மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன்

கமல்ஹாசன்
News
கமல்ஹாசன்

தமிழகமே பாழுங்கிணறாகிவிடும்போல அதற்கான எல்லா ஆயத்தங்களையும் இன்றைய அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்...

ன்னுள் மையம் கொண்ட புயலை உங்கள் கரை வரை கொண்டு சேர்க்கும் தீரா ஆசையின் முதல் அலை இது.

இன்னும் எவ்வளவு காலம் தமிழர் தம் கண்முன் நடக்கும் அநீதிகளையும் அநியாயங்களையும், மக்கள் செல்வங்கள் எல்லாம் தனியார் தம் ஆசைக் கோட்டைகள் கட்ட மண்ணெடுக்கும் மேடாய் மாறிவருவதையும் பார்த்துக்கொண்டிருப்பர்?

இந்தக் கேள்வி பல கோடி மனங்களில் எழத்துவங்கி கால் நூற்றாண்டாகிவிட்டது. என் மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. தானுண்டு தன் வேலையுண்டு என்று கண்டும் காணாமல் இருந்த தமிழர்களில் நானும் ஒருவன். இந்த மெத்தனத்துக்கான தண்டனையைப் பல ஆண்டுக்காலம் அனுபவித்தாயிற்று. விழிப்புடன் இல்லாமல், குற்றங்கள் நடப்பதைப் பார்த்திருந்ததுதான் நாம் செய்த குற்றம். நல்லவரெல்லாம், நாணயமானவரெல்லாம் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று ஒதுங்கியதில், கள்வர்களும் கயவர்களும் நம் மண்ணில், நம் காசில், தமக்கெனக் கோட்டை கட்டிக் கொடியேற்றி கோஷமிடுவதை மந்தை மந்தையாய் வேடிக்கை பார்த்து வெதும்பி நிற்கிறோம்.

‘முன்பு ஏன் பேசவில்லை; இப்போது பேசுகிறாயே?’ என்ற இரைச்சலுக்குப் பதிலாய் உமிழ்நீர் வற்றக் கத்திப் பிரயோசனமில்லை. ‘இப்பொழுதாவது பேசுகிறானே’ என்று செவி சாய்க்கப்போவதில்லை. அவர்கள், ‘முன்பு பேசாதிருந்ததுபோல் இப்போதும் பேசாதிரு. எஞ்சியிருக்கும் வேளையில் எங்கள் வேலையை முடித்துக்கொள்கிறோம்’ என்பதாகத்தான் அவர்கள் பதற்றத்தைக் கணிக்க வேண்டியதாய் இருக்கிறது. அவர்கள் கேள்விகளின் இலக்கைப் புரிந்துகொண்டதால் அவர்கள் கேள்வித்தாளின் முன்மாதிரியை பதிலுடன் கீழே இணைத்துள்ளேன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கேள்வி: ``நீ யார்?’’

நான்: ``தமிழன்.’’

கேள்வி: ``ஆனால் பார்ப்பான் ஆயிற்றே?’’

கமல்ஹாசன்
கமல்ஹாசன்


நான்: ``அது என் பிறப்பு. நான் தேர்ந்த நிலையில்லை அது.’’

கேள்வி: ``பகுத்தறிவு பேசுகிறாயே?’’

நான்: ``அது நான் தேர்ந்த அறிவுநிலை.’’

கேள்வி: ``ஆக, தனித்தமிழ்நாடு வேண்டுமா?’’

நான்: ``தமிழராய் எமக்கு மரியாதை வேண்டும். கேள்வியின்றி வங்க மொழியில் தேசியகீதம் பாடும் என்னிடம் மன்றாடிக்கேட்டாலும் பயமுறுத்திக் கேட்டாலும் அன்றாடம் பேசுவது தமிழாகத்தான் இருக்கும். இந்தியாவை இணைக்கும் மொழி ஆங்கிலம்தான். ஹிந்தி அல்ல. மத்திய அரசிடம் நான் உரையாட, வழக்காட அம்மொழி போதுமானது. மற்ற மொழிகளை சாய்ஸில் விட்டுவிடுங்கள்; வற்புறுத்தாதீர்கள் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிக்கும் குரல். என் குரலும் அது தான்.’’

கேள்வி: ``உன் வண்ணம் காவியா என்றால் மறுக்கிறாய், காவியுடன் கலக்காதா என்று கேட்டால் என் கறுப்புச்சட்டையில் காவியும் இருக்கிறது என்கிறாய் - இது உன் தன்நிலை விளக்கமா - விஞ்ஞான விளக்கமா?’’

