Published:Updated:

"அன்பார்ந்த ராம்நாத் கோவிந்த்ஜி..!".. குடியரசுத் தலைவருக்கு ஜே.என்.யூ மாணவரின் திறந்த மடல்!

"அன்பார்ந்த ராம்நாத் கோவிந்த்ஜி..!".. குடியரசுத் தலைவருக்கு ஜே.என்.யூ மாணவரின் திறந்த மடல்!
"அன்பார்ந்த ராம்நாத் கோவிந்த்ஜி..!".. குடியரசுத் தலைவருக்கு ஜே.என்.யூ மாணவரின் திறந்த மடல்!

(டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் 'வரலாற்று ஆய்வு மையத்தில்' முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள அபய் குமார் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள திறந்த மடல். ஆங்கிலத்திலிருந்து தமிழில்: அ.மார்க்ஸ்)

அன்பார்ந்த ராம்நாத் கோவிந்த்ஜி,

நான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவன். நான் என்னுடைய டாக்டர் பட்ட ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு நெருங்கிவிட்டது. ஆனாலும் ஒரு முக்கியமானப் பிரச்னையை உங்கள் முன்வைக்க வேண்டும் என்பதற்காக அதை ஒத்திவைத்துவிட்டு அவசரமாக இதை உங்களுக்கு எழுதுகிறேன். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வருகையாளர் என்கிற பொறுப்பில் உள்ள நீங்கள் இதில் உடனடியாகத் தலையிட வேண்டுகிறேன். சென்ற மே 18 அன்று நடந்த பல்கலைக்கழக கல்விக் குழு (Acadamic Council) கூட்டத்தில், நமது பல்கலைக்கழகத்தில் புதிதாக உருவாக உள்ள "தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தில்" (Centre for National Security Studies - CNSS), 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்கிற புதிய படிப்பு (course) ஒன்று தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது ஒரு புதிய தனிப் படிப்பா, இல்லை நக்ஸலிசம், ஆயுதப் போராட்டம் என்பது போன்ற தேர்வுக்கான பாடங்களில் (theme) ஒன்றா என்கிற விளக்கம் இல்லை. குழப்பம்தான் நிலவுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக முன்வந்து உண்மைகளைச் சொல்ல வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிர்வாகம் முற்றாக இதன் பண்பையே மாற்றும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டுள்ளது என்பதுதான் எங்கள் பார்வை.

எப்படி இருந்த போதிலும் தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு அந்த முயற்சியைத் தடுக்க வேண்டும். ஏனெனில், "சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக வாழ்முறை, சமூகப் பிரச்னைகளைப் பன்னாட்டுப் புரிதலுடனும், அறிவியல் கண்ணோட்டத்துடனும் அணுகல்" என்பன நம் பல்கலைக்கழகத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1966-இல் இயற்றப்பட்ட பல்கலைக்கழகச் சட்டத்தில் அந்த வாசகங்கள் உள்ளன. இதற்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற செயல்பாடுதான் 'இஸ்லாமிய பயங்கரவாதம்' எனும் பெயரில் பாடம் தொடங்குவது.

இப்படியான இந்தப் புதிய படிப்பைத் திட்டமிட்ட மகாமூளைகளும், அதை நியாயப்படுத்துபவர்களும் இதைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள். அப்படிக் கொஞ்சமும் வெட்கமில்லாமல இதை நியாயப்படுத்தும் ஒருவர் ஊடகத்தில் பேசும்போது தாங்கள் ஒன்றும் இஸ்லாமுக்கோ முஸ்லிம்களுக்கோ எதிரானவர்கள் இல்லை எனவும், தொடங்கப் போகும் படிப்பின் தலைப்பு  'இஸ்லாமியவாத பயங்கரவாதம்' தானே (Islamist Terrorism) ஒழிய 'இஸ்லாமிய பயங்கரவாதம்' (Islamic Terrorism) அல்ல எனவும் கூறினார். இப்படி இஸ்லாமியம் X இஸ்லாமியவாதம் (Islamic X Islamist) என ஒரு எதிர்வை உருவாக்குவது என்பது ஜார்ஜ் புஷ் "நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம்" என உருவாக்கிய எதிர்வைக் காட்டிலும் எள்ளளவும் குறைந்ததல்ல.

நானறிந்தவரை மதச்சார்பின்மை, முற்போக்குச் சிந்தனைகள் ஆகியவற்றுடன் உலகில் இயங்கும் எந்த ஒரு பல்கலைக்கழகமும் இப்படி இஸ்லாமிய பயங்கரவாதம், கிறிஸ்துவ பயங்கரவாதம், யூத பயங்கரவாதம், பவுத்த பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம் என்றெல்லாம் பாடங்கள் தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகப் பிரிவை பயங்கரவாதத்துடன் இணைத்துப் பார்க்க முடியாது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டும் யாரும் 'பயங்கரவாதம்' என்றால் என்ன என வரையறுத்ததும் இல்லை.

