Published:Updated:

முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!

முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!
பிரீமியம் ஸ்டோரி
முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!

வாழ்க்கை

முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!

வாழ்க்கை

Published:Updated:
முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!
பிரீமியம் ஸ்டோரி
முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!
கொரோனா என்னும் பேரச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்போடு நாம் இந்த வருடத் தீபாவளியைக் கொண்டாடப் போகிறோம். புதிய இயல்பு நிலையில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்றாலும், சுமார் எட்டு மாதங்களாக வறண்டு போயிருந்த வாழ்வில் மழைச் சாரலைப் போல வருகிறது இந்தத் தீபாவளி. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணி செய்யவில்லை என்றால், நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவைச் சந்தித்திருப்போம். நம்மைக் காப்பதற்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிய முன்களப் பணியாளர்களின் அனுபவங்கள் குறித்து சிலரிடம் பேசினோம்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் சார்பாகப் பேசிய தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன், “மருத்துவர்களான எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கு கொரோனா. அதுக்கு நாங்க கொடுத்த விலை ரொம்பவே அதிகம். ஆரம்பத்துல கொரோனா பரவ ஆரம்பிச்சப்போ மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் ஒருவித பயம் இருந்தது. நிறைய மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரவே பயந்தாங்க. ஆனா, இந்த நேரத்துலதான் மருத்துவ உலகின் சேவை மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து மனசுல இருந்த பயத்தையும் தயக்கத்தையும் ஓரம்கட்டி வெச்சிட்டு கொரோனாவுக்கு எதிரான பணிக்குத் தயாரானோம். வயதான மருத்துவர் களும், செவிலியர்களும்கூட நெருக்கடி நிலையை மனசுல வெச்சுகிட்டு பணிக்கு வரத் தொடங்கினாங்க. நாளுக்கு நாள் கொரோனா நோயாளி களோட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சதும் மருத்துவர்களோட எண்ணிக்கை பற்றாக்குறையா இருந்தது. அதனால மருத்துவர்கள் செவிலியர்கள் என எல்லோரும் ஓவர் டைம் பார்க்க ஆரம்பிச்சாங்க. மாசக்கணக்கா வீட்டுக்கே போகாமல் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. குழந்தைங்க, மனைவி, பெற்றோர் என யாரையும் பார்க்க முடியாம இருந்ததுதான் பெரும் துயரம். சில நேரங்கள்ல சரியான சாப்பாடுகூட கிடைக்காது.

முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!

ஒருமுறை கவச உடையைப் போட்டுட்டா அடுத்த 12 மணி நேரத்துக்கு அதைக் கழற்ற முடியாது. சாப் பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஏன் கழிவறைக்குக் கூட போக முடியாது. மாதவிடாய் நேரங்களில் கொரோனா வார்டு பணி செய்யும் பெண் மருத்துவர்களோட நிலை இன்னும் பரிதாபமா இருக்கும். அந்த 12 மணி நேரம் வலிகளைக் கன்ட் ரோல் பண்ணிக் கிட்டுத் தான் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கணும். வியர்வையால உடம்பு முழுக்க தொப்பலா நனைஞ் சிரும். எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டுத்தான் ஒவ்வொரு மருத்துவரும் செவிலியரும் பணி செஞ்சாங்க. கொரோனவால பாதிக்கப்பட்டவர் அவரோட குடும்பத்தினரிடமிருந்து முழுவதுமா தனிமைப்படுத்தப் பட்டிருக்குறதால, நோயாளிக்கு ஒரு மருத்துவரா மட்டுமல்லாம ஓர் உறவினர்போல சப்போர்ட் பண்ணினோம்.

இது எல்லாத்தையும் தாண்டி இந்தக் கொரோனா காலத்துல மருத்துவர்களும் செவிலியர்களும் சந்திச்ச பிரச்னைகள் நிறைய. கொரோனா வார்டுல வேலை செய்யுறதால எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க தயங்கினாங்க. எங்க கொரோனா நோயாளிக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்களில் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மோசமான நிலைக்குப் போயிருக் காங்க. சிலர் இறந்தும் போனாங்க.

முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!

கொரோனாவால இறந்த மருத்துவரோட சடலத்தைப் புதைக்கிறதுக்கு கூட மக்கள் பிரச்னை பண்ணப்போதான் மருத்துவ உலகம் ரொம்பவே மனசு உடைஞ்சு போயிருச்சு. ஆனா, அது அவங் களோட அறியாமைன்னு சொல்லி மருத்துவர்கள் அவற்றையெல்லாம் கடந்து போனாங்க. அதே நேரத்துல பல இடங்கள்ல எங்க சேவைக்கு மக்கள் மிகுந்த மதிப்பு கொடுத்தாங்க. எது எப்படியோ மக்களுக்கு சேவை செய்யணும்ங்கிறதுதான் ஒவ்வொரு மருத்துவருக்கும் செவிலியருக்கும் தாரக மந்திரம்'' என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் சார்பாக, 15 வருடங்களாகத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவரும் செல்வியிடம் பேசினோம், “கொரோனா பரவ ஆரம்பிச்சதிலிருந்து ஒரு நாள்கூட லீவ் எடுக்காம நான் வேலை செஞ்சுட்டு இருக்கேன். நான் மட்டு மல்ல தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் அப்படித்தான் வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. எங்களுக்கும் உசுரு பயம் இருக்கத் தான் செய்யுது. ஆனா, நாங்க வேலைக்கு வரலைன்னா குப்பை சேர்ந்து கொரோனா மாதிரி வேற ஏதாவது புது வியாதி வந்துருச்சுன்னா சமாளிக்க முடியுமா? அதனாலதான் உசுரு பயத்தையும் பொருட்படுத்தாம வேலைக்கு வந்து கிட்டிருக்கோம். ஊரடங்கால எல்லாரும் வீட்டுக் குள்ளேயே முடங்கி யிருந்தபோதுகூட தெருக்களில் குப்பை சேராம இல்ல. வழக்கம் போல தினமும் குப்பைகள் சேர்ந்துகிட்டுதான் இருந்தது. இப்பவும் சேர்ந்துகிட்டுதான் இருக்கு. நாங்களும் சளைக்காம அள்ளிக் கிட்டுதான் இருக்கோம். கவர்ன்மென்ட்ல இருந்து கிளவுஸும் மாஸ்க்கும் கொடுக்குறாங்க. ஆனா, கிளவுஸைப் போட்டா... தொடப் பத்தைப் பிடிச்சுக் கூட்ட முடியாது. ரொம்ப சிரமமா இருக்கும். அந்த சிரமத்தோடதான் வேலைபாக்குறோம்.

முன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்!

ஆரம்பத்துல கடைகள் எதுவும் இல்லாதப்போ தூய்மைப் பணியாளர்களெல்லாம் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப் பட்டோம். உதவின்னு ஒரு வீட்டு கதவைக்கூட தட்ட முடியாத நிலைமை. தூய்மைப் பணி யாளர்கள்ல பலபேர் கொரோனா வுக்குப் பலியானாங்க. அந்த சேதியைக் கேள்விப்படும்போ தெல்லாம் மனசுக்குள்ள சுருக்குன்னு இருக்கும். நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நம்ம குடும்பத்தை யார் பார்ப்பாங்கன்னு பயம் வரும். ஆனா, நாம வேலைக்குப் போகலைன்னா இதிலிருந்து மீளவே முடியாதுங்கிற உண்மை உரைக்க ஆரம்பிச்சதும் அந்தப் பயத்தையெல்லாம் குப்பையைப்போல துடைச்சு வீசிட்டு ஒவ்வொரு தூய்மைப் பணியாளரும் வேலைக்கு வந்தாங்க. கொரோனாவால பாதிக்கப்பட்டவங்ககூட, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருந்துட்டு உடனே வேலைக்கு வந்தாங்க. அந்த மனசெல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வராது. மனசுக்குள்ள பயம் இருக்கு. ஆனா அதை வெளிக்காட்டிக்காமத்தான் கொரோனா பாதிச்சு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலும் குப்பைகளை வாங்குறோம். ஏன் தெரியுமா? புறக்கணிக்கப்போட வலி என்னான்னு எங்களுக்கு நல்லா தெரியும். அந்த வலியை எக்காரணம் கொண்டும் நாங்க இன்னொருத்த வங்களுக்கு கொடுக்க மாட்டோம்'' என்றார்.

பத்திரிகைத் துறையின் பங்களிப்பு தொடர்பாக ‘ஃப்ரண்ட் லைன்’ பத்திரிகையின் ஆசிரியர் விஜயசங்கரிடம் பேசினோம், “பொதுவாக, ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும், தான் ஒரு பத்திரிகையாளர் என்ற செருக்கு இருக்கும். இந்தப் பெருந்தொற்று காலத்தில் அந்தச் செருக்கு பெருமிதமாக மாறியிருக்கு. கொரோனா நோய் மற்ற நாடுகளில் பரவ ஆரம்பிச்சதிலிருந்து கொரோனா பத்தின ஒவ்வொரு தகவலையும் மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்ப்பதற்கு, ஊடக வியலாளர்கள் இரவு பகல் பாராமல் உழைச்சுருக்காங்க. ஒவ்வோர் ஊடகத்திலும் ஆசிரியர் தொடங்கி, பத்திரிகைகளை மக்களிடம் சேர்க்கும் பேப்பர் மேன் வரை எல்லாருமே உயிரைப் பணயம் வைத்துதான் இயங்கியிருக்கோம்.

அஷ்வின் கருப்பன் - விஜயசங்கர்
அஷ்வின் கருப்பன் - விஜயசங்கர்

கொரோனா பயத்தைக் காரணம் காட்டி, ஒரு பத்திரிகை யாளர்கூட தங்கள் பணியி லிருந்து பின் வாங்கலை. களத்துக்கு நேரில் சென்று தகவல் சேகரிச்சு, மக்களுக்குத் தெரியப்படுத்தினாங்க. ஊரடங்கு நேரத்தில் போக்கு வரத்து வசதிகள், சாப்பாடு இல்லைன்னாலும், செய்திகளை சேகரிக்க பல கிலோமீட்டர் சளைக் காமல் இருசக்கர வாகனங்களில் பயணம் பண்ணாங்க. புகைப்படக் காரர்களுக்கும், 24x7 செய்தி சேனல் களில் பணி செய்பவர்களுக்கும் சவால்கள் இன்னும் அதிகம். மருத்துவ மனை, கொரோனா முகாம் என ரிஸ்க் அதிகம் உள்ள இடங்களுக்கும் துணிச்சலா போனாங்க. அதனால் நிறைய பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானாங்க. ஆனாலும் சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் தைரியமா களத்துக்கு ஓட ஆரம்பிச்சாங்க.

கொரோனாவால் பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்திருந்தன. எடிட்டிங்கில் ஆரம்பிச்சு, புகைப்படத் தேர்வு வரை நிறைய சிக்கல்கள் இருந்துச்சு. அந்தச் சிக்கல் களையெல்லாம் தொழில்நுட்பத்தின் உதவியோடு கடந்து வந்தோம். ஆன்லைன் மூலமாகச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். விற்பனையில் நஷ்டங்களையும் சவால்களையும் சந்திச்சாலும் ஊடக நிறுவனர்களும் ஊடகவியலாளர்களும் எந்தத் தயக்கமும் இல்லாமல் இன்னும் மக்களுக்காக இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். இது மக்கள் பணி... மக்களுக்கான பணி. எனவே, தொய்வில்லாமல் எங்கள் பணிகள் தொடரும்'' என்றார்.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து காவல்துறை பணியுடன் சேர்த்து ஆதரவற்றவர்களுக்கு உதவுவது, உணவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிப்பது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது எனப் பல்வேறு உதவிகளைச் செய்தவர் சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி. கொரோனா நேரத்தில் காவல் துறையினர் சந்தித்தசவால்கள் குறித்து அவரிடம் பேசினோம், “எப்போதுமே ஓய்வில்லாமல் இயங்கும் காவல் துறைக்கு, இந்த கொரோனா கூடுதல் சவாலாக இருந்தது. ஊரடங்கு அறிவிச்சதிலிருந்து ஒட்டு மொத்த காவல் துறையும் ஓய்வில்லாமல் இயங்கிகிட்டு இருக்கு. மக்களுக்கான விழிப்புணர்வு ஒருபுறம், ஊரடங்கு கட்டுப் பாடுகளைக் கடைப்பிடிக்க வைப்பது ஒருபுறம் என நிறைய சவால்கள்.