நான்:
``இரண்டும்தான். ஒளியியல்படி, பகுத்தறிவாளன் போல் கறுப்பும் எல்லா வர்ணமாயைகளையும் உள்வாங்கிப் பகுத்தறியும், ஒரு வண்ணம் மட்டுமே வெளித் தெரியும். தன்னிலை விளக்கம் என்று எடுத்துக் கொண்டாலும் காவியை உணராமலே வெறுப்பவனல்ல. 12 வயது வரையில் அதன் மாயைக்கு மயங்கியவன். பின் விடுபட்டவன்.’’

கேள்வி: ``அப்படியென்றால் உள்ளே எங்கோ கொஞ்சம் காவி ஒட்டியிருக்கிறது என நம்பலாமா?’’

நான்:
``நம்பிக்கைதானே உங்கள் போதைப் பொருள். நம்பாதீர்கள். என்னுள் எஞ்சிய காவி மனதில் இல்லை. எப்போதாவது  வெற்றிலையைக் குதப்பினால் வாயில் இருக்கக் கூடும். அது சாதியம் மெச்சும் புராதனக் கூட்டத்தின் கொள்கை விளக்கப் பிரகடனங்கள் மீது துப்ப ஏதுவாக இருக்கும்.’’

கேள்வி:
``உனக்கு முதலமைச்சனாக வேண்டுமா?’’

நான்: ``அது என் ஆங்கிலப் பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதுவும் பளபளக்கும் தலைப்புத் தேடும் சில ஊடகங்களின் தேவைக்கேற்ப மொழிபெயர்க் கப்பட்டது. என் மையக்கருத்தைச் சிதைத்துக் கிட்டிய தலைப்பு. ஆட்சி பலத்தை அசைக்கக்கூடிய அகற்றக்கூடிய செயல் எதுவோ அதுவே என் ஆசை. புதிய தமிழ் மாநிலம் அடுத்த தலைமுறையாவது காணவேண்டும் என்ற பல தலைமுறை ஆசையை என் தலைமுறையாவது நிறைவேற்றத் துடிக்கும் தமிழனின் ஆசை. யாம் முதல்வர் என்பது என்னை மட்டும் குறிப்பிடாது. என் மக்களைக் குறிக்கும். யாமே முதல்வராக முதன்மையானவராக இருத்தல் வேண்டும். அமைச்சர்களெல்லாம் இம்முதல்வர்களின் கருவியாகச் செயல்படவேண்டும். ஜனங்களோ நாயகம் செய்தல் வேண்டும். நான் தொண்டன், அடிப்பொடியா, உச்சிக்குடுமியா என்பது முக்கியமல்ல. ஒருநாள் வெல்வோம் என்று காத்திருக்க மாட்டேன். தோற்றால் என்ன கதி எனக் கலங்கவும் மாட்டேன்.’’

70 வருட சுதந்திரத்தில் கிட்டத்தட்ட 50 வருடங்களை தமிழர்கள் நாம் கண்களை மூடிக்கொண்டு கடந்துவிட்டோம். வீட்டுக்கு மருமகளாக, மருமகன்களாக வரும் வரன்களிடம் எத்தனை விஷயங்களை எதிர்பார்க்கிறோம். ‘சம்பாதிப்பாரா, பெண்ணைக் காப்பாற்றுவாரா, நல்ல மருமகளா...’ எத்தனையெத்தனை கேள்விகள், எத்தனையெத்தனை எதிர்பார்ப்புகள். ஆனால், ‘நாட்டை நடத்தும் உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது, தகுதியானவர்களா’... என்று மந்திரிகள், எம்.எல்.ஏக்கள்,

விகடன்
விகடன்


எம்.பி.க்களிடம் அப்படி ஏதாவது கேள்விகள் கேட்டிருக்கிறோமா? ‘வரதட்சணை கொடுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, கொடுக்கவில்லை என்றால், புகுந்தவீட்டில் என்ன பாடுபடுத்துவார்கள்? அந்தப் பாட்டையெல்லாம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த மக்கள் பிரதிநிதிகளும் படவேண்டும் என்கிறேன். வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கவில்லை. வரதட்சணைபோல் ஊழல் அரசியலும் நம் யதார்த்த வாழ்க்கையில் கலக்கவிடக் கூடாதென்கிறேன்.