இதுவரை பயங்கரவாதத்திற்கு எல்லோரும் ஏற்றுக் கொள்கிற ஒரு உலகளாவிய பொதுவரையறை உருவானதில்லை. யார் பயங்கரவாதி என்கிற வரையறை முதலில் ஒன்று, பிறகு இன்னொன்று என மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு குறிப்பான அரசியல் நோக்கத்திற்காக அதிகாரத்தில் உள்ளவர்கள், அவ்வப்போது உருவாக்குவதுதான் அந்த வரையறை. பகத்சிங் போன்ற நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசு பயங்கரவாதிகள் எனக் கூறவில்லையா?. 1970, 80-களின் பின் காலனியச் சூழலில் அமெரிக்கச் சொல்லாடல் ஒரு மதத்தினரை பயங்கரவாதிகளாகக் கட்டமைக்கவில்லையா? சென்ற நூற்றாண்டின் இறுதிக்குப் பின் அதே சொல்லாடல் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்கிற பெயரில் இன்று முஸ்லிம்களைப் புதிய பயங்கரவாதிகளாகக் காட்டிக் கொண்டிருக்கவில்லையா? 9/11-க்குப் பிந்தைய உலகில் முஸ்லிம்கள் எப்படிச் சித்தரிக்கப்படுகிறார்கள்? உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் 'அமைதி', 'நவீனத்துவம்', 'பெண்ணுரிமைகள்', 'மனித உரிமைகள்', 'ஜனநாயகம்' ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் என்றுதானே?

'இஸ்லாமோ ஃபோபியா' எனப்படும் முஸ்லிம் எதிர்ப்பு வெறி கொண்டவர்கள் சாமுவேல் ஹட்டிங்டனின் "கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்கள்" எனும் கோட்பாட்டை எந்த விமர்சனங்களும் இல்லாமல் உள்வாங்கியவர்களாக உள்ளனர். தாங்கள் அப்படி உள்ளதை அவர்கள் என்றைக்கும் புரிந்து கொண்டதும் இல்லை. அவர்கள் 'கலாச்சாரம் / பண்பாடு' என்பதைத் தாண்டி பயங்கரவாதத்திற்கான காரணங்களை யோசிப்பதே இல்லை. எனவே, எளிதாக மதத்தைக் காரணமாகச் சொல்லி விடுகிறார்கள். இஸ்லாமிய உலகம் என்பது 'மத வெறி', 'மூட நம்பிக்கை' ஆகியவற்றுடன் எந்த வளர்ச்சியும் இன்றி நவீனத்திற்கு முந்தைய காலத்தில் தேங்கிப்போன ஒன்று என்கிற இறுக்கமான முன் தீர்மானத்தில் அவர்கள் உறைந்துள்ளனர். நவீன மதிப்பீடுகளுக்கு இஸ்லாம் எப்போதுமே எதிரி என்கிற கருத்தில் அவர்கள் ஊறிப் போயுள்ளனர்.

இஸ்லாம் என்கிற மதத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டங்களிலிருந்து பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. முஸ்லிம் சமூக உருவாக்கத்தில் இஸ்லாம் மற்றும் அதன் புனித நூல்கள் ஆகியவற்றுக்கு அப்பால் முதலாளியம், காலனியம் முதலான சக்திகளும் பங்கு வகிக்கின்றன என்பதைச் சிந்திக்க அவர்கள் விரும்புவதே இல்லை. வன்முறை உருவாவதில் காலனியம், நவ காலனியம் முதலியனவும் பங்கு வகிக்கின்றன என்பதையும் இஸ்லாமோ ஃபோபியாவால் பீடிக்கப்பட்டவர்கள் சிந்திப்பதில்லை. கலாச்சார ரீதியாகவே எல்லாவற்றையும் பார்ப்பது என அவர்களிடம் வேர்கொண்டுள்ள பண்பு இப்படியான சிந்தனைகளுக்குத் தடையாக அமைகிறது.
பயங்கரவாதிகள் எனச் சொல்லப்படுபவர்களுக்கு நவீன கொலை ஆயுதங்களை வளர்ச்சி அடைந்த நாடுகள்தானே விற்கின்றன. இல்லாவிட்டால் அவர்களுக்கு அவை எப்படிக் கிடைக்கும்? 

