Published:Updated:

கொரோனாவை ஒழிக்குமா ரஷ்ய தடுப்பூசி?

கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா சிகிச்சை

‘அமெரிக்க மருத்துவ நிறுவனங்களின் தடுப்பூசி ரகசியங்களை ரஷ்யா திருடப் பார்க்கிறது’ என்று ஏப்ரல் மாதமே `பகீர்’ புகார் ஒன்று கிளம்பியது.

கொரோனாவை ஒழிக்குமா ரஷ்ய தடுப்பூசி?

‘அமெரிக்க மருத்துவ நிறுவனங்களின் தடுப்பூசி ரகசியங்களை ரஷ்யா திருடப் பார்க்கிறது’ என்று ஏப்ரல் மாதமே `பகீர்’ புகார் ஒன்று கிளம்பியது.

Published:Updated:
கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா சிகிச்சை

அணுகுண்டை ரகசியமாகத் தயாரித்து வெடித்துப் பார்த்துவிட்டு வெற்றியை அறிவிக்கலாம். தடுப்பூசியை அப்படிச் செய்ய முடியுமா? ஆனால், ரஷ்யா செய்துள்ளது. ‘உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ரஷ்யாவில் தயாராகிவிட்டது’ என்று ஆகஸ்ட் 11-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘இன்று காலைதான் இதற்கு அங்கீகாரம் கொடுத்தேன். என் மகள் இதை ஏற்கெனவே பரிசோதனை அடிப்படையில் போட்டுக் கொண்டார். லேசாக ஜுரம் வந்ததைத் தவிர வேறு பிரச்னை இல்லை. தடுப்பூசி நன்றாக வேலை செய்கிறது’’ என்று அவர் சொன்ன நிமிடத்திலிருந்து உலகெங்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஒளி பரவியது. ஆனால், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். இதன் வரலாறு அப்படி!

உளவு அட்டாக்!

‘அமெரிக்க மருத்துவ நிறுவனங்களின் தடுப்பூசி ரகசியங்களை ரஷ்யா திருடப் பார்க்கிறது’ என்று ஏப்ரல் மாதமே `பகீர்’ புகார் ஒன்று கிளம்பியது. மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கூடங்களின் கம்ப்யூட்டர்களை ரஷ்யாவில் இருந்தபடி இயங்கும் இணையத் திருடர்கள் சைபர் அட்டாக் மூலம் வசப்படுத்த முயன்றனர். இதேபோன்ற தாக்குதல் கனடா மற்றும் பிரிட்டன் நிறுவனங்கள்மீதும் நிகழ்ந்தது.

‘‘ரஷ்ய உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்புள்ள Cozy Bear என்ற குழுவினர்தான் இப்படி இணையத் தாக்குதல் நடத்தி, தடுப்பூசி ரகசியங்களைத் திருடப் பார்க்கிறார்கள். உலகமே கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர உழைக்கும்போது, சிலர் இப்படிச் சுயநலமாகவும் பொறுப்பற்றும் நடந்துகொள்கிறார்கள்’’ என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் குற்றம் சாட்டினார்.

ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ‘‘இந்த இணையத் தாக்குதல்களுக்கும் ரஷ்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்று மறுத்தார். அதேநேரத்தில், ‘‘ரஷ்யாவின் தடுப்பூசி முயற்சிக்குக் களங்கம் விளைவிக்க, மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் சதி செய்கின்றன. அதனால்தான் இப்படித் திருட்டுப்பழி சுமத்துகின்றன’’ என்று கிரில் டிமிட்ரியேவ் (Kirill Dmitriev) என்பவர் சொன்னார். `ரஷ்யன் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்’ என்ற நிறுவனத்தின் தலைவர் அவர். இந்த நிறுவனம்தான் ரஷ்யத் தடுப்பூசி ஆராய்ச்சிக்கு நிதி தந்தது.

அரைகுறை சோதனை... புதுப்பெயர்!

செமி ஃபைனலையே தாண்டாதவர்கள் சாம்பியன் ஆக முடியுமா? இந்தத் தடுப்பூசியின் வெற்றி அப்படிப்பட்டதுதான். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் மார்ச் மாதமே தொடங்கிவிட்டன. அந்தத் தடுப்பூசிகள்கூட இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகாது என்பதுதான் யதார்த்தம்.