ஆரம்பத்தில் நல்லவர்கள் பலர் மக்கள் பிரதிநிதிகளாக அரசியலில் இருந்திருக்கிறார்கள். இப்போது இல்லை என்பதுதான் எங்கள் கோபம். ‘இன்று அது சாத்தியமில்லை’ என்றுவேறு சொல்கிறார்கள். அந்த நல்ல தமிழ் அரசியல் வம்சாவளியில் வந்தவர்கள் நிறைய பேர் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் வெளியே நிற்கிறார்கள். `சரி இனிமேலாவது நீங்கள் ஏதாவது பண்ணுங்கள். வேண்டுமானால் நாங்கள் வேலையைக்கூட விட்டுவிட்டு வருகிறோம்’ என்று சொல்லும் வெளிநாட்டு, வெளிமாநிலத் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழகமெங்கும் கொதிக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் ‘செப்பனிட வேண்டும் என்று சொல்லுங்கள். பெரிய படிப்புப் படித்தவர்கள் அந்தப் பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்யத் தயார்’ என்கிறார்கள்.

ஆமாம், பழைய வாகனங்களே கூடாது. புதிதாகக் கட்டுவோம் என்கிற ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் அ.தி.மு.கவிலும் இப்படிச் சொல்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உருவத்தைக் கைகளில் பைகளில் வைத்துக்கொண்டு திரிபவர்கள் அல்ல அவர்கள். அவரை மூளையில் பச்சைகுத்திக்கொண்டவர்கள். ‘இன்னும் எம்.ஜி.ஆர்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’ என நம்புபவர்கள். ஆனால், நிஜம் அவர்கள் நம்புவதுபோல் இல்லை என்பதே நிதர்சனம்.

கடந்த இரு மாமாங்கங்களாக நிஜத் தொண்டர்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆர் உருவம், கட்சி போஸ்டர்களில்கூடச் சுருங்கிப் போய்விட்டதை யாரும் உணராதிருக்கவில்லை. நிறுவியவரைவிடத் தற்கால நிர்வாகியே பிரதானம் என நம்பி, கால்வருடிகளாகிவிட்டனர் சிலர். ஆனால், அஸ்திவாரத்தில் ஆதிநாதனை மனதில் பதிந்து வைத்து, பொருமிக்கொண்டிருக்கும் பல லட்சம் பேர் கட்சியில் இருக்கிறார்கள் செய்வதறியாது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

என் அரசியல் பேச்சில் மூத்த அரசியல்வாதிகள் பேச்சிலுள்ள அழகு இருக்காது. ஆனால் பேச்சு உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் இருக்கும். என் பேச்சு வார்த்தை அலங்காரம் சரியில்லை எனில் மன்னித்துக்கொள்ளுங்கள். மொழியைச் செம்மைப்படுத்தும் பணியைத் தொல்காப்பியர் தொடங்கி ஏகப்பட்டோர் செய்து கொண்டிருக்கிறார்கள். மொழிமேம்பாடல்ல என் நோக்கம். என் அடுத்த சந்ததிக்கு வாழ்வு தேடிவைக்கும் வேலையுமல்ல என் நோக்கம். நான் இப்போது அரசியலுக்கு ஆதார வசதிகளோடுதான் வந்திருக்கிறேன். இனி வந்துதான் கார், வீடு வாங்கவேண்டும் என்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் அரசியலுக்கு வந்தால் இப்போது போகும் காரில் போக முடியாது என்கிறார்கள். ஆனால், நான் போவேன். ஏனெனில், இது என் சினிமா தந்த கார். திடீரென இப்போது இருக்கும் பெரிய வீட்டைத் துறந்து சிறிய வீட்டுக்குப்போய் ‘எளிமை’ என்று போலி வேஷம் போட மாட்டேன். ஏனெனில், இது என் சம்பாத்தியம். இதுவும் மக்கள் பணம்தான். ஆனால், நான் மக்களை ஏமாற்றாமல் மகிழ்வித்திருக்கிறேன்; அரசையும் ஏமாற்றாமல் வரி கட்டியிருக்கிறேன்.

நான் சேர்க்க நினைப்பது தமிழ்நாட்டுக்குப் பெருமையும் வசதியையும். ‘இவனெல்லாம் பேசலாமா?’ என்று திருடர்கள் எல்லாம் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்கள். சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வருகிறது. கேட்பவர்கள்மீது வழக்குகளே இருக்கின்றன. பொறுப்பில் இருப்பதால் செய்த குற்றங்கள், குற்றமில்லாமல் போய்விடுமா? புராணக்கதைகளின்படி பார்த்தால்கூட, சிவனே ஆனாலும் கேள்வி கேட்பேன் என்று சொன்ன நக்கீரர் எண்ணம் நமக்கு வேண்டாமா?

