Published:Updated:

"நாலு கோடி ரூபாய் நிலத்தை தானம் பண்ணது பெரிசில்லை.. இழப்புகள்தான் பெரிசு!" பொன்மணி தேவியின் நெகிழ்ச்சிக் கதை

கு.ஆனந்தராஜ்
"நாலு கோடி ரூபாய் நிலத்தை தானம் பண்ணது பெரிசில்லை.. இழப்புகள்தான் பெரிசு!" பொன்மணி தேவியின் நெகிழ்ச்சிக் கதை
"நாலு கோடி ரூபாய் நிலத்தை தானம் பண்ணது பெரிசில்லை.. இழப்புகள்தான் பெரிசு!" பொன்மணி தேவியின் நெகிழ்ச்சிக் கதை

யிரம், லட்சங்களில் பிறருக்கு உதவி செய்வதே பெரிய விஷயமாக இருக்கும்போது, கல்வி உள்ளிட்ட சமூகநலனுக்காகப் பல ஆண்டுகளாக, பல கோடி மதிப்பிலான உதவிகளைச் சத்தமின்றி செய்துவருகிறது ஓர் உள்ளம். 

ஈரோடு மாவட்டம், சித்தோடு நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், பொன்மணி தேவி. பூர்வீகச்சொத்து மற்றும் தன் உழைப்பில் சேர்த்த செல்வங்களை, உதவி என வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்து மகிழ்கிறார். இவரின் குடும்பப் பின்னணி, எதிர்கொண்ட இழப்புகள் மற்றும் செய்துவரும் தொண்டுகள் நெகிழவைக்கின்றன. 

"என் பூர்வீகம், திருப்பூர். ஊரில் பெரிய செல்வாக்கான குடும்பம். நாங்கள் எல்லோருமே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அந்தக் காலத்தில் போதிய வாகன வசதிகள் இல்லை. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பள்ளிக்குச் செல்வேன். பள்ளிப் படிப்பு முடிந்து, கோயம்புத்தூருக்கு அருகில் ஓர் ஆதினக் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பை முடிச்சேன். அடுத்து, சென்னையில் ஓர் ஆண்டு ஆசிரியர் படிப்பு முடித்தேன். தொடர்ந்து, நான் படித்த ஜெய்வாபாய் அரசு உதவிபெறும் பள்ளியிலேயே 1964-ம் ஆண்டு தமிழ் ஆசிரியையாகப் பணியைத் தொடங்கி, பல பள்ளிகளில் பணியாற்றினேன். இறுதியாக, கோபிசெட்டிப்பாளையம் தாலுக்கா, மொடச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி 1996-ம் ஆண்டு ஓய்வுபெற்றேன். என் கணவரின் பூர்வீகம், சித்தோடு. அவர் குடும்பமும் பாரம்பர்ய தமிழ்ப் புலமையும் செல்வாக்கும் உடையது. நான் பிறந்த மற்றும் புகுந்த வீடுகளில் இயல்பாகவே சமூகக் காரியங்களுக்குத் தவறாமல் உதவுவோம். அவற்றைப் பிறரிடம் சொல்லிக்கொள்வதில் விருப்பமில்லை. மற்றவர்களுக்குக் கொடுக்க இறைவன் எங்களை இயக்குகிறார். அதைச் செய்கிறோம்" என அடக்கமாகப் பேசுகிறார், 80 வயதாகும் பொன்மணி தேவி. 

பொன்மணி தேவியின் அக்கா மகனாகிய டாக்டர் பார்த்திபன், "சித்தப்பாவின் குடும்பத்தினர் இந்த ஊரில் பெரிய மணியக்காரர்களாக, செய்யும் உதவிகள் எக்கச்சக்கம். அதேநேரம், தங்களின் அவசியத் தேவைக்கு மீறி ஒரு ரூபாய்கூட செலவு செய்ய மாட்டாங்க. இந்தத் தொண்டு, அடுத்தடுத்த தலைமுறைகளும் தொடரணும் என்பதில் சித்தியும், சித்தப்பாவும் உறுதியாக இருப்பாங்க. சித்தப்பா குமார நடராஜ வரதப்பன், தனித்தமிழ் புலவர். சொற்பொழிவு, இலக்கியக் கூட்டம் என அடிக்கடி வெளியூர் பயணத்தில்தான் இருப்பார். டீச்சர் வேலையில் இருந்த சித்தி, அரிக்கேன் விளக்கை ஏந்தியவாறு ராத்திரி நேரத்திலும் விவசாயப் பணிகளைச் செய்வாங்க. 23 வருஷத்துக்கு முன்னாடி, சித்தப்பா இறந்துட்டார். அப்புறம், முன்னைவிட அதிக ஈடுபாட்டுடன் சித்தி விவசாய வேலைகளை செய்ய ஆரம்பிச்சாங்க. நாடிவந்து கேட்ட பலருக்கும் நிறையவே உதவி செய்துட்டிருந்தாங்க. இந்தச் சமயத்தில்தான் அந்தச் சோகம் நடந்துச்சு'' என மௌனமாகி தொடர்கிறார். 

