Published:Updated:

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

வாசகர்களின் கேள்விகள்.... நிபுணர்களின் விளக்கங்கள்... #CovidQuestions

பிரீமியம் ஸ்டோரி

கொரோனாவின் மூன்றாவது அலை வருமா... சாமானியர்கள் மட்டுமல்ல, மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் உட்பட யாருமே உறுதியான விடை சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது.

வரலாம் என்றும், வர வாய்ப்பில்லை என்றும், வந்தால் முதல் இரண்டு அலைகளைவிட தீவிரமாக இருக்கும் என்றும், அப்படியெல்லாம் இருக்காது என்றும் ஏகப்பட்ட கணிப்புகள், கருத்துகள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன.

இனி கொரோனா என்பது பருவகால நோய்களைப்போல நம்முடன்தான் இருக்கப்போகிறது, வருடம்தோறும் அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என அனைவரும் ஒருமித்த அறிவுரையை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை
borchee

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது என கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்றிதான் ஆக வேண்டும் என்கிற அறிவுறுத்தல் களும் தொடர்கின்றன.

கொரோனாவின் அலை ஓய்கிறதோ இல்லையோ, அந்த நோய் குறித்த சந்தேகங்கள் மக்களுக்கு ஓய்வதே இல்லை. அடுக்கடுக்கான கேள்விகள், சந்தேகங்கள் அவர்களுக்கு... விகடன் இணையதளத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொரோனா தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கும் Covid Questions பகுதி இடம்பெற்று வருகிறது. அவற்றிலிருந்து பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களில் முக்கியமானவற்றை இந்த இணைப்பிதழில் தொகுத்திருக்கிறோம்.

செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

ஒரு வருடத்துக்கும் மேலாக சானிடைசர் பயன்படுத்துகிறேன்; எனக்கு சரும பாதிப்பு வருமா?

- @மேகா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

ஹேண்ட் சானிடைசர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேலாக ஆல்கஹால் இருக்கும். ஆல்கஹால் கலந்த சானிடைசரைத் தொடர்ந்து உபயோகிப்பதால் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு `எக்ஸீமா' (Eczema) எனும் சருமப் பிரச்னை வரலாம். சரும வறட்சி ஏற்படலாம். சருமத்தில் எரிச்சல், சிவந்து போவது, நீர் வடிதல் போன்றவையும் வரலாம். சானிடைசர் உபயோகிப்பது மட்டுமன்றி, நிறைய பெண்கள் வீடுகளில் பாத்திரங்கள் தேய்க்கவும், துணி துவைக்கவும் டிடர்ஜென்ட் உள்ளிட்டவற்றை உபயோகிக்கிறார்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை
ABHISHEK KUMAR SAH

சானிடைசருக்கு பதில் மைல்டான சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது சிறந்தது. லிக்யுட் சோப்பும் வெதுவெதுப்பான நீரும் உபயோகித்துக் கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவியதும் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் உள்ளவர்கள் கிளவுஸ் உபயோகிக்கலாம். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் கைகளுக்கு சானிடைசர் உபயோகிக்கக் கூடாது. வாசனை அதிகமில்லாத சோப் உபயோகிக்கலாம். இரவில் கைகளை சோப் போட்டுக் கழுவிவிட்டு, மீண்டும் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். `பெட்ரோலேட்டம்' (Petrolatum) உள்ள மாய்ஸ்ச்சரைசர் சிறந்தது.

ஷீபா தேவராஜ்
ஷீபா தேவராஜ்

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? எத்தனை நாள்கள் கழித்துச் செய்யலாம்?

- @தினேஷ்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, எந்தப் பக்க விளைவுகளும் இல்லாத நிலையில் அடுத்த இரண்டு, மூன்று நாள்களுக்கு எந்தப் பயிற்சியையும் செய்யாமலிருப்பது சிறந்தது. ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் இருந்தால் அவை முற்றிலும் சரியாகும்வரை குறைந்த பட்சம் ஒரு வாரம் வரையிலாவது வொர்க் அவுட் செய்வதைத் தவிர்க்கலாம். தடுப்பூசியின் பக்க விளைவுகள் இருந்து அவற்றிலிருந்து குணமாகிக்கொண்டு வருபவர் என்றால் மிக மிக மைல்டான பயிற்சி களிலிருந்து ஆரம்பிக்கலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

எடுத்தவுடன் தீவிர பயிற்சிகளுக்குத் திரும்ப வேண்டாம். உதாரணத்துக்கு நடைப்பயிற்சி, குறைந்த எடை தூக்குவது போன்றவற்றைச் செய்யலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மிக முக்கியமாக உடல் சொல்வதைக் கேளுங்கள்.

தலைச் சுற்றுவது போலவோ, மயக்கம் வருவது போலவோ (தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலர் மயக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள்) தோன்றினால் உடற்பயிற்சிகள் செய்வதை உடனே நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள்.

