

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் இன்று அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராதிகா தடை விதித்தார்.
மேலும் வருகிற 30 ஆம் தேதி வரை மாவட்டத்தில் சாதி சங்க கூட்டங்கள் நடத்தவும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
##~~## |
இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு நகலை திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டு வாயில் கதவில் நேற்று இரவு அதிகாரிகள் ஒட்டினார்கள்.
மதுரை மாவட்டத்துக்குள்ளும் ராமதாஸ் நுழையக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.