''சித்தியின் ஒரே பையன், மயூரா கார்த்திகேயன் டாக்டருக்குப் படிச்சுக்கிட்டிருந்தார். 2001-ம் வருஷம், புது வீட்டின் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி இறந்துட்டார். கணவர் மற்றும் மகனின் இழப்புக்குப் பிறகு, சித்தி ரொம்பவே கலங்கிப்போயிட்டாங்க. அந்த வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 'தனக்குன்னு யாருமில்லை. ஆனாலும், நான் தொடர்ந்து உழைப்பேன். என் செல்வத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவேன். கோயில் திருப்பணிகள் உட்பட ஊரின் நல்ல விஷயங்களுக்கும் கொடுப்பேன்'னு உறுதியா சொன்னாங்க. யாரையும் சார்ந்திருக்காமல், தனியாகவே தன் தேவையைப் பூர்த்தி செய்துக்க ஆரம்பிச்சாங்க. 16 வருடத் தனிமை வாழ்க்கையிலும் விவசாய வேலையை உற்சாகமா பார்த்தாங்க. அப்புறம், வயோதிகம் காரணமாக அக்காவான என் அம்மாவுடனும் எங்களோடும் நாலு வருஷமா இருக்காங்க. இப்போ, சித்தோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க நிலத்தை தானமாகக் கொடுத்திருக்காங்க. ஏற்கெனவே, சுற்றுவட்டாரப் பகுதிகளின் பல பள்ளிகளுக்கு கட்டடப் பணிகள், நிதியுதவி, நிலங்கள் நன்கொடை, கோயில் திருப்பணிகள்னு நிறையவே செய்திருக்காங்க. அதையெல்லாம் வெளிய சொல்லக் கூடாதுனு சொல்லுவாங்க. இப்போ, ஊரே சித்தியை வாழ்த்துது" என நெகிழ்கிறார் பார்த்திபன். 

சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை பரமேஸ்வரி, "இந்த ஸ்கூலுக்கு நான் போன வருஷம்தான் பணிக்கு வந்தேன். கட்டடம், நூலகம், டைல்ஸ் எனப் பல வருஷங்களா

 பொன்மணி தேவி அம்மா இந்தப் பள்ளிக்கு நிறையவே உதவியிருக்காங்க. போன வருஷம் வரை, உயர் நிலைப்பள்ளியாகத்தான் இருந்துச்சு. இது, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர நிறையவே முயற்சி எடுத்தாங்க. அப்போ, அம்மா கொடுத்த ரெண்டு லட்சம் ரூபாய் உதவியால் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுச்சு. ஆய்வகங்கள், பிளே கிரவுண்டுக்காக இடப்பற்றாக்குறை ஏற்பட்டுச்சு. இம்முறையும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அம்மாகிட்ட எங்க தேவையைச் சொன்னோம். 'குழந்தைங்களின் படிப்புக்காக நிச்சயம் செய்றேன்'னு சொன்னாங்க. இதோ, ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருக்கும் தன்னுடைய ஓர் ஏக்கர் நிலத்தை அப்படியே கொடுத்துட்டாங்க. எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. இவங்க கொடுத்திருக்கும் நிலத்தின் மதிப்பு நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகம். 

இப்போ இருக்கும் ஸ்கூல் மற்றும் தேவி அம்மா வழங்கிய நிலம் இரண்டுக்கும் 800 மீட்டர் தூரம் இருக்கு. ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளை மட்டும் புதிய இடத்துக்கு மாற்றலாமா அல்லது பள்ளியையே புதிய இடத்துக்கு மாற்றலாமானு ஆலோசனை நடந்துட்டிருக்கு. அம்மா செய்த உதவிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் பாராட்டுவிழா நடத்தினோம். இதெல்லாம் வேண்டாம்னு மறுத்தாங்க. எங்க வற்புறுத்தலால் பள்ளிக்கு வந்தாங்க. சிறப்பு விருந்தினரா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சார் கலந்துக்கிட்டு அம்மாவைப் பாராட்டினார். பொன்மணி தேவி அம்மா செய்த உதவிகளுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்போம். இங்கே பல தலைமுறைகள் படிக்கப்போகுது. அவங்களும் அம்மாவை நினைச்சுட்டே இருப்பாங்க" என்கிறார் மகிழ்வும் நெகிழ்வுமாக. 

பொன்மணி தேவியின் தொண்டுக்கு வார்த்தைகளால் நன்றியைச் சொல்வது கடினமே.