தடுப்பூசியால் பக்க விளைவு எதுவும் இல்லை என்றாலும் நான் அறிவுறுத்திய அந்த இரண்டு மூன்று நாள்கள் ஓய்வு மிக அவசியம். அதன் பிறகு, மைல்டான பயிற்சிகளிலிருந்து தொடங்கி, உங்கள் வழக்கமான வொர்க் அவுட்டை செய்யலாம்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

எனக்கு அடுத்த மாத இறுதி யில் டெலிவரிக்கு தேதி கொடுத் திருக்கிறார்கள். கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் படுவார்கள் என்ற நிலையில், இது பச்சிளம் குழந்தைக்கும் பொருந்துமா? நானும் என் குடும்பத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை கள் என்னென்ன?

- @அருள்மொழி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

கொரோனாவின் மூன்றாவது அலை, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. ஆனாலும், கணிப்புகளை அலட்சியப்படுத்தாமல், குழந்தை களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை, முன்னேற்பாடுகளை தயார்நிலையில் வைத்திருக்கிறது அரசு.

இந்தச் சூழலில் பிரசவிக்கும் பெண்களுக்கும், வீட்டிலுள்ளவர்களுக்கும் கோவிட் தொற்று இல்லாத நிலையில், மருத்துவமனையில் சரியான நோய்க்கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. தாய்க்கோ, வீட்டிலுள்ள மற்றவர்களுக்கோ நோய்த்தொற்று இருந்தால், மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படலாம். அந்த வகையில் பச்சிளம் குழந்தைகளும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு அல்லது சானிடைசர் உபயோகித்து அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் குழந்தையை பாதுகாப்பான, சுத்தமான சூழலில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

இவை தவிர, கர்ப்பிணியும் அவரின் குடும்பத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அனைத்து கர்ப்பிணிகளும் அவரின் வீட்டாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது போன்ற கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். குடும்ப விழாக்களுக்குச் செல்வது, வீட்டுக்கு விருந்தினர்களை அழைப்பது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போதும் மேற்குறிப்பிட்ட கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக முக்கியம்.

பிரசவத்தை அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் மருத்துவமனையில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தையையும் தாயையும் உறவினர்கள், நண்பர்கள் என யாரும் வீட்டுக்கோ, மருத்துவமனைக்கோ வந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு காய்ச்சல், சளி, சோர்வு, பால் குடிக்காமலிருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் பச்சிளம் குழந்தையை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

மருத்துவரின் அறிவுரையின்பேரில் என் குழந்தைகளுக்கு `ஃப்ளூ வாக்சின்' போட்டுவிட்டேன். அதுவே அவர்களை கொரோனாவிலிருந்தும் பாதுகாக்குமா? மூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா அதிகம் தாக்கும் என்று சொல்லப்படுகிற நிலையில் அவர்களை எப்படிப் பாதுகாப்பது?

- @பார்வதி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.

இன்ஃப்ளுயென்ஸா வைரஸ் தொற்றைத் தடுக்கப் பயன்படும் தடுப்பூசி `ஃப்ளு வாக்சின்' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி ஹெச்1என்1 (பன்றிக்காய்ச்சல்), ஹெச்3என்2 மற்றும் இரண்டு பி வகை இன்ஃப்ளு யென்ஸா வைரஸ் நோய்த் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

ஆறு மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள், ஆஸ்துமா, நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்தத் தடுப்பூசியை வருடம் ஒருமுறை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன் போட்டுக் கொள்வது சிறந்தது. இன்ஃப்ளுயென்ஸா வைரஸ் தொற்றைத் தடுக்கும் இந்த ஊசியால் கோவிட் தொற்றைத் தடுக்க முடியாது.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது என்பதே இன்று பெரும்பாலான பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோரின் பங்கு மிகப் பெரியது. குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களைப் பெற்றோர் களிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே நோய்த் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதில் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளிஆட்களுடன் நேரடியாகப் பேசுவதையும், நெருக்கத்தில் இருப்பதையும் தவிர்க்கவும். தேவை ஏற்படும்போது ஐந்து வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பது அவசியம்.