நவீன தொடர்புச் சாதனங்கள் அனைத்தும் வளர்ச்சி அடைந்த நாடுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பயங்கரவாதிகளாகச் சொல்லப்படுபவர்கள் அவற்றை எப்படிப் பயன்படுத்த முடிகிறது? உலகத்தில் போர் எதுவும் நடக்காமல் இருப்பது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆயுத உற்பத்தியாளர்களுக்குக் கவலை அளிக்கிற ஒன்றில்லையா? 'பயங்கரவாத நடவடிக்கைகள்' எப்போதுமே அரசல்லாத சக்திகளால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்பது உண்மையா? அரசுகளும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இல்லையா? பயங்கரவாதிகளைக் காட்டிலும் அரசுகளிடம் இன்னும் அதிகமான நிதியும் ஆயுதங்களும் குவிந்திருப்பதால் பல நேரங்களில் பயங்கரவாதிகளாகச் சொல்லப்படுபவர்களின் பயங்கரவாதத்தைக் காட்டிலும் அரச பயங்கரவாதங்கள் அதிக அழிவுகளை ஏற்படுத்துவதில்லையா?

இந்தக் கேள்விகளை எல்லாம் இஸ்லாமிய வெறுப்பைச் சுமந்திருப்பவர்கள் எழுப்பிப் பார்ப்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் இஸ்லாம் மதத்தை மட்டுமே குற்றஞ்சொல்லி நழுவுவார்கள். ஆனால் வரலாறு வேறுவிதமாக இருக்கிறது. அறிவுத் தோற்றம், விஞ்ஞானம், உற்பத்தி எனப் பல துறைகளிலும் இஸ்லாம் மிகப்பெரிய பங்களிப்புச் செய்துள்ளது. நவீனத்துவத்திற்கு இஸ்லாம் எதிரானது எனச் சொல்வதற்கு நேர் மாறாக மேற்கத்திய மறுமலர்ச்சியில் (western renaissance) இஸ்லாம் மிகப் பெரிய பங்காற்றியுள்ளதே.
இந்திய வரலாறும் இதை நிறுவுகிறது. இந்தியச் சமூகத்தில் பல முற்போக்கான மாற்றங்களுக்கு இஸ்லாம் காரணமாகியுள்ளது. அறிவு உற்பத்தி, பொருள் உற்பத்தி, பண்பாடு, ஓவியம், சிற்பம், கட்டடக் கலை, இசை என எத்தனையோ துறைகளில் அது பங்களித்துள்ளது. இஸ்லாமியச் சமத்துவம் என்பது நமது சாதியச் சமூகத்தை எதிர்கொண்டு தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குப் பேரளவு ஆறுதல் அளித்துள்ளது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா உருவாக்கத்தில் பங்கு வகித்தவர்களில் ஒருவரான வரலாற்றாசிரியர் சுலைமான் நத்வி (1884 - 1953), இஸ்லாம் வருவதற்கு முன்னால் இங்கு கல்வி எவ்வாறு அடித்தள சாதியினருக்கு மறுக்கப்பட்டது என்பதையும் இஸ்லாமியச் சமத்துவம் விளைவித்த தாக்கங்களினூடாக நிலைமை எவ்வாறு மாறியது என்பதையும் நிறுவியுள்ளார். முஸ்லிம் நாடுகளுடனான நமது உறவு எப்போதும் சுமுகமாகவே இருந்துள்ளது. இன்றும்கூட லட்சக் கணக்கான இந்தியர்கள், முஸ்லிம் நாடுகளில் வேலை செய்கின்றனர். அவர்கள் அங்கு சம்பாதித்து அனுப்பும் நிதி, இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எரிபொருள் ஆற்றலுக்கு நாம் முஸ்லிம் நாடுகளையே பெரிய அளவில் நம்பியுள்ளோம் என்பதை விளக்க வேண்டியதில்லை.

தேசப் பாதுகாப்புக்கு இஸ்லாமிய சக்திகள்தான் பெரிய "இடையூறாக" உள்ளனர் எனச் சொல்வதும் மிகைப் படுத்தப்பட்ட கூற்றுதான். இது அரசாலும் போர் வெறியர்களாலும் பரப்பப்படும் கருத்து. ஆனால், பாதுகாப்பு என்பதைப் பொருத்தமட்டில் மனித நேய அணுகுமுறையே பொருத்தமானது என்பது என் கருத்து. மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலாத எந்த அரசும் அந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தக்கவைக்கவும் முடியாது.

இவ்வளவையும் முன்வைத்து நான் வைக்கும் அவசர வேண்டுகோள் என்னவெனில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வருகையாளர் என்கிற வகையில் இந்தப் பிரச்சினையை உடனடியாக நீங்கள் கவனிக்க வேண்டும். 'இஸ்லாமிய பயங்கரவாதம்' எனச் சொல்லப்படுவதை ஒரு பாடமாக வைக்க நேர்ந்தால், ஒருசில இயக்கங்களும் மனிதர்களும் அதன் மூலம் பயன்பெறலாம்.. ஆனால் இறுதியில் அது நமது சமூகத்தில் மத மோதல்கள் உருவாவதற்கும், உலகளவில் கெட்ட பெயரைச் சம்பாதிப்பதற்கும் மட்டுமே பயன்படும்.