கடைத்தெருவில் ஒருவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு ஓடினால் ‘திருடன் திருடன்’ என்று கத்துகிறார்கள். அதையே ஒரு வங்கி மேலாளர் செய்தால் ‘கையாடல்’ என்கிறார்கள். கவுன்சிலர், எம்.எல்.ஏ செய்தால் ஊழல். மந்திரிகளும் அவர்களுக்கு மேல் உள்ளவர்களும் செய்தால், ‘ஏதோ பிசகு நடந்துவிட்டது, விசாரணை நடக்கிறது’ என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் திருடர்கள்தான். இப்படிப் பகுத்து அறிய வேண்டுமே தவிர வகுத்துப்பிரித்து அவர்களை எடுத்துக்கொண்டு போகவிடக் கூடாது.

‘உங்கள் கருத்து வக்கிரமா இருக்கு. நீங்க கறுப்புச் சட்டைக்காரர்’ என்கிறார்கள். அது என் சட்டையின் வண்ணம். ஆனால், உங்கள் சட்டையை மாற்றுங்கள் என்று நான் சொல்லவே இல்லை. கோயிலில் நான் சாமி கும்பிடாமல் இருக்கலாம். ஆனால், அந்த அழகான கட்டடம் நம்முடையது இல்லையா? அதில் தெய்வம் வைத்தால் பிரசித்திபெற்ற கோயில். வைக்கவில்லை என்றால் பாழடைந்த கோயிலா? தூணிலும் துரும்பிலும் இருப்பவருக்கு ஒரு பாழடைந்த கோயிலுக்குள் இருக்கத் தெரியாதா? மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளத் தெரியாதா? அங்கு உடைந்த கல்லிலும் இருப்பார் இல்லையா? அந்தக் கட்டடங்கள் எல்லாம் அரசியல்வாதியின் பேராசையால் ரியல் எஸ்டேட்டாக மாறிவிடக் கூடாது என்கிறேன். பகுத்தறிவது என்றால் பக்தியே இல்லாமல் தொலைத்துக் கட்டுவதல்ல. பக்தி என்ற பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகாமல் காவல் நிற்பதே ஆகும். `கறுப்புச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்.’

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன்


‘`‘நிலையான அரசு இல்லை என்பதைப் பயன்படுத்திக்கொண்டு கமல் உள்ளே வருகிறான்’’ என்கிறார்கள். ஆமாம், அந்த நிலைத்தன்மை இல்லை என்பதால்தான் வருகிறேன். வேறு எந்தச் சமயத்தில் வருவது? காமராஜர் இருக்கும்போது ‘நகருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று வருவோமா? அண்ணா இருக்கும்போது, ‘போதும்போதும் காஞ்சிபுரம் ஆண்டது. அடுத்து பரமக்குடி வரட்டும்’ என்போமா? அப்படிச் சொல்லத் தைரியம்தான் வருமா? ஏன் இப்போது சொல்கிறோம்? ‘இதுக்கு யார்வேணும்னாலும் ஆட்சி பண்ணலாம் போலிருக்கே’ என்கிற லெவலுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள். ஆம், எனக்கான கம்பளத்தை விரித்ததே இவர்கள்தான். ‘நான்’ என்றால் நான் மட்டுமா வருகிறேன். நான் தனியாக வந்துவிட முடியுமா? இது தனியாக வரும் குரலே இல்லை. `ஓஹோ! அப்ப தேர்தலில் குதி. களத்தில் இறங்கு. கமலுக்கு எத்தனை ஓட்டுகள் விழுகிறது என்று எண்ணிப் பாருங்கள்’ என்கிறார்கள். கண்டிப்பாக எண்ணுவோம். ஆனால், அந்த ஓட்டு எனக்கு விழுகிறதா இல்லையா என்பது பிரச்னையல்ல. யாருக்கு விழாது என்பதை அடித்துச்சொல்வேன், மக்களின் கோபத்தை நானும் உணர்வதால் சொல்வேன்.

‘பிளாக் டவுன்’ என்று ஒரு மூலையில் வெள்ளையர்கள் ஒதுக்கிய  இடம்தான் பிற்பாடு, கோட்டையருகே சந்தையானது. பிற்பாடு கோட்டை தமிழகத் தலைமைச்செயலகமானது. தற்போது கோட்டையின் ஊழல் புகை படிந்து மறுபடியும் பிளாக் டவுனாகிவிட்டது நம்ம ஊர். கோட்டையைச் சுற்றி வங்கிகளின் உயர்மாடிக் கட்டடங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், அதன் மதிப்பு குறைந்து வெகுநாளாகிவிட்டன. சொத்து மதிப்புப்படி பார்த்தால்கூட டவுனில் சொத்து இருப்பதைவிட ஓ.எம்.ஆரில் இருந்தால்தான் பெரிய விலை. இந்நிலை தொடர்ந்தால் இதேபோல தமிழகத்துக்கே வேல்யூ குறைந்துவிடும் என்பதே பலரின் கருத்து.