மிக மிக அவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படிச் செல்லும்போது முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சரியான முறையில் சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி, கைகளைக் கழுவி, சுத்தமாக வைத்திருக்க குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். வீட்டிலும் வெளியிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். வெளியே சென்று வரும் பெரியவர்கள், வீட்டுக்குள் நுழைந்ததும் குளித்து, உடைகளை மாற்றிய பிறகே குழந்தைகளுக்கு அருகில் செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு வெளி உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த சத்தான, சரிவிகித உணவுகளையே கொடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் தர வேண்டும். குடும்ப விசேஷங்கள், விழாக்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

பெற்றோர்களும், வீட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இது பெரியவர்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொற்று பரவுவதைத் தடுக்கும். தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்வதை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்துப் பழக்குங்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

என் மகளுக்கு 18 வயது. அவள் வயதுக்கு வந்தது முதல் அதிக ப்ளீடிங் இருக்கிறது. ரொம்பவும் அனீமிக்காக இருக்கிறாள். ஹீமோகுளோபின் அளவு 8 தான் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அடிக்கடி சளி, காய்ச்சல் என படுத்துவிடுவாள். கல்லூரிகள் திறக்கப்படவிருக்கும் இந்த நிலையில் அவளை காலேஜுக்கு அனுப்பலாமா? நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த என்ன செய்வது?

- @யசோதா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும். அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம். சிலருக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். சினைப்பையிலிருந்து சுரக்கும் `ஈஸ்ட்ரோஜென்', `புரொஜெஸ்ட்ரோன்' ஹார்மோன்களும், மூளையிலுள்ள `பிட்யூட்டரி சுரப்பி' ஆகிய எல்லாம் ஒரே அலைவரிசைக்கு வரும். இவை எல்லாம் ஒழுங்கானால்தான் அந்தப் பெண்ணுக்கு மாதம்தோறும் பீரியட்ஸ் முறையாக வரும். சரியான நாளில் வரும். சினைப்பையிலிருந்து கருமுட்டையும் வெளியே வரும். ஒரு பெண் வயதுக்கு வந்து, அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் இவையெல்லாம் ஒழுங்குக்கு வரும்.

இந்த நாள்களில் ஒரு பெண்ணுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளையும் கொடுக்கலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

உங்களுடைய 18 வயது மகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னை இருக்கிறது என்று கேள்விப்படும்போது அவருக்கு `ஹார்மோனல் இம்பேலன்ஸ்' இருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்கு காரணம் சினைப்பைகளின் முறையற்ற இயக்கம். `பாலிசிஸ்டிக் ஓவரீஸ்' எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம். உங்கள் மகளின் லைஃப்ஸ்டைல் சரியில்லாமல், அதாவது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவராக இருக்கலாம். அடிக்கடி வெளியில் சாப்பிடுபவராக இருக்கலாம். பருமன் பிரச்னை அல்லது தைராய்டு பிரச்னை இருக்கலாம். அவருக்கு ப்ளீடிங் டிஸ்ஆர்டர் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தக் கசிவு, எங்கேயாவது அடிபட்டால் அந்தக் காயம் ஆறுவதற்கு நேரமெடுப்பது போன்றவை இருந்தால் ரத்தப் பரிசோதனைகளின் மூலம் அதை உறுதி செய்யலாம்.

முதல்கட்ட சிகிச்சையாக `ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி' மருந்துகள் கொடுக்க வேண்டும். அடுத்து ஹார்மோன்கள் கலக்காத மருந்துகள் கொடுத்து ப்ளீடிங்கைக் கட்டுப்படுத்தலாம். அதிலும் குணம் தெரியாவிட்டால் ஹார்மோன் மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம். பருமன் அதிகமிருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும். இது ஒரு சுழற்சி மாதிரி. இதை ஏதோ ஓரிடத்தில் நாம் நிறுத்த வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டிலிருக்கும் நாள்களில் உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லுங்கள். சத்தாகச் சாப்பிட வையுங்கள். பருமனாக இருந்தால்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. எல்லோருமே ஆரோக்கியத்துக்காக

அதைப் பின்பற்றலாம். அனீமியா குணப்படுத்தப்படாவிட்டால் நிச்சயம் இன்ஃபெக்‌ஷன் வரும். எனவே, முதல் வேலையாக அதைச் சரிசெய்யும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி வந்துவிட்டதால் தாமதிக்காமல் உங்கள் மகளுக்கு வாக்சின் போட்டு, பிறகு காலேஜுக்கு அனுப்புங்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

எனக்கு கோதுமை அலர்ஜி உள்ளது. கோதுமை, ரவை மற்றும் மைதா எடுத்துக்கொள்வதில்லை. `அனஃபிலாக்டிக் ரியாக்‌ஷன்' (Anaphylaxis Reaction) ஆகிறது. சருமத்தில் தடிப்பு, குறை ரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த நிலையில் நான் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

- @மஞ்சு செந்தில்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பக்க விளைவுகளுக்கும், பலவித மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமைக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இப்படிப்பட்ட தேவையில்லாத பயம் காரணமாகவோ, ஆதாரமற்ற தகவல்களைக் கேள்விப்பட்டோ உங்கள் உயிரைக் காக்கக்கூடிய கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பது விவேகமான செயல் அல்ல. ஏற்கெனவே ஏதோ தடுப்பூசி போட்டுக்கொண்டு அதனால் பயங்கரமான பக்க விளைவு ஏற்பட்டு தீவிர காய்ச்சல், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கைகால் செயலிழப்பு, மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவை ஏற்பட்டவர்கள் மட்டும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தவிர்த்தால் போதும்.

