Published:Updated:

மணல் எங்கிருந்து வந்தது? -  விவசாயியை பாடாய்படுத்திய போலீஸ் 

நமது நிருபர்
மணல் எங்கிருந்து வந்தது? -  விவசாயியை பாடாய்படுத்திய போலீஸ் 
மணல் எங்கிருந்து வந்தது? -  விவசாயியை பாடாய்படுத்திய போலீஸ் 

மணல் எங்கிருந்து வந்தது என்று சிவகங்கையில் விவசாயிடம் போலீஸார் துருவி, துருவி விசாரித்துள்ளனர். அப்போது விவசாயி, மணல் வாங்கிய ரசீதை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தப்பிறகு அவரை விட்டுவிட்டுள்ளனர்.   

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள டி.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். 62 வயதாகும் இவர், விவசாய தொழில் செய்துவருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திலிருந்து விசாரணைக்குவரும்படி அழைப்பு வந்தது. இதனால் பதறிப்போன விஜயகுமார், போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். அங்கு, சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர், நீங்கள் புதியதாக வீடு கட்டுவதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. அதற்கு தேவையான மணல் எங்கிருந்து உங்களுக்கு வந்தது என வீடுகட்டுவது தொடர்பான பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்துள்ளார். இதையடுத்து, விஜயகுமார், மணல் வாங்கியதற்கான ரசீதை போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். அதன்பிறகே அவரை போலீஸார், விடுவித்துள்ளனர். 


இதுகுறித்து விஜயகுமாரின் நண்பர் குமார் கூறுகையில், "திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணம். திருப்பத்தூர் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் யார் வீடு கட்டினாலும் சரி, உளவுப் பிரிவு போலீஸ்காரர், உயரதிகாரிகளுக்குத் தவறான ரிப்போர்ட் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த போலீஸ்காரருக்கும், தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கும் அதிக நெருக்கம். இதனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் அவர் பணியாற்றுகிறார். விஜயகுமார், வீடு கட்ட மணல் அடித்ததும் மாமூல் கேட்டு சிலர் தொந்தரவு செய்துள்ளனர். முறையாகப் பணம் செலுத்தி மணல் வாங்கியதற்கு எதற்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விஜயகுமாரிடம் விசாரணை என்ற பெயரில் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். இந்தத் தகவலை போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தப்பிறகே விஜயகுமாரை விசாரணையிலிருந்து விடுவித்தனர்"என்றார்.