ஆனால், ரஷ்யாவின் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் முதல்கட்ட சோதனை ஜூன் 18-ம் தேதிதான் தொடங்கியது. 38 பேருக்குச் செலுத்தினார்கள். இரண்டாம்கட்ட சோதனை பற்றிய எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ‘தடுப்பூசி ரெடி’ என புதின் அறிவிப்பு செய்ததற்கு மறுநாள்தான் ரஷ்யா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் அரபு நாடுகளில் 2,000 பேரிடம் மூன்றாம்கட்ட பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். அந்தச் சோதனையைச் செய்வதற்கு முன்னரே ‘வெற்றி’ அறிவிப்பு ஏன்?

விளாடிமிர் புடின்
விளாடிமிர் புடின்

‘‘கொரோனாவுக்குத் தடுப்பூசியை வேகமாக உருவாக்குவது முக்கியம்தான். ஆனால், அதற்காக உயிர்ப் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. இந்த அறிவிப்பே அச்சம் தருகிறது’’ என்கிறார், அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் தடுப்பூசி பாதுகாப்பு நிலைய இயக்குநர் டேனியல் சாலமன்.

தடுப்பூசி எப்படித் தயாராகிறது?

ஒரு தடுப்பூசி, பெரிதாக பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத அளவுக்குப் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்; நோய் தொற்றுவதைத் தடுப்பதாகவும் இருக்க வேண்டும். இதற்காக நூறாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரக் கட்டுப்பாடுகளை உருவாக்கிவைத்திருக்கிறார்கள்.

தடுப்பூசியை முதலில் விலங்குகளுக்குக் கொடுத்து பரிசோதிப்பார்கள். ‘மனிதர்களுக்கு இதனால் ஆபத்து நேராது’ என்பது உறுதியான பிறகே அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள். முதலில் சில டஜன் தன்னார்வலர்களுக்குக் கொடுப்பார்கள். ‘ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை. குறிப்பிட்ட நோயைத் தடுக்கும் எதிர்ப்பணுவை உடலில் உருவாக்கியுள்ளது’ என்பது உறுதியானதும், இரண்டாம்கட்ட பரிசோதனை நடைபெறும். இதில் சில நூறு பேருக்கு தடுப்பூசியைக் கொடுத்து சோதிப்பார்கள்.

அதன் பிறகு மூன்றாம்கட்ட பரிசோதனை. பல நாடுகளில், பல்வேறு இனங்களைச் சேர்ந்த, வெவ்வேறு வயதிலிருக்கும் சில ஆயிரம் பேரிடம் இது நடத்தப்படும். வெவ்வேறு இனக் குழுக்களில், வெவ்வேறு வயதுகளில் இது பாதுகாப்பு தருகிறதா என்பதை உறுதிசெய்யும் சோதனை இது. இதில் ஒரு பிரிவினருக்குத் தடுப்பூசி போடுவார்கள். இன்னொரு பிரிவினருக்கு டம்மி மருந்தைச் செலுத்துவார்கள். இரண்டு பிரிவினரின் உடல் நிலையையும் ஆராய்வார்கள். நோய் பரவும் சூழலில் இவர்கள் நடமாடும்போது, நோய் தொற்றுகிறதா என்பது கண்காணிக்கப்படும். இதைச் செய்து முடிக்க, சில மாதங்கள் ஆகும். ஒவ்வொருகட்ட பரிசோதனையும் நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும்.

‘‘மருந்துகளுக்கும் தடுப்பூசிக்கும் வித்தியாசம் உண்டு. மருந்துகளை நோயாளிக்குக் கொடுப்போம். ‘அது நோய்க்கு நிவாரணம் தந்தாலும், சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். என்றாலும், இதைவிட்டால் வேறு வழியில்லை’ என்று கொடுப்போம். ஆனால், தடுப்பூசி அப்படி இல்லை. அதை ஆரோக்கியமானவர்களுக்கே கொடுக் கிறோம். அதனால், கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக, கொரோனா தடுப்பூசிக்கு இன்னும் அக்கறை வேண்டும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல கோடிப் பேருக்கு இதைக் கொடுக்கப்போகிறோம். அரிதினும் அரிதான ஒரு பக்கவிளைவு ஏற்பட்டால்கூட, அது பல லட்சம் பேரை பாதித்துவிடும்.