லட்சத்தில் ஒருவருக்கு எந்தத் தடுப்பூசி போட்டாலும் `அக்யூட் க்லியன் பார்ரே சிண்ட்ரோம்' (Acute Guillain-Barre Syndrome - GBS) எனும் அபூர்வ பிரச்னை ஏற்படலாம். அதாவது பலவிதமான தசைகள், பலவிதமான நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மூச்சுவிடக்கூட சிரமம் ஏற்படும். சிலருக்கு கால் நரம்புகள் செயலிழந்து, இளம்பிள்ளை வாதம் வந்தவர்கள் போல நடக்கவே முடியாமல் அவதிப்படுவார்கள். உதரவிதானம் செயலிழந்து மூச்சுவிட முடியாமல் செய்து, வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு தீவிர நிலைக்கு கொண்டு செல்லலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

இது கொரோனா தடுப்பூசிக்கு மட்டுமல்ல, எல்லாவித தடுப்பூசிகளாலும் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய தீவிரமான பக்க விளைவு. மிக மிக அரிதானது என்பதையும் மறக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் ரிஸ்க் வெர்சஸ் பெனிஃபிட் என்ற ஒன்று முக்கியம். ஒரு விஷயத்தால் ஏற்படும் நன்மை என்ன, இழப்பு என்ன என யோசிக்கும்போது, லட்சத்தில் ஒருவருக்கு பக்க விளைவு ஏற்படுவதை நினைத்து பயந்துகொண்டு, உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசியைத் தவிர்ப்பது ஆபத்தானது. எனவே, நீங்கள் எந்த பயமும் இன்றி கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

எனக்கு வயது 35. பல் சொத்தையாகி அதை அகற்ற வேண்டிய நிலையில் உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டு, எத்தனை நாள்களுக்குப் பிறகு, பல்லை அகற்றலாம்? அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் உள்ளனவா?

- @ஆர்ஆர்கே

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி.

நிறைய பேருக்கு இந்தச் சந்தேகம் இருக்கிறது. கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும், பல் அகற்றும் சிகிச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் என மூன்றுவிதமான தடுப்பூசிகள் இப்போது பயன்பாட்டில் இருக்கின்றன. நீங்கள் முதலில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அவற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்.

பெரும்பாடுபட்டு இப்போதுதான் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகளை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். அதற்குள் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்ற கணிப்புகள் கிளம்பியுள்ளன. அதிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உங்களுக்கு சொத்தைப் பல்லின் தீவிரம் அல்லது வேறு பிரச்னைகளைப் பொறுத்துதான் அதை அகற்ற வேண்டும் என உங்கள் பல் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். உங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் மட்டும் உங்கள் பல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அவர்கள் அதற்கேற்ப பல் நீக்கும் சிகிச்சை யைத் திட்டமிடுவார்கள். அதற்குத் தயார்படுத்த ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பார்கள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நீங்கள் பல்லை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பல்லை எடுத்த பிறகும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அது உங்கள் முடிவு. ஆனால், தடுப்பூசி போடுவதை மட்டும் எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தாதீர்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

கொரோனா சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இருமல் தொடர்கிறது. இருமலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

- @முருகதாஸ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

கோவிட் 19 வைரஸ் என்பது சுவாச மண்டலத் தைப் பாதிப்பதால் தொற்றின் போதும், தொற்றி லிருந்து குணமான பிறகு, சில மாதங்கள் வரையிலும் இருமல் இருக்கலாம். சிலருக்கு அது வறட்டு இருமலாக இருக்கும். அவர்கள் வாய் வழியே சுவாசிக்கக் கூடாது. வெதுவெதுப்பான நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். மூக்கு வழியாக சுவாசிக்கும் மூச்சுப் பயிற்சி களைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். தொண்டை எரிச்சல் அதிகமாக இருந்தால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கரகரப்பைப் போக்குவதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

சிலருக்கு கோவிட் தொற்றால் தொண்டைப் பகுதி மற்றும் சுவாச நரம்பிழைகளும் பாதிக்கப்படும். இதனாலும் தொடர் இருமல் (Sensory Neuropathic Cough) இருக்கும். இவர்களுக்கு நரம்பிழைகள் பாதிப்புக்கான மருந்தையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

