Published:Updated:

குமரி கடலில் ரேடியேசன் ஆய்வு! பீதியில் மீனவ மக்கள் (படங்கள்)

குமரி கடலில் ரேடியேசன் ஆய்வு! பீதியில்  மீனவ மக்கள் (படங்கள்)
குமரி கடலில் ரேடியேசன் ஆய்வு! பீதியில் மீனவ மக்கள் (படங்கள்)

கன்னியாகுமரி: கூடங்குளம் பிரச்னையில் தென் மாவட்டங்களே சென்சிட்டிவாக மாறி போயிருக்கும் நிலையில் சத்தமே இல்லாமல் ரேடியேசன் குறித்த ஆய்வை முடித்து திரும்பியிருக்கிறார்கள் பாபா அணு ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள். இந்த திடீர் ஆய்வால் கடற்கரையோர கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் விலங்கியல் துறை சிறப்பு பேராசிரியர் காட்வின் இவர்களை வழி நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித்துறை முக தளத்தில் இருந்து இவர்களது போட் கிளம்பும் போதே இடைமறிந்தனர் துறைமுக அதிகாரிகள்.

குமரி கடலில் ரேடியேசன் ஆய்வு! பீதியில்  மீனவ மக்கள் (படங்கள்)

உரிமம் பெற்றிருக்கிறீர்களா? கூடங்குளம் பகுதிக்குள் செல்ல தடை உத்தரவு இருக்கிறது, அந்த மார்க்கமாக செல்வீர்களா?என்று கேள்விகளைத் துளைத்தெடுக்க வியர்த்து போய் விட்டது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் இருந்து வந்திருந்த விஞ்ஞானிகளுக்கு!திரும்பி வரும் போதும் ஏகப்பட்ட விதிகளை சொல்லி நோகடித்துள்ளனர்.

எதற்கிந்த ஆய்வு என்று விஞ்ஞானிகளிடம் பேசினோம். புகுசிமாவில் அணு விபத்து ஏற்பட்டு சில ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் அதன் பாதிப்பு இப்போது தமிழகத்தின் தென் மாவட்ட கடற்கரைகளில் இருக்கிறதா இங்கு ரேடியேசன் எந்த அளவிற்கு இருக்கிறது என பார்ப்பதற்குத் தான் இந்த ஆய்வு. 36 மணி நேரம் கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று 1000 லிட்டர் தண்ணீரை சேகரித்து இந்த ஆய்வை செய்யப் போகிறோம்.என்று பொதுவாக பேசியவர்களிடம் விகடன் டாட்காமிற்காக சில கேள்விகளை கேட்டோம்.

கூடங்குளம் அணு உலைக்கும் உங்கள் ஆய்விற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

அப்படி எதுவும் இல்லை. சாதாரணமாக ரேடியேசனை அளவிடுகிறோம். அவ்வளவு தான். இதற்கும் கூடங்குளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

குமரி கடலில் ரேடியேசன் ஆய்வு! பீதியில்  மீனவ மக்கள் (படங்கள்)

பின்னே, இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது மட்டும் ரேடியேசனை அளவிட வேண்டியதன் அவசியம் என்ன?

இனிமேல் தாங்க நிச்சயமா அளவிடணும். கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு வந்த பின் அதனால் தான் ரேடியேசன் அதிகரித்ததாக சிலர் பரப்பி விடுவார்கள். அதனால் இயல்பான சூழலிலேயே இங்கே எவ்வளவு ரேடியேசன் இருக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொள்வது பின்னாளுக்கு நல்லது தானே? அது தேவையற்ற விவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடும் அல்லவா?

குமரி கடலில் ரேடியேசன் ஆய்வு! பீதியில்  மீனவ மக்கள் (படங்கள்)

ரேடியேசன் கருவிகளை குமரி மாவட்டத்திலேயே வைத்திருப்பதாக தகவல்கள் வருகிறதே?

ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி வளாகத்திலேயே ஒரு கருவி வைத்திருக்கிறோம். ராஜாக்கமங்கலம், திருநெல்வேலி எம்.எஸ்.யுனிவர்சிட்டி உள்ளிட்ட 5 இடங்களில் ரேடியேசன் கருவியை வைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம். இது அனைத்துமே ரேடியேசன் மதிப்பை அளவிட்டு மும்பைக்கு அனுப்பும்.

ஆய்வு முடிவுகளை எப்போது வெளியிடுவீர்கள்?


36 மணி நேர ஆய்வுக்கு பிறகு கிடைக்கும் முடிவுகளை பாபா அணு ஆராய்ச்சி கழகத்துக்கு கொண்டு போயிடுவாங்க. ஆறே மாதத்தில் முடிவுகளை ஊடகங்களுக்கும், மக்கள் மன்றத்துக்கும் சொல்லுவோம் என்றவர்கள் கூடங்குளத்துக்கும் இதுக்கும் நிச்சயமா சம்பந்தம் இல்லை என்பதையே திரும்ப, திரும்ப சொன்னார்கள். இருந்தும் இப்போது ஏன் இந்த திடீர் ஆய்வு என அரண்டு போய் கிடக்கிறார்கள் கடற்கரையோர கிராம மக்கள்.

என்.சுவாமிநாதன்

படங்கள்:
ரா.ராம்குமார்