Published:Updated:

நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்!

அருண் சின்னதுரை
செ.சல்மான் பாரிஸ்
நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்!
நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்!

மாணவிகளைப் பாலியலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் முருகன், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


மாணவிகளைப் பாலியலுக்கு அழைத்த புகாரில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் துணைப் பேராசிரியர் முருகன் ஆகியோரது தூண்டுதலின் பேரில்தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உண்டு எனக்கூறிய அவர், அவர்களது பெயர் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும், நிர்மலா தேவி தம்மைப் பற்றி தகவல் தெரிவித்துவிடுவார் என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் பதுங்கி வருகின்றன.

இந்நிலையில், தலைமறைவான கருப்பசாமியைத் தேடி வந்த நிலையில் நேற்று கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தலைமறைவாக உள்ள காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் துணைப் பேராசிரியர் முருகன் ஆகியோரை 4 தனிப்படையினர் தேடிவந்தனர் . இந்நிலையில் பேராசிரியர் முருகன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ டிப்பார்ட்மென்ட்டில் வருகைப் பதிவில் கையெழுத்து போடும்போது அவரைக் காவல்துறையினர் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் .