சிலருக்கு இருமலுடன் சளியும் வெளிப்படும். இதை `புரொடெக்ட்டிவ் காஃப்' (Productive Cough) என்போம். இதற்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Viral Pneumonia), அழற்சி (Inflammation), பிற பாதிப்புகள் (Pulmonary Fibrosis) போன்றவை காரணங்களாக இருக்கலாம். எனவே இவர்களுக்கு நெஞ்சுப்பகுதிக்கான எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள், சளி, ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படலாம். நுரையீரல் பாதிப்பின் தன்மைக்கேற்ப சளியை இலகுவாக்கி வெளியேற்றும் மருந்துகள், அழற்சியைக் குறைக்கும் மருந்துகள், நுரையீரல் பாதிப்பைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தவிர இவர்களுக்கு மூச்சுப் பயிற்சியும் ஆவி பிடித்தலும் உதவும். நெஞ்சு சளியை வெளியேற்றவும் பயிற்சிகள் (Chest physiotherapy) தேவைப்படும். ஏற்கெனவே அமிலப் பின்னோட்ட நோய் (GERD), காசநோய் (TB), ஆஸ்துமா, ஒவ்வாமை (Allergic Rhinitis), நீண்டகால சுவாச பாதிப்பு (COPD) போன்றவை இருந்தால் அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முக்கியமாக, புகைப்பழக்கம் இருந்தால் நிறுத்தப்பட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமெனில் மருத்துவரிடம் ஆலோசித்து, ரத்த அழுத்தத்துக்காக எடுத்துக்கொள்ளும் குறிப்பிட்ட சில மருந்துகளை (Angiotensin-converting enzyme (ACE) inhibitors) நிறுத்திவிட்டு வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

கொரோனா பாதிப்பால் இடதுகை சுண்டுவிரல் மற்றும் இடது தொடை மரத்துவிட்டது. நரம்பியல் மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, இடது பக்கம் முழுவதுமாக. பலவீனமாக இருப்பதாகச் சொல்லி, மாத்திரைகள் பரிந்துரைத்தார். நான். பழையபடி எப்போது நார்மல் நிலைக்கு வருவேன்?

- @ஈரோடு அருண்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

கொரோனா தொற்று பாதித்து குணமடைந்த பலருக்கும் அதைத் தொடர்ந்து இதுபோன்ற பல பாதிப்புகள் தொடர்வதைப் பார்க்கிறோம். முதல் அலையைவிடவும் இரண்டாவது அலையில் ‘லாங் கோவிட்’ எனப்படும் இந்தப் பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. சிலருக்கு நரம்பு மண்டலம், சிலருக்கு கணையம், சிலருக்கு எலும்புகள் என ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான பாதிப்பைக் காட்டுகிறது கொரோனா.

உங்கள் விஷயத்தில் நீங்கள் நரம்பியல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள் மேற்கொண்டு மாத்திரைகள் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் மருத்துவர் ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்பதை நிச்சயம் பரிசோதித்திருப்பார். `பெரிபெரல் பல்ஸ்' (Peripheral Pulse) பார்த்துவிட்டே மருத்துவர் இதை உறுதி செய்துவிடுவார். அதாவது, நோயாளியின் நாடியைப் பார்த்தே கண்டு பிடித்துவிடுவார். தன் கையைப் போலவே நோயாளியின் கையும் கதகதப்பாக இருக்கிறதா என டெஸ்ட் செய்வார். இந்த இரண்டும் நார்மல் என்றால் நோயாளிக்கு தொடுதல் உணர்வு இருக்கிறதா என்று பார்ப்பார். முதல்கட்டமாக ரத்தக்குழாய்களை விரிவுபடுத்தும் மருந்துகள், சத்து மாத்திரைகளைக் கொடுத்துப் பார்ப்பார்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

இந்த சிகிச்சைகளுக்குப் பிறகும் மரத்துப்போகும் உணர்வு சரியாகவில்லை என்றால் `டாப்ளர் டெஸ்ட்'டுக்கு (Doppler Test) பரிந்துரைப்பார். அதில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது தெரிந்தால், பயப்படத் தேவையில்லை. மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளிலேயே உங்கள் உடல்நிலை பழையபடி மாறிவிடும். ஆனால், நீங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் அசைவளிக்கும் வகையில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். `மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்' எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள் குறைபாடு இருக்கிறதா என்பதையும் சரிபார்த்து அதற்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்கிடையில் உங்களுக்கு நீரிழிவு, இதய பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அப்படி ஏதேனும் இருந்தால் சரியான மருத்துவ ஆலோசனையோடு அவற்றுக்கான சிகிச்சைகளையும் தாமதமின்றி தொடங்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்வதோடு, வாரம் ஒருமுறையோ இரு வாரங்களுக்கு ஒரு முறையோ ஹெல்த் செக்கப் செய்துகொள்வதும் நல்லது.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

தினமும் சத்தான பேலன்ஸ்டு டயட் சாப்பிட்டு. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி வெளியில் எங்கும் அலையாமல் இருந்தால் கூட கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

- @அலமேலு சீனிவாசன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் ராஜ்.