இந்த ஊரடங்கு என்பதே மக்களின் பாதுக்காப்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான். ஆனா, அதை யாரும் பெருசா எடுத்துக்கலை. மருத்துவமனை போறேன், முக்கிய மான மருந்து வாங் கப்போறேன்னு தினமும் ஏதாவது பொய்யா ஒரு காரணத்தைச் சொல்லிட்டு பலர் வெளியே சுத்திகிட்டு இருந்தாங்க. அதிலும் நிறைய பேர் மாஸ்க் போடாமல்கூட வெளியில சுத்தினாங்க. அவங் களைக் கட்டுப்படுத்துறதுக் குத்தான் நிறைய சிரமப்பட்டோம். காவல்துறையில் இருக்கவங்க, கொரோனா நேரத்தில் ஒரு முறை டியூட்டிக்கு வந்தா அடுத்த நாலு நாள் சுய தனிமைப்படுத்தலில் இருந்துட்டுதான் வீட்டுக்குப் போகணும். கொரோனா வார்டு, முகாம்கள், மக்கள் கூடும் இடம் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் பணி செய்தவர்கள் இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டி யிருந்தது.

தன் குடும்பத்துக்கு தன் மூலமா கொரோனா பரவிவிடக் கூடாதுன்னு நிறைய காவல்துறை நண்பர்கள் வாரக்கணக்கில் வீட்டுக்கே போகாமல் இருந்தாங்க. ஆனால், எவ்வளவோ முன்னெச் செரிக்கையாக இருந்தும் காவல்துறையில் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டாங்க. அவங்க மூலமா அவங்க குடும்பத்தில் உள்ளவங் களுக்கும் பரவியது. குடும்பம் ஒரு புறம், கொரோனா சிகிச்சை ஒரு புறம்னு பலரும் அல்லாடி போயிட்டாங்க. ஆனாலும், இந்தப் பணியை எந்தவிதமான சலிப்பும் இல்லாமல்தான் பண்ணிகிட்டு இருக்கோம்.

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

காவல்துறை நண்பர்களில் பலர் ஆதரவற்ற வர்களுக்கு உணவு கொடுப்பது, கர்ப்பிணி களை மருத்துவமனையில் சேர்ப்பது, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு உதவுவதுன்னு தங்களுடைய சொந்த பணத்தில் மக்களுக்கு உதவினோம்.

காவல் துறையில் இருக்கும் ஒவ்வொரு வரும் யூனிஃபார்ம் போட்ட அன்னிக்கே உயிரும் உடம்பும் நாட்டுக்குன்னு மனசில் பதிய வெச்சுட்டுதான் தங்களுடைய பயணத்தைத் தொடங்கி யிருப்பாங்க. அந்த முடிவை கொரோனா இல்ல, வேறு எதுவும் மாற்ற முடியாது. நாங்கள் மக்களுக்கானவர்கள்'' என்றார் கம்பீரத்துடன்.

தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடும் அதே வேளையில், நமக்காகப் பாடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு எல்லோரும் வைப்போம் ஒரு ராயல் சல்யூட்!