Published:Updated:

நிலம் குளமாக மாறுது! - ரோல் மாடல் கிராமங்கள்

நிலம் குளமாக மாறுது! - ரோல் மாடல் கிராமங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் குளமாக மாறுது! - ரோல் மாடல் கிராமங்கள்

நிலம் குளமாக மாறுது! - ரோல் மாடல் கிராமங்கள்

“தண்ணீர் பிரச்னை அதிகம் உள்ள எங்கள் கிராமத்தில் குளம் அமைக்க நாங்கள் முடிவு செய்தோம். கிராம மக்களைச் சந்தித்து இது பற்றிப் பேசினோம். அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து, அரசு தரிசு நிலமான 35 ஏக்கரைத் தேர்வு செய்து, 25 ஏக்கரில் நீர்ப்பிடிப்புப் பகுதி அமைக்க முடிவு செய்தோம். கௌசிகா நதி அருகில் இருக்கிறது என்பதால், ‘கௌசிகா குளம்’ என்று இதற்கு பெயரிடப்போகிறோம். கௌசிகா நதி மற்றும் அருகிலுள்ள இரு ஓடைகளிலிருந்து இந்த குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இந்தப் பகுதியைச் சுத்தம் செய்து, தற்போது 3,000 சதுர அடிக்குக் குளம் அமைத்துள்ளோம்” என்று உற்சாகத்துடன் பேசினார், ‘கெளசிகா குளம் பாதுகாப்பு குழு’வைச் சேர்ந்த சதாசிவம்.

கோவை – திருப்பூர் எல்லையில் கௌசிகா நதி செல்லும் வழியில் சிறிய கிராமங்கள் நிறைய உள்ளன. விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்த இந்த கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்ததன் விளைவாக, விவசாயத்துக்கு விடைகொடுக்கப்பட்டு விசைத்தறிகள் முளைத்தன. இந்நிலையில்தான், குளத்துப்பாளையம், முருகன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், வடுகபாளையம், புதுநல்லூர், தெக்கலூர், பணப்பாளையம், கோவிந்தாபுரம், சூரிபாளையம், ஆலம்பாளையம், வெங்கல்பாளையம், கிட்டாம்பாளையம் உள்பட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அரசு நிலத்தில் குளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குளத்துப்பாளையம் கிராமத்துக்கு அருகே இந்தக் குளம் அமைகிறது.

நிலம் குளமாக மாறுது! - ரோல் மாடல் கிராமங்கள்

“தற்போது, நிலத்தடி நீர் 1,400 அடிக்குச் சென்றுவிட்டது. இங்கு குளம் அமைத்து நீரைத் தேக்குவதன்மூலம் நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும் என்பதை உணர்ந்தோம். அரசு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினோம். இங்கு வந்து ஆய்வுசெய்த அதிகாரிகள், எங்கள் முயற்சிக்கு முழு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். அவர்களிடம் பேசினோம்.

“முன்பெல்லாம் எங்கள் பகுதியில் உள்ள கிணறுகளில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். ஆழ்குழாய்க் கிணறுகளை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. கிணற்று நீரைத்தான் பயன்படுத்துவதுதான் எங்கள் வழக்கம். கேழ்வரகு, பருத்தி, மஞ்சள் என விவசாயமும் செழிப்பாக இருந்தது. ஊரே பச்சைப் பசேலென்று இருக்கும். முன்பு எங்கள் கிராமத்தில் பண்டமாற்று முறை இருந்தது. நாங்கள் வாங்கும் பொருள்களுக்குப் பணம் கொடுக்க மாட்டோம், தானியங்களைத்தான் கொடுத்து மாற்றிக்கொள்வோம். அந்த அளவுக்கு விளைச்சல் அமோகமாக இருந்தது.

பிறகு மழை குறைந்து வறட்சி தொற்றிக்கொண்டதால், கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டோம். எல்லோரும் வேறு வேலைகளுக்கு மாறினோம். பெரும்பாலானோர் கோவைக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில்தான், இங்கு குளத்தை அமைத்து மீண்டும் விவசாயத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. இங்கு தண்ணீர் வந்துவிட்டால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இத்துடன் நிற்காமல், பக்கத்து கிராமங்களுக்கும் சென்று நீர்நிலைகள் அமைப்பது பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்கள் நம்பிக்கையுடன்.

‘கௌசிகா நதி மீட்புக் குழு’வின் ஒருங்கிணைப்பாளரான செல்வராஜ், “கௌசிகா நதி செல்லும் வழியில், இந்தப் பகுதிதான் மிகவும் வறட்சியானது. நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டபோதுதான், இவ்வளவு பெரிய நிலம் பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்தது. இந்தப் பகுதியில், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்வளவு காலம் தொடர்ச்சியாக எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த மண், எங்கள் காலத்தில் பாலைவனமாகிவிடக்கூடாது. எனவே, இளைஞர்கள், மாணவர்கள் என கிராம மக்கள் அனைவரும் இரவு பகலாக உழைத்தோம். குளம் அமையும் பகுதியில், பலர் தங்களது நிலங்களை தானமாக அளித்துள்ளனர். அந்த வகையில். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

நிலம் குளமாக மாறுது! - ரோல் மாடல் கிராமங்கள்

இன்னும் மூன்று மாதங்களில் அந்த நிலம், குளமாக மாறிவிடும். எங்களுக்கு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்கின்றன. அரசு அதிகாரிகளும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். குளம் அமைக்கும் பணி முழுமையடைந்துவிட்டால், அங்கு 3,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்தப் பகுதியில் மான்கள் உள்பட ஏராளமான விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இந்தக் குளம் அமைவதன் மூலம், இங்கு பல்லுயிர்ப் பெருக்கமும் சிறப்பாக இருக்கும். இதுபோன்று நீர்நிலைகள் அமைப்பதற்கு சாத்தியமுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து, அங்கெல்லாம் குளங்களை அரசு அமைத்தால், வறட்சியை நம்மால் எளிதாகச் சமாளிக்க முடியும்” என்றார் உறுதியுடன்.

திருப்பூர் மாவட்ட டி.ஆர்.ஓ-வான பிரசன்னா ராமசாமியிடம் பேசினோம். “பணிகள் இப்போது ஆரம்பகட்ட நிலையில் உள்ளன. குளம் தொடர்பாக பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளரிடம் தொழில்நுட்பரீதியான அறிக்கை கேட்டிருக்கிறோம். அந்த அறிக்கையைப் பொறுத்தே அடுத்தகட்டப் பணிகள் நடைபெறும்” என்றார்.

இந்த ரோல் மாடல் கிராமங்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

- இரா.குருபிரசாத்
படங்கள்: அகிலன்