அலசல்
சமூகம்
Published:Updated:

ரேபிட் டெஸ்ட் கருவிகள்... அனுமதியில்லாத நிறுவனம்... உச்ச புள்ளிக்கு தொடர்பு?

ரேபிட் கிட் மர்மங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேபிட் கிட் மர்மங்கள்

ரேபிட் கிட் மர்மங்கள் - குறையும் சோதனை... பரவும் வேதனை!

தமிழகத்துக்கு சீனாவிலிருந்து முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்துள்ளன. இந்த ரேபிட் கிட் தமிழகத்துக்கு வந்த கதையில்தான் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

ரேபிட் கிட் கருவிகளை வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலையில், இந்தியாவிலுள்ள குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலமாகத்தான் அணுக வேண்டும் என்று 66 நிறுவனங்களின் பட்டியலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்டது. ஏப்ரல் 4, 16, 17 ஆகிய தேதிகளில் ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட இந்தப் பட்டியலில், தமிழக அரசு 50 ஆயிரம் ரேபிட் கிட் கருவிகளைக் கொள்முதல் செய்துள்ள ‘ஷான் பயோடெக் & டயக்னாஸ்டிக்’ நிறுவனத்தின் பெயர் இல்லை. சென்னை கோடம்பாக்கத்தில் செயல்படும் இந்த நிறுவனம் ஐ.சி.எம்.ஆரின் பட்டியலிலேயே இடம்பெறாத நிலையில், அவர்கள் மூலமாக தமிழக அரசு எப்படி சோதனைக் கருவிகளை வாங்கியது என்பதே கேள்வி.

சீனாவின் குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனத்தின் ‘வோண்ட்போ சார்ஸ் சி.ஓ.வி-2’ பரிசோதனைக் கருவிகளைத்தான் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது இதே கருவிகளை வைத்து ராஜஸ்தானில் பரிசோதித்தபோது தவறான ரிசல்ட் வந்ததால், தற்போது ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் மூலமாக பரிசோதிப்பதை இரண்டு நாட்களுக்கு நிறுத்திவைக்குமாறு ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.சி.எம்.ஆர் மூலமாக தங்கள் மாநிலத்துக்குக் கிடைத்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் சரியான ரிசல்ட்டைத் தரவில்லை என மேற்குவங்க அரசும் புகாரளித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்பெயின், துருக்கி, செக் ரிபப்ளிக், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் வோண்ட்போ நிறுவனத்திடம் வாங்கிய கொரோனா பரிசோதனைக் கருவிகள் தவறான ரிசல்ட்டைத் தருவதாக புகாரளித்துள்ளன.

தவறான ரிசல்ட் தரும் கருவியை மத்திய அரசின் அனுமதியே பெறாத ஒரு நிறுவனம் மூலமாக தமிழக அரசு வாங்கியுள்ளது. ஒரு கருவிக்கு தலா 600 ரூபாய் என்று 3.36 கோடி ரூபாய்க்கு பில் போடப்பட்டுள்ளது. ‘ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை தலா 337 ரூபாய் விலையில் (வரிகள் தவிர்த்து) தென்கொரியாவில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் வாங்கியுள்ள நிலையில், அதிக விலை கொடுத்து தமிழக அரசு ஏன் சீனாவில் இருந்து கொள்முதல் செய்தது ஏன்?’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கே பதில் கிடைக்காத நிலையில், ரிசல்ட்டும் தவறாக வருவதால் வாங்கிய கருவிகளும் போலியே என்று சந்தேகம் எழுகிறது.

தி.மு.க-வின் ஐ.டி விங் செயலாளரும் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வுமான தியாகராஜன், ‘‘தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வாங்கியுள்ள ‘ஷான் பயோடெக் & டயக்னாஸ்டிக்’ நிறுவனம் கடந்த வருடம் வெறும் ஏழு கோடி ரூபாய்க்குதான் விற்றுமுதல் செய்துள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு எத்தனையோ மூத்த அனுபவமிக்க நிறுவனங்கள் மருந்துகள் சப்ளை செய்யும்போது, இப்படியொரு நிறுவனந்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதற்குக் காரணமென்ன?” என்று கேட்டார்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்தான் கொள்முதல் செய்து அளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தக் கழகத்துக்கு மருந்து சப்ளை செய்த 185 நிறுவனங்களின் பட்டியலில் ‘ஷான் பயோடெக் & டயக்னாஸ்டிக்’ நிறுவனம் இல்லை. கொரோனா தொற்று பரவுவதால் விரைவாக மருந்துகளை அனுப்புமாறு கடந்த மார்ச் 23-ம் தேதி மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத், 229 நிறுவனங்களுக்குத் தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அதிலும் இந்த நிறுவனம் இடம் பெறவில்லை.

உச்சப் புள்ளி ஒருவர் முருகப்பெருமானின் பெயர் கொண்ட தன் உதவியாளர் மூலமாக இந்த நிறுவனத்தை நடத்துவதாகவும், இதனால்தான் கொரோனா பரிசோதனை கிட் ஒப்பந்தம் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. நேர்மையான விசாரணை நடந்தால் பெரிய பூதங்கள் கிளம்பலாம்.

ரேபிட் கிட் மர்மங்கள்
ரேபிட் கிட் மர்மங்கள்

தமிழக சுகாதாரத்துறை உயரதிகாரிகளிடம் பேசினோம். ‘‘வெளிநாடுகளில் பரிசோதனைக் கருவிகளை வாங்கும்போது, எந்த நிறுவனத்தில் வாங்க வேண்டும் என்று மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர் அமைப்புதான் அறிவுறுத்துகிறது. அதன்படிதான் வோண்ட்போ நிறுவனத்தின் பரிசோதனைக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன. எல்லாம் சட்டப்பூர்வமாகத்தான் நடைபெற்றுள்ளன. வெளிப்படைத்தன்மை இருப்பதால்தான், ஒப்பந்தத்தின் விலைப்பட்டியலும் வெளியிடப்பட்டது’’ என்றனர்.

இறுதியாக ‘ஷான் பயோடெக் & டயக்னாஸ்டிக்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டோம். அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. பதில் கிடைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

கொரோனா கொடூரத்துக்கு இடையிலும் இப்படியொரு டெண்டர் கொள்ளை!

தமிழக அரசை நம்பாத மத்திய அரசு!

மத்திய உளவுத்துறையை முடுக்கிவிட்டு தமிழகத்தில் உள்ள ஆய்வகங்கள் சரிவர செயல்படுகின்றனவா, உண்மையான டெஸ்ட் நிலவர எண்ணிக்கையை தமிழக அரசு சொல்கிறதா என்று கிராஸ் செக் செய்திருக்கிறது மத்திய அரசு. அப்போது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்திருக்கின்றனவாம். ‘தமிழகத்திலுள்ள 29 அரசு சார்ந்த ஆய்வகங்களில் 18 மட்டுமே முழுமையாகச் செயல்படுகின்றன. அவற்றில் தற்போதுள்ள 35 ஆயிரம் பி.சி.ஆர் கிட்ஸை வைத்து சில வாரங்களுக்கு மட்டுமே டெஸ்ட் செய்ய முடியும்’ என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதோடு, ‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் கொரோனா தொற்று யாருக்குமே இல்லை’ என்ற தகவலை நம்ப மறுத்த மத்திய உளவுத்துறை, அங்கே களமிறங்கி விசாரித்துள்ளது. ‘குறைந்தபட்சம் மூன்று பேருக்கு தொற்று இருக்கலாம்’ என்று மத்திய அரசுக்குத் தகவல் கொடுத்துள்ளது. அங்கிருந்து பிரஷர் வந்த பின்பே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியில் கொரோனா தொற்று யாருக்குமில்லை’ என்று தமிழக அரசு சொன்னதையும் நம்பாமல், அங்கேயும் மத்திய உளவுத்துறை விசாரித்துள்ளது. இந்த நிலையில், தர்மபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக லேட்டஸ்ட்டாக அரசு அறிவித்துள்ளது.

இந்த விவரங்களை தெரிந்துகொண்ட பிரதமர் மோடி, ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதாவது, ‘தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் இனி புதிய ஆய்வக வசதி ஏற்படுத்தினால், மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில்தான் நிறுவ வேண்டும்’ என்று கூறியுள்ளாராம்.

தமிழகத்தில் தற்போது 26 அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வங்களில் ‘பயோ சேஃப்டி 2’ என்கிற அந்தஸ்து கொண்ட வசதிதான் இருக்கிறது. ‘பயோ சேஃப்டி 3’ என்கிற அந்தஸ்து இல்லை. பிரதமரின் முடிவின்படி இந்த சேஃப்டி லேப் 3 என்ற புதிய ஆய்வகத்தை சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், ஏழு மணி நேரத்தில் 1500 சாம்பிள்களைப் பரிசோதிக்கும் நவீன ஆய்வகத்தை சேத்துப்பட்டில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக அமைக்கவும் வேலை நடந்துகொண்டிருக்கிறது.

சீக்கிரமாக அமைத்தால் தமிழக மக்களுக்கு நல்லது!

- நமது நிருபர்