இப்போது எல்லா கம்பெனி களும் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. அவை நம் வாழ்வாதாரங்கள். நாம் வெறும் கார் கம்பெனிகள். அவையும் பெட்ரோல், டீசல் கார் கம்பெனிகளாக இங்கு வைத்துக்கொண்டு இருக்கிறோம். ஒருவேளை அக்கம்பெனிகள் திரு.ட்ரம்ப்பின் அறிவுரை கேட்டு பெட்ரோல், டீசல் கார் தயாரிக்கும் நிறுவனங்களாகவே இருந்தால், சென்னை டெட்ராய்ட் போல் தொழிலாளர்களின் ஆவிகள் நடமாடும் இடமாகிவிடும். வேறு காரணங்களால் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் அப்படி ஆனதை நாம் இங்கு பார்த்திருக்கிறோம். அப்படி பல தொழிற்சாலைகள் மாற ஆரம்பித்தால், தமிழகமே பாழுங்கிணறாகிவிடும். அதற்கான எல்லா ஆயத்தங்களையும்  இன்றைய அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

 முக்கியமாக இன்று நம் வாழ்வாதாரங்கள் பலவற்றில் கைவைத்துவிட்டார்கள். குறிப்பாகச் சுற்றுச்சூழலில். உங்களுக்குத் தேவையான கறிகாயை மயிலாப்பூரில் இன்று ஓடிக்கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகில் மிதந்துவந்து ஒருவர் விற்றால் வாங்குவீர்களா? ஆனால், நான் என் சின்ன வயதில் எங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுடன் சென்று வாங்கியிருக்கிறேன். இன்றுபோல் அன்றும் காலில் ஈரம் ஒட்டும். ஆனால், அது சகதி நரகல் அல்ல. அந்தக் கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்க் கரைகள் எல்லாம் அன்று ஏழைகள் வாழும் இடமாக மட்டுமே இருந்தன. இன்றுபோல் வாக்கு வங்கிகளாக மாறாத காலம்.

கிராமங்கள் இதைவிட மோசம். முன்பு சென்னை டு பரமக்குடி பயணமானால் சாலையை ஒட்டி நீளமான நிலங்களும் மரங்களுமாக பச்சைப்பசேல் என இருக்கும். ஆனால், இன்று தரிசு நிலங்கள். அவற்றில் வெவ்வேறு பெயர்களில் ரியல் எஸ்டேட் போர்டுகள். அங்கு தரிசில் மிருகங்களைப்போல் காற்றில் நடமாடிக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பை. பார்க்கும்போதே பகீர் என்று இருக்கிறது. இது நம் தவறு. நம்மை ஆள்பவர்களின் தவறு. ஆனால், கேரளாவில் விவசாய நிலங்களைப் பாதுகாக்க என்னென்ன வேலைகள் செய்துகொண்டிருக்கிறோம் என முதல்வர் பினராயி விஜயன் என்னிடம் பட்டியலிட்டார். ‘நல்ல ஐடியாவாக இருக்கிறதே’ என ஆசையாகவும், ‘ஓ இப்படியெல்லாம் கூடச் செய்யலாமா’ என ஆச்சர்யமாகவும், ‘இங்கு அப்படி எந்த முயற்சிகளும் நடக்கவில்லையே’ என ஆதங்கமாகவும் இருந்தது.

கார்ட்டூன்
கார்ட்டூன்

மத்திய அரசாங்கத்தார் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். நல்ல யோசனை. ஆனால், எனக்கு அது போதாது. எனக்கு ஸ்மார்ட் டவுன், ஸ்மார்ட் வில்லேஜ் வேண்டும். அங்கிருந்து மக்கள் வெளியே வர ஆசைப்படாத அளவுக்கு அவை ஸ்மார்ட்டாக இருக்கவேண்டும். இன்றைய தேதியில் உலகத்தொழில் நுட்பத்தின் துணையிருந்தால், அறிவுக்காக, பொழுதுபோக்குக்காக நீங்கள் கிராமங்களை விட்டு வரவேண்டிய அவசியமே இல்லை. கிராமத்தில் குடியிருப்போரிடம் எங்கு குடியிருக்கிறீர்கள் என்று கேட்கும்போது, ‘நகரத்துக்கு வெளியில’ என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கும் அளவுக்கான ஸ்மார்ட் கிராமங்கள் வேண்டும். ‘அன்றாடங்காய்ச்சிகள்தான் சென்னையில் இருப்பார்கள். ஓரளவுக்கு வசதியானவர்கள் கிராமத்தில் இருப்பார்கள்’ என்று நினைக்கும் அளவுக்கு எல்லாதுறைகளுமே கிராமங்களை நோக்கிப் போகவேண்டும். நான் ஒன்றும் புதிதாக எதையும் சொல்லவில்லை. ‘கிராமங்கள்தான் நம் பலம். அதை வளப்படுத்தி வலிமைப்படுத்த வேண்டும்’ என்று கிழவனார் காந்தி சொன்னதைத்தான் சொல்கிறேன்.