நீங்கள் பின்பற்றுவதாகச் சொல்கிற பேலன்ஸ்டு டயட்டும், தனிமனித இடைவெளியும், தேவை யின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பதும்

மிகச் சரியான விஷயங்களே. அவையெல்லாம் உங்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயத்தைப் பெரிய அளவில் தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவை உங்களுக்கு கொரோனா தொற்றே வராமல் காக்கும் என்று சொல்ல முடியாது.

கொரோனா தொற்று ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமலிருந்தாலும் உங்கள் வீட்டுக்கு வரும் வேலையாட்கள், டிரைவர், உங்கள் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவோர் என யார் மூலமாகவும் உங்களுக்குத் தொற்று பரவலாம். கொரோனா தொற்றுள்ளவர்கள் புழங்கிய இடங்களை, பொருள்களைத் தொடுவதால் அடுத்தவருக்குத் தொற்று பரவுமா என்பதும் இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

பேலன்ஸ்டு டயட் என்பது உங்களுடைய நோய் எதிர்ப்பாற்றலுக்கு அவசியமானது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ளோருக்கு தொற்று வரும் வாய்ப்புகள் குறையும். அப்படியே வந்தாலும் அது தீவிரமாகாமல் இருக்கும். ஆனால், தடுப்பூசி என்பது நம் உடலின் ஆன்டிபாடி செல்களை அதிகப்படுத்தக்கூடியது. அதாவது, கொரோனா தொற்றிலிருந்து பெரிய அளவுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதோடு, சரிவிகித உணவு உட்கொள்வது, கூடவே தடுப்பூசி போட்டுக்கொள்வது என எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்போது உங்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பாதுகாப்பாக இருப்பதாக உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு, தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கவோ, தாமதிக்கவோ செய்யாதீர்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

எங்கள் வீட்டில் 90 வயது மாமனார் இருக்கிறார். அவருக்கு நிறைய பிரச்னைகள் இருப்பதால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில் வேலைக்குச் சென்று வரும் வீட்டிலுள்ள மற்றவர்களால் அவருக்குத் தொற்று பாதிக்க வாய்ப்புகள் உள்ளனவா? மாமனாரின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?

- @தேன்மொழி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் மாமனார் தவிர்த்த மற்ற எல்லோருக்கும் தடுப்பூசி போடுவதை வலியுறுத்துவதைத்தான். அதாவது, தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள், `இம்யூனோ சப்ரசென்ட்' நோயாளிகள் போன்ற அனைவருக்கும் இந்த முறையில் ஓரளவு பாதுகாப்பு அளிக்கலாம். வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நோய்த்தடுப் பாற்றலே, தடுப்பூசி போடாத அந்த நபரை. தொற்றுப் பாதிப்பிலிருந்து காப்பாற்றிவிடும். இதை ‘இம்யூனிட்டி ரிங்’ அதாவது, பாதுகாப்பு வளையம் என்று சொல்கிறார்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

எந்தவொரு தடுப்பூசியும் 100 சதவிகிதம் பலன் தராது. 80 முதல் 90 சதவிகிதம்தான் வேலை செய்யும். அதாவது 10 பேருக்குத் தடுப்பூசி போடும்போது ஒன்றிரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பாற்றால் வராமலிருக் கலாம். ஆனால், மீதமுள்ள 8 - 9 நபர்களால், நோய் எதிர்ப்பாற்றல் வராத நபரும் பாதுகாக்கப்படுவார்.

எனவே, உங்கள் வீட்டில் தடுப்பூசி போடத் தகுதியான அனைவரும் தாமதிக்காமல் அதைப் போட்டுக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மாமனாருக்குப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொடுங்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

என் வயது 39. கடந்த ஐந்து வருடங்களாக நீரிழிவுக்கு மருந்துகள் எடுத்து வருகிறேன். 2021, ஜூலை மாதம் சுகர் டெஸ்ட் செய்தபோது ரத்தச் சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 255-ம், சாப்பிட்ட பிறகு 399-ம் இருந்தது. அதையடுத்து மருத்துவர் என்னை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளச் சொன்னார். இந்நிலையில் நான் கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- @ரமேஷ்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

நம்மூரில் கிடைக்கும் கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளை எந்தவித அறிகுறிகளும் இல்லாத நபர்களுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம். அதனால் எந்தப் பாதிப்பும் வராது. நம்மூரில் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். அதனால் சிலருக்கு சாதாரண சளி, இருமல் வரலாம். இன்னும் சிலருக்கு தூசு, புகையால் அலர்ஜி இருக்கலாம். ஆஸ்துமா நோயாளிகளாக இருப்பார்கள்.புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இருமல் இருக்கும். இவர்கள் எல்லோரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாதவர்கள் கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டுதான் தடுப்பூசி போட வேண்டும் என்றில்லை.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

பிறகு யாருக்கு டெஸ்ட் எடுத்துவிட்டு தடுப்பூசி போட வேண்டும்?

கடந்த ஒரு வாரத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்தவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் கொரோனா டெஸ்ட் செய்து, நெகட்டிவ் என்ற ரிசல்ட்டுடன் போட்டுக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஏற்கெனவே ஒரு தொற்று இருக்கும்போது அத்துடன் தடுப்பூசி போட்டால் நம் எதிர்ப்பாற்றலின் விளைவு கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு தடுப்பூசியால் வரும் அறிகுறிகளும் கொஞ்சம் மோசமாக இருக்கலாம். உதாரணத்துக்கு காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி போன்றவை வழக்கத்தைவிட வீரியமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. இதுமட்டும்தான் பிரச்னையே தவிர மற்றபடி 18 வயதுக்கு மேலான எல்லோருமே எந்தக் கவலையும் இன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

கொரோனா பாதித்தவர்கள் எப்போது முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? எப்போது ரத்த தானம் செய்யலாம்?

- @கண்ணதாசன் தியாகராஜன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அதிலிருந்து முழுமையாகக் குணமானதும் மூன்று மாதங்களுக்குப் பிறகு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

ரத்த தானத்தைப் பொறுத்தவரை கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, இரண்டு வாரங்கள் கழித்துச் செய்யலாம். இந்த இரண்டு வார அவகாசம் என்பது தானம் கொடுப்பவர்களுக்கும் தானம் பெறுபவர் களுக்குமான ஒருவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டதன் விளைவாக ஏற்படுகிற சில அசௌகர்யங்களை, ரத்த தானம் செய்ததன் விளைவுகளாகக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதற்காக மட்டுமே என்று புரிந்துகொள்ளவும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ரத்த தானம் செய்வதால் அடுத்தவருக்குத் தொற்றைப் பரப்புவார் என்பதற்கோ, தானம் பெறுபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்னை வரும் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இரு தரப்பினருக்கும் அது பற்றிய பயம் தேவையில்லை.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

கொரோனா முதல் அலையின்போது, வெளியில் இருந்து வரும் காய்கறி, பழங்களையும் கூரியர், செய்தித்தாள் போன்ற பொருள்களையும் டிஸ்இன்ஃபெக்ட் செய்வோம் அல்லது இரண்டு மூன்று நாள்களுக்கு வெளியில் வைத்துவிட்டு எடுப்போம். இப்போதும் அதைச் செய்ய வேண்டுமா? மனிதர்களிடம் இருந்து பரவுவதைப்போல இதுபோன்ற பொருள்கள் மூலமும் கொரோனா பரவுமா? அப்படியென்றால் எத்தனை நாள்களுக்கு இந்தப் பொருள்களைத் தனியாக வைக்க வேண்டும். வீட்டிலேயே எளிய முறையில் டிஸ்இன்ஃபெக்ட் செய்வது எப்படி?

- @ரமேஷ் ஆர்பி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

கொரோனாவின் முதல் அலையில் அந்த நோய், அது ஏற்படுத்திய பாதிப்புகள், அதன் பரவும் தன்மை என எல்லாமே நமக்குப் புதிதாக இருந்தன. பல யூகங்கள், பல அனுமானங்கள், பல கேள்விகள், பல சந்தேகங்கள் என அப்போதுதான் அந்த நோய் தொடர்பான பல விஷயங்களையும் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தோம். அந்தக் குழப்பங்களின் விளைவாக காய்கறிகள், வெளியிலிருந்து வரும் பொருள்கள் என எதன் மூலமும் தொற்று பரவும் என்று பயந்திருக்கிறோம். ஆனால், இந்த ஒன்றரை வருட அனுபவத்தில் கொரோனாவை பற்றி நிறைய தெரிந்துகொண்டிருக்கிறோம், தெளி வடைந்திருக்கிறோம். அதன்படி கொரோனா வைர ஸானது ஒருவருக்குப் பரவவோ, தொற்றவோ அதற்கு மனிதர் அல்லது விலங்கு என ஓம்புயிரி தேவைப்படுகிறது.

எனவே காய்கறிகள், வெளியிலிருந்து வரும் பொருள்களுக்குத் தொற்றை ஏற்படுத்தும் தன்மை இருப்பதில்லை என்று தெரிந்துகொண்டோம். ஆனாலும் உலக சுகாதார நிறுவனம் எல்லோரையும் அடிக்கடி கைகளைக் கழுவ அறிவுறுத்துகிறது. வெளியிலிருந்து வரும் பொருள்களின் உறைகளை நீக்கிவிட்டு, காய்கறி, பழங்கள் போன்றவற்றைக் குழாய் தண்ணீரில் கழுவி, காயவைத்துப் பயன்படுத்தவும் சொல்கிறார்கள். மற்றபடி காய்கறிகள், பழங்கள் உள்பட வெளியிலிருந்து வரும் பொருள் களை சோப்பு போட்டுக் கழுவுவதோ, மஞ்சள் தூள் கரைசலில் கழுவுவதோ, ஹைப்போகுளோரைடு சேர்த்துக் கழுவுவதோ தேவையற்றது.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

