சமூகம்
Published:Updated:

சுய மருத்துவம் பேராபத்து!

சுய மருத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுய மருத்துவம்

நம் உணவு அல்லது மருந்துகளில் ஒரு நாளில் 96 நானோகிராம் அளவுக்கு மிகாத அளவில்தான் NDMA இருக்க வேண்டும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருடக்கணக்கில் பரிந்துரைக்கப்பட்டுவரும் ரேனிடிடின் மருந்துகுறித்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு வாரியம் (USFDA) சமீபத்தில் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அல்சர், அசிடிட்டிக்கான அந்த மருந்தை உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு என்பதுதான் அந்த அதிர்ச்சி அறிக்கை. எனில், இந்த மாத்திரை தடைசெய்யப்பட வேண்டியதா? இந்த வரிசையில் இன்னும் என்னென்ன மருந்துகள் வருகின்றன?

நாம் அடிக்கடி பயன்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டுப் பட்டியலையும், அதில் குறிப்பிடப் பட்டுள்ள எச்சரிக்கை லேபிள்களைப் பற்றியும் முதலில் தெரிந்துகொள்வோம்.

பொதுவாக மருந்துகள் A, B, C, D மற்றும் X என வகைப்படுத்தப்படுகின்றன. பெண்ணின் கர்ப்ப நிலையில், தாய் மற்றும் கருவை அந்த மருந்து எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை அளவுகோலாகவைத்தே அந்த வகைகளை மருந்தியல் வல்லுநர்கள் முடிவுசெய்கின்றனர். கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்காத எதுவும், பிறந்து வளர்ந்த குழந்தை களையோ, பெரியவர்களையோ பாதிக்காது என்பதால், இதை அடிப்படையாகவைத்தே மருந்துகளின் தரத்தை முடிவு செய்கிறது மருத்துவம்.

இவற்றுள் ‘A’ என்பது, முற்றிலும் பாதுகாப்பான வகை. அதாவது, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை களுக்குப் பரிந்துரைக்கப்படும் வைட்டமின் சத்து மருந்துகள். எந்தப் பாதிப்பும் இல்லாதவை. இவற்றை எளிதாக வாங்கவும் முடியும். ‘B’ என்பது, கர்ப்பக் காலத்திலும் பாதுகாப்பானதுதான் என்றாலும், இது குறித்து மனித ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப் படவில்லை. ‘C’ வகையில் பாதகமான சில விளைவுகள் ஏற்படலாம் என்றாலும், அது கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்காது என்பதால், தேவைப்படும் சமயங்களில் மட்டும் பயன்படுத்தலாம். ‘D’ வகை, கருவைப் பாதிக்கும் என்பதால் உயிருக்கு ஆபத்தான நிலைகளில் மட்டுமே இவை பரிந்துரைக்கப்படுகின்றன. ‘X’ வகை மருந்துகள் கர்ப்பக்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை.

இதில் சர்ச்சைக்குரிய மருந்தாக இப்போது பேசப்படும் ரேனிடிடின் மருந்து, ‘B’ வகையைச் சேர்ந்தது. ரேனிடிடின் மட்டுமல்ல, நாம் அடிக்கடி பயன்படுத்தும் பாராசிட்டமால், அவில், ஜெலுசில் ஆகிய மருந்துகள் அனைத்தும் ‘B’ வகையைச் சேர்ந்தவையே. அப்படியிருக்க, ஏன் இந்த எச்சரிக்கை என்றால், அதற்கு NDMA என்ற நச்சுப்பொருளை காரணம்காட்டுகிறது USFDA.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

அதென்ன NDMA? N-Nitroso Di Methyl Amine எனப்படும் NDMA, ஒரு நச்சு. புகையிலையின் புகை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன் மற்றும் மற்ற உணவு வகைகள், ஷாம்பூ, டாய்லெட் கிளினர் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவற்றிலும், தொழிற்சாலைக் கழிவுகளால் நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. இந்த NDMA-வை ஒருவர் பயன்படுத்தி அது தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருந்தால், இரைப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமாகிறது என்பது விலங்குகள்மீது நடத்திய ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது.

