2 மாவட்டங்களைக் கதிகலங்கவைக்கும் மர்ம மரணங்கள்! துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

2 மாவட்டங்களைக் கதிகலங்கவைக்கும் மர்ம மரணங்கள்! துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்
'அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மர்மமான முறையில் மரணங்கள் நடக்கின்றன. காவல்துறையினர் விழிப்போடு செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைதுசெய்யவில்லையென்றால், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம்' எனக் குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தை அடுத்த தென்னூர் மண்ணாங்கோரை கிராமத்தில், செபஸ்தியான் என்பவரது தைல மரத்தோப்பில் தரைத்தள கிணற்றில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அழுகியநிலையில் சடலமாக மிதந்தார். உடலை ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் காவல்துறையினர் கைப்பற்றி, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்டாரா? என்பது போன்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம், ஜெயங்கொண்டம் வாரச்சந்தை அருகே, புதுத் தெருவில் உள்ள பாழடைந்த பூட்டிய வீட்டினுள், அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. வீட்டில் துர்நாற்றம் வீசியதால், அருகில் வசித்த பொதுமக்கள், ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல்கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல, செந்துறை காவல் நிலையத்துக்கு எதிரில் காய்கறிக்கடை வைத்திருந்த நர்மதா என்பவர், சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் என்ற ஊருக்கு அருகில் எரிந்த நிலையில் கிடந்தார். இன்று வரையிலும் இந்த வழக்கு தொடர்பான எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதேபோல, கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு, செந்துறை ரயில் நிலையத்திலிருந்து வெல்லூர் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில், 45 வயதுடைய பெண் ஒருவர், உடல் மற்றும் முகம் சிதைக்கப்பட்டுக்கிடந்தார். முகம் சிதைந்ததால் அடையாளம் காண முடியவில்லை. இது கொலையா அல்லது தற்கொலையா என செந்துறை காவல்துறையினர் விசாரணைசெய்துவருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் கிராமத்திலும் பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. இந்த இறப்புக்கு போலீஸார் தரப்பிலிருந்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அனைத்து வழக்குகளும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் இளையராஜா கூறுகையில், "அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் மர்ம மரணங்கள் அதிகரிக்க என்ன காரணம்? வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் கொலையைச்செய்து, இங்கு கொண்டுவந்து போடுகிறார்களா அல்லது கொலை செய்வதற்கு இம்மாவட்டங்களைத் தேர்வுசெய்கிறார்களா என்றும் தெரியவில்லை. காவல்துறையினர் விழிப்போடு செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும். இல்லையேல், இந்தச் சம்பவம் அதிகரித்துக்கொண்டே போகும்" என்று முடித்தார்.