விவசாயம் எனக்குத் தெரியாத சப்ஜெக்ட். தெரிந்துகொள்ள தொடர்ந்து விவசாயிகளுடன் மணிக்கணக்கில் உரையாடிக் கொண்டிருக்கிறேன். என்னைவிடக் குறைவான கோபத்தில் அவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அடக்கிவைத்த கோபம் (Stored anger). அது வெடித்தால் நடப்பதே வேறு. எந்த அரசும் தாங்காது. அப்படி ஒரு கோபம்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் குமுறுகிறது. ‘இனி விவசாயமே வேண்டாம்’ என்று அனைவரும் பர்கர், பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டு இருக்க முடியுமா? ஆறுகளை இணைப்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். முதலில் அதில் தண்ணீர் இருக்கிறதா என்று பாருங்கள். இருக்கின்ற நீரை பேராசையினால் பிறருக்கு இல்லாமல் பண்ணுவதைத் தடுத்து, பகிர்ந்துண்ண அரசுகள்தான் வழிசெய்யவேண்டும். தண்ணீரை உறிஞ்சுபவர்களைக் கண்டிக்கவேண்டும்.

‘மருந்துக்கு வேணும்னா வேப்பிலையைக் கொஞ்சமாப் பறிச்சுக்க. அதுக்காக மரத்தையே வெட்டிச் சாய்க்கிறதா’ என வைய வேண்டாமா? ‘நீரைப்பொறுத்தவரை இங்கு இலைக்காக முழு மரத்தையும் வெட்டிச் சாய்க்கும் அநியாயம்தான் நடந்துகொண்டிருக்கிறது. குளிக்கும் இடம் குளம், ஏர் உழவுக்கு உதவுவது ஏரி, கண் வழி மாயும் என்கில் அது கண்மாய், ஊருக்குக் குடிநீராய்ப் பயன்படும் இடம் ஊருணி... இப்படி நுண்ணுணர்வோடு பெயர்வைத்து வாழ்ந்தவரை நகர் நோக்கி ஓடி வரவைத்தது யார் தவறு?

இலவசமாகத் கொடுத்தால் மதிக்க மாட்டார்கள் என்று மக்களை ஏசுவது போன்ற ஓர் அவமானம் நமக்கு உண்டோ? ஒருவகையில் சரிதான். இலவசமாகக் கிடைப்பதைக் கேள்வி கேட்கவும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நான் இதே அடையாற்றில் 2015 பெருமழையில் டிவி, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறிகள் மிதப்பதைப் பார்த்தேன். இலவசமாக வந்தது இலவசமாகப் போய்க்கொண்டிருந்தது; செயற்கையாக வந்ததை இயற்கை கொண்டுபோனது என நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் ஓட்டுக்காகக் கொடுத்தது. ஆட்களும் அந்த இலவசங்களுமாக ஆற்றில் போனபோது காப்பாற்ற அரசு உடனே ஏன் வரவில்லை என்பதை யோசித்தோமா? அந்தப் பெருமழையைப் பற்றி ஏன் முன்னதாக எச்சரிக்கவில்லை என்று கேட்டால் ‘தண்டோரா போட்டோம்’ என்றார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில் தண்டோரா போட்டார்களாம். இப்படியான ஆயிரமாயிரம் தவறுகளில் எதை நான் குறிப்பிட்டுக் காட்டுவது? அதையெல்லாம் மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் இவர்களின் மூலதனம்.

 அந்த மூலதனத்தை இவர்களுக்கு நாம் இனி வழங்கக்கூடாது!

- உங்கள் கரையை நோக்கி!

ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின்
ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின்

மாற்றி யோசி!

சென்னை பெசன்ட் நகர்ப் பக்கம் போகும்போதுதான் அந்த ‘ஐயமிட்டு உண்’ குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்தேன். வீட்டில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியைப்போல் இருமடங்கு இருந்தது. ஒருபுறம் குளிர்சாதனப் பெட்டி. மறுபுறம் நாம் உடைகள் வைக்கும் தடுப்பறைகள் கொண்ட பீரோ. குளிர்சாதனப் பெட்டியில் பழங்கள், உணவுகள் என நிறைந்திருந்தன. மறுபுறம் நிறைய துணிகள், காலணிகள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. விசாரித்தேன். வியந்தேன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்


திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின். பல் சீரமைப்பு மருத்துவர். தன் வீட்டில் மிஞ்சும் ஒன்றிரண்டு பேர் சாப்பிடும் அளவு உணவை தன் அபார்ட்மென்ட் அருகே நடைபாதையில் அமர்ந்திருக்கும் மூதாட்டி ஒருவருக்குத் தொடர்ந்து கொடுத்துவந்திருக்கிறார். திடீரென ஒருநாள் அந்த மூதாட்டியைக் காணவில்லை. ‘அந்த மிஞ்சிய உணவை என்ன செய்வது’ என்று யோசித்தவர், ‘நம் அபார்ட்மென்ட்டில் உள்ள மற்ற வீடுகளில் இப்படி உணவு மிச்சமானால், அவர்கள் என்ன செய்வார்கள்? நம் அபார்ட்மென்ட்டிலேயே மொத்தம் 180 வீடுகள் உள்ளன. அப்படி எல்லா வீடுகளிலும் மிச்சமாகும் உணவைச் சேகரித்து அவற்றை ஒரு பொது இடத்தில் வைத்து ஏழைகளுக்கு விநியோகித்தால் என்ன?’ என்று சிந்தித்திருக்கிறார்.. பகிர்ந்து உண்ண வழிசெய்யும் இந்தச் சிந்தனையும் பகுத்தறிவுதான்.

‘அப்படிச் சேகரித்த உணவை தன் கைப்பட விநியோகிக்காமல் தேவையானவர்களே தேவைப்படும் நேரத்தில் எடுத்துக்கொள்ளும்படி செய்யலாம்’ என வாசித்து அறிந்திருக்கிறார். முன்பு பகுத்தறிந்தார், இப்போது வாசித்தறிந்தார். அப்படி அமைத்ததுதான் ‘ஐயமிட்டு உண்’ என்ற இந்த ‘சமுதாய குளிர்சாதனப் பெட்டி’. இது அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகிறதாம். ‘இப்படி எங்க ஏரியாவிலும் அமைக்கலாம்’ என்று இப்போது 200 தன்னார்வலர்கள் ஐஷாவுடன் கரம்கோத்திருக்கிறார்கள். மேலும், ‘இப்படி ஒரு நிகழ்ச்சியில் 100 பேர் சாப்பிடும் அளவுக்கான உணவு மிஞ்சிவிட்டது. அங்கு எடுத்துவரலாமா’ என்றும் கேட்கத்தொடங்கி, இதனால் பல வயிறுகள் பசியாறி வருகிறதாம்.

குப்பை பொறுக்குபவர்கள், கிடைக்கும் வேலையைச் செய்பவர்கள்... இப்படி அந்தக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தொடர்ந்து உணவு எடுப்பவர்கள் அனைவரும் சாமானியர்களே. ‘எங்களுக்கு மாசம் 9 ஆயிரம் கிடைக்குது. அதுல முக்கால்வாசி சாப்பாட்டுக்கே செலவு பண்ணிட்டிருந்தோம். இப்ப இங்க சாப்பாடு கிடைக்கிறதால மிச்சமாகும் அந்தப் பணத்தைவெச்சு எங்க பசங்களை பக்கத்துல உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்க்கலாம்னு இருக்கோம்’ என்கிறார்களாம்.

18 மணி நேரம் வேலை செய்யும் ஒரு கால்டாக்ஸி டிரைவரின் கையில் அன்று காசு இல்லை. தாகம். பெசன்ட் நகர் 3வது நிழற்சாலையில் உள்ள இந்தக் குளிர்சாதனப்பெட்டியைப் பார்த்திருக்கிறார். ‘பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டவர், பிறகு ஐஷாவை அலைபேசியில் அழைத்து, ‘தாய் மாதிரி இருக்கீங்க’ என்றாராம்.

ஆம், நமக்கு ஐஷா போன்றோர்தான் தாய். அரசு செய்ய வேண்டிய வேலையை ஐஷா போன்ற உண்மையான அம்மாக்கள்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள் ஐஷா.

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

வரும்முன் காப்போம்!

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். அம்மா, அப்பா சொல்கிறார்கள் என்று எதையும் அப்படியே கேட்காதீர்கள். மாதா, பிதா, குரு, தெய்வம்... கும்பிட்டுக்கொள்ளுங்கள். ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்கவேண்டும். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள். கல்யாணத்திற்கு மாத்திரம், ‘அந்தப் பெண்ணைத்தான் கட்டிக்குவேன்’ என்று அடம் பிடிக்கிறீர்களே, அதே அளவு காதல், வாழ்க்கை லட்சியத்தில், கொண்ட கொள்கையில் இருக்க வேண்டாமா? லட்சியங்களைக் காதலியுங்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்


‘காதலே வேண்டாம்’ என்று சொல்லவில்லை. அதைக் கேலி செய்யவும் இல்லை. ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலைத் தவிர வேறு நினைவில்லாமல் இருக்கிறீர்கள். ‘கல்யாணம் பண்ணிவைக்கலைனா, நாங்க ஓடிப்போயாவது கல்யாணம் பண்ணிப்போம்’ என்று சொல்வதில் உள்ள உத்வேகத்தை உங்களின் இலக்கில் வையுங்கள். இலக்குதான் முக்கியம். அதற்குக் கல்வி, விவசாயம், விஞ்ஞானம், சினிமா, அரசியல் என்று எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி தன் இலக்கில் மையல் கொண்டு அதில் உச்சம்தொட்டு சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாகத் தன்னைச் செதுக்கிக்கொண்ட சிலரை வாரம் ஒருவராக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தன் ஓய்வூதியப் பணம் முழுவதையும் தானம் செய்த பாலம் கல்யாணசுந்தரம், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட மாற்றுத்திறனாளி ஆயக்குடி ராமகிருஷ்ணன், தமிழகத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் கல்விக்கு வித்திட்ட ‘விஸ்காம்’ காட்ஃபாதர் எளியவர் லயோலா கல்லூரிப் பேராசிரியர் ராமு என... இவர்களில் உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான இப்படிப்பட்ட பெரியவர்களும் இருப்பார்கள்; அறிமுகமாகாத இளைஞர்களும் வருவார்கள். இப்படிப்பட்டவர்களை வாரம் ஒருவராக அறிமுகப்படுத்துகிறேன். வாருங்கள் இலக்கு நோக்கி நகர்வோம்...

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

பாருங்கள்... படியுங்கள்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்


‘ஸ்பார்ட்டகஸ்’. வரலாற்றைத் தொடர்ந்து வாசிப்பவன், திரைத்துறையை நேசிப்பவன் என்ற அடிப்படையில் இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். இது எடுக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1970-களில்தான் எனக்கு அறிமுகமானது. ‘ஏதாவது பழைய படம் பார்க்கலாம்’ என்று நினைத்துப் பார்த்த பழைய படம். ஆம் என்னைப் புதிய மனிதனாக்கிய பழைய படம். அந்தப் படம் பற்றிய சிந்தனை, அந்த வரலாறு பற்றிய வாசிப்பு... என்று என்னுள் வேறொரு உலகம் திறந்தது. அந்தக் கதைநாயகன், என் வரலாற்றுக் கதாநாயகன் ஆகிறான்.

ஆம். அந்த அடிமை ஸ்பார்ட்டகஸ் வென்றிருந்தால், ஜீசஸ் க்ரைஸ்ட் வேறு பேசியிருப்பார். அவர் வேறு பேசியிருந்தால், கார்ல் மார்க்ஸ் வேறு புத்தகம் எழுதியிருப்பார். அவர் வேறு புத்தகம் எழுதியிருந்தால், இது வேறு உலகம். அந்த ஓர் அடிமையின் புரட்சி தோற்றுப்போனதால், நாம் ஓராயிரம் வருடங்கள் பின்தங்கிவிட்டோம். அடுத்து அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தை எரித்ததனால் இன்னும் 500 ஆண்டுகள் பின்தங்கிவிட்டோம். ‘அதை எரிக்காமல் இருந்திருந்தால் 500 ஆண்டுகளுக்கு முன்பே சந்திரனுக்குப் போயிருப்போம்’ என்கிறார்கள். ஆம், இப்படி கல்வியையும் மக்களின் எழுச்சியையும் அசிங்கமாகக் கட்டுப்படுத்திவிட்டோம் என்றால், அதைவிடப் பெரிய வீழ்ச்சி வேறெதுவும் கிடையாது. அதற்கு சோக உதாரணம் ஸ்பார்ட்டகஸ். வெற்றி, தைரியம், இழப்பதற்கு ஏதுமில்லை... இப்படியான பொதுவுடமை வாசகங்களுக்கு முழுப் பொழிப்புரை ‘ஸ்பார்ட்டகஸ்’.

இந்த வரலாற்றை எழுதியவர் ஹோவர்ட் ஃபாஸ்ட். இதற்குத் திரைக்கதை எழுதியவர் டால்டன் ட்ரம்போ. இவரை அமெரிக்காவே இப்போது பெரிய ஹீரோவாகக் கொண்டாடுகிறது. என் உதவி இயக்குநர்களுக்கு நான் எப்போதும் பரிந்துரைக்கும் படம். இப்போது உங்களுக்கும். பாருங்கள், அதைப்பற்றிப் படியுங்கள்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.