என் கணவர் தமிழக அரசின் ஆரம்ப சுகாதார மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆதார் கார்டைக் காட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆனால், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் குறுந்தகவலோ, வேறு தகவல்களோ வரவில்லை. இந்த நிலையில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்யும் வாக்சின் சர்ட்டிஃபிகேட் எனப்படும் தடுப்பூசி சான்றிதழை டௌன்லோடு செய்யும் முறையை விளக்க முடியுமா? அவர் தன் மொபைல் எண்ணை ஏற்கெனவே ஆதாருடன் இணைத்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

- @வித்யா மகேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எங்கே கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அது பற்றிய தகவல்கள் கோவின் ஆப்பில் பதிவேற்றப்படும். அது அவர்களுடைய அடையாள அட்டைகளுடன் லிங்க் செய்யப்பட்டிருக்கும்.

இங்கே உங்கள் கணவர் ஆதார் கார்டை காட்டி தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அவரது மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத் துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் கோவின் தளத்துக்குச் சென்று உங்கள் ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, தடுப்பூசி சான்றிதழை டௌன்லோடு செய்துகொள்ளலாம். அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் கோவின் ஆப்பில் அதை நிச்சயம் பதிவு செய்திருப்பார்கள்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

ஒருவேளை உங்களால் இந்த முறையில் தடுப்பூசி சான்றிதழை டௌன்லோடு செய்ய முடியவில்லை என்றால் தடுப்பூசி போட்டுக்கொண்ட இடத்துக்கே நேரில் செல்லலாம். அவர்கள் அங்கே பதிவேட்டில் உங்கள் கணவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்களைக் குறித்து வைத்திருப்பார்கள். அதைவைத்து அவர்களையே கோவின் ஆப்பில் பதிவேற்றச் சொல்லி, சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எல்லோரும் அவர்களுடைய ஆதார் எண், பான் கார்டு எண் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மேற்சொன்ன முறையில் சான்றிதழை டௌன்லோடு செய்துகொள்ளலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டால் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்களே... இது எந்த அளவுக்கு உண்மை? கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது சித்த மருந்துகளை நிறுத்த வேண்டுமா? சித்த மருந்துகளை நிறுத்த முடியாதவர்கள் எப்படி கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது?

- @சுபபொன்செல்வன்

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.

சித்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது தடுப்பூசி போடக் கூடாது என்பது தவறான தகவல். சித்த மருந்துகளில் மூலிகை சார்ந்த மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் எந்தவித பயமும் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மருத்துவரின் மேற்பார்வையில் எடுக்கப்படும் மூலிகை சார்ந்த மருந்துகளால் டிரக் இன்டர்ஆக்‌ஷன் (Drug Interaction) அதாவது, மற்ற மருந்துகளோடு ஏற்படுத்தும் செயல்விளைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேநேரம், நாள்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகள் எடுப்பவர்கள் தாங்கள் சிகிச்சை பெறும் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி முடிவு செய்யலாம்.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

சித்த மருத்துவர் என்பவர் சித்த மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றவர் அல்லது அனுபவம் வாய்ந்த பாரம்பர்ய சித்த மருத்துவராக இருப்பது அவசியம். போலி மருத்துவர்களின் தவறான ஆலோசனைகளை நம்ப வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பி ஏமாறுவதும் தவறு.

கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவுடன் காய்ச்சல் ஏற்படுகிறதெனில் மருத்துவர் ஆலோசனைப்படி கபசுர குடிநீர் (அ) நிலவேம்புக் குடிநீர் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சலுக்காகப் பரிந்துரைக்கப்படும் மற்ற சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். அதே போல தடுப்பூசியால் ஏற்படும் உடல் சோர்வுக்கு, சித்த மருந்துகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

நீரிழிவு பாதிப்புக்காகவோ உயர் அழுத்த நோய்க்காகவோ சித்த மருந்துகளை எடுப்பவர்களும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தொற்றா நோய்களுக்காக பெரும்பாலும் மூலிகை சார்ந்த மருந்துகளே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா... தொற்று முதல் தடுப்பூசி வரை

இதயம் சார்ந்த நோய்களுக்காகவோ, ரத்த உறைதல் பிரச்னைக்காகவோ ஒருங்கிணைந்த சித்த மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவரின் தெளிவான அறிவுரையோடு தடுப்பூசி செலுத்த முற்படுவது அவசியம்.

பெரும்பாலான சித்த மருந்துகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டவை. எனவே, தகுதியான சித்த மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்பது தவறான கருத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு