Published:Updated:

Sigmund Freud: மனித மனத்தின் ஆழத்தை பகுப்பாய்ந்த அறிஞர்; பிறந்ததினப் பகிர்வு!

சிக்மண்ட் ஃப்ராய்ட்

ஃப்ராய்ட் அவரின் சிறு வயது முதற்கொண்டே நிறைய கனவுகளோடு வளர்ந்திருக்கிறார். ரோம் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடிய ஹானிபால் என்ற யூத புரட்சியாளரை தனக்கான முன்னுதாரணமாகக் கொண்டு வளர்ந்திருக்கிறார்.

Sigmund Freud: மனித மனத்தின் ஆழத்தை பகுப்பாய்ந்த அறிஞர்; பிறந்ததினப் பகிர்வு!

ஃப்ராய்ட் அவரின் சிறு வயது முதற்கொண்டே நிறைய கனவுகளோடு வளர்ந்திருக்கிறார். ரோம் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடிய ஹானிபால் என்ற யூத புரட்சியாளரை தனக்கான முன்னுதாரணமாகக் கொண்டு வளர்ந்திருக்கிறார்.

Published:Updated:
சிக்மண்ட் ஃப்ராய்ட்
இருபதாம் நூற்றாண்டில் மனித சிந்தனை மரபிற்குக் கூடுதல் வளத்தைச் சேர்த்தவர்களாகக் கார்ல் மார்க்ஸ், ஐன்ஸ்டீன், நீட்ஷே, சிக்மண்ட் ஃப்ராய்ட் ஆகியோரைச் சொல்வார்கள். அந்த நால்வரில் ஒருவரான ஃப்ராய்ட் மனநலத் துறைக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்தவர். அவர் பிறந்தநாள் மே 6, 1856.
சிக்மண்ட் ஃப்ராய்ட்
சிக்மண்ட் ஃப்ராய்ட்

கிடைத்த தொல்சாட்சியங்களை வைத்துக் கொண்டு வரலாற்றில் விடுபட்டுப்போன இடைவெளிகளை நிரப்பிக் கடந்தகால வரலாற்றை மீண்டும் உருவாக்கிக்கொள்வது, அகழ்வாராய்ச்சித் துறையின் பணியாகும். உளப்பகுப்பாய்வின் செயல்பாடுகளும் அதற்கு ஒப்பபானதுதான். நோயாளி பேசும், பேசத் தவிர்க்கும் விஷயங்களை சாட்சியாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் கடந்த காலத்தை மறுநிர்மாணம் செய்துவதுதான் உளப்பகுப்பாய்வு. ஆகவே ஆர்க்கியாலாஜிக்கும், உளப்பகுப்பாய்வுக்கும் இடையே அதிகமான பொதுதன்மைகள் உண்டு என ஃப்ராய்ட் சொல்லுவார். சிந்திக்க மறுக்கும் அனுபவத்தை, அகவுலகைப் பற்றி ஒருவரை சிந்திக்க வைப்பதால் பெறக்கூடிய அறிவு விடுதலையைத் தரும் என்ற விமர்சன வழிவந்தவர் ஃப்ராய்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிக்மண்ட் ஃப்ராய்ட் மே 6, 1856-ம் ஆண்டு மொராவியா நாட்டிலிலுள்ள ஃப்ரிபெர்க் என்ற நகரில் பிறந்தார். ஃப்ராய்டின் தந்தை ஜேக்கப் ஃப்ராய்ட் கம்பளி நூல் விற்பவராயிருந்திருக்கிறார். அவர் இருமுறை திருமணம் செய்திருக்கிறார். இரண்டாவது தடவை தமது 40-ம் வயதில் வியன்னா நகரில் இருபது வயதுப் பெண்ணான அமலி நாதன்சான் என்பவரை மணம்புரிந்திருக்கிறார். அந்தப் பெண்மணிதான் ஃப்ராய்டின் தாயார் ஆவார். ஃப்ராய்டின் அப்பா 81 வயது வரையிலும், தாயார் 95 வயது வரையிலும் நீண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஃப்ராய்ட் தனது தந்தையோடு தன்னை ஒப்பிட்டுப் பேசும் போது உடலமைப்பிலும், மனசுபாவங்களிலும் தனது தந்தையின் நகல்தான் என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்வின் மிக மோசமான நிலையிலும் விஷயங்கள் சாதாகமாக திரும்பிவிடும் என்ற நம்பிக்கையுடன் நேர்மறையாக வாழ்வைப் பார்க்கும் தனது தந்தையின் சுபாவத்தை ஃப்ராய்ட் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார். ஃப்ராய்ட் பிறக்கும்போதே குடல் சுற்றிப் பிறந்திருக்கிறார். அந்த அசாதாரணமான பிறப்பானது அக்குழந்தை உலகத்தால் கவனிக்கப்படும் என்பதை முன்னறிவிப்பதாக ஃப்ராய்டின் குடும்பத்தினர் நம்பினர். ஃப்ராய்டின் வீட்டைச் சுற்றி திரிந்து கொண்டிருந்த சில சாமியார்கள் ஃப்ராய்டின் துறுதுறுப்பைப் பார்த்து விட்டு மேன்மையான இடத்துக்கு பையன் போவான் என்று ஃப்ராய்ட் தாயாரிடம் ஆருடம் சொல்லியிருக்கின்றனர்.

சிக்மண்ட் ஃப்ராய்ட்
சிக்மண்ட் ஃப்ராய்ட்

ஃப்ராய்ட் அவரின் சிறு வயது முதற்கொண்டே நிறைய கனவுகளோடு வளர்ந்திருக்கிறார். ரோம் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடிய ஹானிபால் என்ற யூத புரட்சியாளரை தனக்கான முன்னுதாரணமாகக் கொண்டு வளர்ந்திருக்கிறார். தான் படித்த பல்கலைக்கழகத்தில் மார்பளவுக்கு தனக்கு ஒரு சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் கீழ் ‘யாராலும் அவிழ்க்க முடியாத ஸ்பிங்ஸின் புதிரை நீக்கிய சிறந்த மனிதன்’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்ததைக் குறித்தும் தனக்கு அடிக்கடி கனவுகள் வந்ததாயும் ஃப்ராய்ட் குறிப்பிட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ராய்டும் அவரது மருத்துவ நண்பரான ப்ருயரும் சேர்ந்து 1895-ம் ஆண்டு ஐந்து பெண் ஹிஸ்டிரியா நோயாளிகளைப் பற்றி ஆய்வுக் குறிப்புகளை எழுதி Studies on Hysteria என்ற பெயரில் வெளியிட்டார்கள். அதில் முதல் கேஸ் ஹிஸ்டரி அன்னா ஓ என்பவரைப் பற்றியது. அந்த நூல் வரும் வரை மனம் ஏன் பிறழ்கிறது என்பதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சீர்கேடுகளே என்ற பார்வைதான் மருத்துவ வட்டாரத்தில் இருந்தது. மனநோய்களுக்கான சிகிச்சைக்கு மலைவாசஸ்தல்ங்களுப் போதல், சுனைகளில் நீராடுதல், மின்அதிர்வு சிசிக்சை முறைகள் போன்றவைதான் கையாளப்பட்டு வந்தன. பிரான்ஸ் நாட்டு மனநலக் காப்பகத்தின் இயக்குநராய் இருந்த சார்கோ என்பவரின் ஹிப்னாடிச சிசிச்சை முறைதான் அப்போது பிரபலமாக விளங்கி வந்தது. நோய்க்கு, உளவியல் ரீதியிலான காரணங்களையும், அதையொட்டிய சிகிச்சையும் அந்த நூல் முன்வைத்தது ஒரு சிந்தனைப் புரட்சியாகும். நனவு ரீதியான பகுத்தறிவு மனம்தான் உண்டு என்ற மனம் பற்றிய பார்வையை அசைத்து, நனவிலி மனத்தின் இயக்கத்தை வெளிப்படுத்திக்காட்டியது அந்த நூல். அன்னா ஒ வின் இயற்பெயர் பெர்த்தா பப்பன்ஹெய்ம். பெர்த்தாவின் ஹிஸ்டரியை எழுதியவர் ப்ருயர். பெர்த்தா வெளிப்படுத்திய நோய்க்குறிகளும், அவரின் பிறழ்வான அனுபவங்களைக் குறித்து சுமார் ஒன்றரை வருடங்கள் நீடித்த சிகிச்சை காலத்தில் பெர்த்தாவும் ப்ருயரும் நடத்திய உரையாடல்கள்தான் கேஸ் ஹிஸ்டரியாக ஆகியிருக்கிறது. பல உளப்பகுப்பாய்வு கோட்பாடுகளுக்கான தொடக்கப்புள்ளியாக அன்னா ஓவின் கேஸ் ஹிஸ்டரி கருதப்படுகிறது.