இப்போது ஆஸ்ட்ரா ஜெனிகா, மாடெர்னா, நோவாவேக்ஸ், ஃபைஸர் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நம்பிக்கை தந்துள்ளன. மோசமான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. குணமடைந்த கொரோனா நோயாளிகள் உடலில் இருப்பதைவிட, இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் உடலில் அதிக அளவிலான எதிர்ப்பணுக்கள் உருவாகியுள்ளன. என்றாலும், மூன்றாம்கட்ட பரிசோதனையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தால், இவற்றைப் பயன்படுத்த முடியாது. இதுதான் தடுப்பூசிகளின் நியதி. ரஷ்யா இதை மீறுகிறது. இதனால் ஏதாவது பாதிப்பு நிகழ்ந்தால், எல்லா கொரோனா தடுப்பூசிகள்மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்’’ என்று எச்சரிக்கிறார், அமெரிக்க தடுப்பூசி நிபுணர் ஸ்டீவன் பிளாக்.

100 கோடிக்கு ஆர்டர் வந்தாச்சு!

‘ஸ்புட்னிக்’ என்ற உலகின் முதல் செயற்கைக்கோளை சோவியத் யூனியன் 1957-ம் ஆண்டு விண்ணில் ஏவியது. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளையும் திகைப்பில் ஆழ்த்திய திடீர் சாதனை அது. அதன் நினைவாக இந்தத் தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகமும், கமாலேயா அறிவு ஆய்வு நிலையமும் இணைந்து இதை உருவாக்கி யுள்ளன.

‘‘இதை முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர் களுக்கும், கொரோனாவால் உயிரிழக்கும் ஆபத்துள்ள முதியோருக்கும் தரப்போகிறோம். உலக நாடுகள் பலவும் இதைக் கேட்கின்றன. இப்போதே 100 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் வந்துவிட்டது’’ என்கிறது ரஷ்ய சுகாதார அமைச்சகம். செப்டம்பர் மாதம் இதன் தயாரிப்பைத் தொடங்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. என்றாலும், இந்தத் தடுப்பூசிக்கான அங்கீகார ஆணையில், ‘2021 ஜனவரிக்கு முன்பாக இதைப் பரவலாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பாக இது ரஷ்ய எல்லையைத் தாண்டி வருவது சந்தேகமே!

இரண்டு ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு!

இந்தத் தடுப்பூசி இரண்டு ஆண்டுகளுக்குக் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு தருவதாக ரஷ்யா சொல்கிறது. இரண்டு வெவ்வேறு மருந்துகளைக்கொண்டது இந்தத் தடுப்பூசி. முதல் மருந்தை ஊசியால் செலுத்திக்கொண்டு, 21 நாள்கள் இடைவெளியில் அடுத்த மருந்தைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனாவை ஒழிக்குமா ரஷ்ய தடுப்பூசி?

ஜலதோஷத்தை ஏற்படுத்தும் அடினோ வைரஸின் இரண்டு ரகங்களைவைத்து இந்தத் தடுப்பூசி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை உடலில் சென்று எதிர்ப்பணுகளைத் தோற்றுவிக்கின்றன. கொரோனா வைரஸ் உள்ளே வந்தால், அதன் புரதத்தை அழிக்கும் வல்லமை இந்த எதிர்ப்பணுக்களுக்கு இருக்கிறதாம். ஏற்கெனவே எபோலா, மெர்ஸ் ஆகிய வைரஸ் நோய்களுக்கு இதே முறையில் தடுப்பூசி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அவை இன்னமும் வெற்றி பெறவில்லை. என்றாலும், அந்த ஃபார்முலாவைப் பின்பற்றியே இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நோக்கம் என்ன?

