Published:Updated:

அரசுப் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் 

அரசுப் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் 
அரசுப் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் 

அரசுப் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் 

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட புரோக்கர் கணேசன் சென்னைப் போலீஸிடம் சிக்கியுள்ளார். 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் தேர்வு ரத்து செய்யபட்டதோடு, முறைகேடு குறித்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது, முறைகேடுகளுக்கு உதவியதாகச் சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் கணேசன் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "எங்களிடம் சிக்கிய கணேசனின் செல்போன் சிக்னல் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் அடிக்கடி காண்பிக்கப்பட்டது. அதோடு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் அவர் பேசியதற்கான ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்தன. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்தோம். மேலும், அவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணமும் இருக்கிறது. அந்தப் பணத்துக்கான வருவாய் ஆதாரத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. எங்களிடம் சிக்கிய கணேசன், ஒரு முக்கியப் புள்ளியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தலைமறைவாகிவிட்டார். அந்த முக்கியப் புள்ளிக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. டெல்லி பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. புரோக்கர் கணேசன் தெரிவித்த முக்கிய நபர் சிக்கினால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்" என்றனர். 

அடுத்த கட்டுரைக்கு