சிக்மண்ட் ஃப்ராய்ட்
சிக்மண்ட் ஃப்ராய்ட்

முதுமையடைந்த ஃப்ராய்டின் சிகிச்சை அறையைப் புகைப்படத்தில் பார்க்கும் போதெல்லாம் அங்கு பல்வேறு சிற்பங்கள் கண்களை உறுத்துகிற மாதிரி நிறைந்திருப்பதைக் காணமுடியும். எகிப்திய, கிரேக்க, ரோமானிய ஆப்பிரிக்க தேசத்துச் சிற்பங்கள். அதைப் பார்த்து, மருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் அடைந்து கிடக்க வேண்டிய மனநலம் சம்பந்தப்பட்ட ஒரு மருத்துவர் அறையில் புராதனப் பொருட்களுக்கு என்ன வேலை என்ற ஆச்சரியம் ஒருவருக்கு எழாமல் போகாது. அழகுணர்ச்சிக்காக கலைப் பொருட்களைச் சேகரிப்பது என்றில்லாமல் ஃப்ராய்டுக்கு நாகரிகங்களின் அத்தாட்சிக்காகச் சிற்பங்களைச் சேர்க்கிற பழக்கமுண்டு எனப் படித்திருக்கிறேன். இளமையில் பரிசோதனைச்சாலையில் பயிற்சி, மருத்துவம், நரம்பியல் என்று கறாரான அறிவியல் சார்ந்த துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஃப்ராய்டுக்கு ஏன் கடந்து போன நாகரிகங்களின் மேல் ஆசை வந்தது?

அடுத்து சிகிச்சைக்காக ஃப்ராய்ட் பயன்படுத்திய சாதனங்களும் வித்தியாசமானதுதான். ஒரு கட்டில். அதையொட்டி தலைமாட்டில் ஒரு நாற்காலி. சிகிச்சைக்காக வருபவர்கள் படுத்துக்கொண்டு மனதில் தோன்றுவதை, கலாசாரத்துக்குப் பயந்துகொண்டு ‘சரி', ‘தவறு‘ என்று தணிக்கைக்கு ஆட்படுத்தாமல் பேசவேண்டும். சிகிக்சை நேரத்தில் நோயாளியின் தணிக்கைசெய்யப்படாத பேச்சு ஏற்படுத்தும் உணர்வுத் தத்தளிப்பை உளப்பகுப்பாய்வாளனும் நோயாளியும் பரஸ்பரம் பார்த்துக் கொள்ளாதபடி, தோதாகத்தான் கட்டிலையொட்டி கண்மறைவாக நாற்காலியைப் போட்டிருப்பார் ஃப்ராய்ட். விஸ்வரூபம் படத்தில் கமலஹாசனின் மனைவி கட்டிலில் படுத்துக் கொண்டு பேசுவாரே அதுதான் ஃப்ராய்ட் கண்டுபிடித்த உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) ரீதியிலான சிசிக்சை.

உளப்பகுப்பாய்வு சம்பந்தப்பட்ட சிந்தனைகள் உருவாகிக்கொண்டிருந்த முதல் பத்தாண்டுகளில் ஃப்ராய்ட் மிகவும் தனிமைப்பட்டுக் கிடந்தார். அவருடைய சிந்தனைகளுக்கு உடனடியாக ஆதரவு கிடைக்கவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக அவரது புத்தகங்களைக் குறித்து மேலோட்டமான மதிப்புரைகள் வந்ததைத் தவிர தீவிரமாக எதுவும் நடந்து விடவில்லை. பிறகு மெதுவாக வியன்னாவிலிருந்த சில மருத்துவர்கள் ஃப்ராய்டை அணுகத் தொடங்கினர். வாரத்தின் புதன்கிழமை மாலை வேளைகளில் அவர்கள் தொடர்ச்சியாக சந்தித்துக்கொள்ளத் தொடங்கினர். உளப்பகுப்பாய்வு சம்பந்தப்பட்டு தனிப்பட்ட அனுபவங்களை தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். பரஸ்பர பரிச்சயத்தின் அடிப்படையில் உருவான ‘புதன் கிழமைச் சங்கம்தான்’ பின்னாளில் பல சர்வதேச அங்கத்தினர்களைக் கொண்ட அகில உலக உளப்பகுப்பாய்வு சங்கமாக வளர ஆரம்பித்தது.

உளப்பகுப்பாய்வு
உளப்பகுப்பாய்வு
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கலாச்சாரங்களின் மைய கேந்திரமான ஃபிரான்சில் உளப்பகுப்பாய்வு சங்கமானது தொடங்கப்படுவதற்கு முன்னரே, இந்தியாவில் கல்கத்தாவில் அதற்கான சங்கம் கிரிந்தர சேகர் போஸ் (Girindrasekhar Bose 1886–1953) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்து முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வினை தேடிக் கொண்டிருந்த காந்திகூட அது சம்பந்தமாக 1925-ம் ஆண்டு இங்கு நடந்த ஒரு உளப்பகுப்பாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். கிரிந்தர சேகர் போஸ் மருத்துவம் படித்தவர். மனநலமருத்துவர். அதையும் தாண்டி ஃப்ராய்டின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு, இந்தியக் கலாச்சாரப் பின்னணியைக் கணக்கில் கொண்டு ஆய்வுகள் செய்தவர். முதல் ஐரோப்பியரல்லாத உளப்பகுப்பாய்வாளர். யூங்கின் சிந்தனைகளுக்கு இந்தியாவில் பெருத்த ஆதரவு கிடைத்தது. யூங் வாராணாசி பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் கிரிந்தரசேகர் போஸூக்கு ஃப்ராய்டின் சிந்தனைகள்தான் உவப்பாக இருந்திருக்கின்றன். போஸூக்கும் ஃப்ராய்டுக்கும் பதினைந்து ஆண்டுகளுக்கும்மேலாக கடிதத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. தனது ஆய்வான -Concept of Repression- என்ற நூலையும் போஸ் ஃப்ராய்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

1904-ம் ஆண்டு மனச்சிதைவு (Schizophrenia) என்ற நோயின் பெயரை உருவாக்கிய யூஜின் ப்ளுளர் (Eugene Bluler) என்ற மனநல மருத்துவர் ஃப்ராய்டின் கோட்பாடுகளில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார்; பாலியல் ரீதியிலான ஆராய்ச்சிகளின் முன்னோடியான ஹேவ்லாக் எல்லீஸ் (Havelock Ellis) என்பவரும் ஸ்டடீஸ் ஆன் ஹிஸ்டீரியா (Studies on Hysteria) என்ற ஃப்ராய்டின் நூலைப் பற்றி மேற்கோள் காட்டி எழுதத் தொடங்கியிருந்தார்.

1907-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் நாள் ஜீரிச்சிலிருந்து யூங் ஃப்ராய்டைச் சந்தித்தார். யூங்கின் துடிப்பான அறிவோட்டத்தின் மீதும், தடைகளற்ற கற்பனை வளத்திலும் ஈர்ப்புக் கொண்ட ஃப்ராய்ட் யூங்கை, தனது ‘அறிவுலக வாரிசு, மகன்’ என்று அடிக்கடி கூறி வந்தார். ஆரம்பகால கட்ட உளப்பாகுப்பாய்வுக் உட்குழுவில் யூங் மட்டுந்தான் யூதரல்லாதவராக இருந்திருக்கிறார்.

கார்ல் யூங்
கார்ல் யூங்

மெதுவாக உளப்பகுப்பாய்வின் புகழ் பரவத் தொடங்குகிறது. 1908-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள கிளார்க் யுனிவர்சிட்டி ஃப்ராய்ட், யூங் இருவரையும் உளப்பகுப்பாய்வு சிந்தனைகளைப் பற்றி அறிமுகப்படுத்தி பேச அழைப்பு விடுத்தது. அவர்களோடு ஃப்ரென்சி என்பவரும் சேர்ந்து கப்பலில் அமரிக்காவிற்கு பயணமானார்கள். அந்தக் கப்பல் பயணத்தின்போது ஃப்ராய்டுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. தன்னுடைய சைக்கோபேதாலஜி ஆஃப் எவ்ரிடே லைஃப் (Psychopathology of Everyday Life) என்ற புத்தகத்தைக் கப்பல் சிப்பந்தி ஒருவர் படித்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு, தனது சிந்தனைகள் படித்தவர்களின் வட்டத்தையும் தாண்டி பொதுஜனங்களையும் எட்டியிருப்பதைக் கண்கூடாகக் கண்டு ஃப்ராய்ட் திருப்தி பட்டுக்கொண்டார்.

ஃப்ராய்ட் தனது சுயசரிதையை எழுத விரும்பவில்லை. தனது வாழ்வில் இருமுறை தன்னுடைய தனிப்பட்ட டைரிகள், சில ஆய்வுக் குறிப்புகள், பிறருடான கடிதத்தொடர்புகள் சிலவற்றை அழித்துவிட்டார் ஃப்ராய்ட்.

மனஉலகைப் பற்றிய தனது அறிவானது விஸ்தீரணமடைந்த போது தனது கோட்பாடுகளை அதற்கேற்ப மாற்றிக்கொண்டார் ஃப்ராய்ட். மனதின் செயல்பாடுகளை விளக்கக்கூடிய முழுமுற்றான கோட்பாடுகளை தான் கொடுத்துவிடவில்லையென்றும், இட்டு நிரப்பவேண்டிய இடங்கள் தனது கோட்பாட்டில் இருப்பதை உணர்ந்தவராயிருந்திருக்கிறார் ஃப்ராய்ட். தனது கோட்பாடுகளை இறுக்கமாக வைத்துக்கொள்ளவில்லை அவர். மனநோய் பற்றிய தனது பார்வைகள் மாறியபோது தனது கோட்பாடுகளையும் தயக்கமில்லாமல் மாற்றிக்கொண்டார்.

The Interpretation of Dreams
The Interpretation of Dreams
ஃப்ராய்டின் சிந்தனைகளை பரிச்சயம் கொள்வது வாழ்வின் ஆழங்களைப் பார்த்த ஒரு வளமான மனதோடு உரையாடுவது போலிருக்கும். இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரின் நூல்கள் மனித உறவுகளின் சிக்கல்களை ஆவணப்படுத்திய பெரிய செவ்விலக்கியங்களை வாசிக்கும் பரவசத்தைத் தரும்.

-முகமது சஃபி
தேனி மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சைகாலஜிஸ்ட்; ’1001 அரேபிய இரவுகள்’ நூலின் மொழிபெயர்ப்பாளர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism