Published:Updated:

வியட்நாம் சிறுமி!

வியட்நாம் சிறுமி!
பிரீமியம் ஸ்டோரி
வியட்நாம் சிறுமி!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம் மருதன்

வியட்நாம் சிறுமி!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம் மருதன்

Published:Updated:
வியட்நாம் சிறுமி!
பிரீமியம் ஸ்டோரி
வியட்நாம் சிறுமி!

னக்கு அப்போது ஒன்பது வயது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை என்னால் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், நான் வாழ்ந்துகொண்டிருந் தது பாதுகாப்பற்ற ஓர் உலகில் என்பது மட்டும் ஒருவரும் சொல்லாமலேயே புரிந்தது. என் நாடு வியட்நாம். என் மனதுக்கு நெருக்கமான அழகிய நாடு. எல்லோருக்கும் அவரவர் நாடு அழகானதுதான். எல்லோரும் அவரவர் நாட்டை நேசிக்கிறார்கள். ஆனால், சிலர் ஏன் இன்னொரு நாட்டை வெறுக்கிறார்கள்? அதை அழிக்க வேண்டும் என ஏன் துடிக்கிறார்கள்? ஒருவரை நீங்கள் நேசிக்க வேண்டுமானால் இன்னொருவரை வெறுக்க வேண்டுமா என்ன? தெரியவில்லை. ஆனால், வியட்நாமில் தினம் தினம் குண்டு வீசிக்கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அதையெல்லாம் கண்டு பயப்படக் கூடாது எனப் பெரியவர்கள் எங்களைப் பொத்திப் பொத்திதான் வைத்திருந்தார்கள். ஆனால், அந்தப் பிசாசு எப்படியோ எங்கள் பார்வைக்கும் தட்டுப்பட்டுவிட்டது.

1972 ஜூன் 8... வழக்கம்போல என் நண்பர்களுடன் கோயிலுக்குள் விளையாடிக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விநோத வாசம். `வெளியில் எங்கோ, ஏதோ எரிவதுபோலில்லை?' என யோசித்துக் கொண்டிருந்தபோதே படை வீரர்கள் கோயிலுக்குள் ஓடி வந்தார்கள். ``இங்கிருந்து ஓடுங்கள்'' என்று விரட்டினார்கள். நாங்கள் வெளியேறி ஓடத் தொடங்கினோம். தற்செயலாகத் தலையை உயர்த்திப் பார்த்தேன். நான்கு குண்டுகள் மேலிருந்து விழுந்து கொண்டிருந்தன. என்னைச் சுற்றிலும் தீ பற்றி எரியத் தொடங்கியது. வேறு யாரும் என் கண்களுக்குத் தெரியவில்லை. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் ஆடைகளையும் நெருப்பு பற்றிக்கொண்டது. மூச்சிறைக்க ஓட ஆரம்பித்தேன். என் ஆடைகள் பொசுங்கி உதிர ஆரம்பித்தன. என் உடலிலும்கூட தீ பற்றிக்கொண்டுவிட்டதா? ஆடையைப்போல சருமமும் பொசுங்கி உதிர்ந்துவிடுமா? அப்போது என்னிடம் என்ன மிஞ்சி நிற்கும்?

வியட்நாம் சிறுமி!

``அந்தக் காட்சியை என் வாழ்நாளில் மறக்க முடியாது'' என்கிறார் புகைப்படக் கலைஞரும் பத்திரிகையாளருமான 21 வயது நிக் உட். கிராமப்புறத்துக்குச் செல் லும் வழியில் அமைந்திருந்த `ஹைவே 1' பகுதியில் சக பத்திரிகையாளர்களுடன் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார் நிக் உட். அமெரிக்க வீரர்கள் சிலரும் உடன் இருந்தனர். அப்போது தலைக்கு மேலே இரண்டு விமானங்கள் பறப்பதை அவர் கண்டார். அந்த விமானங்கள் இரண்டும் குண்டுகளை வீசியபடி பறந்து கொண்டிருந்தன. தொடர்ந்து திபுதிபுவென தன்னை நோக்கி பலர் ஓடிவருவதை நிக் உட் கண்டார்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நிக்குக்குத் தெரிந்துவிட்டது. `இந்தத் தருணத்தை இழந்துவிடாதே!' என அவருடைய உள்ளுணர்வு எச்சரித்திருக்க வேண்டும்.

நிக்கிடம் அப்போது இரண்டு கேமராக்கள் இருந்தன. நிகான், லெய்கா. முதலில் அவர் நிகானைத்தான் தேர்ந்தெடுத்தார். நீண்டு செல்லும் திறன்மிக்க அதன் லென்ஸை வைத்து வானத்தில் தோன்றிய கருமேகத்தை அவர் முதலில் படம் பிடித்தார். கூச்சலுடன் மக்கள் நெருங்கிவந்ததும் அவர் நிகானை நகர்த்திவைத்துவிட்டு லெய்காவை நெருங்கினார். முகங்களைப் படம்பிடிக்க இதுவே வசதியானதாக இருக்கும். நிக் தனது இரண்டாவது கேமராவை இயக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது அவருடன் இருந்த இரு பத்திரிகையாளர்களும் அதே காட்சியைப் படம்பிடிக்க முயன்றனர். ஆனால், இருவருடைய புகைப்படக் கருவிகளிலும் படச்சுருள் பாக்கி இல்லை. வரலாற்றில் நிலைத்து நிற்கும் வாய்ப்பு நிக்குக்கு மட்டுமே கிடைத்தது.

வயதான பெண் ஒருவர், தன் கையில் எதையோ ஏந்தியபடி ஓடிவந்து கொண்டிருந்தார். நிக் அவரைத்தான் முதலில் படம் பிடித்தார். அருகில் வந்த பிறகுதான் தெரிந்தது, அவர் கவனமாக ஏந்தி வந்தது ஒரு சிறிய மனித உடலை. அதற்குப் பிறகு குழந்தைகள் ஓடிவருவதை அவர் கண்டார். மொத்தம் ஐந்து பேர். அந்த ஐவரில் ஒரு சிறுமியின் கோலமும் ஓலமும் அவர் அடிவயிற்றைக் கலக்கின.

`` `நோங் ஹுவா... நோங் ஹுவா!’ (ஐயோ அதிகம் கொதிக்கிறதே!) என்று கத்தியபடியே அந்தச் சிறுமி என்னை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தாள்'' என நினைவுகூர்கிறார் நிக். தனது கேமராவை அணைத்துவிட்டுக் குழந்தைகளை நோக்கி ஓடினார் நிக். `தண்ணீர், தண்ணீர்' என்று கத்தினார். சிலர் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். உடனடியாகக் குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். குறிப்பாக, கதறிக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமிக்கு உடனடி சிகிச்சை அவசியம் என்பதை நிக் உணர்ந்தார். நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்டு கைவசம் இருந்த பிளாஸ்டிக் மழை கோட்டை ஒருவர் அளித்தார். அதைக் கொண்டு அந்தச் சிறுமியின் உடலைப் போத்தினார் நிக்.

அவள் பெயர், ஃபான் தி கிம் ஃபுக் என்பதையும் நிக் அறிந்துகொண்டார். `நாங்கள் அழைத்துச்செல்கிறோம்' என்று உடன் இருந்தவர்கள் சொன்னாலும் நிக்குக்கு மனம் கேட்கவில்லை. அவரும் மருத்துவமனைக்குச் சென்றார். அதற்குள் கிம் ஃபுக் மயங்கி சரிந்துவிட்டார். திடீரென நினைவு திரும்பும், பலவீனமாக முனகியபடி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்துவிடுவார். `இவளை மீட்பது சிரமம்' என்றார்கள் பரிசோதித்த மருத்துவர்கள். `அநேகமாக அவள் இன்னும் சில மணி நேரத்தில் இறந்துபோகலாம்' என்று ஒருவரும், `இன்னும் சில நிமிடங்கள்தாம்' என்று இன்னொருவரும் `இதோ அவள் இறந்து விட்டாள்' என்று வேறொருவரும் சொன்னார்கள். பிணவறைக்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. வண்டியில் வைத்து உருட்டித் தள்ளி உள்ளேயும் கொண்டுபோய்விட்டார்கள்.

`வாழ்த்துகள்! மிக முக்கியமான ஒரு வரலாற்றுத் தருணத்தை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் நிக். வியட்நாம் மீதான அமெரிக்காவின் போர் மனிதத்தன்மையற்றது என்பதை உணர்த்த இந்த ஒரு படம் போதும். இருந்தாலும் இதை வெளியிட முடியாமல் போனதற்கு வருந்துகிறோம்' என்றது அசோசியேட்டட் பிரஸ். அதற்கு அவர்கள் அளித்த காரணம், விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. நிர்வாணப் படங்களை வெளியிடுவதில்லை என்பது நிர்வாகத்தின் விதிமுறை. எது தனது படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றதோ, எது தன்னுடைய படத்தை உண்மையானதாகவும் உக்கிரமானதாகவும் மாற்றியதோ, அதுவே அந்தப் படத்துக்கு எதிரானதாகவும் இருந்ததை நிக் உணர்ந்தார்.

`ஒருவரும் பார்க்கக்கூடாத ஒரு காட்சியை நான் படம் பிடித்துவிட்டேனா என்றால், ஆம்.

அனைவரும் கண்டே தீரவேண்டிய ஒரு காட்சியா இது என்றால், நிச்சயமாக ஆம்.

மனிதகுலத்தை வெட்கத்திலும் அவமானத்திலும் தள்ளப்போகும் ஒரு படம் இது. ஒரு கையில் தேநீர் கோப்பையை ஏந்திக்கொண்டு இன்னொரு கையால் செய்தித்தாளைப் பிரித்து வைத்துக்கொண்டு இந்தப் படத்தை நீங்கள் உள்வாங்கிக்கொள்ள முடியாது. உங்கள் கோப்பையையும் உங்களையும் சேர்த்தே சிதறடிக்கப்போகும் படம் இது. ஒரு சிறுமியின் நிர்வாணத்தை அல்ல, நம்முடைய கூட்டு நிர்வாணத்தைதான் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆயிரம் கோடி கதிரவனின் ஒளி உங்களை ஊடுருவி, உங்கள் செயலற்றத்தன்மையை வெளியில் எடுத்துப்போட்டு பரிகசிக்கப் போகிறது. ஆயிரம் கோடி இரவுகளின் இருளுக்குள் நீங்கள் உங்களைப் புதைத்துக் கொள்ளப்போகிறீர்கள்.

இந்தப் படத்தை ஒருவரும் விரும்பப் போவதில்லை. அதற்காகவாவது இதை நாம் வெளியிட்டே தீர வேண்டும்.'

நிக்கின் உணர்வுகளை ஏற்றுக்கொண்ட அசோசியேட்டட் பிரஸ், விதிமுறைகளைத் தளர்த்திக்கொண்டு படத்தை அச்சிட்டது. நிக் எதிர்பார்த்ததுதான் நடந்தது. செய்தித்தாளைப் பிரித்தவர்கள் அனைவரும் ஒரு கணம் திகைத்துப்போனார்கள். ஐயோ, இந்தச் சிறுமியிடம் ஆடையே இல்லை. அடுத்த கணம் திகைப்பு, பேரதிர்ச்சியாக மாறியது. கடவுளே, இவளுக்கு என்ன ஆகிவிட்டது? யார் இந்தக் குழந்தை? அவளுடன் இருக்கும் மற்ற நான்கு குழந்தைகள் யார்? நிலத்திலிருந்து வானத்துக்கு எழுந்து செல்லும் அந்தக் கரும்புகையை உருவாக்கியவர்கள் யார்? சுற்றிலும் உள்ள ராணுவ வீரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த உலகில்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வியட்நாம் சிறுமி!

ஒரு கணத்துக்கும் குறைவான அவகாசத்தில் நிக் எடுத்த அந்தப் படம், உலகின் ஆன்மாவைப் பற்றிக்கொண்டது. அந்தச் சிறுமியின் நிர்வாணம் காண்போர் அனைவரையும் வீழ்த்தி நிலத்தில் சாய்த்தது. அவளது இடுங்கிய கண்களை நேரடியாகத் தரிசிக்க முடியாமல் பலர் அவமானத்தில் தலையைக் கவிழ்த்துக்கொண்டனர். கோரமான பல போர்க்காட்சிகளை அவர்கள் கண்டிருக்கிறார்கள்; மனம் நொந்து கடந்து சென்றிருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு சொட்டு ரத்தமில்லை. ஆனால், வாயைப் பிளந்து பீறிட்டு அலறும் குழந்தைகள் ரத்தமும் சதையுமாக இதில் உறைந்துபோய்க் கிடக்கிறார்கள். அவர்களுடைய ஓலம் காகிதத்தைக் கடந்து நம் செவிகளைத் தாக்கிக் கிழிக்கிறது. நம் நம்பிக்கைகளை, கனவுகளை, பெருமிதங்களைச் சுக்கல்நூறாக உடைத்துப் போடுகிறது. வியட்நாமை, அமெரிக்கா என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை அந்நாட்டு மக்கள் பலர் இந்தப் புகைப்படம் வாயிலாகத்தான் முதன்முதலாகத் தெரிந்துகொண்டனர். `இது மனித குலத்தின் அவமானம் என்றாலும் ஓர் அமெரிக்கனாக நான் கூடுதல் அவமானம்கொள்கிறேன். என்னுடைய நிலத்திலிருந்து சென்ற விமானம்தான் இந்தச் சிறுமியை நிர்வாணப்படுத்தியிருக்கிறது என்பது என்னைக் கூசச் செய்கிறது. இது நிச்சயமாக என் போர் அல்ல. இது என் அரசின் அருவருப்பூட்டும் பயங்கர வாதச் செயல். இந்தச் சிறுமி, என் அரசிடமிருந்துதான் தப்பியோடுகிறாள். இந்தச் சிறுமியின் தோல் உரிந்து விழுவதற்குக் காரணம் என் அரசு. இதை என்னால் அனுமதிக்க முடியாது. இந்தப் போரை முன்னெடுக்கும் இழிவான ஓர் அரசை அமெரிக்கர்களாகிய நாம் ஒன்று திரண்டு எதிர்த்தாக வேண்டும். இந்தப் போரை நாம் நிறுத்தியாக வேண்டும்.'

பதினான்கு மாத தீவிர கண்காணிப்புக் குப் பிறகு (சரும மாற்று அறுவை சிகிச்சை உள்பட 17 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன) கிம் ஃபுக் பிழைத்துக்கொண்டார். திருமணமாகி இரு குழந்தைகளுடன் இப்போது கனடாவில் வசித்துவருகிறார். விமானத் தாக்குதலில் பங்கெடுத்த அமெரிக்க வீரர் ஒருவர் கிம்மைச் சந்தித்து அவரிடமிருந்து மானசீக மன்னிப்பைப் பெற்றுக்கொண்டார். பல கருத்தரங்கங்களில், சர்வதேச மேடைகளில் கிம் கலந்துகொண்டு உரை யாற்றினார். பட்டங்களும் விருதுகளும் அங்கீகாரங்களும் பூக்கொத்துகளும் அவரை நாடி வந்தன.

நபாம் குண்டு வீச்சு நடைபெற்று 11 மாதங்கள் கழித்து, 8 மே 1973 அன்று நிக் உட்டுக்கு புலிட்சர் விருது அளிக்கப் பட்டது. ஓய்வுபெற்ற பிறகு மனைவி, இரு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
எழுந்து நடந்து வீட்டுக்குத் திரும்பும் வரை தொடர்ச்சியாக கிம்மை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் அளித்துவந்தார் கிம் உட். இந்த நிமிடம் வரை அவர்கள் இருவரும் தொடர்பில் இருக்கிறார்கள். `நபாம் சிறுமி' அல்லது `வியட்நாம் சிறுமி' என்று அழைக்கப்படும் கிம் ஃபுக்கின் படம் வெளிவந்து ஓராண்டு கழித்து அமெரிக்கா தோல்வியுற்ற ஒரு நாடாக வியட்நாமிலிருந்து பின்வாங்கியது.

``கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், எதிர்காலத்தை மாற்றும் திறன் நம்மிடம்தான் இருக்கிறது'' என்கிறார் கிம். ``இப்போதும் என்னைச் சந்திக்க வருபவர்கள் அந்தச் சிறுமியின் படத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். என் வாழ்வோடு அந்தப் புகைப்படம் ஒன்று கலந்துவிட்டது என்று நினைக்கிறேன்'' என்கிறார் நிக். தவறு. நம் வாழ்வோடு ஒன்றுகலந்துவிட்ட படம் அது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism