Published:Updated:

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம்பிக்கையுடன் காத்திருக்கும் உலகம்
நம்பிக்கையுடன் காத்திருக்கும் உலகம்

நம்பிக்கையுடன் காத்திருக்கும் உலகம்

பிரீமியம் ஸ்டோரி
வேதனை நினைவுகளுடன் ஓராண்டைக் கடந்திருக்கிறது கொரோனா வைரஸ். ஆம், நவம்பர் 17-ம் தேதி கொரோனாவுக்கு முதல் பிறந்தநாள். இந்த ஓராண்டில் உலகம் முழுக்க சுமார் ஆறு கோடி மக்களைத் தாக்கி, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா. எப்போதும் இல்லாத வேகத்தில் கொரோனா தாக்குவதால், ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது... அது, கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியும் எப்போதும் இல்லாத வேகத்தில் நடப்பதுதான்!

கொரோனாவால் ஆரம்பகட்டத்தில் அதிக பாதிப்புகளைச் சந்தித்தவை ஐரோப்பிய நாடுகள். அதன் பிறகு அமெரிக்காவும் இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் இந்த நாடுகளே முன்வரிசையில் நிற்கின்றன. ஐரோப்பிய நாடுகளோ, அமெரிக்காவோ உருவாக்கும் தடுப்பூசியை பெருமளவில் உற்பத்திசெய்து உலகத்துக்கு அளிக்கும் வல்லமை இந்தியாவிடமே இருக்கிறது. இப்போதைய நிலவரப்படி உலகம் முழுக்க 54 கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் மூன்று தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடும். எல்லாம் சரி... நமக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்?

திருப்பம் தந்த நவம்பர் 20

கொரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் நவம்பர் 20 முக்கியமான நாள். ஃபைஸர் நிறுவனம் தனது தடுப்பூசிக்கு முறைப்படி அனுமதி கேட்டு அமெரிக்காவிலும் ஐரோப்பிய யூனியனிலும் அன்றுதான் விண்ணப்பித்தது. இப்படிப்பட்ட முதல் விண்ணப்பமும் அதுதான். “கொரோனா வைரஸின் மரபணு மாதிரி கிடைத்த பத்தே மாதங்களில் தடுப்பூசி வெற்றியை அறிவித்திருக்கிறோம். இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்’’ என்கிறார் ஃபைஸர் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா.

ஒவ்வொரு தடுப்பூசியும் மூன்றுகட்ட பரிசோதனைகளை முடித்த பிறகே பயன்பாட்டுக்கு வரும். பல்வேறு வயதுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் செய்யப்படும் மூன்றாம்கட்ட பரிசோதனை வெற்றிபெற்றால் மட்டுமே ஒரு தடுப்பூசி பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தம். ``எங்கள் தடுப்பூசி 95 சதவிகிதம் பாதுகாப்பானது’’ என்கிறது ஃபைஸர் நிறுவனம். அதாவது 100 பேருக்கு தடுப்பூசி போட்டால், 95 பேருக்கு கொரோனா தொற்றுவது தடுக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

டிசம்பரில் மக்களுக்குக் கிடைக்கும்!

ஃபைஸரின் ஆய்வு முடிவுகளை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விரைவில் பரிசீலித்து முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளனர். அநேகமாக, கிறிஸ்துமஸ் பரிசாக இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படலாம். ஃபைஸர் நிறுவனத்துடன் ஆரம்பத்தில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதன் பிறகு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதல் காரணம், விலை. இந்தத் தடுப்பூசி ஒரு டோஸ், தோராயமாக 1,500 ரூபாய் விலை வரும். முதல் டோஸ் போட்டுக்கொண்டு 21 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் போட வேண்டும். ஒரு நபருக்கு 3,000 ரூபாய் ஆகிவிடும். மேலும், இதைப் பாதுகாத்து வைப்பதும் கடினம். மைனஸ் 70 முதல் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்தத் தடுப்பூசியைப் பாதுகாக்க வேண்டும். வளர்ந்த நாடுகளிலேயே இந்த வசதி இல்லை. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்தத் தடுப்பூசியை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. டிசம்பரில் அங்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட வாய்ப்புள்ளது.

மாடெர்னாவும் ரெடி!

அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசியும் தயாராகிவிட்டது. ‘இது 94.5 சதவிகிதத் திறனுள்ளது’ என்று அறிவித்துள்ளது மாடெர்னா. மற்ற எல்லா தடுப்பூசிகளையும்விட இது விலை அதிகம். ஒரு டோஸ் சுமார் 2,750 ரூபாய் விலை. நான்கு வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். எனவே, ஒருவருக்கு 5,500 ரூபாய் ஆகிவிடும்.

இந்த விலை காரணமாகவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்தத் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம்காட்டவில்லை. அமெரிக்க சுகாதாரத்துறையின் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டதால், அமெரிக்காவுக்கே மாடெர்னா முன்னுரிமை தருகிறது. வரும் டிசம்பருக்குள் இரண்டு கோடி டோஸ் தயாரித்து அமெரிக்காவுக்குத் தரவிருக்கிறது மாடெர்னா.

காப்புரிமை வேண்டாம்!

எனினும், இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியை மாடெர்னா தந்திருக்கிறது. ‘கொரோனா தொற்று இந்த உலகத்தை அச்சுறுத்தும் காலம் வரை எங்கள் தடுப்பூசிக்குக் காப்புரிமை கோர மாட்டோம்’ என மாடெர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, இந்தத் தடுப்பூசியை இந்திய நிறுவனங்களும் தயாரித்து நமக்குக் குறைந்த விலைக்கு அளிக்க முடியும். எனவே, மாடெர்னா தடுப்பூசி அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்த சில நாள்களிலேயே நமக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

நம்பிக்கை நட்சத்திரம் கோவிஷீல்டு!

நம் மக்களுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் ஒரே தடுப்பூசி, கோவிஷீல்டு. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் உருவாக்கிவரும் தடுப்பூசி இது. பிரிட்டனிலும் இந்தியாவிலும் மூன்றாம் கட்ட பரிசோதனையிலிருக்கும் இதன் வெற்றி, இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம். மோசமான பக்கவிளைவுகள் எதையும் இது ஏற்படுத்தவில்லை. ‘முதியவர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு தருகிறது. குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பானது’ என்று இதைச் சான்றளிக்கிறார்கள். இந்தத் தடுப்பூசியின் ஒரே நல்ல விஷயம், இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இதைத் தயாரிப்பது!

உலகத்தரமாகத் தடுப்பூசிகள் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம் சீரம் இன்ஸ்டிட்யூட். ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இங்கே இப்போதே கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. ஒரு நிமிடத்தில் 500 டோஸ் என்ற வேகத்தில் இங்கு தடுப்பூசி தயாராகிறது. வரும் பிப்ரவரி மாதத்துக்குள், மாதம் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் அளவுக்கு இங்கு வசதிகள் பெருகியிருக்கும். இந்தியா மட்டுமே 500 கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது.

ஏப்ரலில் எல்லோருக்கும் கிடைக்கும்!

“இந்தியாவுக்கும் பிரிட்டனுக்குமே பெருமளவில் தருவதற்கு நாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். 2021 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இந்தத் தடுப்பூசி கிடைத்துவிடும். பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும்’’ என்று சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா அறிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் 500 ரூபாய் விலை. ஒருவர் இரண்டு டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்களுக்கு 1,000 ரூபாய் செலவாகலாம். அரசுக்கு இதில் பாதி விலையில் தடுப்பூசி தரப்படுகிறது. 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இதைப் பாதுகாத்துவைக்க முடியுமென்பதால், இந்தியாவுக்கு மிகவும் ஏற்றதாகக் கருதப்படுகிறது. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்கூட இந்தத் தடுப்பூசியைப் பாதுகாப்பாக வைத்து மக்களுக்குச் செலுத்தலாம்.

எனினும், ‘இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா’ என்பது குறித்த பரிசோதனைகள் முழுமை பெறாததால், இப்போதைக்கு குழந்தைகளுக்கு தரப்படாது. எனவே, ‘குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டு, பள்ளிக்கு அனுப்பிவிடலாம்’ என்ற நம்பிக்கை வெளிச்சம் இன்னும் கிடைக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

லாபம் வேண்டாம்!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனமும் இந்தத் தடுப்பூசியை லாப நோக்கமில்லாமல் ஏழை நாடுகளுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளன. எனவே, அடக்க விலைக்கே விற்கப்போகிறார்கள். எளிய மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை இது கொடுத்திருக்கும்.

உலகம் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு கொரோனா தடுப்பூசி வேண்டும். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அது வந்துவிடும். எனினும், உலகின் 70 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே கொரோனா அச்சம் முடிவுக்கு வரும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். நம்பிக்கையோடு காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு