Published:Updated:

’நம்பிக்கை மின்னல்கள்!’ கண்ணகி நகர் இனி சென்னையில் கறுப்பர் நகரமல்ல

’நம்பிக்கை மின்னல்கள்!’ கண்ணகி நகர் இனி சென்னையில் கறுப்பர் நகரமல்ல
’நம்பிக்கை மின்னல்கள்!’ கண்ணகி நகர் இனி சென்னையில் கறுப்பர் நகரமல்ல

ண்ணகி நகர்’... பெரும்பாலும் பல எதிர்மறையான செய்திகளால் அறியப்பட்ட சென்னையின் ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி. சிங்காரச் சென்னையின் ’சிலிகான் வேலி’யான ஓ.எம்.ஆரில் துரைப்பாக்கம் அருகிலுள்ள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குடியிருப்புப் பகுதி இது. “குடிசை இல்லாத சென்னையாக மாற்றுவதாகச் சொல்லி, குடிசைக்காரர்களே இல்லாத சென்னையாக மாற்றி வருகிறார்கள்” இந்த வாசகத்தை நீங்கள் பொதுவெளியில் அதிகம் கேட்டிருக்கக்கூடும். கண்ணகி நகர் பற்றிய பலவகையான கற்பனைகள் வட்டமடிக்கும் இதே வேளையில், அந்த பிம்பத்தை மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான முனைப்புகளும் அங்கு அரங்கேறி வருகின்றன. 

'உலகை மாற்றப் பயன்படும் வலிமையான ஆயுதம் கல்விதான்' தென்னாப்பிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் வரிகள் இவை. கேரளாவில் கார்தாயினி எனும் 96 வயது பெண்மணி, 'முதியோர் கல்வித் திட்ட'த்தின் மூலம் பயின்று நான்காம் வகுப்பிற்கான தேர்வை எழுதிய செய்தி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்திருந்தது. அதுபோல தன்னுடைய பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிற நேரத்திலும்கூட, தான் செய்யும் பணியில் ப்ரமோஷன் வாங்கியே தீர வேண்டும் என்பதற்காக 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றிருக்கிறார் கண்ணகி நகரைச் சேர்ந்த ரெங்கநாயகி. அவருக்கு வயது 49. இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது கண்ணகி நகரில் செயல்படும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் மக்கள் நலச் சங்கம்.

'கண்ணகி நகர்' மாணவ, மாணவிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த மக்கள் நலச் சங்கம் தற்போது 22 தன்னார்வலர்களின் உதவியுடன் 304 மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் மற்றும் விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறது. ஒரு மாலை வேளையில் கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஒருங்கிணைக்கிற பணிகளுக்கிடையே நம்மிடம் பேசினார் 'மக்கள் நலச் சங்க'த்தைச் சேர்ந்த மாரிசாமி..

“மாணவர்களுக்குத் தேவை கல்வியும் விழிப்புணர்வும்தான் சார். அது வந்துட்டாலே அவங்க முன்னேறிடுவாங்க. அது திட்டமிட்டே மறுக்கப்பட்டதனால்தான் அவங்க தகாத வேலைக்குப் போறாங்க. அப்படி அவங்க போயிட கூடாதுனுதான் எங்களால் முடிஞ்ச இந்த உதவிகளை செய்யறோம். 'கண்ணகி நகர்'னாலே மோசமானவங்க அப்படிங்கற ஒரு பிம்பம் இருக்கத்தான் செய்யுது. அது தற்செயலா அமைஞ்சது இல்லை.” என்கிறார்.

கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதியில் ஒரேயொரு உயர்நிலைப் பள்ளிதான் இருக்கிறது. பலரும் அடையாறு, சாந்தோம் என சென்னையில் வெவ்வேறு பகுதிகளுக்கு இரண்டு மணி நேரம் பயணம் செய்துதான் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு ட்யூஷன் வகுப்புகள், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்குப் பயிற்சி வகுப்பு, அரசு பள்ளியின் சிறிய மைதானத்தில் சிலம்பம் பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி என நாம் சென்றபோது ஒவ்வொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.

”இந்தப் பகுதியில் சரியான வேலைவாய்ப்பு கிடையாது. இந்த பசங்களோட அப்பா, அம்மா எல்லோரும் கிடைச்ச வேலைக்குப் போறவங்க. பசங்க தனியா இருந்தா தவறான வழிகள்ல போறதுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்குறதுனாலதான் அவங்கள ட்யூஷன், ஸ்போர்ட்ஸ் என பல விஷயங்கள்ல ஈடுபடுத்திட்டு வர்றோம்” என்கிறார் ஆசிரியர் விஜி

“பயிற்சி தர்றவங்க எல்லாரும் அவங்களுடைய சொந்த விருப்பத்துலதான் வர்றாங்க. உதவி செய்ய முன்வர்றவங்க கிட்டேயும் பொருளாகவே தரச் சொல்லிதான் கேட்கிறோம். அப்படிதான் இவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் கிடைச்சது” என்றார் மாரிசாமி

