டியது.

நிறுத்தப்பட்ட ரேபிட் டெஸ்ட்!

அதிர்ந்துப்போன ராஜஸ்தான் சுகாதாரத்துறை அபாய மணி அடித்தார்கள். நாடு முழுக்க ரேபிட் டெஸ்ட் நிறுத்தப்பட்டது. ஏப்ரல் 22-ம் தேதி, ‘ரேபிட் டெஸ்டை வெறுமனே கொரோனா பரவல் கண்காணிப்புக்கு மட்டும் பயன்படுத்துங்கள். நோயை உறுதி செய்ய பி.சி.ஆர் சோதனையைச் செய்யுங்கள்’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறிவிட்டது.

ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பதை இரண்டு விதங்களில் உறுதி செய்யலாம். ஒன்று, ‘அவர் உடலில் வைரஸ் உள்ளதா’ என்பதைக் கண்டறியும் பரிசோதனை. பி.சி.ஆர் பரிசோதனையில் இதைத்தான் செய்கிறார்கள். இதில் முடிவு தெரிய சில மணி நேரங்கள் ஆகலாம். இன்னொரு சோதனை, ‘உடலுக்குள் வந்திருக்கும் வைரஸுடன் போரிடுவதற்கு நம் உடல் நோய் எதிர்ப்பு அணுக்களை உற்பத்தி செய்துள்ளதா?’ என்பதைக் கண்டறியும் சோதனை. எதிர்ப்பு அணுக்கள் இருப்பதை உறுதி செய்தால், வைரஸ் தொற்றியுள்ளது என அறியலாம். ரேபிட் டெஸ்டில் இதைத்தான் செய்கிறார்கள்.

ரேபிட் டெஸ்டை வைத்து ஒருவரை ‘கொரோனா நோயாளி’ என தீர்மானிப்பதில்லை. அதன்பின் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்து பார்த்து, வைரஸ் தொற்று இருந்தால் மட்டுமே நோயாளி கணக்கில் சேர்க்க வேண்டும். நோயாளியையே ஆரோக்கியமான வராகக் காட்டும் ரேபிட் டெஸ்ட், இப்போது தேவையில்லாத சுமையாக மாறிவிட்டது.

குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்
குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்

பி.சி.ஆர் பரிசோதனையிலும் குழப்பம்!

சரி, பி.சி.ஆர் பரிசோதனையாவது துல்லிய மானதா? ‘‘இல்லை’’ என்பதுதான் டாக்டர்கள் சொல்லும் பதில். இதற்கு ஆதாரமாக சில சம்பவங்கள்...

* மத்தியப்பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த 60 வயது டாக்டர்... இவர்தான் இந்தியாவில் கொரோனா தொற்றி உயிரிழந்த முதல் டாக்டர். அவரது வீடு மற்றும் கிளினிக் இருக்கும் பகுதிகளில் கொரோனா நோயாளிகள் யாருமில்லை. சிகிச்சைக்கு வந்த யாரோ ஒருவர் டாக்டருக்கும் நோய்த்தொற்றைத் தந்து விட்டார். மார்ச் 22-ம் தேதி அவருக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. அலர்ஜியால் அடிக்கடி அவருக்கு இப்படி ஏற்படும். இதையும் அப்படியே அவர் நினைத்துக்கொண்டார்.

மார்ச் 30-ம் தேதி இருமலும் ஜுரமும் அதிகமானதும் அவர் பரிசோதனைக்குப் போனார். அவருக்கு சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்ததால், சந்தேகத்துக்குரிய நோயாளியாக கொரோனா வார்டில் அட்மிட் செய்தார்கள். ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதிகளில் அவருக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் ‘நெகட்டிவ்’ என்றே முடிகளைக் காட்டின. டாக்டர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். ஆனால், அதன்பின் மூச்சு விடவே சிரமப் பட்டார் அவர். ஏப்ரல் 8-ம் தேதி மூன்றாவது முறையாக பரிசோதனை செய்தார்கள். அதுதான் கொரோனா தொற்றை உறுதி செய்தது. மறுநாளே அவர் இறந்துவிட்டார்.

* இவர் மும்பையைச் சேர்ந்த இன்னொரு டாக்டர். காய்ச்சலும் வறட்டு இருமலும் வந்ததும், உஷாராகி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டார். நெகடிவ் ரிசல்ட் வந்தது. நிம்மதியாக இருந்த அவருக்கு, இரண்டே நாள்களில் இருமல் அதிக மானது. இம்முறை தனியார் மருத்துவமனைக்குப் போனார். அங்கே அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. அங்கேயே அவரை சிகிச்சைக்குச் சேர்த்துவிட்டனர்.

இதை வைத்து, ‘அரசு மருத்துவமனைகளில் சோதனைகள் தரமாக இல்லை’ என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அதே மும்பையில் இன்னொரு 30 வயது இளைஞர்... தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். நெகடிவ் ரிசல்ட் வந்தது. ஆனால், உடல்நிலை மோசமானது. கஸ்தூரிபா அரசு மருத்துவமனைக்குப் போனார். அங்கு செய்த பரிசோதனையில் அவருக்குக் கொரோனா உறுதியானது.

* விருதுநகர் மாவட்டத்தின் முதல் கொரோனா நோயாளி, ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது நபர். அவர் வெளிநாடு போகவில்லை. யாரிடமிருந்து நோய் தொற்றியது என்றும் புரியவில்லை. அவரின் மகன் திருமணத்துக்கு நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து மூன்று பேர் வந்தனர். அவர்களிடமிருந்து தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அந்த மூன்று பேரிடமும் அந்தந்த நாடுகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்டே வந்தது. இந்த 60 வயது நபரின் துபாய் நண்பர் ஒருவரை சந்தேகப்பட்டனர். ஆனால், அவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனையும் நெகட்டிவ் ரிசல்டே தந்தது. சுகாதாரத் துறை அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

* திண்டிவனத்தைச் சேர்ந்த 48 வயது நபர். டெல்லி சென்று வந்த இவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். ரிசல்ட் நெகட்டிவ். உடனடியாக அவரை வீட்டுக்கு அனுப்பினாலும், வீட்டிலேயே தனிமையில் இருக்கச் சொன்னார்கள். அவரும் அப்படி இருந்தார். 28 நாட்கள் கழித்து அவரின் 38 வயது மனைவிக்கும், ஏழு மாதக் கைக்குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திண்டிவனம் நகரமே மூடப்பட்டது. நெகட்டிவ் என அறிவிக்கப்பட்ட நபரிடமிருந்து இரண்டு பேருக்குக் கொரோனா தொற்றியிருப்பது, டாக்டர்களைக் குழப்பியிருக்கிறது.

குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்
குழப்பும் ரேபிட், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்

இந்தக் குழப்பம் இங்கு மட்டுமில்லை... கொரோனா உருவான சீனாவிலும் இருக்கிறது. கொரோனா நோய் குறித்து முதன்முதலில் எச்சரித்தவர், டாக்டர் லி வென்லியாங். சீன அரசு அவரின் குரலை நசுக்க முயன்றது. கடைசியில் அவருக்கும் கொரோனா தொற்றியது. பலமுறை அவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனைகள் நெகட்டிவ் என்றே ரிசல்ட் தந்தன. இடையில் அவருக்கு சுவாசப் பிரச்னை மோசமானது. கடைசி யில் பிப்ரவரி 1-ம் தேதி அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. பிப்ரவரி 7-ம் தேதி அவர் இறந்தார்.

தேவை மிக நேர்த்தியான பரிசோதனை!

இதைத் தொடர்ந்து வூஹான் நகரில் ஒரு சோதனை செய்தார்கள். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், ஓரளவு பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டு குழுக்களாக 213 நோயாளிகளிடம் பி.சி.ஆர் பரிசோதனை செய்தார்கள். மூக்கின் உட்புறம் சளி மாதிரி எடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில், சுமார் 27 சதவிகித நோயாளிகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. தொண்டையின் உட்புறம் சளி மாதிரி எடுத்து செய்யப்பட்ட சோதனை, சுமார் 40 சதவிகிதம் பேருக்கு நெகட்டிவ் ரிசல்ட் தந்தது. அதன்பின், ‘கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை, சுமார் 30 சதவிகிதம் நோயாளிகளை ஆரோக்கிய மானவர்களாக அடையாளம் காட்டக்கூடும்’ என சீன மருத்துவர்கள் அறிவித்தார்கள்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

1. நோயாளியின் உடலில் வைரஸ் அதிக அளவில் இருந்தால் மட்டுமே, பரிசோதனையில் அது தெரியும். நோய் தொற்றி ஐந்தாம் நாளுக்குப் பிறகு பரிசோதனை செய்தால், பாசிட்டிவ் வர வாய்ப்பு உண்டு. அதற்கு முன்பு செய்யப்படும் பரிசோதனைகள் பயனற்றவை.

2. மூக்குக்கும் தொண்டைக்கும் இடையே இருக்கும் குழிவான பகுதியில்தான் வைரஸ் திரண்டிருக்கும். அங்கு சளி மாதிரியை எடுத்தால் மட்டுமே உண்மையான ரிசல்ட் வரும். மூக்கிலோ, தொண்டையிலோ ஆழமாக உள்ளே நுழைக்கும் போது அசௌகரியம் ஏற்படுவதால், பல நோயாளிகள் இதற்கு ஒத்துழைப்பதில்லை. சுகாதாரப் பணியாளர்கள் பலர் இதைத் துல்லியமாக எடுக்க பயிற்சி பெறவில்லை.

3. நோயாளியிடம் பெறப்படும் சளி மாதிரிகள், முறையாகப் பாதுகாக்கப்படாமல் பரிசோதனைக் கூடத்துக்கு எடுத்து வரப்பட்டால், அதிலிருக்கும் வைரஸை அடையாளம் காண முடியாது.

4. முறையான தரப்பரிசோதனை செய்யப்படாத பல பரிசோதனைக் கருவிகளை எல்லா நாடுகளும் வாங்கிப் பயன்படுத்துகின்றன. அவசரமும் நெருக்கடியுமே இதற்குக் காரணம். நல்ல கருவிகளுடன் தரமற்ற கருவிகளையும் கலந்துவரும் சூழலில், எதையும் நம்ப முடியவில்லை.

பரிசோதனையே செய்யப்படாத நபரைவிட, பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என அறிவிக்கப் படும் நோயாளி ஆபத்தானவர். ‘எனக்கு எதுவும் பிரச்னை இல்லை’ என்ற நம்பிக்கையில் அவர் பாதுகாப்பு விதிகள் எதையும் பின்பற்ற மாட்டார். தன்னை அறியாமலே நிறைய பேருடன் பழகி, நோயைப் பரப்புவார். இதுபோன்ற தவறான பரிசோதனை முடிவுகள், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்? உலகிலேயே அதிகம் பாதிப்புக்கு ஆளான நியூயார்க் நகர டாக்டர்கள் ஒரு வழி சொல்கிறார்கள். ‘‘நாங்கள் பரிசோதனை முடிவை ஓரளவுக்கே நம்புகிறோம். சிகிச்சைக்கு வரும் நபரின் அறிகுறிகளையே முதலில் கவனிக்கிறோம். காய்ச்சலும் மோசமான வறட்டு இருமலும் இருந்தால், இன்றைய சூழலில் அது கொரோனா வாகவே இருக்கும் என்று முடிவு செய்து சிகிச்சை தருகிறோம். பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால் இரண்டு, மூன்று முறை பரிசோதனை செய்கிறோம். நோயாளியின் நிலைமை மோசமானால், மார்புப் பகுதியில் எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் எடுக்கிறோம். நோய்த்தொற்றின் தீவிரத்தை அவை உணர்த்திவிடும்’’ என்கிறார்கள் அவர்கள்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்தாலும் கவனமாகவே இருக்க வேண்டும். அறிகுறிகள் அதிகமானால், மீண்டும் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். இடைப்பட்ட காலத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா நோய்ச் சங்கிலியைத் தகர்க்க வேறு வழி இல்லை நமக்கு!