இந்த NDMA, மிகக் குறைவான அளவில் ரேனிடிடின் மருந்துகளிலும் காணப்படுகிறது. நம் உணவு அல்லது மருந்துகளில் ஒரு நாளில் 96 நானோகிராம் அளவுக்கு மிகாத அளவில்தான் NDMA இருக்க வேண்டும் என USFDA ஏற்கெனவே தரக்கட்டுப்பாடு செய்துள்ளது. ஏற்கெனவே உணவு, நீர் என எந்த வகையிலாவது இந்த NDMA மனிதனைச் சேர்ந்துவிட வாய்ப்பிருப்பதால், மருந்துகளில் இருக்கும் NDMA அளவை முற்றிலுமாக நீக்கச்சொல்லிப் பரிந்துரைப்பதோடு, தரக்கட்டுப்பாடும் செய்துவருகிறது.

USFDA இப்படிக் கேட்டுக்கொண்ட சில மருந்துகளில் ஒன்றுதான், Sanofi கம்பெனியின் Zantac என்கிற ரேனிடிடின். நினைவில்கொள்ளவும்... இந்த மருந்தை USFDA தடைசெய்யவில்லை; இந்த மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என தடை விதிக்கவுமில்லை. மாறாக, அதன் தயாரிப்பை மேலும் பாதுகாப்பாக NMDA இல்லாமல் மாற்றியமைக்க மட்டுமே கூறியுள்ளது. அதேபோல், நமது நாட்டில் Pfizer கம்பெனியின் ரேனிடிடின் மருந்தின் தயாரிப்பு மாற்றியமைக்கப்படுகிறது.

இப்போது நமது அடுத்த கேள்விக்கு வருவோம். வார்னிங் லேபிள்கள்கொண்ட மருந்துகளை உட்கொண்டால் விஷமாக மாறுமா? இவை அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டியவையா? இதற்கு கொஞ்சம் சுற்றிவளைத்துதான் பதில் சொல்ல வேண்டும்.

சுய மருத்துவம்
சுய மருத்துவம்

நாம் மிகவும் நம்பகமாக, பக்கவிளைவுகள் அற்றதாகக் கருதும், ஹோமியோபதி மருத்துவத்தில் பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்குப் பயனளிக்கும் நாஜா (Naja) மற்றும் லெச்சீசிஸ் (Lachesis) மருந்துகள், பாம்பின் விஷம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மனிதனின் உடல், பல்வேறு நோய்களால் நச்சாக மாறும்போது, அதற்கான முறிவாக, விஷமே மருந்தாகப் பயன்படுகிறது. ஆம்... தொற்றுநோய்க் கிருமிகளால் உருவாகும் endotoxins எனப்படும் நச்சுப் பொருள்களுக்கு இந்த நாஜா மற்றும் லெச்சீசிஸ்தான் பயனளிக்கின்றன. அப்படியிருக்க, மருந்து பாட்டில்களில் ஏன் இவ்வளவு வார்னிங் மற்றும் லேபிள்கள்? அதற்கு, சுய மருத்துவம் ஒரு முக்கியக் காரணமாகிறது.

காலம் காலமாக மருத்துவர் களால் காய்ச்சல், தலை வலிக்குப் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான ‘B’ வகை பாராசிட்டமால் மருந்துகூட, அளவுக்கு அதிகமாகும்போது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

சுய மருத்துவம் பேராபத்து!

அப்படியிருக்க, அனைத்து உடல் உபாதை களுக்கும் மருத்துவரின் பரிந்துரையின்றி தாமாகவே மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்கத்தான் இந்த எச்சரிக்கைகள் அனைத்தும். ஒரு மருந்தை எத்தனை நாள், ஒரு நாளில் எத்தனை முறை, ஆகாரத்துக்கு முன்பா அல்லது பின்பா, அவற்றுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய மற்ற துணை மருந்துகள் பற்றிய தெளிவு இல்லாமல், எந்த ஒரு பரிசீலனையும் செய்யாமல், தாமாகவே உட்கொள்ளும்போதுதான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சமீபத்திய ஆய்வின்படி, நம் நாட்டில் 52 சதவிகிதத்தினர் பல்வேறு நோய்களுக்கு இன்னமும் தாமாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்கின்றனர் எனத் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையைத் தவிர்க்க லேபிளில் ‘மருத்துவரின் ஆலோசனை பெற்று மட்டுமே’, ‘கர்ப்பக்காலம் மற்றும் பாலூட்டும்போது தவிர்க்கவும்’ போன்ற எச்சரிக்கைகளை மருந்து நிறுவனங்கள் வெளியிட வேண்டியுள்ளது.

‘மிகினும் குறையினும் நோய்செய்யும்’ என்பதை உணர்வோம்!