இதற்கு நடுவே 49 வயதில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற ரெங்கநாயகி, தன்னுடைய மார்க்‌ஷீட்டையும் எடுத்து வந்திருந்தார். மற்றவர்களிடம் மார்க்‌ஷீட்டை காண்பித்தபோது அத்தனை பெருமிதம் அவர் முகத்தில். “1985ல பத்தாம் வகுப்புல இரண்டு மார்க்ல ஃபெயில் ஆயிட்டேன். அப்புறம் கல்யாணம், குழந்தைங்க, பேரப்பசங்கனு வாழ்க்கை போயிடுச்சு. கணவர் இறந்தப்போ ஆவின்ல அவர் பார்த்துட்டு வந்த வேலை எனக்குக் கிடைச்சுது. அங்க எல்லாருமே 'ஸ்கூல் முடிக்காதவ'னு தாழ்வா பார்த்தாங்க. 'ப்ரமோஷன் கிடைக்கணும்னா பத்தாவது முடிச்சிருக்கணும்'னு சொன்னாங்க. 'தனியா பத்தாவது எழுத முடியும்'னு எங்க மேனேஜர் சொன்னாங்க. ஆனா, சொல்லித்தர யாரும் இல்ல. நானாகவே இங்க வந்து படிச்சேன். ரொம்ப கஷ்டமாதான் இருந்தது. சாப்பாடு டைம்லகூட ப்ராக்டீஸ் பண்ணேன். அதோட பலன் இப்போ கிடைச்சுருக்கு. சீக்கிரம் ப்ரமோஷன் வாங்கிடுவேன்” என்கிறார் நம்பிக்கையுடன். அதே இடத்தில் ட்யூஷன் படித்து வரும் ரெங்கநாயகியின் பேரன் தன் பாட்டியை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். 

”முதலில் சரியான இடம் கிடைக்கல. இறையன்பு ஐ.ஏ.எஸ் சார், இணை ஆணையர் சுந்தர வடிவு, உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் சார் உதவிகளால்தான் இந்த ஸ்டகூல்ல இடம் கிடைச்சுது. நிறைய உதவிகளும் செஞ்சு கொடுத்தாங்க” என்றார் மாரிசாமி.

இங்கு பயிற்சி பெற்ற செந்தாமரை பேசத்தொடங்கினார், ”நான் ஸ்கூல் ட்ராப் அவுட். பத்தாவது முடிச்சு ஏழு வருஷம் கழிச்சுதான் தனியாவே அப்ளை பண்ணி +2 படிச்சேன். கரஸ்லயே பி.காம், எம்.காம் எல்லாம் முடிச்சேன். கொஞ்ச நாள் ஆசிரியரா வேலை பார்த்துட்டே டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எக்ஸாம் எழுதி சப் கலெக்டராக தேர்வானேன்.” என புருவம் உயர்த்த வைத்தார் அவர். கண்ணகி நகரைச் சேர்ந்த செந்தாமரை, தற்போது தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

“கண்ணகி நகர்னாலே தப்பான ஒரு எண்ணம் இருக்கு. அதை மாத்துறதுக்கு பசங்க முன்னேறி நல்ல நிலைக்கு வரணும்” என அங்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்து நம்மிடம் சொல்லிக்கொண்டிருந்தார் செந்தாமரை. கண்ணகி நகர் காவல்துறையினரும் இவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்து வருகின்றனர். காவல்துறை உதவி ஆய்வாளர் பாலமுருகன், மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வகுப்புகளுக்கான பயிற்சி அளித்து வருகிறார். 

“இங்க படிக்குற குழந்தைகள் வளர்வதற்கு ஏற்றச் சூழலையும், படிப்பு, விளையாட்டு என ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் இந்த மக்கள் நலச் சங்கம் சிறப்பா செஞ்சுட்டு வர்றாங்க. நாங்களும் ஆர்வமான இந்த பசங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்குறோம். அப்போ கண்ணகி நகர்ல மோசமான சூழல் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போ பெரும்பாலும் எல்லா குற்றங்களும் குறைஞ்சுடுச்சு. நிறைய குடும்பங்கள்ல இருந்து படிக்க வந்துட்டாங்க.” என்றார் காவல் ஆய்வாளர் சிவக்குமார்.

அடிப்படை வசதிகளுக்கே அவதிப்படும் சூழல்தான் கண்ணகி நகரில் நீண்ட காலமாக இருந்தது. தற்போது, கடந்த நான்கு, ஐந்து வருடங்களாகத்தான் அதிகப்படியான பட்டதாரிகள் வெளி வருவதாக தெரிவிக்கின்றனர். 

ஆயிரம் குற்றப்பின்னணி கொண்ட செய்திகள் சுழன்ற அதே கண்ணகி நகரிலிருந்து நம்பிக்கை துளிர்விடும் நிகழ்வுகள் நடந்தேறிவருகின்றன. அரசாங்கம்கூட அவர்களின் வாழ்க்கைச் சூழலை முன்னேற்றத் தவறிய வேளையில், அவர்களாகவே முயன்று முன்னேறி வருகின்றனர். அந்த நம்பிக்கை விதையும் அங்கிருந்தே விழுந்து முளைத்திருக்கிறது. இச்சமூகம் ’கண்ணகி நகர்’ மீது சுமத்திய களங்கத்தை நீக்க வேண்டிய பணி மட்டும் சமூகத்திடமே எஞ்சி நிற்கிறது.