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் வல்லரசு யுத்தத்தில் ரஷ்யா காணாமல் போய்விட்டது. இந்தநிலையில், ‘நாங்கள் இன்னமும் இந்த உலகில் முக்கியமான சக்தி’ என்பதை நிரூபிக்க நினைக்கிறார் புதின். அதற்காகவே இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

‘இந்த ஆண்டில் தடுப்பூசி விற்பனைக்கு வர வாய்ப்பில்லை’ என்று எல்லா நிறுவனங்களுமே சொல்கின்றன. ஆனால், ‘வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாகத் தடுப்பூசி ரெடியாகிவிடும்’ என்று ட்ரம்ப் திரும்பத் திரும்பச் சொல்கிறார். அவசரச் சூழல் கருதி, ஒரு மருந்தை முழுமையான பரிசோதனைக்கு முன்பாகவே அங்கீகரிக்கும் விதி அமெரிக்காவிலும் உண்டு. அந்த விதியைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு தடுப்பூசியை ட்ரம்ப் விரைவில் அங்கீகரிக்கக்கூடும். சீனாவும் இப்படியே செய்தால் உலக நாடுகள் தடுமாறும்.

அரசியல் ஆதாயம் தேடுவது என்று முடிவாகிவிட்டால் ‘அறிவியல்’ குப்பைக்கூடைக்குப் போய்விடும்!

ரஷ்ய தடுப்பூசி இந்தியாவுக்கு வருமா?

இந்தத் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘மக்களைக் காப்பாற்ற வேறு வழியில்லை’ என இதை நாம் வாங்கிப் பயன்படுத்த முடியுமா?

வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிகளை மாநில அரசுகளோ, தனிநபர்களோ நேரடியாக வாங்கிவிட முடியாது. இவற்றை இந்தியாவில் அனுமதிக்கும் அதிகாரம் பெற்றது, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு. வெளிநாட்டில் உருவான ஒரு தடுப்பூசியின் இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகளை இந்தியாவில் நடத்தினால் மட்டுமே, அதை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கிடைக்கும். ‘நம் மக்களுக்கு அது திறனுள்ள வகையில் தடுப்பு சக்தியைத் தருகிறதா’ என்பதை உறுதிசெய்ய இந்த நடைமுறை அவசியம். அதனால்தான் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இப்போது இந்தியாவில் பரிசோதிக்கப்படுகிறது. ரஷ்ய தடுப்பூசியும் இந்த நடைமுறையைக் கடக்க சில மாதங்கள் ஆகும்.

‘வெளிநாட்டில் செய்த பரிசோதனையில் இது பாதுகாப்பானது’ என்று நம்பினால், இந்த விதியைத் தளர்த்தி அவசர அனுமதி தரவும் சட்டத்தில் இடம் உண்டு. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக Remdesivir மருந்துக்கு இப்படித்தான் அனுமதி தந்தனர். ஆனால், மருந்துக்கும் தடுப்பூசிக்கும் வித்தியாசம் உண்டு. மருந்தை ஒரு டாக்டரின் பரிந்துரைப்படி நோயாளிகளுக்கு மட்டுமே தருகிறார்கள். தடுப்பூசியைக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்குமே கொடுத்தாக வேண்டும். ஒரு சின்னத் தவறும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, கவனமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது.

அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்!

இன்றைய நிலவரப்படி உலகெங்கும் 28 கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்படுகின்றன. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், காடிலா ஹெல்த்கேர் ஆகியவற்றின் தடுப்பூசிகளும் இவற்றில் அடக்கம்.

இவற்றில் ஆறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனிகா, அமெரிக்காவின் மாடெர்னா, சீனாவின் சினோவேக் ஆகியவை ரேஸில் முந்துகின்றன. ஜெர்மனியின் பயோ என் டெக் மற்றும் அமெரிக்காவின் ஃபைஸர் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி, சோதிக்கின்றன. சீனாவின் சினோஃபார்ம் நிறுவனத்தின் இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன. அதற்குள்ளாகவே இவற்றை வாங்குவதற்குப் பல நாடுகள் போட்டி போடுகின்றன. இதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.

 ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் விலை சுமார் 1,000 ரூபாய் இருக்குமாம். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரேசில் நாடுகள் 43 கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டன.

 ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் ஒப்பந்தம் போட்டுவிட்டன. இதன் விலை ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசப்படும்.

 மாடெர்னா தடுப்பூசி விலை 1,800 ரூபாய் முதல் 2,300 ரூபாய்க்குள் இருக்கக்கூடும். இதற்கு அமெரிக்கா, கனடாவும் பெரிய அளவில் புக்கிங் செய்துள்ளன.

 சீனாவின் மூன்று தடுப்பூசிகளுக்கும் பெரிதாக வரவேற்பு இல்லை.